மலேசிய மாநாடு எதிர்ப்பாளர்களுக்கு பதில்
“சேர சோழ பாண்டியர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டதைவிட பார்ப்பனியத்தை வளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டினார்கள்”
இனத்தால் “திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” என்ற தலைப்பில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஜூன் 24, 25 தேதிகளில் உலகத் தமிழ் உணர்வாளர் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. இதையொட்டி “இனியும் வேண்டுமா திராவிடம்?” என்ற தலைப்பில் மலேசியாவின் ‘தமிழ் மலர்’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. எழுத்து வித்தகர் விவேகானந்தன் என்பவர் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து அந்நாளேட்டுக்கு மறுப்புக் கட்டுரை ஒன்று அனுப்பப்பட்டது. மறுப்பை அந்த ஏடு வெளியிடவில்லை. அக் கட்டுரை இங்கே வெளியிடப்படுகிறது.
‘தமிழ்மலர்’ நாளேட்டில் (02.07.2017) ‘இனியும் வேண்டுமா திராவிடம்?’ என்ற தலைப்பில் எழுத்து வித்தகர் வே.விவேகானந்தன் எழுதியுள்ள கட்டுரை மாநாட்டின் நோக்கத்தை திசைதிருப்புவதாகவும் முரண்பட்ட வாதங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது
திராவிடத்தைத் தூக்கி நிறுத்துவதற்காகவே கூட்டப்பட்ட இந்த மாநாட்டுக்கு தமிழ் உணர்வாளர்களை வரச்செய்வதற்காக ‘தமிழ் உணர்வாளர்கள் மாநாடு’ என்று தலைப்பிட்டு ஏமாற்று வேலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகிறது அக்கட்டுரை. மாநாட்டின் தலைப்பு “இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” என்பதாகும். மாநாட்டு சுவரொட்டி அழைப்பிதழ் அறிவிப்புகளும் விளம்பரங்களும் இதை வெளிப்படையாகவே பறைசாற்றுகின்றன. இதில் ஏமாற்றுவதற்கு என்ன இருக்கிறது?
திராவிட மொழிக் குடும்பத்தை ஆராய்ந்த கால்டுவெல், தேவநேயப் பாவாணர் போன்ற ஆய்வாளர்கள் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்பதையும், இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் முற்றிலும் வேறுபட்டது என்பதையும் தங்கள் ஆய்வுகள் வழியாக நிலைநாட்டினர். தமிழுக்கு மூலம் சமஸ்கிருதம் என அதுவரை ஆரியப் பார்ப்பனர்கள் கூறிவந்த கருத்தை ஆழமாக மறுத்தன இந்த ஆய்வுகள். ஆனால் தமிழ் பேசிய தமிழினத்தில் ஆரியப் பார்ப்பனரின் சமஸ்கிருதப் பண்பாட்டு கலப்பால் தமிழினத்தின் மொழியின் அடையாளங்கள் சிதைக்கப்ட்டு தமிழர்கள் வாழ்வியல் சடங்குகளில் வழிபாட்டில் தமிழ் மொழியை நீக்கி சமஸ்கிருதமும் புரோகிதப் பார்ப்பனர்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். மலேசியாவில் தமிழ்ப்பள்ளி தொடக்க நிகழ்வுகளானாலும் தமிழர்கள் கட்டும் கோயில் கும்பாபிஷேகம் வழிபாடுகளானாலும் திருமணங் களானாலும் அங்கே தமிழ் விரட்டப்பட்டு சமஸ்கிருதமே புகுந்து கொண்டு நிற்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று? திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழின் இடத்தை இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஆரிய பார்ப்பனர்களின் சமஸ்கிருதத்தை தமிழர்கள் மீது கடவுள் மொழியாகவும் புனித மொழியாகவும் திணிக்கப்பட்டதால் தானே! இந்த பண்பாட்டு சிதைவை எதிர்த்து ஜாதியையும் பார்ப்பனியத்தையும் விலக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கூட்டப்பட்டது தமிழ் உணர்வாளர் மாநாடு.
தமிழே முதன்மையானதாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தின் வழி திரும்பி வாருங்கள் என்று எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறதா இல்லையா? அந்த நோக்கத்துக்காக முன்வைக்கப்பட்டது தான் ‘இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன்’ என்ற முழக்கம். இதை சிறுமைத்தனம் என்று கட்டுரையாளர் கூற வருகிறாரா?
தமிழர் என்னும் அடையாளத்தை மறைக்கவும் சிதைக்கவுமே திராவிடம் பயன்படுகிறது என்று எழுதும் கட்டுரையாளருக்கு நமது பதில் இது தான். தமிழரின் அடையாளத்தை சிதைத்து மறைத்து அழித்து வரும் சமஸ்கிருத பார்ப்பனிய பண்பாட்டி லிருந்து தமிழினத்தை மீட்டெடுக்கவே திராவிடர் என்ற அடையாளம் பயன்படுத்தப்படுகிறது
சேர சோழ பாண்டியர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்பதைவிட அவர்கள் பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் வளர்ப்பதிலே ஆர்வம் காட்டினார்கள் என்பதையே மாநாட்டில் பேசியவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இதை குறிப்பிடாமல் மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டதை மாநாட்டில் குறை கூறிப் பேசினார்கள் என்றும் மன்னர்கள் அக் காலத்தில் சண்டை போடுவது வீரத்தின் அடை யாளம் என்றும் கட்டுரையாளர் திசை திருப்புகிறார். சேர சோழ பாண்டியர்கள் வடநாட்டு பார்ப் பனர்களை அழைத்து வந்து சமஸ்கிருதப் பள்ளிகளைத் திறந்து பார்ப்பன அடிமையாகவே ஆட்சி நடத்தினார்கள் என்ற வரலாற்றை மறுக்க முடியுமா?
• அருள்மொழித்தேவன் என்ற தன்னுடைய தமிழ்ப் பெயரை இராஜராஜன் என்று வடமொழிப் பெயராக மாற்றிக் கொண்டான் தமிழ் மன்னன்.
• நான்மறை தெரிந்த அந்தணரை ஆதரித்தவன் முதலாம் இராஜராஜ சோழன்.
• மனுநெறி நின்று அஸ்வமேத யாகம் செய்தவன் முதலாம் இராஜராஜன்.
• மனுவாறு பெருக என்ற பெருமைக்குரியவன் முதலாம் குலோத்துங்க சோழன்.
• மனுநீதி வளர்த்து நின்றவன் விக்கிரம சோழன்.
இப்படி எல்லாம் தங்கள் பெருமைகளை கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் செதுக்கியும் பொறித்தும் வைத்து இதுவே தங்களுடைய வர லாற்றுப் பெருமையாக அறிவித்தவர்கள் சோழர்கள்
பிராமணர்களுக்கு ஏராளமான நிலங்களை தானங்களாக வழங்கினார்கள். ஏழை எளிய மக்களுக்கு பெண் பூப்படைவதிலிருந்து காது குத்து சடங்கு வரை 400 வரிகளை போட்டு வதைத்த சோழ மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு ஒரு வரி கூட போடவில்லை
தீண்டப்படாத மக்களுக்கு ஊரின் ஒதுக்குப்புறமாக சேரியை உருவாக்கியவர்கள் சோழர்கள். சோழர் காலத்தில் தான் வலங்கை இடங்கை என்று இரு ஜாதிப்பிரிவு அணிகள் உருவாக்கப்பட்டு இரு அணிகளும் கடும் யுத்தத்தையே நடத்திக் கொண்டிருந்தனர்.
பாண்டியர் காலத்திலும் அதைத் தொடர்ந்து வந்த நாயக்கர் மராட்டியர் காலத்திலும் பார்ப்பனியமும் வைதீகமும் கோலோச்சின என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.
மலேசிய தமிழ் உணர்வாளர்கள் மாநாட்டில் பேசியவர்கள் இப்படி தமிழம் தமிழரும் சிதைந்து அழிக்கப்பட்டுக் கிடந்ததை வரலாற்று ஆதாரங் களுடன் தங்கள் உரையில் சுட்டிக்காட்டினர். இது எப்படி தமிழை சிறுமைப்படுத்துவதாகும்? கட்டுரையாளர் பதில் தருவாரா?
கோயில்களில் தேவாரத்தை ஓதுவதற்கு ஓதுவார்கள் நியமிக்கப்பட்டார்கள். அர்ச்சனையில் தான் வடமொழி புகுத்தப்பட்டது என்று எழுதுகிறார் கட்டுரையாளர். தமிழில் தேவாரம் கோயில் தாழ்வாரத்தில் தான் நின்று கொண்டு பாடமுடிந்தது. ஆனால் கோயிலில் மூலவிக்கிரத்தை வழிபட சமஸ்கிருதத்துக்குத் தான் தகுதி, அங்கே தேவாரத் தமிழ் தீட்டாகிவிடுகிறது. இதைப் பெருமை என்று கூறுகிறாரா கட்டுரையாளர்? இதுதான் இவரது தமிழ் உணர்வுக்கான அடையாளமா?
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒருவருக் கொருவர் சண்டை போட்டுக் கொண்டாலும் மொழித் தொடர்பும் மொழி ஒருமைப்பாடும் அவர்களிடையே இருந்தது என்கிறார் கட்டுரையாளர். தமிழர்கள் ஜாதி வாரியாகப் பிரிந்து நின்றாலும் தமிழ்மொழி தொடர்பு அறுபடவில்லை என்றும் வாதிடுகிறார் கட்டுரையாளர்.
ஆக, ஒரு இனத்தை ஓர்மை பெற்ற இனமாக்கி ஒருங்கிணைக்கும் வலிமை தமிழ் மொழிக்கு இல்லாமல் போய்விட்டது என்பதை கட்டுரையாளர் ஒப்புக் கொள்கிறார். ஓர்மை பெற்ற வலிமையான தமிழினத்தைக் கட்டமைக்க ஜாதி பெண்ணடிமை, மூடத்தனங்களற்ற ஒரு தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க பண்பாட்டு புரட்சி தேவைப்படுகிறது. இந்தப் பண்பாட்டுப் புரட்சியியின் குறியீட்டுச் சொல் தான் தமிழர்களுக்கான திராவிடம்.
தமிழ்நாட்டில் திராவிட என்ற பெயரில் செயல்படும் அரசியல் கட்சிகள், பெரியார் கூறிய பார்ப்பனிய சமஸ்கிருத ஜாதிய பண்பாட்டு எதிர்ப்புகளை உள்ளடக்கிய திராவிடர் என்ற கருத்தியலிலிருந்து விலகிப்போய் விட்ட அரசியல் அதிகாரத்துக்கான கட்சிகள். இந்தக் கட்சிகளில் இடம் பெற்றுள்ள பெயர் கூட திராவிட என்பது தானே தவிர ஆரியரில்லாதவர்களை சுட்டும் குறிச் சொல்லான திராவிடர் என்பது அல்ல.
எனவே பெரியாரின் திராவிடர் கோட்பாட்டை யும் திராவிட அரசியல் கட்சிகளையும் ஒன்றாகப் போட்டு குழப்புவதே தவறு. மக்களை திசை திருப்பும் அந்தக் குழப்பத்தை இக்கட்டுரையாளரும் செய்திருக்கிறார்.
எந்தச் ஜாதியாக இருந்தாலும் தமிழைத் தாய்மொழியாக் கொள்பவர் எல்லோரும் தமிழர் தானே? என்று கேட்கிறார் கட்டுரையாளர்.
தமிழினம் என்பதற்கு அடையாளம் மொழியா? அல்லது ஜாதியா? என்பதை கட்டுரையாளர் விளக்க வேண்டும். ஜாதியும் வேண்டும் தமிழன் என்ற அடையாளமும் வேண்டும் எனக் கூறுவது அறிவுடைய வாதமா?
ஜாதியமைப்பு ஒருவர் உயர்ந்தவர், மற்றவர் கீழானவர் என்ற ஏற்றத்தாழ்வில் கட்டமைக்கப்பட் டிருக்கிறது. இந்த இனத்துக்குள்ளே ஒருவன் மேல்ஜாதி, ஒருவன் கீழ்ஜாதி, ஒருவன் தீண்டப்படாதவன் என்ற வேறுபாடுகளை நிலைநிறுத்திக்கொண்டு நாங்கள் எல்லோரும் தமிழ் பேசும் ஓரினம் என்றால் இதைவிட கேலிக்கூத்து வேறு இருக்க முடியுமா? சமஸ்கிருதப்பண்பாட்டை மறுக்கும் திராவிட மொழிக்குடும்பத்தில் மூத்தமொழி தமிழ் இந்தப் பண்பாட்டை ஏற்றத்தாழ்வை எதிர்க்கிறது. சங்ககாலத் தமிழர் வாழ்வில் தொடக்கத்தில் ஜாதி இருந்ததில்லை, சங்கம் மருவிய காலத்தில் வர்ணாஸ்ரமம் நுழைந்தது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதே குறள் நெறி, இதுவே தமிழ்நெறி.
உலகப் பொதுமறையான குறள்நெறிக்கு எதிராக ஜாதியும் தமிழரின் அடையாளம் என கட்டுரை யாளர் எழுதுவதுதான் தமிழ்உணர்வா என்று கேட்கிறோம்.
சென்னை மாகாணம் அமைந்திருந்த காலத்தில் திராவிடம் தேவைப்பட்டது. மொழிவழி மாநிலம் அமைந்த பிறகு திராவிடம் தேவைப்படவில்லை என்று கட்டுரையாளர் எழுதுகிறார். இது நூற்றுக்கு நூறு சரியான கருத்து. மொழிவழி மாநில பிரிவினைக்குப் பிறகு பெரியாரே ‘திராவிட நாடு’ கோரிக்கையினை கைவிட்டார், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தைத்தான் முன்வைத்தார். திராவிட அரசியல்கட்சிகளான திமுக, அதிமுக மதிமுக போன்ற கட்சிகள் இந்தியாவை ஏற்றுக் கொண்டு தேர்தல்களிலே போட்டியிட்டு வருகின்றனர். இந்தக் கட்சிகள் தென்னக மாநிலங்களை இணைத்த திராவிட நாடு எதையும் கேட்கவும் இல்லை, அதே நேரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இந்த தென்னக மாநிலங்களை தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளுமே (அகில இந்திய கட்சிகளைத் தவிர) எதிர்த்துப் போராடித்தான் வருகின்றனர்.
கேரளக்காரர்களும், ஆந்திரர்களும், கன்னடர் களும் திராவிடத்தைப் பேசுகிறார்களா என்ற கேள்வியை கட்டுரையாளர் முன்வைக்கிறார். இதிலிருந்து நாம் பேசும் திராவிடம் அம்மாநில மக்களுக்கு சாதகமானது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தென்னக மொழிகளுக்கு எல்லாம் மூலம் தமிழ் என்ற கண்ணோட்டத்தில் நாம் திராவிட மொழிக் குடும்பம் என்று கூறும் போது அதை எப்படி அவர்கள் ஏற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?
திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்தமொழியான தமிழ் சமஸ்கிருதப் பார்ப்பன பண்பாட்டுக்கு நேர் எதிரானது என்ற பண்பாட்டு நோக்கில் சமஸ்கிருதப் பார்ப்பன பண்பாட்டில் மூழ்கிக்கிடக்கும் ஜாதித் தமிழனை ஆரியத்திற்கு அடிமைப்பட்ட தமிழனை சுயமரியாதையும் சமத்துவ உணர்ச்சியும் கொண்ட தமிழனாக மாற்றி தமிழினத்திற்கு வலிமை சேர்ப்பதற்குத் தான் திராவிடர் என்ற அடையாளமே தவிர, கன்னடர், தெலுங்கர், மலையாளிகளிடம் தமிழினத்தை அடிமைப்படுத்துவதற்கு அல்ல
இதற்கு மாறாக சமஸ்கிருதப் பண்பாட்டை தலைமேல் சுமந்து கொண்டு அது கட்டமைத்த ஜாதியின் அடிப்படையில் தமிழர்களை கூறு போடுவது தமிழருக்கான அடையாளமல்ல. அது தமிழர்களை காலம் காலமாய் பிரித்து அடிமைப் படுத்திய பார்ப்பனியத்தின் அடையாளத்தில் ஒன்றாகும்
தமிழ் உணர்வாளர் மாநாடு – தமிழினத்தை பார்ப்பனியத்திலிருந்து விடுவிக்க திராவிடர் அடையாளத்தை கையில் எடுக்கிறது. திராவிடர் எதிர்ப்பாளர்கள் தமிழனை ஜாதி சகதிக்குள் அழுத்தி வைக்க திராவிடர் எதிர்ப்பைப் பேசுகிறார்கள்
நீ எந்த ஜாதி என்று சொல், நீ தமிழனா என்று நான் கூறுகிறேன்- என்று திராவிடஎதிர்ப்பாளர்கள் கேட்பதும், நீ எந்த ஜாதி என்று சொல், சமூகத்தில் உன் தகுதியை நான் நிர்ணயிக்கிறேன் என்று பார்ப்பனர்கள் கேட்பதும் ஒரே குரல் ஒரே சிந்தனை தான்
தமிழர்களின் உண்மையான நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்பதை ‘தமிழ் மலர்’ வாசகர்கள் முடிவுசெய்து கொள்ளட்டும்.