‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்றும் ‘தமிழெங்கள் உயிருக்கு நேர்’ என்றும் பாடிய பாரதிதாசன் கவிதையில் தமிழுணர்வு இருக்கிறது. ஆனால் பிற மொழிகளை வெறுப்பதையும், பிற மக்களை இழிவுபடுத்துவதையும், தமிழின் உயர்வுக்கு ஆதாரமாக்கும்போது, அவரது எழுத்துக்கள் தமிழ் வெறியாகத் தாழ்ந்துவிடுகின்றன.
தமிழ்மொழியுணர்ச்சியும் பிரதேசப் பற்றும் தமிழிலக்கியத்தில் எவ்வாறு உருவாகியுள்ளன என்று டாக்டர் தனிநாயக அடிகள் ‘தமிழ் கல்ச்சர்’ ஜனவரி - 1 மார்ச்சு இதழில் ஆராய்ந்துள்ளார்கள். அக்கட்டுரையில் கடந்த 60 ஆண்டுகளில் இவ்வுணர்ச்சி வளர்ந்து வந்த வரலாற்றை விவரித்துள்ளார்.
தமிழுணர்வும், தமிழ் நாட்டுப் பற்றும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர் காலத்திலிருந்து இன்று வரை ஆழ்ந்து பரந்து வளர்ச்சி பெற்றுள்ளன. இதன் அடிப்படை, வடமொழி ஆதிக்கம், வடமொழி தென் மொழிகளுக்கு உயர்ந்தது என்ற பிரசாரம் இவற்றின் எதிருணர்வேயாகும்.
இந்திய நாட்டுப் பற்றையும் ஒருமையுணர்வையும் தேசீய உணர்வு பரப்பியது. அதன் விளைவினால் தமிழ் நாட்டில் தமிழ் நாட்டுப் பற்றுக்கும், இந்திய நாட்டுப் பற்றுக்கும் முரண்பாடு எழுந்தது. இதன் குரல்களாக தேசீய இயக்கக் கவிகளான பாரதியும், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையும் ஒலித்தார்கள். உரைநடையில் இம்முரண்பாட்டைத் திரு.வி.க.வின் கட்டுரையில் காணலாம். சேதுப்பிள்ளையவர்கள் இந்திய நாட்டின் கலாசார ஒருமையைப் பல கட்டுரைகளில் விளக்கியுள்ளார்கள்.
இராமலிங்க பிள்ளையும், சேதுப்பிள்ளையும், இந்தியால் தமிழுக்கு அழிவு நேராது என்று கருதுகின்றனர். தமிழின் உரமும் வலிமையும், எம்மொழித் தாக்குதலையும் எதிர்த்து நிற்க வல்லதென அவர்கள் கருதுகிறார்கள்.
தற்காலக் கவி பரம்பரை தி.மு.க.வினுடையது. பாரதிதாசன் அதன் மூலவர். கண்ணதாசனும், முடியரசனும் அவர் வழித் தோன்றல்கள். திராவிட நாடு என்னும் பிரதேச உணர்வை வளர்க்க முயலும் அவர்கள் தமிழுணர்வில் நின்றுதான் தங்கள் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். அவர்களது தமிழுணர்வு ஆழ்ந்தது. இதில் முரண்பாடு காணப்பட்டாலும் அவர்கள் தமிழுணர்வை ஒழிக்க முடியாது.
தமிழுணர்வும், பிரதேச உணர்வும் வளர்ந்த வரலாற்றைப் பற்றித் தனிநாயக அடிகளின் முடிவுகள் இவை.
இவ்வுணர்வின் வளர்ச்சியை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இவ்வுணர்ச்சியின் தோற்றம் முதல் இன்றுவரை அதன் வரலாற்றைச் சுருக்கமாக அறிந்துகொள்ளுதல் அவசியம்.
சரித்திர காலத்தில் தமிழ்நாடு நான்கு வகை நிலங்களாக இயற்கையாகவே பிரிந்திருந்தது. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன. குறிஞ்சி மக்கள் வேட்டுவ வாழ்க்கை மூலமாகவும், முல்லைநில மக்கள் மாடு வளர்ப்பதன் மூலமாகவும், மருத நில மக்கள் உழவுப் பயன் மூலமாகவும், நெய்தல் நிலமக்கள் மீன் பிடித்தல், உப்புக் காய்ச்சுதல் முதலிய தொழில்களின் மூலமாகவும், உணவும், உடையும், உறையுளும் பெற்று வாழ்ந்தனர்.
உழவுப் பயன் அதிகமாக அதிகமாக, மற்ற நிலப் பகுதிகளுக்குப் பண்டமாற்று வாணிபம் பரவிற்று. தமிழ் நிலப் பாகுபாடுகள் மறையத் தொடங்கின. இந்நிலையைத்தான் பத்துப் பாட்டும், புறநானூறும் சித்திரிக்கின்றன.
ஒவ்வொரு நிலப் பகுதியிலும் தோன்றிய கலைகள் நான்கு நிலப் பகுதிகளிலும் பரவின. இதனைப் பரப்பியவர்கள், பண்டைப் பாணர்களும், பொருநரும், விறலியரும், கூத்தரும், கூத்தியரும் ஆவார்கள். அவர்கள் நானிலங்களிலும் தோன்றி வளர்ந்த கலைகளைத் தமிழ்நாடு முழுவதும் பரப்பினர். கலை மரபுகளை அவர்கள் ஒருமுகப் படுத்தினர். இக்காலத்தில் தமிழகம் ஒன்றுபட்ட மரபின் நூற்றுக்கணக்கான குறுநில மன்னரும், முடியுடை மன்னர் மூவரும் சிறு சிறு நிலப் பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர். பண்ட மாற்றும் கலைப் பரிவர்த்தனையும் தமிழகத்தில் ஒற்றுமையுணர்வைத் தோற்றுவித்தன.
இக்கூற்றுக்குச் சில சான்றுகள் காட்டுவோம்.
- பட்டங்கொற்றன் என்னும் குறுநில மன்னனது வள்ளன்மையை கருவூர் ககதப்பிள்ளை சாத்தனார் பாடுகிறார். அவன் குதிரை மலையின் சிறு குறவர் குடியொன்றின் தலைவன். அவனது ஆதிக்கவரம்பு மிகக் குறுகியதாயினும் அவனது புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. ஏனெனில் அவனிடம் பரிசில் பெற்ற புலவர் அவனது புகழைத் தமிழகம் முழுவதும் பரப்பிவிட்டார்கள். இதனைப் புலவர் பின் வருமாறு கூறுகிறார்:
‘ஊரார்க் குதிரைக் கிழவ, கூர் வேல்
நறை நார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடி நவிலம்பின் வில்லோர் பெரும,
கை வள்ளிகைக் கடுமான் கொற்ற,
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்தி,
பாடுப வென்ப பரிசிலர் நாளும்,
ஈயா மன்னர் நாண,
ஈயாது பரந்த நின் வசையில் வான் புகழே’ (புறம். 168)
- இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் போற்றிப் பாடியுள்ளார். அவன் முடியுடை மன்னர் மூவரில் ஒருவனே யாயினும், அவன் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்தது என்று புலவர் கூறுகிறார்.
‘அமைவரல் வேலி இமயம் விற்பொறித்து
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன் கோல் நிற்க இ’ (பதிற்றுப் பத்துப் பதிகம்)
- மதுரை நகரின் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்ததென பரிபாடல் (திரட்டு 9) கூறுகிறது.
தண் தமிழ் வேலித் தமிழ் நாட்டகம் எல்லாம்
நின்று நிலை இப்புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை - கொடித்தேரான்
குன்றம் உண்டாகும் அளவு?
மொழி, கலை, பண்பாடு இவற்றால் ஒன்றுபட்டு வந்த தமிழகம் ஆட்சிமுறையால் பிரிவுபட்டு நின்றது. அதுமட்டுமல்ல, சேரர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் இடையேயும், சேரருக்கும் பாண்டிய சோழர்களுக்கும் இடையேயும், இடைவிடாமற் போர்கள் நிகழ்ந்து வந்தன. ஆயினும் தமிழுணர்வும், தமிழக உணர்வும் நிலை பெற்றிருந்தன.
மூவரசுகள் ஒன்றுபட்ட பொழுதெல்லாம் புலவர்கள் மன்னர்களின் ஒற்றுமையைத் தமிழக ஒற்றுமையாகப் போற்றி வரவேற்றனர்.
இவை யாவும் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைக் குறிப்பிடுவன.
கி.பி. முதல் நூற்றாண்டு முதல் 4-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் சிற்றரசுகள் அழிந்தன. மூவரசுகளும் வலிமை பெற்றன. பெரிய அணைகள் கட்டப்பட்டன. தானிய விளைச்சல் மிகுதியாயிற்று. ஆற்றங்கரையோரங்களில் மக்கள் கூடினர். நகரங்கள் தோன்றின. வாணிபம் வளர்ச்சியுற்றது. முதல் நூற்றாண்டு முதலே அந்நிய நாட்டு வாணிபம் தொடங்கி வளர்ந்தது. இந்நிலையைப்பட்டினப் பாலையில் காணலாம். அதற்கும் மேலாக சிலப்பதிகாரத்தில் காணலாம்.
அக்காலத்தில் வணிக வர்க்கம் பெருஞ் செல்வாக்குப் பெற்றது; மூவரசர்களது நாடுகளிலும் அதற்கு வெளியிலும், கடல் கடந்த கீழ் நாடுகளிலும் அவர்களது வியாபாரம் பெருகியது. மூவரசு நிலங்களிலும் தங்குதடையற்ற வாணிபம் செய்ய ஒன்றுபட்ட தமிழ்நாடு வேண்டுமென வணிகர்கள் விரும்பினர். வாணிபத்துக்கு இடையூறான பாண்டியன் ஆட்சியைக் கண்ணகி அழித்தாள். அக்காலம் தமிழுணர்வும், தமிழ்ப் பிரதேச உணர்வும் மிகத் தெளிவாகத் தோன்றின.
இவ்வுணர்வைச் சிலப்பதிகாரம் பலவகையில் புலப்படுத்துகிறது. கதையில் மூன்று காண்டங்களும் முடியரசர் மூவருடைய தலைநகரங்களில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. புகார்க் காண்டம் சோழ நாட்டில் நடைபெறும் கதையையும், மதுரைக் காண்டம் பாண்டிய நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், வஞ்சிக் காண்டம் சேர நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் விவரிக்கின்றன. ஒவ்வொரு காண்டமும் அந்தந்த நாட்டின் கலை வளர்ச்சியையும் பண்பாட்டையும் புலப்படுத்துகின்றன. வாழ்த்துக் காதையில் மூன்று மன்னர்களும் வாழ்த்தப் பெறுகிறார்கள்.
‘வாழியரோ வாழி
வருபுனல் நீர்ப் பொருநை
சூழும் மதுரையார்
கோமான்றன் தொல் குலமே’
‘வாழியரோ வாழி
வருபுனல் நீர்த்தண் பொருநை
சூழ் தரும் வஞ்சியர்
கோமான்தன் தொல் குலமே’
‘எல்லா நாம்
காவிரி நாடனைப் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார் ’
ஒவ்வோர் காண்ட முடிவுக் கட்டுரையிலும், முறையே சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவரும் போற்றிப் பாடப்பட்டுள்ளனர்.
இனி நூல்கட்டுரையில், தமிழ்நாடு முழுவதற்கும் பொதுவான ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் மலையைக் கண்ணாடியிற் காட்டுவது போல இந்நூல் காட்டுகிறதென இளங்கோவடிகள் கூறுகிறார். தமிழ் நாட்டை ஒரு நாடாகக் குறிப்பிடும் அடிகள் வருமாறு:
‘குமரி வேங்கடங்
குண குட கடலா
மண்டிணி மருங்கில்
தண் தமிழ் வரைப்பில்
செந்தமிழ் கொடுந்தமிழ்
என்றிரு பகுதியில்’
இனி, 7-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் இப்பிணைப்பு இறுகி வந்ததென்றே சொல்லலாம். ஆழ்வார், நாயன்மார்களது பக்திப்பாடல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவின. தமிழிசை வளமடைந்தது. கடவுளைத் தமிழாசானாக சமயக் குரவர்கள் பாடினர். பக்திப்பாடல்களில் தமிழுணர்வும் கலந்தன.
பக்தி வெள்ளத்தோடு தமிழுணர்வும் வெள்ளமாகப் பாய்ந்தது. இக்கால முடிவில் கம்பன் தோன்றினான்.
வால்மீகியின் காவியத்தைத் தமிழ்க் காவியமாக்கினான். அவனும் தமிழுணர்வை வளர்த்தான்; நாட்டுப் பற்றையும் வளர்த்தான். இராமனைத் ‘தென்மொழி கடந்தான். வடமொழிக் கெல்லை தீர்ந்தான்’ என்று அழைக்கிறான். ‘தமிழெனும் அளப்பரும் சலதி’ என்று தமிழைக் கடக்க முடியாத கடலுக்கு ஒப்பிடுகிறான். தமிழ்நாட்டிற்கு தேவர் நாடு ஒப்பாகாது என்று காரணத்தோடு கூறுகிறான்.
‘அத்திருத்தகு நாட்டினை அண்டர்
நாடு ஒத்திருக்கு மென்றால் அது ஒக்குமோ
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்?’
கம்பனையடுத்த பிரபந்த காலத்திலும் தேவர்களையும், மன்னரையும் பாடிய கவிகள் தமிழுணர்வை மறக்கவில்லை. வேதங்கள் முறையிட, தமிழின் பின் சென்றவன் திருமால் என்று குமரகுருபரர் கூறுகிறார்.
‘அருமறைகள் முறைவிட
பைந் தமிழ்ப் பின் சென்ற
பச்சைப் பசுங் கொண்டலே.’
நாயக்கர்கள் காலம் தொடங்கி அவர்கள் காலம் முடியும் வரை, சிறு பிரபந்தங்களில் தமிழுணர்வு மங்காமல் நிலவுவதைக் காண்கிறோம்.
பள்ளுப் பாடல்களும், குறவஞ்சிகளும், இக்காலக்கவிஞர்கள் படைப்புகளே. ஆங்கில ஆட்சிக் காலமே தமிழுணர்வு மங்கிய காலம் ஏன்? அடிமைக்கு மொழிப்பற்று ஏது? ஆங்கில மொழியும், பண்பாடும் மனிதப் போலிகளைப் படைத்தன. நாட்டிலேயே அயல் நாட்டு ஆன்மாவுடன் நடமாடிய மனிதரைச் சிருஷ்டித்தது. இதனால் இலக்கிய ஊற்று உள்கரந்தது. பண்பாடு உறங்கிப் போயிற்று.
விடுதலை நாதம் நாட்டில் பரவத் தொடங்கியது. நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு அன்னியர் ஆட்சி தடையென விடுதலை இயக்கத் தலைவர்கள் முழங்கினர். நாட்டுப் பற்று விழித்தெழுந்தது. புதியதோர் ஒற்றுமை தோன்றியது. ஆங்கில ஆட்சி வலிமையால் இணைத்துப் பிணைத்திருந்த இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் விடுதலையடைய அவர்களை எதிர்த்துப் போராட ஒன்றுபட்டனர். அவர்கள் பலாத்காரத்தால் இணைத்து வைத்திருந்த பொருளாதார வாழ்வு சிதறியது. மக்களுடைய ஒற்றுமையால் அந்நியச் சுரண்டல் நீங்கி முன்னேற மக்கள் ஆர்வம் கொண்டனர். இந்த ஆர்வம் மொழி மீதும் பண்பாட்டின் மீதும், பிரதேசத்தின் மீதும் தோன்றி, இவற்றைப் பாதுகாக்கவும், வளம் பெறச் செய்யவும், இதே நோக்குடைய பல பகுதியினரோடு ஒன்றுபட்டுப் போராடத் தூண்டியது. விடுதலை இயக்கத்தோடுதான் பண்பாட்டு ஆர்வமும், மொழி மறுமலர்ச்சியும் தோன்றின.
இம்மறுமலர்ச்சியின் குரல் பாரதி. அவனுடைய வழி வந்தோர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, திரு.வி.க., முதலியோர். ஒரு கால கட்டத்தில் பாரதிதாசனும், பாரதி வழியில் நின்றார்.
நாட்டு விடுதலையில்லாமல், மொழி மறுமலர்ச்சியும், பண்பாட்டு மலர்ச்சியும் இல்லை.
நாட்டுக்கு, விடுதலைக்கு, அவரவர் பண்பாட்டுப் பெருமையையும், இவை யாவிலும் ஒன்றி நிற்கும் இந்தியப் பண்பாட்டின் ஒருமையையும் உணர்தல் அவசியம் எனப் பாரதி கண்டார்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’
‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே,
இதைத் தொழுது படித்திடடி பாப்பா’
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.’
என்று தமிழுணர்வூட்டும் பாரதி இந்திய ஒருமைக்கு அது விரோதமல்ல என்றும் பாடுகிறார்.
‘முப்பது கோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்
செப்பு மொழி பதினெட்டுடையாள்,
எனிற் சிந்தனை ஒன்றுடையாள்.’
தேசிக விநாயகம் பிள்ளையும் பாரதியின் உணர்வில் ஒன்றி நிற்பதைக் காண்கிறோம். நாமக்கல்லாரும் நாட்டுப்பற்றையும், மொழிப் பற்றையும் ஒன்றிற் கொன்று முரண்பட்டதாகப் பார்க்கவில்லை.
இவையனைத்தையும் சுட்டிக்காட்டி இந்திய நாட்டுப்பற்றுடைய கவிகளுக்கு தமிழ் மொழி உணர்வு முரண்பட்டதோர் உணர்ச்சியென்றும், இவையிரண்டிற்கும் பாலம் அமைக்க அவர்கள் முயலுவதாகவும் தனிநாயக அடிகள் கூறுகிறார்.
புதிய மறுமலர்ச்சி சுந்தரம் பிள்ளையின் தமிழ் வாழ்த்துப் பாடல் தோன்றிய காலத்திலிருந்து துவங்குவதாக அடிகள் கூறுகிறார். ‘கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய தென்னிந்திய மொழிகளுக்குத் தமிழ்தான் தாய். இத்தனை மொழிகளைப் பெற்றெடுத்தும், தமிழ் ஆரியம் போல் முதுமையடைந்து அழிந்தொழிந்து போகாமல் இளமையோடு நிலவுகிறது. இத்திறத்தை எண்ணித் தமிழை வாழ்த்துவோம்’ என்பது அப்பாடலின் கருத்து. தமிழ் பிறமொழிகளிலும் சிறந்தது. பிற மொழிகளை இகழ்ந்து நமது மொழியைப் போற்றுவோம் என்ற தனிமையுணர்வையும், பிரிவினையுணர்வே தமிழுணர்ச்சிக்கும், நாட்டுப் பற்றுக்கும் அவசியம் என்பது சுந்தரம் பிள்ளையின் கருத்து. மேலும், எல்லாப் பகுதி மக்களும், ஒன்றுபடும் முயற்சி துவங்கிய காலத்தில் இக்கருத்து தமிழரைத் தனிமைப்படுத்த உதவும் கருத்து.
‘வடமொழி உயர்ந்தது, அதனிடம் கடன் வாங்கியே தமிழ் பிழைக்கிறது.’ என்று பேசிய பிராமணர்களின் கருத்துக்கு இது எதிர்த் தாக்குதல் என்று கட்டுரையாசிரியர் கூறுகிறார். அது வடமொழி வெறியென்றால் சுந்தரம் பிள்ளையின் கருத்து தமிழ் வெறியாகாதா? ஒரு வெறியை மற்றொரு வெறியால் அடக்க முடியுமா? சிவன் உயர்ந்தவன், திருமால் உயர்ந்தவன் என்ற சண்டை தமிழ்நாட்டில் யாருக்காவது வெற்றியில் முடிந்ததா? சமரசவாதியான கம்பன்,
‘அரனதிகன், உலகளந்த அரியதிகன்
என்றுரைக்கும் அறிவிலார்.’
என்று தீர்ப்பு வழங்கினான்.
இக்காரணம் கூறி தமிழ் வெறியை நியாயம் என்று கூறமுடியாது. இக்கருத்துக்களின் வளர்ச்சியை மறைமலையடிகளின் எழுத்துக்களில் காண்கிறோம்.
அவரைப் பற்றி தனிநாயக அடிகள் கூறுவதாவது:- ‘மறைமலையடிகள் இந்திய விடுதலையின் மீது மோகம் கொண்டவரல்ல. மேல் சாதியினர் கீழ் சாதியினரை அடக்கி ஒடுக்குவதை அனுமதிக்கும் சுதேச அரசாங்கத்தைப் பார்க்கிலும், பிரிட்டிஷ் அரசாங்கம் நீதியாகவும், நேர்மையாகவும் ஆட்சி நடத்தும் என்று அவர் கருதினார். ஓய்வு பெற்று தனித்து வாழ்ந்த அறிவாளியாதலால், அவர் அரசியல் இயக்கங்களின் சுழலில் சிக்காமல் வாழ்ந்தார்.’
இந்திய விடுதலை தேவையில்லை; வெள்ளைக்காரன் நியாயமானவன்; பிராமணன் மோசமானவன். நம் நாட்டவன் ஆட்சி வேண்டாம், என்று கருதிய மறைமலை அடிகளுக்குத் தமிழர் வாழ்வு பற்றி ஒரே ஒரு எண்ணம் தான் இருந்தது. அது வடமொழியிலிருந்து தமிழைப் பாதுகாப்பது. பிராமணரிடமிருந்து தமிழைப் பாதுகாப்பது ஆங்கில மொழியாதிக்கத்தால் தமிழ் அழிவதைக் காணாத கண்கள் வடமொழிப் பூதத்தைக் கண்டன. பூதம் என்பது மனப்பிராந்திதானே? இல்லாத பூதத்தைக் கொல்ல அவர் வாளைச் சுழற்றினார். இதுதான் அவரது தமிழுணர்வு. இந்திய விடுதலை தேவையில்லை என்று எண்ணியவருக்கு இந்திய ஒருமையைப் பற்றி என்ன கவலை இருக்க முடியும்? தமிழ் வெறிக்கும், இந்திய விடுதலையார்வத்திற்கும் ஒட்டும் உறவும் ஏது? எனவே முரண்பாடில்லாத தமிழுணர்வு என்று தனிநாயக அடிகள் அழைப்பது பிற மொழிகளைப் பழிப்பது; பிறமொழி பேசுவோரைப் பழித்து, தமிழின் உயர்வை நிலை நாட்டுவது தான் என்று தோன்றுகிறது.
இனி தனிநாயக அடிகள் திராவிட இயக்கத்தினரின் தமிழுணர்வைப் போற்றிக் கூறுகிறார். அவருடைய கருத்தை அவர்களது சொற்களாலேயே கூறுவோம்.
‘தமிழ் நாட்டிற்கும், திராவிடஸ்தான் கருத்திற்கும் விசுவாசமுடைய முரண்பாட்டை நாம் ஒரு குறிப்பிட்ட கவிஞர் வரிசையில் காண்கிறோம். இந்திய நாட்டின் மீது விசுவாசம் இருத்தல் வேண்டுமென அவர்கள் சொல்லுவதில்லை. ஐக்கிய உலகத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இது பழந்தமிழரது கருத்துத்தான். இந்த வரிசையில் இருப்பவர் பாரதிதாசன். கண்ணதாசனும், முடியரசனும் அவரது வழித் தோன்றல்கள்.’
இது மட்டுமல்ல; திராவிடஸ்தானுக்குப் பாரதிதாசன் எல்லைகூறி அதற்கப்பால் ஒரு காலத்தில் கடல்தான் இருந்தது என்று கூறுகிறார். பிற்காலத்தில் தோன்றிய ஆரிய நாட்டிற்கு எதிராக, அதனைச் சிறுமைப்படுத்தத் திராவிடத்தின் தொன்மையை நிலைநாட்ட பாரதிதாசன் முயலுகிறார்:
‘அடேடே, வட பெருங்குன்றமே இல்லை,
அவ்விடம் நீர்ப்பரப்பு - ஆழ்கடல் உள்ளதே,
அப்பெருங்கட அலை, அழகிய விந்தியல்
வெற்பின் வடபுறத்து விளையாடினவே!
மேற்கு - அரபிக் கடல் கிழக்கு வங்கக் கடல்
இல்லை, என்ன வியப்பிது?
தமிழுணர்வுக்கும் திராவிடஸ்தான் கருத்துக்கும் முரண்பாடு இருந்தபோதிலும் பாரதிதாசன் போன்றோரின் எழுத்துக்களில் ஆழ்ந்த தமிழுணர்வு இருக்கிறது என்று தனிநாயக அடிகள் எழுதுகிறார்.
‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்றும் ‘தமிழெங்கள் உயிருக்கு நேர்’ என்றும் பாடிய பாரதிதாசன் கவிதையில் தமிழுணர்வு இருக்கிறது. ஆனால் பிற மொழிகளை வெறுப்பதையும், பிற மக்களை இழிவுபடுத்துவதையும், தமிழின் உயர்வுக்கு ஆதாரமாக்கும்போது, அவரது எழுத்துக்கள் தமிழ் வெறியாகத் தாழ்ந்துவிடுகின்றன.
‘ஆரியன் அல்லேன் எனும் போதில்
எத்தனை மகிழ்ச்சி, எத்தனை மகிழ்ச்சி!’
‘அயல் என்று கொட்டுக முரசே, உறவான
திராவிடர் அல்லார்.’
‘பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைசுருட்டும்
எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே.’
(பாரதிதாசன் கவிதைகள்)
முரண்பாடற்ற தமிழுணர்வு என்று தனிநாயக அடிகள் சுட்டிக் காட்டுவது சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகளின் எழுத்துக்களை. அவற்றில் சுதந்தர ஆர்வம் இல்லை; பிற மொழி வெறுப்பு உண்டு.
முரண்பாடுள்ள தமிழுணர்வு என்று அவர் காட்டுவது தேசியக் கவிகளின் படைப்புக்களையும், பாரதிதாசன் முதலிய திராவிட இயக்கத்தாரின் பாடல்களையும், இவற்றுள் தேசியக் கவிகள் தேசிய உணர்விற்கும், மொழியுணர்விற்கும் பாலம் அமைக்க முயலுகிறார்கள் என்று அவர் சொல்லுகிறார். வெற்றி பெற்றதாகச் சொல்லவில்லை திராவிட இயக்கத்தினரின் பாடல்களில், திராவிடஸ்தான் பற்றுக்கும், தமிழுணர்வுக்கும் முரண்பாடு இருக்கிறது என்றாலும் அவர்களது தமிழுணர்வு ஒதுக்கிவிடக் கூடியதல்ல என்று தனிநாயக அடிகள் சொல்லுகிறார்.
ஆங்கில ஆட்சி ஓர் ஸ்தூலமான உண்மை. அதனை எதிர்த்து எழுந்த தேசிய உணர்வு மறைத்தற்கரிய உண்மை. அதனோடு மறுமலர்ச்சியுற்றது மொழியுணர்ச்சி. இது தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி வழிப் பிரிவுகளுக்கும் பொருந்தும். இவை இரண்டிற்கும் முரண்பாடு எதுவுமில்லை. பாரதியே இவ்விரண்டு உணர்ச்சிகளின் ஒற்றுமைக்குத் தமிழ் நாட்டில் இலக்கிய வழிகாட்டி.
திராவிடஸ்தான், அடிகள் கூறுவதுபோல ஒரு கருத்துத்தான் (Concept); அது ஸ்தூலமான உண்மையல்ல. அதன் அடிப்படை ஆங்கில ஆட்சியின் எதிர்ப்பல்ல, நாட்டின் விடுதலைப் பற்றுமல்ல. தமிழுணர்ச்சி அக்கருத்தை வலிவுபடுத்துவதாகாது. ஏனெனில் கற்பனைத் திராவிடத்திற்கு எந்த மொழியும் அடிப்படையாகாது. அதுவும் தமிழ்வெறி, தெலுங்கையும், கன்னடத்தையும், மலையாளத்தையும் எவ்வாறு உருவாக்க உதவும்? இது தான் தீர்க்க முடியாத முரண்பாடு. பிரிவினை இயக்கத்தாரின் தமிழுணர்வு தமிழ் மரபின் வழிவந்ததல்ல.
ஏனெனில் தமிழனது பண்பாடு எல்லோருடனும் உறவுகொண்டு வளர்ந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (உறவினர்) என்று பாடியவன் சங்ககாலத் தமிழ்ப் புலவன்.
பல மொழிகள் பேசும் மக்களோடு தொடர்பு கொண்டு வாழ்ந்தவன் தமிழன். கிரேக்கர், ஆரியர், துருக்கர், தெலுங்கர், கன்னடர், மராட்டியர், மலையாளி முதலிய பல இனத்தவரின் பண்பாடுகளின் இணைப்பைத் தமிழ் பண்பாடு பெற்றுள்ளது. நமது பண்பாட்டின் பல அம்சங்கள் இந்திய நாடு முழுவதும் பரவியுள்ளன.
காஷ்மீரத்தில் சைவத்தைப் பரப்ப திருநெல்வேலி சிவாச்சாரியார்கள் சென்றிருக்கின்றனர். ஆழ்வார்களது பாடல்கள் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு பாடப்படுகின்றன. வங்கத்து வைஷ்ணவர்கள் இராமானுஜரது பாஷ்யத்தைப் போற்றுகிறார்கள்.
ரிக் வேதத்தில் 500 தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று டாக்டர் கமில் ஸ்வலபில் கூறுகிறார்.
தமிழ் நாட்டுக் கோவில் அமைப்பில் கோபுரங்கள் சாளுக்கிய சிற்பக் கலையிலிருந்து தோன்றியவை.
பூவினாலும் புகையினாலும் பூசை செய்யும் முறை தமிழ் நாட்டிலிருந்து வடநாட்டிற்குப் பரவியது.
மதுரையிலும், காஞ்சியிலும் படித்துப் புகழ் பெற்ற பௌத்த பிக்ஷ&க்கள் நாளந்தாவிலும், பாடலிபுரத்திலும் ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.
இவ்வாறு இணைப்புப் பெற்ற இந்தியப் பண்பாட்டில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்பதில்லை. நாம் கலைச் செல்வங்களை வழங்கியுமிருக்கிறோம்; உடன் பிறந்தார்களிடம் கலைச் செல்வத்தைப் பெற்றும் இருக்கிறோம்.
தமிழ் உணர்வு, தமிழ்ப் பண்பாட்டு ஆர்வம் தமிழ் நாட்டுப் பற்று இவை தேசிய உணர்விற்கு முரண்பட்டன அல்ல. ஆனால் தமிழ் வெறி, தமிழர் மற்ற இனத்தாரினும் எல்லாவகையிலும் சிறந்தவர் Regional Chauvinism என்ற கருத்து, தேசிய ஒற்றுமைக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் நேர் முரணானது.
(‘தமிழர் வரலாறும் பண்பாடும்’ நூல் தொகுப்பிலிருந்து)