2022-ம் ஆண்டிற்கான ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்திய கார்ப்ரேட் அரசியலின் முகத்திரையை அது அம்பலப்படுத்தி இருக்கின்றது. அசமத்துவம் அரசால் திட்டமிட்டு இந்திய மக்கள் மீது திணிக்கப்படுகின்றது என்பதும், அதைச் செய்வது மட்டுமே கார்ப்ரேட் அரசியல்வாதிகளின் ஒரே வேலை என்பதும் உறுதியாகி இருக்கின்றது.
நாட்டில் உள்ள 84 சதவீத குடும்பங்களின் வருமானம் 2021ல் குறைந்துள்ளது, ஆனால் அதே நேரத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102ல் இருந்து 142 ஆக உயர்ந்துள்ளது என்று ஆக்ஸ்பாம் அறிக்கை கூறியுள்ளது, இது கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட மோசமான வருமானப் பிளவைச் சுட்டிக் காட்டுகிறது.
கொரோனா தொற்றுநோய் இந்தியாவை தொடர்ந்து அழித்து வருவதால், நாட்டின் சுகாதார பட்ஜெட் 2020-21ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து 10% சரிந்துள்ளதாக அறிக்கை கூறுகின்றது. மேலும், கல்விக்கான ஒதுக்கீடு 6% குறைக்கப் பட்டுள்ளதையும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மொத்த யூனியன் பட்ஜெட்டில் 1.5%லிருந்து 0.6% ஆகக் குறைந்துள்ளது என்பதையும் ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது.
2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் 100 பணக்காரர்களின் கூட்டுச் செல்வம் 57.3 லட்சம் கோடி ரூபாயை எட்டியதாக ஆக்ஸ்பாம் உலக அறிக்கையின் இந்திய துணைப் பிரிவு கூறுகிறது. அதே ஆண்டில், தேசியச் செல்வத்தில் கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீத மக்களின் பங்கு வெறும் 6 சதவீதமாக இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
தொற்றுநோய் காலத்தில் (மார்ச் 2020 முதல் நவம்பர் 30, 2021 வரை), இந்திய பில்லியனர்களின் சொத்து மதிப்பு ரூ.23.14 லட்சம் கோடியிலிருந்து ரூ.53.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதேநேரம், 4.6 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள், 2020 ஆம் ஆண்டில் தீவிர வறுமையில் வீழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஐக்கிய நாடுகள் சபையின் படி, உலக புதிய ஏழைகளில் கிட்டத்தட்ட பாதி பேர் ஆகும்.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகில் மூன்றாவது அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. மேலும், பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்தை விட அதிகமான பில்லியனர்களை இந்தியா கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. 2021 இல் இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கையில் 39 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் வேலையின்மை விகிதம் நகர்ப்புறங்களில் 15 சதவீதமாக இருந்தபோதும், சுகாதார அமைப்பு சரிவின் விளிம்பில் இருந்தபோதும் பில்லியனர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
அதானி போன்ற பணக்காரர்களான 100 குடும்பங்களின் செல்வத்தில் ஐந்தில் ஒரு பங்கு அதிகரிப்பு என்பது ஒரு தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்களின் செல்வத்தின் அதிகரிப்பால் கணக்கிடப்பட்டதாக ஆக்ஸ்பாம் சுட்டிக் காட்டியுள்ளது.
உலக அளவில் 24வது இடத்திலும், இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் உள்ள கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரு வருட காலத்தில் எட்டு மடங்கு பெருகியுள்ளது. அவரது சொத்து மதிப்பு 2020 இல் 8.9 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2021 இல் 50.5 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஃபோர்ப்ஸின் நிகழ் நேரத் தரவுகளின்படி, நவம்பர் 24, 2021 நிலவரப்படி, அதானியின் நிகர சொத்து மதிப்பு 82.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இந்தியாவின் கொடிய இரண்டாவது அலையின் போது, எட்டு மாத கால இடைவெளியில் அதானியின் இந்த அபரிமிதமான வளர்ச்சியில், ஆஸ்திரேலியாவில் அதானி புதிதாக வாங்கிய கார்மைக்கேல் சுரங்கங்கள் மற்றும் மும்பை விமான நிலையத்தில் வாங்கிய 74 சதவீத பங்குகளின் வருமானமும் அடங்கும். அதே நேரத்தில், முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, 2020ல் 36.8 பில்லியன் டாலரில் இருந்து 2021ல் 85.5 பில்லியன் டாலராக - இருமடங்காக உயர்ந்துள்ளது” என அறிக்கை கூறுகிறது.
இந்திய அரசாங்கத்தின் வரி விதிப்புக் கொள்கை பணக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பது குறிப்பாக அரசின் கொள்கைகளான செல்வ வரி ஒழிப்பு, பெருநிறுவன வரிகள் குறைப்பு மற்றும் மறைமுக வரிவிதிப்பு போன்றவை பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றியுள்ளதாக அறிக்கை கூறுகின்றது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசின் வருவாயில் ஒரு பங்காக மறைமுக வரிகள் அதிகரித்துள்ளதையும், அதே நேரத்தில் கார்ப்பரேட் வரி விகிதம் குறைந்து வருவதையும் ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2020-21 முதல் ஆறு மாதங்களில் எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி கடந்த ஆண்டை விட 33 சதவீதம் உயர்ந்துள்ளது, இது கொரோனாவுக்கு முந்தைய அளவை விட 79 சதவீதம் அதிகம். அதே நேரத்தில், ‘பெரும் பணக்காரர்களுக்கான’ சொத்து வரி 2016 இல் ரத்து செய்யப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக கார்ப்பரேட் வரிகளை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகக் குறைத்ததால் ரூ. 1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது, இது இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்புக்கு பங்களித்தது என்று அறிக்கை கூறுகிறது. மேலும், “இந்த போக்குகள் ஏழைகள், விளிம்புநிலை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிக வரிகளை செலுத்தினர். அதே நேரத்தில் பணக்காரர்கள் தங்கள் நியாயமான பங்கை செலுத்தாமல் அதிக பணம் சம்பாதித்தனர்” என்றும் அறிக்கை கூறுகிறது.
இதன் மூலம் மோடியின் ஆட்சியில் இந்தியா இரண்டு அசமத்துவக் கூறாக உடைக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று சிறுபான்மையான பணக்காரக் கும்பலின் வளமான இந்தியா, மற்றொன்று பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வறிய இந்தியா.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இரும்புச் சத்து, விட்டமின், ஐயோடின் உள்ளிட்ட சத்துகள் போதிய அளவில் கிடைக்காததால் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் குழந்தைகள் வரை பலியாவதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
யுனிசெப் ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 35% குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17% குழந்தைகள் வளர்ச்சிக்கேற்ற எடையின்றி இருப்பதாகவும், 33% குழந்தைகள் வயதுக்கேற்ற எடையின்றி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த Welt hunger hilfe மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த Concern Worldwide ஆகிய அமைப்புகளால் வெளியிடப்பட்டு வரும் உலக பட்டினிப் பட்டியல் 2021ம் ஆண்டுக்கான பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 116 நாடுகளில் இந்தியா 101வது தரவரிசையில் உள்ளது.
கடந்த ஆண்டு வெளியான பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 107 நாடுகளில் இந்தியா 94வது தர நிலையில் இருந்தது.
அண்டை நாடான பாகிஸ்தான் 92வது இடத்திலும், சீனா 5வது இடத்திலும், நேபாளம் 76வது இடத்திலும், இலங்கை 65வது இடத்திலும், பர்மா 71வது இடத்திலும் உள்ளன.
செல்வம், சரியான முறையில் பங்கீடு செய்யப்படாததே இந்தியாவின் பிரச்சனை என்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்திய மக்களில் 22 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் நிலையில், உலக பெரும் கோடீஸ்வரர்களில் 84 பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள் என்பதை இந்தப் பட்டியலுடன் சேர்ந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
2016ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களிபடி, உலகில் வளர்ச்சிக் குறைபாடான குழந்தைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் உள்ளனர்.
இப்படிப்பட்ட அசமத்துவ வளர்ச்சியை வைத்துக் கொண்டுதான் மோடி அரசு உலக முதலாளிகளை இந்தியாவிற்கு தொழில் தொடங்க அழைத்துக் கொண்டு இருக்கின்றது.
சொந்த நாட்டு மக்களை பட்டினி போட்டு சாகடிக்கும் மோடி அரசு மற்றொரு பக்கம் அதானி, அம்பானி போன்ற தரகு முதலாளிகளை தடை இன்றி நாட்டை சுரண்டி கொள்ளையிட அனுமதித்துள்ளது.
சாமானிய மக்களிடம் வரிகளை போட்டு சுரண்டும் அரசு பெருமுதலாளிகளுக்கு வரிச் சலுகை, கடன் தள்ளுபடி என வாரி வாரி கொடுத்து அவர்களை உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற ஓடி ஓடி உழைக்கின்றது.
கொரோனோ காலத்தில் இந்திய மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல், மருத்துவமனையில் படுக்க இடம் கிடைக்காமல், மருந்து கிடைக்காமல், செத்தால் சுடுகாடு கிடைக்காமல் புழு பூச்சிகளைப் போல கொத்துக் கொத்தாய் செத்து விழுந்து கொண்டிருந்த போது அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்ததையும், இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையும் அவர்களின் சொத்து மதிப்பும் உயர்ந்ததையும் பெருமையாக ரசிக்க ஒரு மனம் வேண்டும் என்றால் நாம் அந்த மனதை ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் இருந்துதான் பெற முடியும்.
- செ.கார்கி