வேதகாலங்கள் என்னும்
வரலாற்றுச் சவக்குழிக்குள்
தேடியதால் கிடைத்த
சனாதன எலும்புக் கூட்டின்
மீதங்கள் - வர்ணாசிர
மிருகங்கள் பெற்றுப் போட்ட
சாதிகள் - இவையே இந்துச்
சமயத்தின் வேர்கள்; விதைகள்

இந்துவின் பெயரைக் கொண்டே
‘இந்துஸ்தான்’; அந்த ஸ்தானைப்
பண்டைய புராணப் பெயரால்
பாரத ஸ்தான் என்றார்கள்
“இந்தியம் என்ற பேரும்
ஒன்றுதான்; இந்தியர்நாம்
ஓரினம்” என்கிறார்கள்.

இந்தியச் சிறைக் கூட்டுக்குள்
இருபது மொழி அடைத்து
இந்தியைத் திறவு கோலாய்
ஏற்றிடும் சட்டம் செய்து
‘ஒன்றெனத் தேசியத்தை
உருக்கிவார்த்திடுவோம்’ - என்று
வந்தவர் தோற்றார்; மீண்டும்
வருபவர் தோற்பார் திண்ணம்.

பாரதிதாசன் என்ற
பாப்புயல் பெரியாரியலின்
போர்ரதம் மீதிலேறிப்
புவிவலம் வந்ததாலே
‘பாரத வர்­ம்’ என்னும்
பார்ப்பனச் சித்தாந்தத்தைச்
சீறினான்; தமிழ்க் குடியைச்
சிறைமீட்க நெருப்பெடுத்தான்

------------------------------
உப்பரிகை உயரப்பன் சுரண்டலாலே
ஓடப்பன் ஆனகதை உரித்துக் காட்டிச்

செப்பேட்டுக் கவிதைகளை நெருப்பில் நெய்த
சிங்கவிழிச் செந்தமிழன்; புயலின் மையம்

குடிசைகளில் அவன் எழுத்து தீபமாகக்
கொழுந்துவிட்டெரிந்திடவே வேண்டும்; டெல்லிக்

கொடிமரத்தின் உச்சிவரை தமிழும் சென்று
கொற்றம் புரிந்திட வேண்டும்; தமிழர் தேசம்

விடியும்வரை அவன் கவிதை தமிழன்கையில்
வெடிமருந்தாய் வினைபுரிய வேண்டும் - மேரு

முடிவரையில் அவன் குரலை எதிரொலிக்க
முடியும்வரை அனைவருமே முனைவோம்; வெல்வோம்.