நல்லதனமாகவும், நயமாகவும், கெஞ்சியும் கேட்பவர்களைப் பற்றி சாதாரண மனிதர்கள் சற்றும் லக்ஷியம் செய்வதில்லை. எவ்வளவுக் கெவ்வளவு நயமும் கெஞ்சுதலும் ஏற்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு ஆணவமும் பிடிவாதமும் மிரட்டுதலும் ஏற்படுவது நடுத்தர மனிதர்களிடம் காணும் சுபாவம். சாதாரண நடுத்தர மக்களின் குணமே இப்படி இருக்குமானால் மற்றபடி கீழ்த்தர மக்கள் அதாவது சமய சமூக வித்தியாச சேற்றில் உழன்று கொண்டு அதன் மூலம் ஆதிக்கமும் வயிற்றுப் பிழைப்பும், ஏற்படுத்திக் கொண்ட இழிமக்களிடம் கெஞ்சுதலுக்கும் நல்லதனத்திற்கும் செவிசாய்ப்புக்கும் எதிர்பார்ப்பது எங்ஙனம் கூடும்?
உதாரணமாக, சமயக்கட்டுப்பாட்டுக் கொடுமைகளும், சமூகக் கட்டுப்பாட்டுக் கொடுமைகளும், நமது நாட்டைப் பாழாக்கி அன்னியர் வசம் ஒப்புவித்து மானமிழந்து நிற்கச் செய்கின்றது என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்ட பிறகும், நாடு மானத்துடன் அவைகளை ஒழித்தாலல்லது வாழ முடியாது என்பதை அறிந்தும் அவைகளை ஒழித்து, விடுதலையையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதுடன், மக்களின் வறுமையையும் எளிமையையும் ஒழிக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே பல பெரியோர்கள் முயற்சித்து வந்திருப்பதும் நாம் எல்லாரும் அறிந்ததாகும். அப்படி முயற்சித்த அவ்வளவு பேரும் “ஆண்டவன் அருள் பெற்றவர்களாகவும்”, “ஆண்டவனால் அனுப்பப் பட்டவர்களாகவும்”, “முத்திநிலை, மோக்ஷ நிலை அடைந்தவர்களாகவும்” கருதப்பட்டும் வருகின்றார்கள் என்பதிலும் ஆnக்ஷபணை இல்லை.
ஆனாலும் அவர்களது அபிப்பிராயங்களுக்கும் வார்த்தைகளுக்கும் மாத்திரம் வெவ்வேறு வித பாஷ்யங்களும் வியாக்கியானங்களும், செய்யப்பட்டு காரியத்தில் கடுகளவுகூட அப்பெரியார்களது கருத்துக்கள் நிறைவேற முடியாமலும், செய்யப்பட்டு வந்திருக்கின்றன.
உதாரணமாக, சங்கரர் என்னும் ஒரு பார்ப்பனர் பறையனால் ஞானோதயம் பெற்று, அவன் காலில் விழுந்தார் என்றும், ‘பறையன் என்பதாக ஒரு தனி பிறப்பு இல்லை’ என்று ஒத்துக் கொண்டார் என்றும் சொல்லப்படுவதை எல்லோரும் ஒப்புக் கொண்டதுடன், அவர் சிவன் அவதாரம் என்றும் ஒப்புக் கொண்டும், கடைசியாக, சங்கரர் வேதாந்த தத்துவத்தைக் காட்டுவதற்காகப் பறையன் காலில் விழுந்தார் என்றும், விழப்பட்ட பறையன் ஜாதியில் பறையனல்ல வென்றும், சிவனே தான் அந்தப் பறையன் வடிவமாகவும் வந்தார் என்றும், சொல்லி மறுபடியும் பழையபடியே பறையனைக் கண்டால் பாவம் என்றும், அதற்காகப் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமென்றும் சொல்லுகின்ற சாஸ்திரத்தை நிலைபெறச் செய்து, அதன் கொள்கைகளை இன்றைக்கும் அமுலில் இருக்கவும் செய்தாய் விட்டது.
மற்றும், அதே சங்கரரின் பேரால், கடவுள் என்று ஒரு தனி வஸ்து இல்லை என்றும், ஒவ்வொரு மனிதனுள் இருக்கும், ஜீவனே, ஜீவ ஆத்மாவே கடவுள் என்றும் சொல்லிப் போனார் என்றும் சொல்லி அதற்காக அவரை ‘லோககுரு’ என்றும் - லோக மக்கள் எல்லோருக்குமே ஆச்சாரியார் என்றும் சொல்லப்பட்டு அதே மாதிரி மக்கள் மனதில் பதிய வைத்தும் ஆய்விட்டது. ஆனால் எண்ணிக்கைக்கு அடங்காத தனித்தனி கடவுள்களுக்கு கோவில் கட்டி வணங்குகின்றவர்கள் இன்றைக்கும் சங்கராச்சாரி சிஷ்யர்களாகவே தான் பாவிக்கப்பட்டு வருகின்றார்கள்.
அதுபோலவே, ராமானுஜர் என்னும் ஒரு பார்ப்பனர் மக்களில் ஜாதி பேதமில்லை என்றும், மந்திர ரகசியங்களை அறியக் கூடாத மனிதர்கள் இல்லை என்றும், எல்லா மக்களும் அதாவது எவனெவன் நாமம் வைத்துப் பூணூல் போட்டுக் கொள்கின்றானோ அவனெல்லாம் வைணவனாவான் என்றும் சொன்னதுடன் அந்தப்படியே கோடிக்கணக்கான மக்களை வைணவராக்கினார் என்றும், பார்ப்பனனல்லாதவன் சாப்பிட்ட எச்சில் இலையை எடுக்காததற்கு ஆக பெண் ஜாதி மீது கோபங்கொண்டு வெளிக் கிளம்பினார் என்றும், இன்றைய வைணவ மதம் ராமானுஜருடைய மதம் என்றும் வைணவரெல்லாம் ராமானுஜருடைய சிஷ்யர் என்றும் சொல்லிக் கொண்டு அவரையும் கடவுளாக்கி அவருக்கும் கோவில் முதலியவைகள் கட்டி, பூஜை, உற்சவம் முதலியவைகள் செய்து கொண்டும் பட்டை நாமங்கள் போட்டுக் கொண்டும் அவரைப் பற்றிப் பாடிக் கொண்டும் இருக்கும் மக்கள் இன்றைய தினம் சம்பந்தி வீட்டில் சாப்பிடாமலும், ஒருவர்க்கொருவர் திரை போட்டுக் கொண்டு சாப்பிடுவதையும் பார்க்கின்றோம்.
அதுபோலவே, திருவள்ளுவர் என்று சொல்லப்பட்டவர், குலத்தில் பறையர் என்றும், அவர்பாடிய குறள் என்னும் நூல் அய்ந்தாம் வேதம் என்றும், தெய்வப் புலவர் என்றும், பிரம்மாவின் அவதாரம் என்றும், அப்பேர்ப்பட்டவரால் செய்யப்பட்ட குறளை ஒப்புக் கொள்ளாத மனிதன் அறிவுடையவனாக மாட்டான் என்றும், மற்றும் சங்கரர், ராமானுஜர் பார்ப்பனர் என்றும் வள்ளுவர் பார்ப்பனரல்லாதார் என்றும், ஆகையால் அதுதான் தமிழ் மக்களுக்கு நீதி என்றும் சொல்லும் மக்கள் தங்களைக் குறளில் வல்லவர், புலவர் என்று சொல்லிக் கொள்ள விரும்புவதோடு, வள்ளுவருக்குக் கோவில் கட்டிப் பூஜிப்பதல்லாமல் வள்ளுவர் குறளில் சொன்னபடி நடப்பவர்கள் யாரும் இல்லை. அன்றியும் குறளானது “வள்ளுவர் போன்ற ஞானிகளுக்கு உகந்ததே ஒழிய நமக்கல்ல” என்று சமாதானமும் சொல்லி விடுகிறார்கள்.
அது போலவே சைவர்கள் என்னும் ஒரு கூட்டமும் தங்கள் மதத்திற்கு என்று ஆதியோ, ஆச்சாரியரோ ஒரு தமிழ் ஆதிநூலோ ஒன்றும் இல்லை யாயினும் பார்ப்பனர்களால் தாங்கள் இழிவுபடுத்தப் பட்டிருக்கும் காரணத்தால் எப்படியாவது தங்களைப் பார்ப்பனரை விட்டுப் பிரித்துக் காட்ட எண்ணி, அப்பார்ப்பனர்களிடமிருந்தே சிலவற்றைப் பொறுக்கிக் கொண்டு அதையே ஆதாரமாகவும் வைத்துக் கொண்டு தாங்களுக்கு ஒரு தனி மதம் உண்டென்றும், அதுதான் சைவம் என்றும், அதற்கு சிவனே கடவுள் என்றும், சிவன் என்றால் அன்பு என்னும் குணம் என்றும், எல்லோரும் சிவசொரூபம் என்றும் சொல்லி பிறகு, பார்வதி, பரமசிவன், கைலாயம், ரிஷபவாகனம், லிங்கம், ஆவுடையார் என அர்த்தமற்றதும் கேவலமானதும் பொருந்தாததுமான கண்டவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டு உலகத்தில் அது ஒரு பிரமாதமான விஷயம் போல் கருதி, மக்களை மக்கள் பார்க்க முடியாமலும், ஒன்று சேர்க்க முடியாமலும், பிரித்து வைத்துக் கொண்டிருக்கத் தக்க வண்ணத்தில் நிபந்தனைகளையும், நிர்ப்பந்தங்களையும் வைத்துக் கொண்டு இருப்பதையும் பார்க்கின்றோம்.
இம்மாதிரி இன்னும் எத்தனையோ விஷயங்களை அறிவிற்கும் எண்ணத்திற்கும், வார்த்தைக்கும், செய்கைக்கும் அனுபவத்திற்கும் ஒன்றுக் கொன்று பொருத்தமில்லாத பல விஷயங்களும் ஆதாரங்களும் மனித தத்துவத்திற்கும், முன்னேற்றத்திற்கும், தடைகல்லாய் இருப்பதை யாரும் மறைத்துவிட முடியாது. இவைகளைப் பற்றி யாராவது எடுத்துச் சொல்லி அதன் துன்பங்களை நீக்க வேண்டுமென்று நயமாகவும் கெஞ்சியும் கேட்ட போதெல்லாம் அவைகளால் பிழைத்து வருபவர்கள், “மதம் இடம் கொடுக்க வில்லை”, “சமயம் இடம் கொடுக்கவில்லை”, “கடவுளுக்கு விரோதம்”, “பெரியார்களுக்கு விரோதம்”, “வேதத்திற்கு விரோதம்”, “சாஸ்திரத்திற்கு விரோதம்”, “ஆகமத்திற்கு விரோதம்” என்று சொல்லி அவர்களை எதிர்த்து வாயெடுக்கவொட்டாமல் அடக்கிக் கொண்டே வந்துவிட்டார்கள்.
இப்பொழுது அப்பேர்ப்பட்ட மதம், சமயம், கடவுள், பெரியார், வேதம், சாஸ்திரம், ஆகமம் முதலிய எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விடுவதென்று தீர்மானித்து அவைகளின் ஆபாசங்களையும், அயோக்கியத்தனங்களையும் வெளியாக்கி அடியோடு ஒழிக்கத் துணிந்த பின்பு, தங்களால் கூடியவரை என்னமோ சூழ்ச்சிகள் செய்து எதிர்த்துப் பார்த்தும் முடியாது போகவே, இனி தங்கள் பாடு ஆபத்து என்று உணர்ந்து ஒருவாறு வழிக்கு வந்திருக்கின்றார்கள்.
அதாவது இவ்வாரத்தில் பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த பூனாவில் உள்ள வருணாசிரமப் பார்ப்பனர்களும், அதிகாரப் பார்ப்பனர்களும் அரசியல் பார்ப்பனர்களும், எல்லாரும் ஒன்று சேர்ந்து, இந்து மத சாஸ்திர ஆராய்ச்சியும், திருத்தமும், என்பதாக ஒரு மகாநாடு கூட்டிப் பேசி இருக்கின்றார்கள். அதில் வரவேற்புத் தலைவர் திரு.கேல்கர் தமது சொற்பொழிவில் “காலத்திற்குத் தக்கபடி சாஸ்திரங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும், ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட தர்ம சாஸ்திரம் எக்காலத்திற்கும் பொருத்தமானதென்று கருதுவது சரியல்ல” என்று சொல்லி, ஆராய்ச்சியும் திருத்தமும் அவசியமென்று பேசினார். மகாநாட்டுத் தலைவரான மற்றொரு ஹைகோர்ட்டு ஜட்ஜி பார்ப்பனர் “சாஸ்திரங்களைத் திருத்தியாக வேண்டிய காலம் வந்து விட்டது” என்றும், “திருத்தங்களுக்கு ஒப்புக் கொள்ளாதவர்கள் சாஸ்திரங்களை அறியாதவர்கள்” என்றும் சொல்லி இருக்கின்றார்.
தவிர, இந்த விஷயங்களை ஆதரித்து, 28-05-1929 “சுதேச மித்திர”னிலும், “தர்மசாஸ்திர ஆராய்ச்சியும் திருத்தமும்” என்று ஒரு தலையங்கமும் எழுதப்பட்டிருக்கின்றது. இது ஒரு சமயம் உண்மையான எண்ணத்தோடு பேசப்பட்டும் எழுதப்பட்டும் இருந்தாலும் சரி, அல்லது தற்சமயம் பொது ஜனங்களுக்கு தோன்றியிருக்கும் உணர்ச்சியின் வேகத்தைத் தணிக்கக் கருதி, சூழ்ச்சி எண்ணத்துடன் எழுதியிருந்தாலும் சரி, எப்படியாவது சாஸ்திரங்கள் எல்லாக் காலத்திற்கும் ஆதாரமல்ல என்பதையும் காலத்திற்குத் தக்கபடி புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதையும் பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்தது நமக்கு ஒரு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
நிற்க, சாஸ்திரத்தைத் தங்கள் சொந்த சொத்தாகக் கொண்ட பார்ப்பனர்களே இந்த மாதிரி வேத சாஸ்திரங்களையே புதுப்பித்தாக வேண்டுமென்று ஒப்புக் கொண்ட பிறகு அதிலிருந்து திருடிக் கொண்டும் பிச்சை வாங்கிக் கொண்டும் அவர்களிடம் கூலி பெற்றுப் பிரசாரம் செய்து கொண்டும் இருக்கின்ற குப்பைப் புராணச் சமயவாதிகளும், புராணக் கடவுள்களை ஸ்தாபிக்கும், ஆஸ்திக பிரசாரவாதிகளும், இனி என்ன செய்யப் போகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் அவர்களும் பார்ப்பனர்களைப் பின்பற்றி தங்கள் புராணங்களையும், சமயங்களையும், கடவுள்களையும், புதுப்பிக்க வேண்டும் என்பார்களோ அல்லது ஒரு எழுத்துக் கூட மாற்றக் கூடாது, ஒரு கடவுளைக்கூட தள்ளக் கூடாது, எல்லாம் உண்மை, எல்லாம் சத்தியம் என்று தத்துவார்த்தம் சொல்லிக் கொண்டே திரிவார்களோ தெரியவில்லை.
எப்படியானாலும் சட்டசபைத் தேர்தல் ஒரு வருஷம் ஒத்திப் போட்டு விட்டதாலும், அதன் காரணமாய் “ஆஸ்திக ஸ்தாபன அவதாரமான” திரு. சீனிவாசய்யங்கார் ஓய்வெடுத்துக் கொள்ளுவதாய்ச் சொல்லி விட்டபடியாலும், அநேகமாக சமய மகாநாடுகளும், ஆஸ்திக பிரசார மிஷினும் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள நேரிடும் என்றே கருதுகின்றோம்.
ஏனெனில், இனி ஒன்றரை வருஷம் பொறுத்து வரப் போகும் தேர்தலுக்கு ஆக இப்பொழுதிருந்தே சமயப் பிரசாரமும் ஆஸ்திகப் பிரசாரமும் செய்வதென்றால், பணம் கொடுப்பவர்களுக்குத்தான் அந்தக் கஷ்டம் தெரியுமே ஒழிய, சும்மா நின்று கத்திவிட்டு கூலி வாங்குகிறவர்களுக்குத் தெரிய முடியவே முடியாது. ஆதலால் நமக்கும் சற்று தானாகவே ஓய்வு கிடைத்து விடும் போலவே தெரிகின்றது. ஏனெனில் நமக்கு எதிரிகள் என்று நான்கு பேர் தோன்றி அவர்கள் ஏதாவது நமது இயக்கத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தால்தான் நாமும் அதற்குப் பதில் சொல்லும் முறையில், நமது பிரசாரமும் மேலும் மேலும் வளருவதற்கு அனுகூலமாக இருக்குமே ஒழிய எதிர்ப்பு இல்லாதபோது உணர்ச்சியும் வேகமும் இருக்கவே முடியாது.
உதாரணமாக, திரு.கல்யாணசுந்திர முதலியார் கடவுள் போச்சுது, கலைகள் போச்சுது, கடவுளைக் கண்ட பெரியார்கள் போச்சுது அவைகளைக் காப்பாற்ற அவதாரம் வேண்டும், அறப் போர் செய்ய வேண்டும் என்று கூப்பாடு போடாமலிருந்தால் கடவுள்கள் யோக்கியதையும் பெரிய புராணம் முதலிய கலைகள் யோக்கியதையும், அதில் உள்ள கடவுள்களைக் கண்ட பெரியார்கள் யோக்கியதையும் இவ்வளவு தூரம் மக்களுக்கு வெளியாக்கப் பட்டிருக்க முடியவே முடியாது என்று துணிந்து கூறுவோம். அன்றியும் அநேக பெரியார்கள் யோக்கியதையும் வெளியாயிருக்காதென்று கூடச் சொல்லுவோம்.
(குடி அரசு - தலையங்கம் - 02.06.1929)