உலகின் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டிற்கு மேல் உள்ள நாடுகளில் கூட்டாட்சி இயல் பின்பற்றப்படுகிறது. மாநிலங்களின் உரிமைகள் மக்களின் உரிமைகளைச் சார்ந்ததாகும். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டால் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாகவே பொருள் கொள்ள வேண்டும். கூட்டாட்சி இயலும் சனநாயகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். மக்களுடைய உரிமைகளும் மாநிலங்களின் உரிமைகளும் சேர்ந்ததே உண்மையான சனநாயகமாகும்.
உலகின் பல நாடுகளின் புவி அரசியல் கூறுகளை ஆய்வு செய்தால் மாறுபட்டத் தன்மைகளில்தான் மக்களாட்சியும் கூட்டாட்சி இயலும் வளர்ந்து வருகின்றன. உலகின் பல நாடுகளில் காணப்படுகிற அரசியல் சமூக பொருளாதார இன மொழி பண்பாட்டு வேறுபாடுகள் நிதித் தொடர்பான அமைப்பு கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் கூட்டாட்சி இயல் செம்மை யுறுகிறது.
தொன்மைக் கூட்டாட்சி இயலைப் (Classical Federalism) பின்பற்றுகிற அமெரிக்கா ஆஸ்திரேலியா சுவிட்சர்லாந்து கனடா ஆகிய நாடுகளில் மாநிலங்களின் உரிமைகள்தான் அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக (Basic Structure) அமைகின்றன. சில முதன்மையான காரணங்களுக்காக அரசமைப்புச் சட்டத்திருத்தங் களை மேற்கூறிய தொன்மைக் கூட்டாட்சி இயல் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டாலும் ஒருமுறை கூட மாநிலங்களின் உரிமை களைப் பறிக்கின்ற அரசமைப்புச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப் பட்டதே இல்லை.
ஆனால் இந்தியாவில் இந்த அடிப்படைக் கூறு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு நினைத்த நேரத்தில் நாடாளுமன்றம் கூடுகின்ற போது மாநில உரிமைகள் தொடர்ந்து 70 ஆண்டுகளாகச் சிதைக் கப்பட்டுள்ளன. இத்தகைய தன்மைகள் பொருந்திய இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் முழுவதுமாக ஒற்றை ஆட்சிச் சட்டமாக மாறிவிட்டது.
ஒன்றிய அரசு முழு சர்வாதிகார அரசாக மாறியதற்கு காங்கிரசும் பா.ச.க.வும் செய்த செய்து வருகிற மக்களாட்சி விரோத கூட்டாட்சி இயலுக்கு எதிரான தொடர் சட்டத்திருத்தங் களும் பின்பற்றப்படுகிற நிர்வாக நடவடிக் கைகளும் என்பதை இன்று நாடு உணரத் தொடங்கியுள்ளது. இந்தியா ஒரு நாடன்று இது ஒரு துணைக்கண்டம். மேற்குறிப்பட்ட தொன்மைக் கூட்டாட்சி நாடுகளில் காண முடியாத வேற்றுமைக் கூறுகள் இத்துணைக் கண்டத்தில்தான் பெருமளவில் உள்ளன என்பதை இன்றைய அரசியல் நமக்கு உறுதி செய்கிறது.
கடந்த 70 ஆண்டுகளாக மொழி, இனம், பண்பாடு, சமயம், உணவுப் பழக்கம், உடை போன்ற அனைத்துக் கூறுகளிலும் வேற்றுமைகள்தான் விரிவடைந்து வருகின்றன. பிரித்தானியாவின் ஆட்சியிலேயே இத்தகைய வேற்றுமைகளை அறிந்துதான் இங்கிலாந்து பேரரசு மாகாணங்களுக்குச் சில அதிகாரங் களைப் பிரித்து அளிக்கின்ற 1919ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தை அளித்தது.
இச்சட்டம் அடிமைச் சட்டம் என்றும் மாநிலங்களின் உரிமைகளைப் புறந்தள்ளுகிற சட்டம் என்றும் காங்கிரசு இயக்கத் தலைவர்கள் குறிப்பிட்டார்கள். உண்மையானக் கூட்டாட்சி இயலைத் தழுவிய மாநிலங்களுக்கு உரிமைகள் அளிக்கின்ற சட்டம் வேண்டும் என்று உரத்தக் குரலிட்டனர்.
இந்த பிரித்தானிய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை ஏற்று காங்கிரசு மாகாணங்களில் ஆட்சியமைக்கக் கூடாது என வாதிட்டனர். இருப்பினும் காங்கிரசு இயக்கத்தில் அன்றே பெருகி வந்த பதவிப் பற்றாளர்கள் மாகாணத் தேர்தலில் போட்டியிட வேண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் வழியாகத்தான் சென்னை மாகாணத்தில் 1921இல் நீதிக்கட்சி ஆட்சி அமைந்தது.
குறைந்த மாநில அதிகாரங்களை வைத்துக் கொண்டே நீதிக்கட்சி ஆட்சியில் இடஒதுக்கீடு உட்பட பல முற்போக்கான நலத்திட்டங்கள் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப் பட்டன. பா.ச.க. ஆட்சியில் 2016-ஆம் ஆண்டில் நீட்தேர்வின் வழியாகப் பெரும் பாலான ஏழை நடுத்தரப் பிரிவினரின் கல்வி உரிமைகள் ஒன்றிய அரசால் ஒரே ஒரு சட்டத் திருத்தத்தால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த ஒரு சான்றே மாநிலங்களின் உரிமைகளைப் பிரித்தானிய ஆட்சி மதித்த அளவிற்குகூட இன்றைய தில்லி பா.ச.க. ஏகாதிபத்திய ஆட்சி மதிக்கவில்லை என் பதை மெய்ப்பிக்கிறது.
1935-ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சி யில் இரண்டாவது இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தையும் நேரு உட்பட பல காங்கிரசுத் தலைவர்கள் எதிர்த்தார்கள். ஆனால் பல மாகாணங்களில் காங்கிரசு ஆட்சியமைத்தது. 1937-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இராஜாஜி தலைமையில் காங்கிரசு ஆட்சியமைத்தது. 1935க்கும் 1945க்கும் இடையில் நடைபெற்ற உலக அளவிலான அரசியல் மாறுதல்களும் இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட உடன்படிக்கைகளும் மூன்றாவது உலக நாடுகள் பல விடுதலை பெற வழிவகுத்தன.
1945-ஆம் ஆண்டு அமைச்சரவைத் தூதுக் குழு (Cabinet Mission) மாநிலங்களுக்குப் போதிய உரிமைகளை அளிக்கும் திட்டத்தைப் பிரித்தானியப் பேரரசுக்குப் பரிந்துரைத்தது. ஆனால் இந்தியா அப்பரிந்துரையை ஏற்காமல் பாகிஸ்தான் பிரிவினையைக் காரணம் காட்டி ஒன்றிய அரசிற்குப் பெரும்பான்மையான அதிகாரங்களைக் குவித்து அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
1947-இல் இந்தியா விடுதலை பெற்றப் பின் நடைபெற்ற இந்து-முசுலிம் மோதல்கள் காரணமாக ஜின்னா தலைமையில் பாகிஸ்தான் தனி நாடாக அமைந்தது. 1948-இல் இலங்கையும் விடுதலை பெற்றது. இந்த மூன்று நாடுகளின் அரசமைப்புச் சட்டக் கூறுகள் பிரித்தானிய ஏகாதிபத்தியம் கொண்டு வந்த 1935ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்ட விதிகளின் பெயர் மாற்றமாகவே அமைந்தன.
1999இல் கனடாவில் நடைபெற்ற உலகக் கூட்டாட்சி இயல் மாநாட்டில் இக்கட்டுரையாளர் பங்கு பெற்ற போது பாகிஸ்தான் நாட்டில் நவாஷ்ஷெரிப் பதவி நீக்கம் செய்யப்பட்டு இராணுவ தளபதி முஷ்ரப் ஆட்சி அமைத்தார். பாகிஸ்தான் நாட்டில் இருந்து கூட்டாட்சி இயல் மாநாட்டில் பங்கேற்ற கல்வியாளர்கள் என்னிடம் உரையாடிய போது கூட்டாட்சி இயல் கூறுகள் அடிப்படைக் கூறுகளாக பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தில் அமை யாததால் இது போன்று இராணுவ ஆட்சிக்கு வழி வகுத்துவிட்டது என்றனர். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடைமுறை யில் உள்ள அரசமைப்புச் சட்டங்களின் விதிகள் பெரும் பாலும் 1935ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு அளித்த அரசமைப்புச் சட்டத்தின் பிரதி பலிப்பாகவே உள்ளன என்றும் இந்தக் கல்வியாளர்கள் கூறினர்.
புதுதில்லியில் உள்ள ஆட்சியாளர்கள் நினைத்தால் மாநிலங்களை நினைத்த நேரத்தில் கலைத்துவிட முடியும் கவிழ்த்துவிட முடியும் என்பதே இதற்குத் தக்கச் சான்றாகும். பாகிஸ்தான் ஜின்னா காலத்திற்குப் பிறகு ஜனநாயகக் கூறுகள் சிதைந்து இராணுவத்தின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டது. இதற்கு அமெரிக்காவும் ஒரு காரணமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டனர். சிந்து மாகாண மக்கள் தனி மாநில உரிமையைக் கோரித் தொடர்ந்து பாகிஸ்தானில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது ஊடகங்களில் அதிகமாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
இந்தியாவில் பல்வேறு மத மொழி இனங்கள் மாநிலங்களில் செல்வாக்கோடு இருப்பதனால் பல மாநிலக் கட்சிகள் மாநி லங்களில் ஆட்சியமைப்பதனாலும் ஒன்றிய அரசில் தேசியக் கட்சிகள் தனித்து ஆட்சிய மைக்கும் முழுச் செல்வாக்கினை இழந்து வருகின்ற நிலை இருப்பினும் நடைமுறை யில் இந்திய அரசமைப்புச் சட்டம் ஒற்றை ஆட்சிச் சட்டமாகவே மாற்றப்பட்டு விட்டது.
2014க்குப் பிறகு ஒன்றிய அரசில் பிரதமர் மோடி தலைமையில் பா.ச.க. அரசு அமைந்தவுடன் திட்டமிட்டு மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. சர்வாதிகார அரசியலை முன்னிலைப்படுத்துகிற இந்து ராஷ்டிரா என்ற ஆர்.எஸ்.எஸின் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பா.ச.க ஆட்சி முயன்று வருகின்றது. இதன டிப்படையில்தான் அரசமைப்புச் சட்டம் வழங்கிய தன்னாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் வெட்டப் படுகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 324ஆவது பிரிவின்படி இயங்கி வருகின்ற தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முழு அளவிற்கு பா.ச.கட்சியின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்படுகின்றன. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்பு நிலையை வெளிப்படையாகவே காண முடிகிறது. சான்றாக 2017-ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை முதலில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் அதே நேரத்தில் அந்த மாநிலத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலை இருந்த போது, குசராத் சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அறிவிக்காமல் பிரதமர் மோடி குசராத் மாநிலத்திற்குச் சென்று பல சிறப்பு சலுகைகளை அறிவிப்பதற்குக் கால அவகாசம் அளித்தது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாயிற்று. காரணம் 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசு ஆட்சியைக் கைப்பற்றியது. சரக்கு மற்றும் சேவை வரியால் பல மாநிலங்களின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாயின. பல தொழில்கள் நலிவடைந்தன. குசராத்திலும் சரக்கு மற்றும் சேவை வரியின் பாதிப்பு தேர்தல் முடிவுகள் பா.ச.க.விற்கு எதிராகப் போய்விடும் என்று எண்ணிய பிரதமர் மோடி அவசர அவசரமாக சரக்கு மற்றும் சேவை வரிகளில் பல சலுகைகளை அளித்தார். இதற்குப் பின்புதான் தேர்தல் ஆணையம் குசராத் மாநில சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அறிவித்தது.
2019-இல் பா.ச.க.வின் கூட்டணியில் இடம் பெற்ற சிக்கிம் மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பிரேம் சிங் தமாங் ஊழல் குற்றச் சாட்டில் ஓர் ஆண்டு தண்டனை 2017இல் பெற்றார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி குற்றவியல் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது எனத் திருத்தப்பட்ட சட்ட விதி உள்ளது. தண்டனை பெற்ற நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் உடனடியாகப் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்ற சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியின் போது நிறைவேறியது. அதன்படி லாலு பிரசாத் யாதவும் திமுகவின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த செல்வ கணபதியும் இச்சட்டத்தின்படி தங்களது பதவிகளை இழந்தனர்.
ஆனால் இன்றோ 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலில் இருந்த தமாங் பா.ச.க. கூட்டணி அமைந்தவுடன் 6 ஆண்டுகள் போட்டியிட முடியாது என்பதை ஓர் ஆண்டாக தமாங்கின் தண்டனையைத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஆணையர்களான அசோக் லவாசா சுசில் சந்தரா ஆகியோர் இணைந்து குறைத்தனர். தேர்தல் ஆணையர்கள் இதற்கான காரணங்களைப் பின்னாளில் பதிவு செய்வோம் என்றும் குறிப்பிட்டனர். இத்தகைய மோசமான ஊழலை ஊக்குவிக்கின்ற மோசடியைச் செய்துவிட்டு எந்த சனநாயக நாட்டிலும் தன்னாட்சிப் பெற்ற ஒரு தேர்தல் ஆணையம் பதவியில் இருக்க முடியாது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 280வது விதிப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத் தலைவர் நிதிக்குழுவை (Finance Commission) நியமிக்கிறார். இந்த நிதிக்குழு எல்லா மாநிலங்களுக்கும் சென்று மாநில முதல்வர்களைச் சந்தித்து ஜந்தாண்டுகளுக்கு மாநிலத்திற்குத் தேவையான நிதிப்பகிர்வை ஒன்றிய அரசின் நிதித் தொகுப்பிலிருந்து செய்கிறது. இதுவரை 14 நிதிக்குழுக்கள் குடியரசுத் தலைவர்களால் நியமிக்கப்பட்டு பரிந்துரைகளை அளித்து உள்ளன.
2017ஆம் ஆண்டு முன்னாள் ஒன்றிய அரசின் நிதிச் செயலராகப் பணியாற்றிய என்.கே. சிங் தலைமையில் 15ஆவது நிதிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஏழாவது நிதிக்குழு வரை அதன் தலைவர்கள் முன்னாள் முதலமைச்சர்களாகவோ அல்லது நீதிபதிகளாகவோ நியமனம் செய்யப்பட்டனர். பிறகு இந்த நிலை மாறி ஒன்றிய அரசிற்கு வேண்டிய நிதி இயல் அறிஞர்கள் நியமிக்கப்பட்டார்கள். தற்போது ஒன்றிய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓர் உயர் அலுவலர் நியமிக்கப் பட்டது பல நடுநிலையாளர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு மேற்கொள்ளப்படும் என நிதிக் குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே குறைந்த நிதிப் பகிர்வை ஒன்றிய அரசிடமிருந்து பெற்று வரும் தென்னக மாநிலங்கள் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நிதிப் பகிர்வு செய்யப்பட்டால் மொத்த நிதிப் பகிர்வில் 70 முதல் 80 விழுக்காடு வட மாநிலங்களுக்குச் சென்றுவிடும். சான்றாக தமிழ்நாடு சென்ற 14 நிதிக்குழுவில் ஒட்டுமொத்த நிதிப்பகிர்வில் 3.8 விழுக்காடு கூட பெறவில்லை. தென்னக மாநிலங்களும் மற்றும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய இந்தி பேசாத மாநிலங்கள்தான் ஒன்றிய அரசின் வரி வருவாய்க்கு 70 விழுக்காட்டிற்கு மேல் பங்களிப்பு செய்து வருகின்றன.
ஆனால் இந்த மாநிலங்கள் பெற்றதோ அல்லது பெறப் போவதோ ஒட்டு மொத்த நிதிப் பகிர்வில் 10 விழுக்காடு அளவிற்குக் கூடப் பெறவில்லை. பெறப் போவதில்லை. ஒன்றிய அரசின் ஓய்வு பெற்ற அலுவலரின் வழியாக நிதிக் குழுவின் தன்னாட்சி அதிகாரங் கள் புதைக்குழிக்குள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தியாவின் ரிசர்வ் வங்கி தலைமை வங்கியாகச் செயல்பட்டு வருகிறது. பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் 1935ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1949இல் ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி யின் சட்டவிதிகளின்படி இது முழுமையான தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது. பணவியல் பொருளாதாரத்தைப் பொருத்த வரை இந்திய ரிசர்வ் வங்கிதான் மேலாண்மை செய்ய முழு அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.
ஏற்கெனவே இந்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரங்களைக் காங்கிரசு ஒன்றிய அரசு குறைத்து வருகிறது என்ற பல குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் 2014க்குப் பிறகு அமைந்த மோடி அரசு இந்திய ரிசர்வ் வங்கியினுடைய தன்னாட்சி அதிகாரத்தைத் தகர்த்து விட்டது எனலாம். காங்கிரசு ஆட்சிக் காலத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜன் நடுநிலையோடு செயல்பட்டார். ஒன்றிய அரசின் குறுக்கீடுகளை நிராகரித்தார். 2014இல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு ரகுராம் ராஜனைப் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே நீக்குவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு முதன்மையான காரணம் ஏறக்குறைய 7 இலட்சம் கோடியைக் கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்தாத பெருமுதலாளிகள் மீது கடும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியின் சார்பாக ரகுராம் ராஜன் மேற்கொண்டார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் குழப்பத்தையும் சரிவையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். ரகுராம் ராஜனை நீக்கிவிட்டு குஜராத் முதலாளிகளான அம்பானிகளுக்கு நெருங்கிய உறவினராக உர்ஜித் பட்டேல் என்பவரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமித்தனர். இதற்குப் பின்பு தான் 2016 நவம்பர் 8 அன்று ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் இந்தியப் பொருளாதாரமே பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இந்த ஏதேச்சதிகார முடிவால் பல மாநிலங்களில் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது.
மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசிற்கும் பணவியல் துறையில் நடுநிலையாக இயங்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்திய ரிசர்வ் வங்கித் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது. பல மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறைக் காலத்தில் ரிசர்வ் வங்கியிடமிருந்து நேரடியாகக் கடன்களைப் பெற்றுத் திருப்பிச் செலுத்தி உள்ளன. பொருளாதாரத்தைச் சீர்குலைக்கச் செய்த இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து 1.76 இலட்சம் கோடியை ஒன்றிய அரசுக் கடனாகப் பெற்றுள்ளது.
இதுபோன்று மாநில அரசுகள் இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகப் பெற முடியாது; பெறவே முடியாது. அமெரிக்க நாட்டில் ரிசர்வ் வங்கியைக் கூட்டாட்சி ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank) என்று அழைப்பார்கள். ஆனால் இந்தியாவில் ஒன்றிய அரசின் அதிகாரம் வங்கித் துறையிலும் உச்ச நிலையைத் தொட்டுவிட்டது. உர்ஜித் பட்டேல் ஒரு குசராத்தியாக இருந்தாலும் இந்த நடவடிக்கையால் வங்கித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்ற காரணத்தினால் இந்தக் கடனை ஒன்றிய அரசிற்கு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார்.
பொருளாதாரம் மற்றும் வங்கியியல் துறையில் நிபுணர்களாக இருப்பவர்கள்தான் பொதுவாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாக நியமிக்கப்படும் மரபாக இருந்தது. இதை தகர்த்து வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சக்திகாந்த தாசை ஆளுநராக பா.ச.க. அரசு நியமித்தது. இவர் ஒன்றிய அரசின் வருவாய்ச் செயலராக இருந்த போது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக பா.ச.க. ஊடக செய்தித் தொடர்பாளர் போன்று செயல்பட்டார். எனவே தான் இவரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமனம் செய்தனர். பதவியேற்றவுடன் ஒன்றிய அரசு கேட்ட 1 இலட்சத்து 40 ஆயிரம் கோடியைக் கொடுத்து விட்டார்.
ஒன்றிய அரசின் மாநில அரசுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடும் நடு நிலையான ஓர் அமைப்பை முற்றிலும் சிதைத்து வருகிறது ஒன்றிய அரசு. பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் மேலாண்மை செய்யும் தன்னாட்சி நிறுவனங்களைச் சிதைத்து வருவதால் மாநில மக்களின் உரிமைகள் நாளும் பறிபோய்க் கொண்டே இருக்கின்றன. மிகவும் மெல்லியக் கோட்டிற்கு இடையேதான் பொருளாதாரமும் அரசியலும் மேலாண்மை செய்யப்படுகின்றன. அரசியலில் அமைதித் தன்மையின் கூறுகள் ஒரு மாநிலத்தில் சிதைக்கப்பட்டாலும் அதன் எதிர்மறை விளைவுகள் எல்லா மாநிலங்களிலும் எதிரொலிக்கும். இந்த மென்மையான அரசியல் இழையைக் கூட மோடி அரசு அறுத்து விட்டது.
காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டப் பிரிவைத் தன்னிச்சையாக நீக்க முடிவு எடுத்தது. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான போது 370வது பிரிவை நீக்க வேண்டுமென்றால் காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அரசமைப்புச் சட்டவிதிகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. மாநிலச் சட்டமன்றம் இயங்காத நேரத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கின்ற நேரத்தில் இந்தச் சட்டப்பிரிவை நீக்கியது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
இதே நிலையில்தான் எதிர்கட்சிகளின் ஆட்சிகளை மாநிலங்களில் செயல்பட விடாமல் அக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கட்சித் தாவலை ஊக்குவித்து மாநில அரசுகளின் நிலைத்தத் தன்மையைச் சீர்குலைத்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி இருக்கும் நேரத்தில் அதற்குரிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் எதிர்கட்சி அரசுகளைக் கவிழ்க்கும் போக்கு இன்று இந்திய அரசியலில் என்றுமில்லாத அளவிற்கு பா.ச.க. அரசு ஊக்குவிப்பதற்கு உலக அளவில் ஊடகங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, ஒன்றிய அரசின் புலனாய்வுத்துறை ஆகியவைகள் பா.ச.க.வின் அரசியல் பிரிவுகளாக மாற்றப் பட்டுள்ளன.
10 விழுக்காடு உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு, தேசியக் கல்விக் கொள்கை, தேசிய மருத்துவ ஆணையம், தேசியப் புலனாய்வு முகமை உருவாக்குவதன் காரணமாக 1950ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட கல்வி, சுகாதாரம், சமூக நலன், காவல்துறை ஆகிய துறைகளில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. சரக்கு-சேவை வரி மாநிலங்களின் உரிமைகளை மட்டுமின்றி மாநில அளவில் செயல்பட்டு வந்த சிறுகுறு தொழில்களின் பொருளாதாரத்தைச் சீரழித்து விட்டது. ஆர்.எஸ்.எஸ். இந்தியாவா? அம்பானி இந்தியாவா? என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பின்பு மாநிலங்களின் உரிமைகள் எங்கே இருக்க முடியும்?
- மு.நாகநாதன்