“மனம் புண்படுகிறது என்று நினைப்பவர்கள் எல்லாம் எனது நாடகத்தைப் பார்க்க வரவேண்டாம்” என்று அறிவித்தார், மறைந்த புரட்சி நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா. இது நேர்மையான ஒரு கடவுள் “மறுப்பாளனின்” பிரகடனம்!
“கோயில் கருவறைக்குள் நுழையாதே! இங்கே நான் மட்டுமே கடவுளின் பிரதிநிதி. இதோ பார், எங்களிடம் உச்சநீதிமன்றத் தீர்ப்பே இருக்கிறது” என்று பூணூல் மார்பை தட்டிக் கொண்டே பேசுகிறார்கள் அர்ச்சகப் பார்ப்பனர்கள். இது பார்ப்பனத் திமிரின் அடையாளம்.
“உன்னை இழிவு செய்யும் கோயிலுக்கு ஏன் மானங்கெட்டுப் போகிறாய்? அங்கே அர்ச்சகப் பார்ப்பானிடம் தட்சணையை கொடுத்துவிட்டு, கை கட்டி கர்ப்பகிரகத்துக்கு வெளியே நிற்கிறாயே; இது அவமான மில்லையா? அப்படியே உனக்கு பக்தி பீறிட்டு நிற்கிறது என்றால் உடைக்க வேண்டிய தேங்காயையும், கொளுத்த வேண்டிய கற்பூரத்தையும் கோயிலுக்கு வெளியே உடைத்து, நீயே வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ. ‘சூத்திரன்’ என்று இழிவுபடுத்தும் அர்ச்சகப் பார்ப்பானிடம் கை கட்டி நிற்காதே.” இது பெரியாரின் சுயமரியாதைக்கான போர்க் குரல்.
“இதோ பார், பார்ப்பன துவேஷி; இந்து மத விரோதி” என்று பார்ப்பனர்கள் பொங் கினார்கள். பக்தி போதை தலைக்கேறிய சூத்திரத் தமிழர்கள் சிலரும் ‘ஒத்து’ ஊதினார்கள்.
குத்தூசி குருசாமி ஒரு முறை இப்படி எழுதினார்: “தம்பி, வெள்ளரிக்காயை தின்றுக் கொண்டே மலம் கழிக்கிறாயே; வேண்டாமப்பா என்று சொன்னால், நான் அப்படித்தான் சாப்பிடுவேன், விரும்பினால் அதையே தொட்டுக் கொண்டு சாப்பிடுவேன்” என்று பதில் சொல்கிறான் தமிழன்.
“இப்போது ஏனப்பா, இந்த கதை யெல்லாம்? நீ என்ன சொல்ல வருகிறாய்?” என்று நீங்கள் கேட்கலாம். நேரடியாகவே செய்திக்கு வந்து விடுகிறோம்.
திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை பத்திரிகைகள் வழியாக வெளியிட்டிருக்கிறது.
“வரும் புத்தாண்டு நாளிலும் (அதாவது ஆங்கில புத்தாண்டு) வைகுண்ட ஏகாதசி நாளிலும், திருப்பதி திருமலைக்கு முதியோர், மாற்றுத் திறனாளிகள், கைக் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் தரிசனத்துக்கு வர வேண்டாம்; தவிர்த்துக் கொள்வது நல்லது. பக்தர்கள் கூட்டம் அதிகம் வரக் கூடும் என்பதால், இவர்களுக்கு தனி பாதுகாப்பு வசதிகளை எங்களால் செய்து தர முடியாது” என்பதே அந்த அறிவிப்பு.
“ஏழுமலையானை நம்பி பக்தர்கள் வர வேண்டாம்; உங்கள் பாதுகாப்புக்கு நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது என்று தேவஸ்தானம் இன்னும் வெளிப்படையாகவே அறிவித்திருக்க லாமே” என்று கேட்டுவிடக் கூடாது.
கடவுள் நம்பிக்கையை தேவஸ்தானமும் கைவிட்டுவிட்டது என்ற குட்டு உடைந்துவிடும்!
ஏகாதசி நாளில் சொர்க்க வாசல் திறக்கும் போது ‘உள்ளே நுழையும் வழி - வெளியேறும் வழி’ என்ற இரண்டுமே இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் பக்தர்களே சொர்க்க வாசலுக்குள் நுழைகிறார்கள். ‘அப்படியே நேராக சொர்க்கம் போகலாம், வா’ என்று பகவான் அழைத்தால் ஒரு பக்தரும் கடவுளை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்ன்னு; இதுதான் பக்தியின் இன்றைய நிலை!
கோயிலுக்கு போகாதே என்றால் அது மத விரோதம்! ‘கோயிலுக்கு வராதே’ என்று தேவஸ்தானம் கூறினால் அதற்குப் பெயர் பாதுகாப்பான பக்தி நல்லா இருக்குப்பா, உங்க கதை!
- கோடங்குடி மாரிமுத்து