முன்னேறிய வகுப்பினருக்கு, பொருளாதாரத்தில் நலிந்ததாகக் காரணம் காட்டி கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டுத் தீர்ப்பை மறு சீராய்வு செய்யப் போடப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு. இந்த மாதம் 8ஆம் நாள் தள்ளுபடி செய்யப்பட்டு, 9ஆம் நாள் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இனி நீதிக்கு எந்த வாய்ப்பும் இல்லை எனும் புள்ளியில் இந்த விவாதங்களை முடித்து வைத்திருக்கிறார்கள், மாண்பமை நீதிபதிகள்!
சாதியத் தாழ்ச்சி கற்பிதங்களால், வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களை, அதே அளவீடுகளைக் கொண்டு உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை அரசியலமைப்பின் உறுப்புகள். அரசியலமைப்பு உருவான காலத்திலிருந்தே இந்த உறுப்புகளின் நோக்கத்தைச் சிதைக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயன்று கொண்டே இருந்திருக்கிறது பார்ப்பனீயம். சமூக மற்றும் கல்வி அளவீடுகளின் படி பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, நலிந்த மக்களை உயர்த்த, கல்வி, வேலைவாய்ப்புகளில் அரசு சிறப்பு அம்சங்கள் உருவாக்கலாம் என்று அண்ணல் அம்பேத்கர் எழுதும்போதே அதற்கு எதிர்ப்பு இருந்தது.உறுப்பு 15 மற்றும் 16இல், கல்வி, வேலைவாய்ப்புகளில் எந்தக் காரணம் கொண்டும் பாகுபாடு காட்டக்கூடாது என்று இருந்ததை, பார்ப்பனர்கள் அவர்களுக்குச் சாதகமாக வளைத்து, இடஒதுக்கீடே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பு வாங்கி, அதற்கு முன்பு ஒரு அரை நூறாண்டாக நமக்கு வெள்ளையர் கொடுத்த இடஒதுக்கீட்டை ஒழித்து விட்டார்கள். இது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த 1950 இலேயே நடந்துவிட்டது. ஓராண்டு போராட்டத்துக்குப் பின் திருத்தம் கொண்டுவந்து மீண்டும் அரசியலமைப்பின் நோக்கத்தை தந்தை பெரியாரின் திராவிட அரசியல் மீட்டது.
1980களில் மண்டல் அறிக்கை இந்த நாட்டின் 50 விழுக்காட்டுக்கு மேல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை பரிந்துரைத்த போது, 50% மேல் மொத்த இட ஒதுக்கீடு கூடாது என்றும், அதிலும் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற இயலாது எனவும் 1992 இந்திரா சஹானி வழக்கில் தீர்ப்பு வாங்கினர். அப்போதிருந்தே, முன்னேறிய வகுப்பினருக்கு, “பொருளாதாரத்தில் பின்தங்கிய” என்ற தகுதியோடு இடஒதுக்கீட்டைப் பெற பார்ப்பனீயத்தின் அழுத்தம் எல்லா ஆட்சிகளிலும் இருந்து வந்தது.
அது, 2019இல், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன், தோல்வி பயத்தால், பார்ப்பன முன்னேறிய வகுப்பினரை மகிழ்ச்சிப்படுத்தி, ஆட்சியைத் தக்கவைக்கும் முகமாக, அவசர அவசரமாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும், தி.மு.க., சி.பி.ஐ. மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி, பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதில், காங்கிரஸ், சி.பி.ஐ(எம்), பாரதிய ஜனதா, அதி.மு.க. பகுஜன் சமாஜ் என அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்தது தற்செயலானது அல்ல. பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கு உட்பட்ட அவர்களின் அரசியலின் வெளிப்பாடுதான் அது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளின் நிழல்களுக்குள்ளும், பார்ப்பனிய நிஜங்களே மறைந்து கொண்டுள்ளன.
இந்நாட்டில் மூன்றே விழுக்காடு இருக்கும் பார்ப்பனர்கள், விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்பும், 7 பத்தாண்டுகள் இங்கு பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொள்கையளவிலாவது இருந்த பின்பும், இன்றளவும் 80% உயர் பொறுப்புகளை அமைச்சகத்திலும், அரசுத் துறையிலும், தனியார் துறையிலும், நீதிமன்றங்களிலும், ஊடகத் துறையிலும், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இருப்பினும், அவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என ஒரு பிரிவை உண்டாக்குகிறார்கள். அதில் கவனமாக பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வெளியேற்றுகிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால், அவர்கள் இடஒதுக்கீட்டுச் சலுகைக்குள் வரக்கூடாது என வாதிட்டவர்கள், தங்களுக்கு ரூ.8 லட்சம் வரை வருமான உச்ச வரம்பை நிர்ணயித்துக்கொள்கிறார்கள். “நலிந்த” என்ற பதத்தின் பொருளையே மாற்றத் துணிந்து, அவர்களுக்கிடையே அப்படியான ஒரு பிரிவு இல்லாமல் போனாலும் சலுகை கிடைப்பதை உறுதி செய்துகொள்கிறார்கள். அதுவரை அண்ணல் அம்பேத்கரைக் கூட தகுதி, திறமை பாதித்துவிடக்கூடாது என எண்ணவைத்த அவர்கள், தங்கள் தகுதி, திறமை குறித்தெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், தகுதி மதிப்பெண்களை, பழங்குடியின மக்களை விட கீழானதாக குறைத்துக் கொள்கிறார்கள்.
இவ்வளவு, தில்லுமுல்லுகள் செய்து தங்களைத் தக்கவைத்துக்கொள்ள, அல்லது விடுபட்டுவிடாமல், அவர்களில் அனைவரும் கல்வி, வேலைவாய்ப்புகளில் தங்கள் நிலையில் இருந்து சரிந்துவிடாமல் செய்யும் முனைப்புகளை ஒரு சிறு கூச்சமோ, சுயவிமர்சனமோ இல்லாமல், எல்லா நீதிமன்றங்களும், எல்லா நீதிமான்களும், அவர்களுடைய எல்லா எழுத்துகளும் சரியென்று தீர்ப்பு எழுதுகின்றன. பார்ப்பனர்கள் தங்கள் நலன்களைப் பின்னுக்குத் தள்ளி எந்த நீதியையும் வழங்கிவிடமாட்டார்கள் என நாம் அறுதியிட்டுக் கூறலாம்.
இந்தக் களநிலவரத்தை, பார்ப்பனியச் சூதை எப்படி எதிர்கொள்வது? உலகில் எல்லா ஒடுக்குமுறையாளர்களும் திருந்தி விடுகிறார்கள்.
திருந்துவதோடு மட்டுமல்லாமல், தங்கள் முன்னோர் இழைத்த வரலாற்று ஒடுக்குமுறையின் குற்ற உணர்வை அடுத்தடுத்த தலைமுறையினர் சுமக்கிறார்கள். அதற்கான பிராயச்சித்தம் தேடுகிறார்கள். அவர்களுக்கு அந்த குற்ற உணர்வை, ஒடுக்கபட்ட மக்கள் தங்கள் செயல்பாடுகளால் கொடுத்துள்ளார்கள். நாம் தான் இன்னமும் அவர்களுக்கு அந்த குற்ற உணர்வை ஏற்படுத்தாமல் அவர்களோடு சமரசமாகிப் போகிறோம்.
இந்த உளவியல் சமரசத்திலிருந்து வெளியேறி, வேகமாகவும், பரவலாகவும், உறுதியோடும் அதிகாரப் பீடங்களை நோக்கி இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான உழைக்கும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மதச் சிறுபான்மையின மக்கள் நகர வேண்டும். அமைச்சு, அரசு, நீதிமன்ற, ஊடகத் தூண்கள் நம்மால் வலிமை பெறும் நாளிலேயே இந்தக் கேடுகளை நம்மால் களைய முடியும்.
- சாரதா தேவி