அர்ஜுனன்: ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்தக் காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக்கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி வஞ்சித்து வசப்படுத்தினதாகவே காணப்படுகின்றனவே! அது மாத்திரமல்லாமல் அந்தப் பெண் வேஷத்தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள்கூடப் பிறந்ததாகவும் காணப்படுகிறதே! இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம்.

கிருஷ்ணன்: ஓ! அர்ஜுனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒரு நாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு “நான்” பெண் வேஷம் எப்படிப் போட முடியும்? அப்படிப் போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும்? ஒரு சமயம் திரு.அ.இராகவன் சொல்லுவது போல் ஆண் ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை எப்படி பெற முடியும்? “கேழ்வரகில் நெய் வடிகிறது” என்று சொன்னால் கேட்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன்னால் கேட்பவனுக்குப் புத்தி வேண்டாமா? பின்னை ஏன் புராணங்களில் அந்தப்படி எல்லாம் சொல்லப்பட்டு இருக்கின்றது என்று கேட்டால் அதற்குத் தத்துவார்த்தம் உண்டு.

அர்: அந்த தத்துவார்த்தம் என்ன? எனக்குச் சற்று சொல்லு பார்ப்போம்!

கிரு: அந்த மாதிரி எழுதின தத்துவார்த்தம் என்னவென்றால் மனிதன் பெண் இச்சையில் கட்டுப்பட்டவன் என்பது நிச்சயம். நேர்வழியில் வேலை செய்து வெற்றி பெற முடியாத காரியங்களிலும், எதிரியை ஜெயிக்கப் போதிய சக்தி இல்லாத காலங்களிலும் ஒருவன் வெற்றிபெற வேண்டுமானால் இந்த வழி மிக சுலபமான வழி என்பது “பெரியோரின்” கருத்து. அதாவது ஒரு நல்ல அழகிய பெண்ணை கூட்டிப் போய் காட்டியோ, அல்லது அவனுக்கு கூட்டி விட்டோ அதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெறலாம் என்பதே இதன் தத்துவார்த்தமாகும். இது முக்தி அல்லது வெற்றி பெறும் இரகசியங்களில் ஒன்று என்பதை காட்டுவதற்காக எழுதப்பட்டதாகும். இப்பவும் உலக வழக்கில் சக்தியில்லாதவன், தகுதி இல்லாதவன் ஏதாவது ஒரு பதவியையோ, பொருளையோ அடைந்திருந்தால் அதற்குப் பொது ஜனங்கள் திடீரென்று கற்பிக்கும், அல்லது நம்பியே சொல்லும் வழக்கச் சொல்லைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். அதாவது “சக்கரத்தின் மகிமையினால்” சம்பாதித்துதான் வெற்றி பெற்றான் - பதவி பெற்றான் என்று சாதாரண பாமர மக்களே கூடச் சொல்லுவதைப் பார்க்கிறோம். சக்கரம் என்றால் என் (விஷ்ணு) ஆயுதத்திற்குப் பெயர் பெண்கள் ... க்கும் பெயர். எவ்வளவோ பேருக்கு இந்தத் தத்துவார்த்தம் இப்போது உண்மையிலேயே பயன்படுவதையும் பார்க்கின்றோம்.

ஆதலால் வெற்றி பெறுவதற்கு வழி என்பதைக் காட்டும் தத்துவப் பொருளாகவே “பெரியோர்கள்” இப்படி எழுதி வைத்தார்கள். புராணங்களில் உள்ள ஒவ்வொரு வரிக்கும், எழுத்துக்கும் இதுபோலவே தத்துவர்த்தங்கள் உண்டு. அது தெரியாமல் நமது சுயமரியாதைக்காரர்கள் அவற்றைப் பரிகாசம் செய்கின்றார்கள். ஆனால் அந்தப் பழக்கமும், வழக்கமும் தத்துவார்த்தை பின்பற்ற வேண்டிய அவசியமுமாகியவைகளெல்லாம் சுயமரியாதைக்காரருக்கு அல்ல. புராண மரியாதைக்காரருக்கு என்பதை மறந்து விடாதே.

அர்: சரி, சரி! இப்போது எனக்கு விளங்கிற்று. ஆனால் இதுபோலவே இன்னும் ஒரு சந்தேகம்; சற்று தயவு செய்து அதையும் விளக்கினால் உனக்கு “புண்ணியம்” உண்டு.

கிரு: அதென்ன சொல்லு பார்ப்போம்!

அர்: அதேமாதிரி மற்றும் பல புராணங்களில் சிவன் ஒரு சன்னியாசி ரூபமாக வந்து ஒருவனின் பெண்சாதியை கேட்டான் என்றும் அந்தப்படியே அவன் கொடுத்தானென்றும் சொல்லப்படுகின்றதே; அதன் ரகசியம் என்ன?

கிரு: இது தெரியவில்லையா?

அர்: தெரியவில்லையே!

கிரு: சன்னியாசிகளுக்குச் சாப்பாடுப் போட வேண்டியது கிரகஸ்தன் கடமை. பிறகு பெண் வேண்டுமானால் சப்ளை செய்ய வேண்டியதும் கிரகஸ்தன் கடமையாகத்தானே இருக்கவேண்டும்! அதனால்தானே 32 தர்மங்களில் பெண் போகமும் ஒன்று என்று சொல்லப்பட்டிருக்கிறது! ஆகவே அந்தப்படி சன்யாசிக்கு பெண்களைக் கொடுக்கும் போது மனதில் சங்கடம் இல்லாமல் தாராள மனதுடன் உதவுவதற்காகவே சிவன் சன்யாசி ரூபமாய் - ஒரு சிவனடியார் ரூபமாய் வந்து கேட்டார் என்று அதாவது சன்னியாசியாகவோ, சிவனடியாராகவோ ஒருவன் வீட்டிற்கு வந்தால் அவன் கேட்டவுடனேயே கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அதாவது “இந்த சன்னியாசி - சிவனடியார் ஒரு சமயம் சிவபிரானே இந்த வேடம் தரித்து வந்தானோ” என்று எண்ணிக் கொண்டு பேசாமல் கொடுத்து விடட்டும் என்றும் அதற்காக மனதில் எவ்வித விகல்ப புத்தியும் இருக்கக் கூடாது என்றும் கருதியே இந்தப்படி சொல்லப்பட்டிருக்கிறது. இது இப்போதும் சில புராண மரியாதைக்காரர்கள் வீடுகளில் நடைபெற்று வருகிறதை நான் அடிக்கடி பார்க்கின்றேன்.

தவிரவும், குருசாமியார், பாகவதாள், பரதேசி, அடியார்கள் இப்படிப்பட்டவர்கள் அநேக வீடுகளில் இருந்து கொண்டு நன்றாய் சாப்பிட்டுக் கொண்டு அந்தந்த வீட்டுக்காரருக்கு இந்த “புண்ணியமும்” கொடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கின்றேன். சிலர் தெரிந்தே விட்டுக் கொண்டிருக்கின்றார்கள், சிலர் தெரியாதது போலவே காட்டிக் கொண்டுமிருக்கிறார்கள். இதெல்லாம் அவரவர்கள் புராணங்களில் வைத்திருக்கும் பக்திக்கும், மரியாதைக்கும் தகுந்தபடி இருக்கும்.

அர்: சரி. இந்தச் சந்தேகமும் ஒருவாறு விளங்கிற்று. இன்னமும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அதை இப்போது விளக்குகின்றாயா?

கிரு: என்ன அது, சொல்லு பார்ப்போம்!

அர்: அதாவது புராணங்களில் அக்கிரமமான, வஞ்சகமான புரட்டான காரியங்கள் செய்ய வேண்டிய பொழுதெல்லாம் கடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்ததாக காணப்படுகின்றதே; இதன் தத்துவமென்ன?

கிரு: இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதனால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படுமென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய், புரட்டு, சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும் இப்போதும் யாருக்காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும், அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்பட மாட்டார்கள் என்றும் அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற்காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும். இதை அறிந்தே அநேக புராண மரியாதைக்காரர்கள் இப்படி காரியங்கள் செய்வதற்காகப் பார்ப்பனர்களை தங்கள் காரியஸ்தராகவோ, மற்ற காரியங்களுக்கு பொறுப்பாளிகளாகவோ வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொள்ள சக்தி இல்லாதவர்கள் சிநேகிதர்களாகவாவது வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்றாய் விளங்கும்.

அர்: இன்னும் ஒரு சந்தேகம்?

கிரு: என்ன சொல்லு?

அர்: கடவுளைப் படைத்தார்களல்லவா மனிதர்கள்?

கிரு: ஆம்.

அர்: அப்படிப் படைத்தவர்கள் கடவுள் மனிதனுக்குள் இருப்பதாகவோ அல்லது மனிதனுக்குள் இருக்கும்படியாக ஆவாகனம், கும்பா பிஷேகம் முதலியவைகள் செய்து மனிதனுக்குக் கொடுப்பதும், மனிதனுக்குச் செய்வதும் கடவுளுக்குச் செய்தது, கடவுளுக்குக் கொடுத்தது என்று கருதும்படி செய்யாமல் கல்லுக்குள் கடவுளை ஆவாகனம் செய்து, அதற்குக் கும்பாபிஷேகம் செய்து கல்லைக் கும்பிடும்படி ஏன் செய்தார்கள்?

கிரு: அதன் இரகசியம் என்ன வென்றால், மனிதனுக்குள் கடவுளை ஆவாகனம் செய்தால் நைவேத்தியம் செய்யும் சாமானையெல்லாம் மனிதன் சாப்பிட்டு விடுவான். அணிந்துகொள்வான். அப்புறம் நடுவில் இருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும். ஆதலால்தான் கல்லிலும், செம்பிலும் ஆவாகனம் செய்து அதற்கு தனக்கு வேண்டியதையெல்லாம் நைவேத்தியம் செய்யச் செய்து தான் எடுத்துக் கொள்வது. ஆகவே இந்த மாதிரி செய்ய வேண்டியது குறுக்கே இருப்பவர்களுக்கு அதாவது பூசாரிகளுக்கு அவசியமாயிற்று. அந்தப் பூசாரிகளுக்கே இந்த மாதிரி கடவுளை உண்டாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. ஆகவே பூசாரி ஆதிக்கம் குறைந்தால் தான் கடவுள்கள் உற்பத்தியும் குறைந்துவிடும், கடவுள் மஹிமைகளும் ஒழிந்துவிடும்.

அர்: சரி, இவைகள் எனக்கு ஒருமாதிரி விளக்கமாயிற்று. இன்னும் சில சிஷயங்கள் தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அவைகளை சாவகாசமாய் பேசுவோம்.

கிரு: சரி.

(21-12-1930 ‘குடிஅரசு’ இதழில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.)

Pin It