அமெரிக்காவின் இன்டன்பர்க் அறிக்கை வெளிவந்த பிறகு அதானி குழுமம் செய்த மோசடிகள் வெடித்துக் கிளம்பிய வண்ணமே உள்ளன. ஆயுள் காப்பீட்டுக் கழகம், பொதுத் துறை வங்கிகள், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றின் நிதியை அதானி குழுமம் ஒன்றிய அரசின் உதவியோடு பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளையும் அச்சத்தையும் உருவாக்கி வருகிறது.
இந்தியப் பொருளாதாரம், திட்டமிடல் பொருளா தாரத்தைக் கைவிட்ட காலத்திலிருந்து தனியார் முதலாளித்துவ நிறுவனங்கள் செய்யும் மோசடிகள் பெருமளவில் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. ஏடுகள், தொலைக்காட்சி ஊடகங்கள் முழு அளவில் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருவதால் அதானி குழுமம் செய்த உலகளவிலான பெரும் நிதி மோசடி மூடி மறைக்கப்பட்டு வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில ஊடகங்கள் மட்டுமே இன்டன்பர்க் அறிக்கையின் முதன்மையான கருத்துகளையும் அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் பங்குச் சந்தை சரிவுகளையும் வெளியிட்டன. மூலதனச் சந்தை வழியாகத்தான் முதலாளித்துவம் தனக்கான நிதியாதாரங்களைப் பெற்று வருகிறது. ஊக வணிகத்தின் அடிப்படையில் இயங்கும் பங்குச் சந்தை இதற்குப் பெருமளவில் உறுதுணையாக உள்ளது.
18ஆம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் வடஅமெரிக்க நாடுகளிலும் பங்குச் சந்தை அமைப்பு முறை காலூன்றத் தொடங்கியது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற தமிழ் முதுமொழியின் கருத்துக்கேற்ப பங்குச் சந்தை தொடங்கிய காலம்தொட்டு இன்றுவரை குழப்பங்களும் மோசடிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதன்தொடர்பாக ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவுகளையும் பொருளாதார வரலாற்றின் வழியாக அறிய முடிகிறது. இணையத்தின் வழி பார்த்தால் பங்குச் சந்தை மோசடிகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
நாம் இருவர் நமக்கு இருவர்
இதற்கு முதன்மைக் காரணம் பங்குச் சந்தை இயங்கும் முறை சூதாட்ட வடிவத்தின் அனைத்துக் கூறுகளையும் பெற்றிருக்கிறது. பணவியல் பொருளாதார நூல்களில் மக்கள் ஏன் பணத்தைத் தேடுகிறார்கள்? சேமிக்கிறார்கள்? என்ற கருத்தியல் பொருளாதார அறிஞர்களால் விளக்கப்படுகிறது. பணம் கீழ்க்கண்ட காரணிகளின் அடிப்படையில் பணச்சுழற்சி முறை ஊக்குவிக்கப்பட்டு சந்தைப் பொருளாதாரத்திற்குத் தேவையான மூலதனத்தைப் பெற்றுத் தருகிறது. ஆனால் சந்தைப் பொருளாதாரத்தில் கள்ளப்பணமும் நல்லப் பணமும் சம அளவில் இயங்குகின்றன. இந்த உண்மையை 16ஆம் நூற்றாண்டிலேயே இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்து நிதி ஆலோசகராகப் பணி யாற்றிய கிரம்ஸ் கெட்டப் பணம் நல்லப் பணத்தைத் துரத்தி விடுகிறது (Bad money drives out good money) என்று அளித்த விளக்கம் நமக்கு வியப்பை அளிக்கிறது. இந்தக் கருத்துப் பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் பணத்தினுடைய பல பரிமாணங்கள் ஏற்பட்ட பிறகும் பொருளாதாரத்தில் பல பின்னடைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
பணத்தினுடைய குறிக்கோள்கள் எப்படி அமைய வேண்டும் என்பதைப் பொருளியலில் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டினர். அறிஞர் காரல் மார்க்சு தொழில் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட இயந்திரமயமான பொருள் உற்பத்தி பெருக்கத்தை விளக்குகிற போது பணப் பரிமாற்றத்தினுடைய அடிப்படைக் காரணங்களை விளக்கிக் கூறினார். பொருட்கள் உற்பத்தி செய்யும் போது மனிதர்களின் உழைப்பு அப்பொருட்களில் உறைந்து கிடக்கிறது. பொருளின் மதிப்பே உழைப்பு தான். முதலாளிகள் உழைப்புக்கு ஏற்ற கூலியை அளிக்காமல் உழைப்பாளிகளுக்கு அளிக்க வேண்டிய உரியக் கூலியை இலாபமாகச் சுரண்டிச் செல்கின்றனர். மார்க்சு, பணத்தைப் பற்றியும் பணப் பரிமாற்றத்தைப் பற்றியும் அளித்த விளக்கங்கள் இன்று பெருமளவில் உண்மையாகி வருகின்றன. முதலாளித்துவம் உருவாக்கிய பண அமைப்பு முறை பொருளாதாரத்தில் பல பின்னடைவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. பல பொருளியல் அறிஞர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் பணத்தின் தேவையைப் பற்றியும் அதன் தாக்கங்களைப் பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.
1. பரிமாற்றத்திற்கான பணத்தேவை (Transaction Motive)
2. முன்னெச்சரிக்கை நோக்கத்திற்கான பணத்தேவை (Precautionary Motive)
3. ஊக நோக்கத்திற்கான பணத்தேவை (Speculative Motive)
தொழில் புரட்சியின் விளைவாக இயந்திரமய மாக்கப்பட்ட தொழில் உற்பத்தி முறை செல்வாக்குப் பெறத் தொடங்கிய பிறகு தனியார்த் துறையினர் பங்களிப்புப் பெருகியது. தனியார்த் துறையின் மூல தனத் தேவைக்காகப் பங்குச் சந்தை வலிமைமிக்க ஒரு பணவியல் கருவியாக உருமாறியது. பொருளா தாரச் சுதந்திரம் என்ற பெயரில் மூலதனத்தைப் பெருக்க முதலாளிகள் முற்பட்ட போது, மோசடிகளும் பயிரை ஒட்டி வளர்கின்ற களைகளாக வளர்ந்தன. ஒரு பக்கம் பணப் பெருக்கம், மற்றொரு பக்கம் நிதி மோசடி என்பது நடைமுறையாயிற்று. இந்த மோசடி பணத்தையும் பங்குச் சந்தைகள் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. பங்குச் சந்தைகளைக் கட்டுப்படுத்து வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் பங்குச் சந்தையில் பல விதிகள் உருவாக்கப்பட்டாலும் மோசடிப் பணத்தி னுடைய செல்வாக்கினைக் குறைக்க முடியவில்லை. இது முதலாளித்துவ முறையின் பெரும் தீங்காகக் கருதப்படுகிறது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் பங்குச் சந்தைக்குள் நடைபெறும் மோசடிகளை உடனடியாக அறிந்து கொள்ளும் நிலை இல்லாத காரணத்தினால் பங்குச் சந்தை தரகர்கள் செய்யும் பல தில்லுமுல்லுகள் பொதுவெளியில் தென்படுவதில்லை. சான்றாக. அறிவியல் பேரறிஞரான ஐசக் நியூட்டனும் 1720லேயே இந்த ஊக சூதாட்ட வணிகத்தில் ஈடுபட்டு பெரும் தொகையை இழந்தார். முதன்முதலாக இங்கிலாந்தின் தென்கடல் குழுமம் (Southsea Company) பங்குச் சந்தை நூறு விழுக்காடு இலாபம் தரும் குழுமமாக இருந்ததால் முதலில் ஏழாயிரம் பவுண்டுகளை ஐசக் நியூட்டன் முதலீடு செய்திருந்தார். சில மாதங்களிலேயே இன்றைய ரூபாய் மதிப்பில் 30 கோடிக்கு மேல் இழப்பைச் சந்தித்தார். அசைவுகளை அறிவியல்வழி அறிந்து தெளிந்த ஐசக் நியூட்டன் ஒவ்வொரு விசைக்கும் சமமான நேரடியான எதிர்விசை உண்டு என்று சுட்டிய அறிவியல் பெருமகனையும் பங்குச் சந்தை ஏமாற்றியது. இதைப் பற்றி ஐசக் நியூட்டன் குறிப்பிடும் போது நட்சத்திரங்களின் அசைவிலிருந்து மற்ற பொருட்களின் அசைவுகளை அறிவியல் வழியாக அறிய முடிந்த என்னால் மக்களின் பைத்தியக்காரத்தனத்தை அறிந்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் 1875ஆம் ஆண்டிலிருந்து ஆசியாவிலேயே மிகப்பெரிய பங்குச் சந்தையாக மும்பை பங்குச்சந்தை (Bombay Stock Exchange) இயங்கி வந்தது. 1992 ஆம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange) தனியார்த் துறையால் உருவாக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்குச் சந்தையின் மேலாண்மை இயக்குநராகவும் முதன்மைச் செயல் அலுவலராகவும் பணிபுரிந்தார். பதவி ஏற்றதிலிருந்து பங்குச் சந்தையில் அவர் வைத்ததே சட்டம் என்ற நிலை உருவானது. தனக்கு ஆன்மிக குரு சிரோன்மணி என்றும் இவர் இமயமலையில் தவம் புரிகிறார் என்றும் அவரின் அறிவுறுத்தலின்படியே செயல்பட்டதாகவும் பல முடிவுகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். அவர் பயன்படுத்திய கணினி அமைப்புகளுக்கு ரிக் வேதம், சாம வேதம் என்றும் பெயரிட்டு மின்னஞ்சல் வழியாக சித்து விளையாட்டுகளை இமயமலை சித்தபுருஷ் யோகியுடன் விளையாடியுள்ளார். போதிய கல்வித் தகுதியும் நிதிநிறுவனங்களில் பணியாற்றிய முன்னனுபவமும் இல்லாத - ஆண்டு ஊதியம் சில இலட்ச ரூபாயாகப் பெற்ற ஆனந்த் சுப்ரமணியத்திற்குக் கோடிக்கணக்கில் ஆண்டு ஊதியம் அளித்து, தனக்குத் துணை உயர் அலுவலராக நியமித்துக் கொண்டார்.
கணினி வழியாகப் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள், இரகசியங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த பங்குச்சந்தையில் ஈடுபட்ட ஒருவர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இரு பத்திரிக்கையாளர்கள் ஆய்வு மேற்கொண்டு ஊழல்களை வெளியிட்ட பிறகுதான் செபி மற்றும் ஒன்றிய அரசின் புலனாய்வுத் துறை மெல்ல மெல்ல தங்களின் கவனத்தைத் தேசியப் பங்குச் சந்தையின்மீது திருப்பியது. ஒன்றிய புலனாய்வுத் துறை ஆனந்த் சுப்ரமணியத்திடம் கடுமையான முறையில் விசாரணையை மேற்கொண்ட பிறகுதான் அந்த இமயமலை யோகி ஆனந்த் சுப்ரமணியம்தான் என்பது ஊடகங்களில் வெளிவந்தது. இதற்குப் பிறகு பல நாட்கள் கழித்துத்தான் சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டார். இந்தப் பங்குச் சந்தை இரகசியங்கள் முன்னதாகவே பல பங்குச் சந்தை தரகர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? என்பது யாருக்கும் தெரியாது.
எத்தனை இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது? யார் யார் பாதிக்கப்பட்டார்கள் என்ற விவரங்கள் எல்லாம் இதுவரை யாராலும் பெறமுடியவில்லை. ஒன்றிய அரசும் சங்கி சாமியார்கள் போன்று ஆழ்ந்த தவக்கோலத்தில் அமைதி காத்து வருகிறது.
பங்குச் சந்தை சித்து விளையாட்டில் ஈடுபடுபவர்கள் பெரும் பணக்காரர்களே ஆவர். பங்குச் சந்தை என்பதே முதலாளித்துவம் நடத்தும் சூதாட்டம் என்பதைப் பல பொருளியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். பங்குச் சந்தை மோசடிகளைத் தனித்துப் பார்க்க முடியாது. வங்கி மோசடிகள், நிதிநிறுவன மோசடிகள், அரசுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாயைக் கடன் பெற்றுத் திருப்பி செலுத்தாமல் ஐரோப்பிய நாடுகளில் மகிழ்ச்சியாக வலம் வரும் பல பெருமுதலாளிகள் செய்த மோசடிகளும் இதில் அடங்கும். இந்தத் தனியார்ப் பங்குச்சந்தையின் வளர்ச்சிக்கு சித்ரா ராமகிருஷ்ணா பெரும் பங்காற்றினார் என்று ஊழல் மோசடி வழக்கில் அவர் கைதான பிறகும் ஊடகங்கள் அவர் புகழைப் போற்றுவதில் சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கின்றன.
இதுபோன்ற பங்குச் சந்தை சூதாட்டமும் மோசடிகளும் முதலில் சவகர்லால் நேரு காலத்தில் முந்திரா ஊழலிலிருந்து தொடங்கியது. இந்த ஊழல் பெருமளவில் நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் மக்கள் மன்றத்திலும் விவாதப் பொருளாயிற்று. 1950களில் கொல்கத் தாவைச் சேர்ந்த பங்குச் சந்தை ஊக வணிகராக இருந்த அரிதாஸ் முந்திரா திடீரென்று சில ஆண்டுகளிலேயே பெருமுதலாளியாக வலம் வந்தார். இந்தியாவின் பல முதலாளிகளுக்குப் பங்குச் சந்தையில் எப்படி மோசடி செய்து, திடீரென்று பெருமுதலாளியாக மாறலாம் என்ற முதல் மோசடிப் பாடத்திட்டத்தையே வழங்கியவர்தான் அரிதாஸ் முந்திரா.
பொய்யான தகவல்களை அளிப்பது பங்குகளின் உண்மை மதிப்பைப் பல மடங்கு போலியாக உயர்த்தி முதலீட்டாளர்களை ஏமாற்றுவது, சிறு தொழில் செய்வோரின் பணத்தைப் பெறுவதற்காகத் தனக்கு அரசு ஆதரவு இருப்பதாகக் கூறி அவர்களின் பணத் தைக்கொண்டும் தனது வணிக நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் செய்வது, பங்குச் சந்தை கட்டுப்பாடுகளை ஊழல் செய்து தனக்கு சாதகமாக பயன்படுத்துவது போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டார் முந்திரா. இதுதான் ஒரு ஊக வணிகத் தரகர் உயர் முதலாளியான முதல் நிகழ்வாகும். இதன் பிறகு பல பங்குச் சந்தை மோசடிகளும் நிதி நிறுவன மோசடிகளும் இந்தியாவில் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் செபி (Securities and Exchange Board of India-SEBI) என்கிற இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று மையம் 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இன்று வரை இந்த அமைப்பும் கள்ளப் பணத்தை முதலீடு செய்பவர்களையும் பண மோசடிகளைச் செய்துவரும் பங்குச் சந்தைத் தரகர்களையும் பங்குச் சந்தையில் பணிபுரியும் உயர் அலுவலர்களையும் உரிய முறையில் கண்காணிக்கத் தவறிவிட்டது. இதற்கு ஒன்றிய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் முதலாளிகளின் தரகராகவே ஒன்றிய அரசின் பல நிர்வாக அமைப்புகள் தற்போது மாறிவிட்ட பிறகு, அதானி போன்ற பெருமுதலாளிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் நிறுவனங்களின் மோசடிகளுக்குத் துணிச்சலுடன் பொதுத்துறை வங்கிகளையும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் ஒன்றிய அரசின் பல நிர்வாக அமைப்புகளையும் பயன்படுத்தியுள்ளனர் என்பதை இன்டன்பர்க் அறிக்கை தெளிவாக்குகிறது.
பொதுத் துறை வங்கிகளும் ஆயுள் காப்பீட்டுக் கழகங்களும் ஒன்றிய அரசின் துணையோடு அதானி குழுமங்களில் நிதி முதலீடுகளை மேற்கொண்டதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதானி குழுமம் பெற முடிந்தது. மேலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற் குள் உள்ள வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியன ஒப்பந்த அடிப்படையில் அதானி குழுமம் மேலாண்மை செய்வதற்கு ஒன்றிய அரசால் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணத்தின்போது அதானியையும் அழைத்துச் சென்றார் என்பதையும் இதன் காரணமாக ஒன்றிய அரசின் பல சலுகைகளை அதானி குழுமம் பெற்றது என்பதையும் இராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டினார். இராகுல் காந்தி பேசிய பிறகு பிரதமர் நரேந்திரர் மூன்று மணி நேரம் பேசினார். ஒரு வரியிலும் ஒரு சொல்லில் கூட அதானியைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்பதுதான் உலகளவில் பலருக்கு அதிர்ச்சியை அளித்தது.
1957ஆம் ஆண்டு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் முந்திரா குழுமம் உட்பட 6 நிதி மோசடியில் ஈடுபட்ட குழுமங்களில் அன்றைய ரூபாய் மதிப்பில் ஒரு கோடியே 24 இலட்சம் அளவிற்கு முதலீடு செய்தார்கள். ஆயுள் காப்பீட்டுக் கழகம் சீரான முறையில் இயங்குவதற்காகவும் நிதி முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காகவும் ஒரு மேலாண்மை முதலீட்டுக் குழு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இயங்கி வந்தது. இந்தக் குழுவினுடைய பரிந்துரைகளுக்கு உட்படுத்தாமல் ஒன்றிய அரசின் நிதித்துறை அழுத்தத்தால் இந்தப் பெரும் நிதியுதவி மோசடிக் குழுமங்களுக்கு வழங்கப் பட்டது. 60 விழுக்காட்டிற்கு மேலான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் நிதியுதவி முந்திரா குழுமத்திற்கு வழங்கப் பட்டது. அப்போது காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பெரோஸ் காந்தி இந்த ஊழலை நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு முன்னிலையில் ஆதாரங்களோடு ஆவணங்களை வழங்கி திடுக்கிடச் செய்தார். இந்திரா காந்தியின் கணவர் என்கிற முறையிலும் நேருவின் மருமகன் என்ற தகுதியிலும் செல்வாக்குப் பெற்றிருந்த பெரோஸ் காந்தி இத்தகைய ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக இந்த ஊழல் பற்றிய விசாரணையை மேற்கொள்ள மும்பை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய எம்.சி. சாக்லா தலைமையில் ஒரு நபர் குழுவை பிரதமர் நேரு அமைத்தார்.
இந்திய நீதி விசாரணை வரலாற்றிலேயே முதன்முதலாக நீதிபதி சாக்லா 24 நாட்களில் தனது விசாரணையை முடித்து அறிக்கையை ஒன்றிய அரசிற்கு அளித்தார். மேலும் விசாரணை வெளிப்படைத் தன்மையோடு இயங்க வேண்டும் என்பதற்காகப் பொது விசாரணை முறையைப் பின்பற்றினார். முந்திரா நிதி மோசடி செய்ததும் அதற்குத் துணையாக ஒன்றிய அரசின் நிதித்துறையின் உயர் அலுவலர்கள் இருந்ததும் அறிக்கையில் சுட்டப்பட்டது. அப்போது ஒன்றிய அரசின் நிதி அமைச்சராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியில் இருந்து விலகினார். ஜனநாயக முறையையும் நாடாளுமன்றத்தையும் மதிக்கின்ற உயர் நோக்கும் பிரதமர் நேருவிடம் இருந்ததால் ஊழலைத் தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆனால் இன்று இந்த முந்திரா ஊழலைவிடப் பல நூறு மடங்கு பெரிய அளவில் நடைபெற்ற பல இலட்சம் கோடி ரூபாய் ஊழலை அதானி குழுமம் செய்துள்ளது என்று இன்டன்பர்க் அறிக்கை ஆதாரத்தோடு வெளியிட்ட பிறகும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவில்லை. எல்லாவித ஜனநாயக நெறிகளையும் காலில் போட்டு மிதிக்கும் அளவிற்கு இந்த ஊழலை மூடி மறைப்பதற்காகத் திசை திருப்பும் நோக்கத்தோடு அவசர அவசரமாக இராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது இந்த ஊழல் மோசடிக்கு ஒன்றிய பாஜக அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் துணை போயிருக்கின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மற்றொரு பங்குச் சந்தை மோசடி இந்தியாவையே உலுக்கியது. 1992இல் குசராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை தரகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி ஏறக்குறைய 24,000 கோடி ரூபாய் அளவிற்குப் பங்குச் சந்தையில் மோசடி செய்தார். இவரும் பொதுத் துறை வங்கிகளைப் பயன்படுத்திப் பண இரட்டிப்பு மோசடி செய்து பங்குச் சந்தையைப் பெரும் வீழ்ச்சிக்குள்ளாக்கினார். ஆனால் இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு 2001இல் சிறையிலேயே மறைந்தார்.
இந்தியாவின் வேளாண் தொழில் பணித் துறைகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கியவர் நேரு. பொதுத் துறை நிறுவனங்கள் தான் இந்தியப் பொருளாதாரத்தின் வழிகாட்டி என்றும் வலியுறுத்திப் பல பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கியவரும் அவரே. ஆனால் நேருவின் மீது காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்புணர்ச்சியையும் தொடர்ந்து கொட்டி வருகின்றன சங் பரிவாரங்கள். இதன் உச்சம்தான் 75ஆம் ஆண்டு விடுதலை விழாவில் நேருவின் உருவப் படத்தைக் கூட வைக்காமல் மறைத்ததாகும். என்னதான் மறைத்தாலும் நேருவின் உணர்வும் பெரோஸ் காந்தியின் ஆளுமையும் இராகுல் காந்தியின் வடிவில் எதிரொலிக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு மத அரசியலைத் தூண்டி சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டி வருகிறார் இராகுல். இதைப் பொறுக்க முடியாமல் நாளுக்கு நாள் அவர் பெற்றுவரும் செல்வாக்கினைத் தடுக்கும் நோக்கோடுதான் இராகுலை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து விட்டனர். தங்களை நேரிடையாக எதிர்ப்பவர்களையும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த தலைவர்களை அழிக்கும் நோக்கத்தோடு வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, புலனாய்வுத் துறைகள் ஆகியன என்றும் இல்லாத அளவிற்கு ஒன்றிய அரசால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவினுடைய மாண்பும் மரியா தையும் உலகளவில் சிதைந்து கேலிக்குரியதாக மாறி வருகிறது.
இந்தியாவினுடைய பொருளாதாரம் நாளும் சரிந்து வருகிறது. மறைமுக வரி என்ற பெயரில் ஏழை நடுத்தர மக்களுடைய பணம் சூறையாடப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைக்கப்படுகின்றன. மோசடிகள் செய்யும் அதானி குழுமம் போன்ற பெரு நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தியா - சீனா வருங்கால பொருளாதார வளர்ச்சியடையும் நாடுகள் என்ற தலைப்பில் மார்ச் 16, 2023 நாளிட்ட இந்து ஏட்டில் மா ஜியா (இந்தியாவிற்கான சீன தூதரகத்தின் பொறுப்பு உயர் அலுவலர்) ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் சீனா 2022ஆம் ஆண்டு 3 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்று ஒரு கோடியே 20 இலட்சம் நபர்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு அளித்துள்ளது. சீனாவினுடைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 1479 இலட்சம் கோடியாகும் 18 டிரில்லியன் அமெரிக்க டாலர்). கடந்த ஐந்தாண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சி 5.2 விழுக்காடாகும். இந்த வளர்ச்சியின் பயன்கள் சீனாவில் அடிப்படை வறுமையை ஒழித்து விட்டது. 70 விழுக்காடு அரசின் பொதுச் செலவு மக்களின் நல்வாழ்விற்காகச் செலவிடப்படுகிறது. 10 கோடி ஊர்ப்புற மக்களை வறுமையில் இருந்து விடுவித்துள்ளது. முதியோர் காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக 100 கோடி மக்கள் பயன் பெற்று வருகின்றனர். தொடர்ந்து மக்களுடைய வாழ்நிலை உயர்ந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வரி விதிப்பு குறைந்து வருகிறது. சான்றாக வரிச்சுமை 9.8 விழுக்காட்டிலிருந்து 7.4 அளவிற்குக் குறைந்துள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் சராசரி பங்களிப்பு 38.6 விழுக்காடாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு 25.7 விழுக்காடு மட்டும்தான். இந்தியா சீனாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தின் மதிப்பு 108.9 இலட்சம் கோடி ரூபாய் (136 பில்லியன் அமெரிக்க டாலர்). ஆனால் சீனாவின் இந்தியாவிற்கான ஏற்றுமதி கடந்த 10 மாதங்களில் 6 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாக மார்ச் 30, 2023 இந்து நாளேட்டில் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
சீனத் தூதரக உயர் அலுவலர் தனது கட்டுரையில் (மார்ச் 16) சீனாவிலிருந்து தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு (Made in India) குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்யாமல் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை இணைக்கும் மையமாக இந்தியா மாறி வருகிறது. இதைத்தான் மோடி அடிக்கடி Make in India என்று குறிப்பிடுகிறார். Made in China என்பது Make in India என்று மாறி வருகிறது என்பதுதானே உண்மை.
இது நேரு பின்பற்றிய தற்சார்பு கொள்கையை அடியோடு வீழ்த்தி விட்டது. பெருமளவில் வேலை வாய்ப்பையும் குறைத்து வருகிறது. இதுபோன்று பற்றி எரியும் பிரச்சினைகளில் சிறிதும் அக்கறை கொள்ளாமல், கவலைப்படாமல், அதானி என்கிற பெரு முதலாளிக் காக பிரதமரும் அவரது எடுபிடிகளும் வால் பிடிக்கும் கொள்கைதான் இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது.
அதானியின் மோசடிகள் பற்றி ஆதாரங்களோடு, ஆவணங்களோடு வெளிவந்த பிறகும் அதானி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் எதிர்க்கட்சிகளைப் பழி வாங்குவதுதான் இன்றைய மோடி அரசின் முதல் வேலையாக இருக்கின்றது.
இந்தியா எங்கே சென்று கொண்டிருக்கிறது? எப்போது வீழப் போகிறது என்பதுதான் எதிர்காலத்தில் எழப் போகின்ற அச்சந்தரும் வினாக்களாகும். முந்திரா நிதி மோசடி வெளிவந்த போது நேரு கையாண்ட முறையைப் பற்றியும், இன்று அதானி மோசடி வெளிவந்த போது நரேந்திர மோடி கையாளுகிற முறையைப் பற்றியும் எந்த ஊடகங்களும் எடுத்துரைக்காமல் கொத்தடிமைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் வீழ்த்தப்பட்டால் பொருளாதாரம் மேலும் சரிவுப் பாதையில் செல்லும் என்பது பல நாடுகளின் வரலாறு கற்பிக்கும் பாடமாகும்.
- பேராசிரியர் மு.நாகநாதன்