நடுவண் அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டங்கள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன. குடியுரிமை அற்றவர்கள் என மத சிறுபான்மையினர்களை பிரித்து அவர்களை என்ன செய்யப் போகிறார்களோ என்ற அச்சமே இத்தகைய கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு காரணமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழுந்தைகளில் 38 சதவீத குழந்தைகளிடம் பிறப்புச் சான்றிதழே கிடையாது என்பது அரசு புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. கடைசியாக வெளியான தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை-4இன் படி 2015-16ஆம் ஆண்டு கணக்கின் அடிப்படையில் 5 வயதுக்குட்பட்ட 62.3% குழந்தைகளிடம் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் உள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க பிறந்த இடம், பிறந்த தேதியை உறுதி செய்யும் ஒரு சான்றிதழ் வழங்க வேண்டும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் இருக்காது, பள்ளிக் கல்வி சான்றுகளும் இருக்காது. எனவே பிறப்புச் சான்றிதழை தருவது மட்டுமே அவர்களுக்கான ஒரே வாய்ப்பு. ஏனெனில் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு பிறப்புச் சான்றிதழ்தான் பொதுவாக கேட்கப்பட்டது. எனவேதான் அசாமில் குடியுரிமை அற்றவர்கள் என வரையறுக்கப்பட்ட 40 லட்சம் பேரில் பெரும் எண்ணிக்கையில் குழந்தைகளும் இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் பிறப்புச் சான்று இல்லாத இந்த 38% குழந்தைகளையும் நடுவணரசு குடியுரிமை அற்றவர்கள் என தீர்மானித்து முகாம்களில் அடைத்து வைக்கப் போகிறதா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. இந்த குழந்தைகளில் வெறும் இஸ்லாமியர்கள் மட்டும் இல்லை. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தை சார்ந்தவர்களுமே உள்ளனர்.
பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969இன் படி எல்லோருடைய பிறப்பையும், இறப்பையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இதற்கான முறையான கட்டமைப்பு வசதிகள் கூட பல மாநிலங்களில் இல்லை. 2017ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவின் பிறப்பு பதிவு விகிதம் 84.9% ஆக உள்ளது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டும்தான் பிறப்பு இறப்பு பதிவுக்கான சிவில் பதிவு அமைப்பு அறிக்கை-2017ஐ வெளியிட்டுள்ளன. குழந்தைகள் பிறப்பு பதிவு குறைவாக உள்ள உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்கிறது யுனிசெப் ஆய்வு. இப்படிப்பட்ட மோசமான செயல்பாட்டில் அரசாங்கமே உள்ள நிலையில் குடியுரிமை, குடிமக்கள் திருத்த சட்டங்களை செயல்படுத்த துடிப்பது தேவையா, நியாயமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.