திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் வெளிவரும் முதல் மலர், அண்ணல் அம்பேத்கர் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் சிறப்பு மலராக வெளிவருவதில் நாங்கள் பெருமையும், பேருவகையும் அடைகின்றோம்.

இருவருக்குமாகச் சேர்த்து ஒரு மலரை வெளியிடுவதற்கான காரணம், அவர்கள் இருவரும் ஒரே ஆண்டில், ஒரே மாதத்தில் பிறந்தவர்கள் என்பதால் மட்டுமன்று. சமூக நீதித் தளத்தில் இருவரின் கருத்துகளும் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்து நிற்கின்றன என்பதே அதற்கான மூல காரணம்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பாரதியார் - பெரியார் என்னும் மாமனிதர்கள் இருவரால் ஈர்க்கப்பட்டவர். அவரின் கவிதைகளின் உருவத்தில் பாரதியையும், உள்ளடக்கத்தில் பெரியாரையும் நாம் பார்க்க முடியும். 1920 களின் கடைசியில் பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்ட புரட்சிக்கவிஞர், தன் வாழ்நாள் முழுவதும் அதே பாதையில் பயணம் செய்தவர். சுருக்கமாய்ச் சொன்னால் பெரியாரின் கவிதைப் போர்வாள் என்று பாரதிதாசனைக் கூறலாம். பெரியாரே இக்கூற்றைத் தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் உறுதிசெய்துள்ளார். 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிவகங்கைக் கல்லூரியில் மாணவர்களிடம் பாரதிதாசன் பற்றியே ஒரு மணிநேரம் உரையாற்றியுள்ளார். பாரதிதாசனும், பெரியாரின் கருத்துகளைத்தான் தன் பாடல்களில் எதிரொலித்துள்ளார்.

பொதுவாக, பாட்டுக்குத்தான் உரை எழுதுவார்கள். புரட்சிக்கவிஞரோ, பெரியாரின் உரைக்கெல்லாம் பாட்டெழுதினார்.

எனவே, இம்மலரை அம்பேத்கர் - பெரியார் மலர் என்றும் கூறலாம். இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை இம்மலரின் கட்டுரை ஒன்று சான்றுகளுடன் நிறுவுகின்றது. பெரியாரை, தென்னாட்டு அம்பேத்கர் என்றும், அம்பேத்கரை, வடநாட்டுப் பெரியார் என்றும் கூறும் மரபு நம்மிடையே உள்ளது.

 இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமன்றி, ஒருவர் மீது ஒருவர் பெரு மதிப்புக் கொண்டவர்களாகவும் வாழ்ந்துள்ளனர். 1924 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் அம்பேத்கரிடம் ஏற்படுத்திய தாக்கத்தை, வரலாற்றாசிரியர் தனஞ்செய்கீர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னைக்கு வந்த அம்பேத்கர், கன்னிமரா ஹோட்டலில் ஆற்றிய தேனீர் விருந்து உரையில், திராவிடர் கழகம் தொடங்கிய பின்னும், நீதிக் கட்சியாகவே மிச்சப்பட்டிருந்த சிலரின் போக்கை அங்கீகரிக்க மறுத்து உரையாற்றியுள்ளார். பெரியாரின் நிலைப்பாட்டையே அவர் ஏற்றுள்ளார். தன்னைப் பின்பற்றும் விருப்பத்தோடு தன்னை வந்து சந்தித்த இளைஞர்களை, பெரியாரைப் பின்பற்றுங்கள் என்று கூறிய செய்தியை முன்னாள் ஆளுநர் பத்மநாபன் தன் கட்டுரை ஒன்றில் குறித்துள்ளார்.

பெரியாரும், அம்பேத்கரை மிகப் பெரிய தலைவராகப் போற்றியுள்ளார். யார் ஒருவரையும் தலைவராக ஏற்றுக்கொண்டிராத பெரியார், மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டமொன்றில், தலித் மக்களைப் பார்த்து, உங்களுக்கு மட்டுமின்றி எனக்கும் அம்பேத்கர்தான் தலைவர் என்று பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

இவ்வாறு பல்வேறு தளங்களில் கருத்தொருமித்துச் சென்ற சமூக நீதிப் போராளிகள் இருவரையும் பிரித்துப் பார்ப்பதும், எதிர்எதிர் நிலைகளில் நிறுத்துவதுமான புதிய போக்கு அண்மையில் தென்படுகின்றது. மறைமுகமாகப் பார்ப்பனியத்திற்கு உதவும் இப்போக்கினை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இருவருமே இழிவுகளுக்கு உள்ளாக்கப் பட்டவர்கள்தாம். அதனால்தான் பள்ளுப் பட்டமும், பறைப்பட்டமும் ஒழியாமல், சூத்திரப்பட்டம் ஒரு நாளும் ஒழியாது என்றார் பெரியார். அம்பேத்கர் பெரியார் இருவருக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளையும், போர்க்குணங்களையும் ஒப்பிட்டுக் காட்டுவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஓர் அணியில் கொண்டுவர முடியும் என்பது நம் நம்பிக்கை.

மேற்காணும் நோக்கில், ஒத்த சித்தாந்தத்தையும், வேறுபட்ட இலக்கிய வடிவங்களையும் கையாண்ட அம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்தநாள் மலராக இம்மலர் உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் எண்ணங்களை எதிரொலிக்கும் வகையில், ஆழமும் செறிவும் நிறைந்த கட்டுரைகளை அறிஞர்கள்

இம்மலருக்குத் தந்துள்ளனர்.

இம்மலர்ப் பணி எங்களுக்கு புதிய ஊக்கத்தைத் தந்துள்ளது. அடுத்தடுத்த மலர்களைக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

- சுப.வீரபாண்டியன்

Pin It