‘புதுவைப் பெரியார்’ எனப் புதுச்சேரி மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட திரு எம்.நோயேல் அவர்களால் ‘புதுவை முரசு’ என்ற வார இதழ் ஒன்று 1930 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. திரு நோயேல் அவர்களுக்குப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன், திரு க. இராமகிருஷ்ணன், திரு எஸ். சிவப்பிரகாசம், புதுவை திரு லூத்தர் முதலானோர் உறுதுணையாக இருந்து பணியாற்றினர்.

புதுவைக் கவிஞர் ‘பாரதிதாசன்’ என்ற புனைப் பெயர் கொண்ட கனக சுப்புரத்தினத்தை சுயமரியாதை இயக்கத்தின் பால் ஈர்த்தவர் புதுவைப் பெரியார் எம்.நோயேல். இவர் கவிஞருடன் சிறு வயதிலிருந்தே நெருங்கிப் பழகியவர். கனக சுப்புரத்தின முதலியாராக இருந்த அவரை வெறும் சுப்புரத்தினமாக மாற்றிய பெருமைக்குரிவர். ஆன்மீக சிந்தனையில் மூழ்கி ‘மயிலம் சுப்பிரமணியர் துதியமுது’வைப் பாடியவரை ‘தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு’ என்ற பாடலைப் பாட வைத்ததோடு அதை நூல் வடிவில் 1930 ஆம் ஆண்டில் வெளியிட்டு பாவேந்தரின் ஆற்றலை உலகோர் அறியும்படிச் செய்தவர் புதுவை நோயேல். இவர் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். பின்னர் மதம் மாறியுள்ளார். புதுவை முரசு இதழ் தொடங்கும் முன்னரே பாவேந்தரின் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற கவிதை நூலையும் நோயேல் வெளியிட்டார்.

சுயமரியாதை இயக்கத்தின் முன்னணித் தொண்டராக இருந்து உழைத்த குத்தூசி குருசாமி ‘ரிவோல்ட்’ என்ற ஆங்கில இதழின் துணை ஆசிரியராக இருந்து அவர் எழுதிய எழுத்தால் அவருக்குப் பெரும் பாராட்டும் புகழும் கிட்டியது. ‘ரிவோல்ட்’ 1930 சனவரியில் நிறுத்தப்பட்டது. பிறகு சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்வதற்காகப் புதுவை முரசு தொடங்கப்பட்டது. ‘புதுவை முரசு’, ‘ரிவோல்ட்’ நிறுத்தப்பட்டதின் எதிர் ஒலிதான் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திரு குருவிக்கரம்பை வேலு குறிப்பிட்டுள்ளார்.

நோயேல் தொடங்கிய புதுவை முரசு இதழில் குருசாமி ஆசிரியர் பொறுப்பேற்ற பின் பாரதிதாசனின் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பாரதிதாசனை தமது புதுவை முரசு மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் குருசாமி.

“சிரிப்பும் வெடிப்பும் கிண்டலும் கிளறலும் கிளற்றும் இப் புதுவை முரசுக்கு ஊனும் உயிருமாக விளங்கும் பாரதிதாசன் அவர்களை இம் முரசின் மூலம்தான் இனி நம்நாடு அறியப்போகிறது. புதுச்சேரியில் நம் இயக்கத்திற்கு ஆணி வேராகிய நம் பாரதிதாசன் அவர்களின் ஒளி, குப்பையில் வெகுகாலம் கிடந்ததால் மழுங்கியிருந்தது. புதுவை முரசால் துடைக்கப்பட்டு இனிமேல் அறிவு ஒளியாகப் பளீர்! பளீர் என மின்னும். இருட்டில் கிடந்த நாமெல்லாம் பகுத்தறிவு இயகத்தின் பற்பல காட்சிகளையும் இனிமேல் காண்போம்!”

என்று எஸ்.குருசாமி புதுவை முரசு அனுபந்தம் முன்னுரையில் (08.08.1931) எழுதியுள்ளார்.

பாவேந்தரின் படைப்புகளை நூலாக வெளியிடுவதிலும் பெரிதும் முனைப்பு காட்டியவர்கள் குருசாமியும் குஞ்சிதம் அம்மையாரும். பாவேந்தரின் கவிதைகள் முதல் தொகுதி குஞ்சிதம் குருசாமி அவர்களால் வெளியிடப்பட்டது. இதற்கு நிதியுதவி செய்தவர் கடலூர் தி.க.நாராயணசாமி நாயுடு.

புதுவை முரசின் 10.11.1930 முதல் இதழில் ‘முதல் முழக்கம் - முதல் ஓச்சு’ எனும் தலைப்பில் பாரதிதாசன் எழுதிய தலையங்கத்தில்,

 “ஆசிரியர் குருசாமியின் ஆலோசனைப்படி திரு க. இராமகிருஷ்ணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு புதுவை முரசு பதிவு செய்யப்பட்டது. நான் அதன் வெளியீட்டாளராக இருந்தேன். பாரதிதாசன் ஆசிரியர் வேலை பார்த்தால் அவர் பெயரால் பதிவு செய்வதை அவர் விரும்பவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவருடைய கவிதைகளும் கட்டுரைகளும் வந்தன. தலையங்கம் அனைத்தும் ஆசிரியர் குருசாமி அவர்களாலேயே எழுதப்பட்டன. இச்செய்தி திரு எம். நோயேல் அவர்கள் என்னிடம் 1968 ஆம் ஆண்டு நேரில் சொல்லியது”

என்று குறிப்பிட்டுள்ளார். புதுவை முரசு என்பதற்குப் பாவேந்தர் பொருள் விளக்கம் தரும்போது,

 “புதுவை முரசு என்பதற்குப் புதுவையிலுள்ள மக்களில் ஒரு தொகுதியினரின் முழக்கம் என்பது தேர்ந்த பொருள். அம்முழக்கத்தை யுடையது ‘புதுவை முரசு’ பத்திரிகை என்க. புதுவையிலுள்ள ஒரு தொகுதியினர் ஆவார் யாவர்? அவர் தாம் சுயமரியாதைக் கொள்கையுடைய கூட்டத்தார் என்று பட்டவர்த்தனமாக அறிக...

சுயமரியாதை என்பதற்குத் தன்மானம் என்பது பொருள். எவரும் தம் மரியாதையைக் காத்தல் வேண்டும் என்பதே சுயமரியாதைக் கொள்கையாம்.

இனி - இவ்வியக்கம் கண்டார் திருமிகு ஈ.வெ.ராமசாமி என்க... அவர் எத்தன்மை வாய்ந்தார் எனின் தேசமக்கள்பால் அன்னை யன்பு உடையவர்... அஞ்சா நெஞ்சம் படைத்தவர்.

முதுமையில் இளமைத் தன்மை வாய்ந்தவர். சுயநலம் வேண்டாதவர்; அறிவர்; ஆதலிற் பெரியார்.

பெரியார் இயக்கிய இவ்வியக்கம். தான் செல்லாத இடம் தமிழ் உலகில் இல்லை என்னும்படி பரந்து சிறப்புறுகின்றது.”

என்று தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை மக்களிடையே எடுத்துக் கூறவே இந்த இதழ் வெளிவருகின்றது என்பதைப் புதுவை முரசு முதல் இதழின் தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

குத்தூசி குருசாமிக்கு அடுத்தபடியாகப் பாரதிதாசனின் கட்டுரைகள் கவிதைகள் மிகுதியாக இடம் பெற்று வந்தன. ‘தாசன்’, ‘கிண்டற்காரன்’, ‘கிறுக்கன்’ என்ற புனைபெயர்களிலும் பாவேந்தரின் படைப்புகள் வெளிவந்தன. முரசு என்னும் பண்டைத் தமிழரின் தொன்மை தோற்கருவியை, ஓங்கி அறைதல் எனும் பொருளில் ‘புதுவை முரசு’ முதல் முழக்கம், முதல் ஓச்சு என்று வழங்கியுள்ளார். முதல் அடி, இரண்டாம் அடி என்பது போல் முதல் ஓச்சு, ஓச்சு -2 என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓச்சு -2 ன் தலையங்கத்தை பாரதிதாசன் ‘பெண்களின் சமத்துவம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். 1930 நவ. 17 இல் வெளியிடப்பட்ட இந்த இரண்டாம் இதழில் ‘மூடத்திருமணம் மண்ணாய்ப் போக’ என்ற கவிதையும் எழுதியுள்ளார்.

“நம்நாட்டில் பெண்கள் நிலைமையானது வேர்தொடங்கி உச்சிவரை முழுதும் திருத்தம் செய்ய வேண்டும். பெண்களின் கேவல நிலைமைக்கு நம்நாட்டு மூடப்பழக்க வழக்கங்களே காரணம் என்று சொல்ல வேண்டும். பெண்கள் திருத்தம் அடைவதைப் பொறுத்தது நாடு திருந்துவது”

என்று தொடங்கும் இக்கட்டுரையில் பெண்களின் தாழ்ந்த நிலையைக் குறிப்பிட்டு இந்நிலை மாறக் கல்வி அவசியம் என்பதை இக்கட்டுரையில் வற்புறுத்தியுள்ளார்.

பாரதிதாசனால் எழுதப்பட்ட நோயேலால் வெளியிடப்பட்ட ‘தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு’, ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற இரு நூல்களும் கிடைக்கும் என்று இதன் முதல் ஓச்சின் அட்டை 3 ஆம் பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

புதுவை முரசில் குத்தூசி குருசாமி குஞ்சிதம்குருசாமியோடு பெரியார், ம.சிங்காரவேலர், எஸ்.இராமனாதன், பாரதிதாசன், சாமிசிதம்பரனார், எஸ்.வி.லிங்கம், பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி, பட்டுக்கோட்டை இரா. சவுரிராஜன், நாகை டி.என்.இராமச்சந்திரன், நாகை முருகேசன் என சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 75 பேர் இப்புதுவை முரசில் தங்களுடைய கட்டுரைகள் கவிதைகளை வழங்கி வந்துள்ளனர்.

மேலும் சுயமரியாதைக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றி சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை மக்கள் பின்பற்றுவதற்கான பணிகளைச் செய்து வந்தனர். புதுவை முரசு இதழில் இச்செய்திகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தன. (எ-டு) “புதுவையில் சுயமரியாதைக் கூட்டம். இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் எஸ்.குருசாமி, குஞ்சிதம் குருசாமி, அ. பொன்னம்பலனார், குருசாமி சொற்பொழிவுகளைக் கேட்டனர் புதுவைவாசிகள். அதே சமயத்தில் செட்டி நாட்டிலிருந்து வருகை புரிந்த விசாலாட்சி அம்மையாரின் செட்டி நாட்டு வழக்கில் சரளமாகப் பேசிய பேச்சை அனைவரும் ரசித்தனர்”(புதுவை முரசு, 1931)

பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்தின் இத்தகைய கொள்கை வீரர்களை வாழ்த்திப் பாராட்டி கவிதை வழங்கியுள்ளதையும் இவ்விதழில் காணலாம்.

திருநெல்வேலி ஜில்லா தூத்துக்குடி 4வது சுயமரியாதை மகாநாட்டுத் தலைவர் எஸ்.ராமநாதன் எம்.ஏ.பி.எல், ‘உரை முழக்கம்’ என்ற தலைப்பில் ‘பாரதிதாஸன்’ என்று பெயரிட்டுக் கவிதை வழங்கியுள்ளார்.

‘விடுதலைப் பெண்மக்களினை நமது நாட்டில்

வெற்றடிமைப் பெண்மக்களாக்கி விட்டார்!

கெடுதலையை நீக்குங்கள்! வறுமைப்பேயைக்

கிழித்துப் போடுங்கள்! விஞ்ஞானத் தேர்ச்சி

அடையுங்கள்! எத்தொழிற்கும் ஆலைக்கூட்டம்

அமையுங்கள்! அழையுங்கள் புதிய வாழ்வைக்

கொடையன்பர் ராமநாதன் சொல் வாழ்த்திக்

கொட்டடா முரசத்தை! அன்னோன் வாழி’

புதுவை முரசு(13.04.1931)

‘புதுக்கோட்டைத் தோழர் முத்துச்சாமி வல்லத்தரசு,பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி அவர்களை புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வரி உயர்வு காரணமாக ஏற்பட்ட கலவர வழக்கில் சிறைப்படுத்தியிருந்தார்கள். பிறகு சிறையிலிருந்து விடுதலை செய்து கந்தர்வகோட்டைக்குப் பக்கத்தில் கொண்டு வந்து விட்டுப் போனதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இதிலிருந்து இனி அவர் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குள் இருக்கக்கூடாதென்ற கருத்து போலும்! இதைத்தான் அங்குள்ள பார்ப்பனர்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்தார்கள்’ என்று இதைக் கண்டித்து குத்தூசி குருசாமி புதுவை முரசு(23.11.31) இதழில் எழுதினார். ‘தோழர் வல்லத்தரசு நாடு கடத்தப்பட்டார்’ என்ற தலைப்பில் வல்லத்தரசின் சிறப்பைப் பாராட்டி பார்ப்பனீயத்தைக் கடுமையாகச் சாடி குத்தூசி எழுதினார். பாரதிதாசன் இதைப்போன்றே கவிதையில் ‘தோழர் வல்லத்தரசு பாட்டு’ என்ற தலைப்பிட்டு எழுதினார். ‘கேளாயோ பார்ப்பனீயம் என்னும் குன்றே!’ எனத் தொடங்குகிறது அப்பாடல்.

‘மகத்வமுறு பார்ப்பனிய மலையே!எங்கள்

வல்லத்தரசன் எதிர்நின்று வாதம் செய்து

சகத்தினிலே உன்புகழை நிலைநாட்டாமல்

சர்க்காரின் காலடியை நக்கிப்

பகுத்தறிவன், இளஞ்சிங்கன், உனைத் தொலைத்துப்

பழிதீர்க்கும் ஆயத்தன், குன்றத் தோளன்

நகும்படிக்கும் வித்தாய்! பின்பு

நாடு கடத்தச் செய்தாய் நாயே! நாயே!’

என்று நிரபாரதியும், நீதியாளருமான தோழர் கே. முத்துசாமி வல்லத்தரசுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் பாவேந்தர் கோபம் கொண்டு வெகுண்டு எழுதியுள்ளதை இக்கவிதையில் காணலாம். இதுபோன்று இயக்கத் தோழர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் துன்பம் நேரிடும் போதெல்லாம் பாவேந்தரின் எழுதுகோல் ஆயுதம் போன்ற பணிசெய்யும்.

பாவேந்தரின் கவிதைகள் பலருக்கும் தெரிந்திருப்பது போல் அவருடைய கட்டுரைகள் அறிமுகமாகவில்லை. புதுவை முரசு, அறிவுப்பாதை இந்த இரண்டு இதழ்களிலும் அவருடைய கட்டுரைகளைக் காணலாம். புரட்சிக் கவிஞர் புதுவை முரசு இதழில் 70க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

பார்ப்பனீயத்தை அழித்து ஒழிப்பது என்பதை முதல் நோக்கமாகக் கொண்டு பல கட்டுரைகளைத் தீட்டினார். ‘கடவுளைத் திட்டவில்லை, கடவுள் பேரால் நடக்கும் ஆபாசங்களையே வெறுக்கிறோம்’ என்ற தலைப்பில், பாரதிதாசன் தொடங்கும் பொழுதே இக்கட்டுரையில்,

“பார்ப்பான் உயர்ந்தவன் என்றும் இந்தக் கடிவாயில் இருந்துதான் இந்திய சமூகம் முழுதும் வி­ம் பரவிற்று. அதன் பயனாகத்தான் இன்றைய தவிப்பு நிலை ஏற்பட்டது. மக்கள் அனைவரும் சமம் என்ற நிலையை உண்டாக்க முயலும்போது பார்ப்பனன் உயர்ந்தவன் என்ற ஆபாசக் கூச்சல் கிளம்பாமல் இருக்கட்டும் என்று பார்ப்பனனிடம் சொன்னால் அவன் ஓகோ பார்ப்பனன் உயர்ந்தவன் என்பது கடவுள் கருத்தல்லவா என்று கூறுகிறான். இது கடவுள் கருத்தாக இருக்குமா? இப்படி ஒரு கடவுள் கருதி இருப்பாரா? கருதி இருப்பார் எனில் நாங்கள் அந்தக் கடவுளை வெறுக்கிறோம்”

என்று (புதுவை முரசு - 22.12.1930) எழுதியுள்ளார்.

“ஏ கடவுளுக்குப் பரிந்து பேசும் மூடர்களே நீங்கள் காணாத கடவுளுக்காகக் காட்டும் பரிவின் வேகத்தை கண் எதிரில் காணும் உங்களைப்போன்ற எளிய மக்களிடத்தில் காட்டாமல் இருக்கிறீர்களே! உங்களுக்கு மானமில்லை, வெட்கமில்லை, அறிவில்லை, மனிதநேயமே இல்லையே ஏன்?”

என்று இந்தக் கட்டுரையில் கடுமையாகச் சாடியுள்ளார். சுயமரியாதை எங்கள் அப்பன் வீட்டுச் சொத்தல்ல என்ற கட்டுரையில் சுயமரியாதை என்பது எல்லாருடைய சொத்து. பின் சந்ததிக்கும் அழியாத சொத்து; சேர வாரும் செகத்தீரே(புதுவை முரசு - 13.04.1931) என்று அழைக்கிறார்.

பாரதிதாசன் - முதலாளி காரியக்காரன், கடவுள் வி­யத்தில் ஜாக்கிரதை என்ற கட்டுரையில்

“இந்தக் கடவுள் என்னும் சாம்ராஜியத்தில் வேலை செய்துவரும் இலாக்காக்களை மத இலகாக்கா, கோயில் இலாக்கா, மோட்ச இலாக்கா, பாபம் தீர்க்கும் இலாக்கா, அவதார இலாக்கா, வான இலாக்கா, பூசுரர் புராணப் பண்டிதர் இலாக்கா எனப் பலவாகப் பிரிக்கலாம்.

ஒவ்வோர் இலாக்காவிலும் உங்கட்கு ஒரு நன்மையும் இல்லை. இல்லாமல் போயினும் இவைகளில் எந்த இலாக்காவாகிலும் உங்களைப் பார்த்து, மக்களே நீங்கள் நாளைக்குச் சாப்பிடுவதற்கு அரிசி வாங்க காசு இருக்கிறதா? ஏதாகிலும் குறைவு உண்டா? என்று கேட்பதுண்டா? அதுதான் கிடையாது.

ஒவ்வோர் இலாக்காவும் உங்களைப் பணம் கேட்கும்! உங்கள் ரத்தத்தைக் குடிக்கும். வறுமை என்னும் சகதியில் உங்களைத் தள்ளும். நீங்கள் செத்துப்போகும் அளவிற்கு இடுகாட்டு நரிபோல உங்கள் முந்தானியில் ஏதாவது முடிந்து வைத்திருக்கிறீர்களா என்றுதான் கவனிக்கும்”(புதுவை முரசு - 29.12.1931)

என்று மக்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடிய வகையில் காரண காரியங்களைக் காட்டி எழுதினார்.

“சேற்றில் இறைத்த மாணிக்கங்கள்”(புதுவை முரசு - 29.12.1932) என்ற கட்டுரையில்

“நாம் காலைமுதல் மாலை வரைக்கும் கடும் வெயிலில் வருந்தி உழைக்கின்றோம். பாதி வயிறு நிரம்புவது சந்தேகம். உழைக்காததற்கு வயிறு இடம் கொடுத்தால் இந்த உலகத்தையும் விழுங்கி விடச் செளகரியம் இருக்கின்றது. இந்த இருவகையாரில் தேவன் எவருக்காகப் பாடுபட்டார் என்ற தகவல் தெரியவில்லையே”

என்று ஒருவன் இன்னொருவனிடம் பேசிக் கொள்வதைப்போல எழுதியுள்ளார் பாரதிதாசன். ‘சனியனை வணங்குவது சரியா’ என்ற கட்டுரையைக் ‘கிறுக்கன்’ என்ற புனைபெயரில் எழுதியுள்ளார். சனியனை வணங்குவது மடமையும் பகுத்தறிவற்ற தன்மையுமாகும் என்பதை இக்கட்டுரையில் எழுதிக் காட்டியுள்ளார்.

சாமி சிதம்பரனார், நாகை கே. முருகேசன், புதுவை மணி, அ. லூத்தர், நாகை ந. சிவஞானம், தோழர் எஸ்.ஆர்.முனுசாமி, பட்டுக்கோட்டை இரா.செளரிராஜன், எஸ்.வி.லிங்கம், எஸ்.சிவப்பிரகாசம், பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி, மதுரை எஸ்.வி.தொந்தி, எஸ்.நீலாவதி அம்மையார் போன்ற சுயமரியாதை இயக்கக் கொள்கை வீரர்களின் எழுத்துகளால், புதுவை முரசு போர்முரசாக வெளிந்ததால், பாரதிதாசன் புதுவை முரசு இதழாசிரியர் குத்தூசி குருசாமியைப் பாராட்டிக் கவிதை வழங்கியுள்ளார்.

‘எங்கேயோ சத்தம்! எதுதான் முழங்கிற்றோ

இங்கே நமக்கென்ன என்னாமல் பூவின்

மதுவைக் கவனிக்கும் வண்டுபோல் அந்தப்

புதுவை முரசு! நிலை பொன்போல் அறிந்து

திருவாரூர்த் தேரைத் தெரிசித்துப் போக

வருவார் கழுத்து வளைக்க வளை யாதது போல்

நட்ட தலைநிமிர்த்தும் நம்பிக்கை யில்லாமல்

தொட்ட எழுதுகோல் தொட்டபடி யுழைக்கும்

ஆசிரியராக அமர்ந்த குருசாமி

பேசரிய வாய்மையன் என் நண்பன் அன்னோன்

உயர்முன் சமர்ப்பித்தேன்! உரைத்த இதன் பேர்

சுயமரியாதைச் சுடர்!’

என்று பாவேந்தர் சுயமரியாதை இயக்கத்தின் வீரியமிக்க எழுத்தாளர், சிந்தனையாளர் குத்தூசி குருசாமியின் சிறப்பை இப்பாடலில் எழுதிக் காட்டியுள்ளார்.

புதுவை முரசு 08.08.1931 இல் ‘விசே­ அநுபந்தம்’ என ஒரு மலரையும் வெளியிட்டுள்ளது. மூன்றாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டை யயாட்டி இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டுரை ‘வாழ்வு - சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம்’எனும் தலைப்பில் பாரதிதாசன் எழுதியுள்ளார். பிரெஞ்சு நாடு விழிப்புணர்வு பெற்று விடுதலை பெற்றது போல், இந்தியர்கள் இன்ப வாழ்வு வாழ பேதங்களை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தின் பிழிவாக இக்கட்டுரையை வடித்துள்ளார். மேலும் ‘மனிதரா? சாமியாரா?’ , ‘பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கோர் பகிரங்கக் கடிதம்’, ‘லெளகிகத்தின் துஷ்டப்பிள்ளை வைதிகம்’, ‘கிண்டல்கள் - ஒரு சந்தேகம்’ (கிண்டற்காரன்) எனும் தலைப்புகளில் அவருடைய சிந்தனைகள் கட்டுரைகளாக உரையாடல்களாக இடம் பெற்றுள்ளன. சுயமரியாதை எக்காளம், பெண்கள் பாட்டு, பிள்ளை பாட்டு நிலா ஆகிய மூன்று பாடல்களும் புதுவை முரசில் முதன் முதலாக இம்மலரில் வெளியிடப்பட்டுள்ளன.

கிறுக்கன் என்ற புனைபெயரில் அவர் எழுதிய ஒரு புதுமையான கட்டுரை ‘ஙங்ஙஃ’(விசே­ அநுபந்தம்)

‘ஙங்கலந்தன ஙேதிஙேவலல்

ஙங்கலந்தன ஙாஙஙாவரம்

ஙங்கலந்தன ஙஙெள்ஙோரிது

ஙெங்கலந்தன ஙேரிஙத்தலே’

என்ற ஒரு பாடலை எழுதி அதற்கு அவர் பதவுரை வழங்கியுள்ளது ஒரு புதுமையான உத்தியாக உள்ளது. ‘ஙங்ஙஃ’ என்றால் பாடல் என்பது நான் கண்டுபிடித்த பொருளாகும் என்று விளக்க மளித்துள்ள பாரதிதாசன், ‘கடவுளைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்களாவர்; நீ முன்னேற்றமடைய விழைந்தால் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து அதைப் பெறுவாயாக’ என்பதே அந்தப் புதிய பாடலின் பொருளாகும்.

‘ங வரிசையில் பல எழுத்துக்கள் அநாவசியமாக விடப்பட்டிருப்பதை நிவர்த்தி செய்து அவற்றிற்கும் உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் இன்று கச்சையை வரிந்து கொண்டு முதலில் ஒரு பாடல் போட்டேன். இதே முறையைத் தமிழ்ப் பண்டிதர்களும் கைப்பற்றி நடப்பார்களானால், அநாவசியமாக விடப்பட்டிருக்கும் எழுத்துக்களை அவசியமானவைகளாகச் செய்துவிடலாம்’

என்று நகைச்சுவை கலந்த ஒரு கருத்துரையைக் கட்டுரையாக வழங்கியுள்ளார் பாரதிதாசன்.

புதுவை முரசு 10.11.1930 தொடங்கி 02.05.1932 வரை 75 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. 22.12.1930 வரை (ஏழு இதழ்கள் வரை) ஆசிரியர் க.இராமகிருஷ்ணன் அவர்களின் பெயராலேயே புதுவை முரசு வெளியிடப்பட்டுள்ளது. 29.12.1930 ஆம் நாள் , எட்டாவது இதழ் முதல் ஆசிரியர் எஸ்.குருசாமி என்றுள்ளது. இவ்விதழ்கள் ஒவ்வொன்றிலும் பாரதிதாசன் கட்டுரைகள், கவிதைகள் இடம் பெற்று வந்துள்ளன. திரு குருவிக்கரம்பை வேலு புதுவை முரசு இதழில் பாவேந்தர் எழுதியுள்ள 70 க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் அண்மையில் எழுதி வெளியிட்ட ‘புதுவை முரசு’ என்ற நூலும், அவருடைய நேர்காணலும் இக்கட்டுரைக்குத் துணைமை ஆதாரங்களாகும்.