தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர் ஆகியோரைக் கொண்ட ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் இயலாமைகளுக்கும் இழிவுகளுக்கும் காரணம் அவர்களுக்குக் காலங்காலமாகக் கல்வியும் அதிகார மும் மறுக்கப்பட்டதேயாகும் என்று, 1920ஆம் ஆண்டிலேயே மேதை அம்பேத்கர் திட்டவட்டமாகக் கூறினார். அதனால்தான் 1918இல் சவுத்பரோ குழுவிடம் அளித்த அறிக்கையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசி யலிலும், அரசு வேலைகளிலும் தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேகாலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் 1920இல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நீதிக்கட்சிப் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், இசுலாமியர், கிறித்துவர் மற்றும் ஆங்கிலோ இந்தியர், தாழ்த்தப்பட்டோர் என அய்ந்து பிரிவினருக்கும் அரசு வேலைகளில் உள்ள 100 விழுக்காடு மொத்த இடங் களைப் பகிர்ந்தளித்து - வகுப்புவாரி இடப்பங்கீடு ஆணையை 1921ஆம் ஆண்டு பிறப்பித்தது. பார்ப் பனர்களின் எதிர்ப்பு காரணமாக 1927 முதல்தான் இந்த ஆணை நடப்புக்கு வந்தது. அம்பேத்கரின் அரிய முயற்சியால் 1943இல் நடுவண் அரசு வேலைகளில் மட்டும் தாழ்த்தப்பட்டோர்க்கு 8.33 விழுக்காடு இட ஒதுக்கீடு பெறப்பட்டது. இது 1947இல் 12.5 விழுக் காடாக அவருடைய முயற்சியால் உயர்த்தப்பட்டது.
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, மேதை அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் எதிர் கால நலனைக் கருத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்க்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு உரிமையை அரசி யல் சட்டப் பிரிவு 16(4) மூலம் உறுதி செய்தார். 1950 சனவரி 26 அன்று இந்திய அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்தது. அதில் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யப்படாமல் இருந்தது. அதனால் சென்னை மாகாணத்தில் 1947 முதல் பிற்படுத்தப்பட்டோருக்கும் சேர்த்து, 6 வகுப்புகளுக்கு, கல்வியில் அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு செல்லாது என்று பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்தனர். உச்சநீதிமன்றம், கல்வியில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்படவில்லை என்பதால் சென்னை மாகாண அரசின் கல்வியில் இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்புக் கூறியது. பெரியாரின் பெரும் போராட் டத்தின் விளைவாக 1951 சூன் மாதம் கல்வியில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான பிரிவு 15(4) என்பது அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதற்கு அம்பேத்கரும் ஆதரவாகச் செயல்பட்டார்.
தோழர் வே. ஆனைமுத்து, மற்றும் பீகார் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் இராம் அவதேஷ் சிங் ஆகியோரின் இடைவிடாத முயற்சியாலும் போராட்டங்களாலும் நடுவண் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு இடஒதுக்கீடு அளிப் பதற்காக மண்டல் குழு அமைக்கப்பட்டது. மண்டல் குழுவின் பரிந்துரையின்படி, வி.பி. சிங் 1990இல் நடுவண் அரசில் வேலையல் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் ஆணையைப் பிறப்பித்தார்.
அது முதல் உச்சநீதிமன்றம் வாய்ப்பு அமையும் போதெல்லாம் இடஒதுக்கீட்டுக் கோட்பாட்டைக் குலைக் கும் வகையில் கருத்துகளைக் கூறிவருகிறது. 1992 நவம்பரில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ‘வளர்ந்த பிரிவினருக்கு’ (Creamy Layer) இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று அறிவித்தது. பட்டியல் வகுப்பினர்க்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கூறியது. மேலும் இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக் காட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கூறியது. உச்சநீதிமன்ற நீதிபதி B.P. ஜீவன் ரெட்டி “இடஒதுக்கீடு என்கிற கருத்தே தகுதி குறைவானவர்களைத் தேர்ந் தெடுத்தல் என்ற பொருளைக் கொண்டிருப்பதாகும்” (The very idea of reservation implies selection of less meritorious persons) என்கிற கேடான கருத் தைப் பதிவு செய்துள்ளார்.
ஜாட் சாதியைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டிய லில் நடுவண் அரசு சேர்த்தது செல்லாது என்று 17-3-2015 அன்று அளித்த தீர்ப்பிலும் சாதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமா? என்கிற வினாவை எழுப்பியுள்ளது.
மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2014 மக்களவைப் பொதுத் தேர்தல் பற்றிய அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக (4-3-2014) வடஇந்தியாவில் 9 மாநிலங்களில் உள்ள ஜாட் சாதியினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததற்கான ஆணையை வெளியிட்டது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விரிவாக ஆராய்ந்த மண்டல் குழு ஜாட் சாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம், ஜாட் சாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று நடுவண் அரசுக்கு அறிவுறுத்தியது. எனவே ஜாட் சாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ரோகின்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் ஜாட் சாதியைப் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்தது செல்லாது என்று தீர்ப்பு அளித்தனர். ஆதிக்க நிலையில் இருக்கும் ஜாட் சாதியைக் காங்கிரசுக் கட்சி, அரசியல் உள் நோக்கத்துடன் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது செல்லாது என்கிற தீர்ப்பு சரியானது தான். மோடி தலைமையிலான அரசும் ஜாட் சாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது சரியே என்றுதான் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.
இத்தீர்ப்பின் 53ஆவது பத்தியில், “ஒரு சமூகத் தின் பிற்படுத்தப்பட்ட நிலையை எளிதாகத் தீர்மானிக்க சாதி என்பது வெளிப்படையான தனித்தன்மையான காரணியாக இருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு பிற்படுத்தப்பட்ட தன்மையை நிர்ணயிக்க, சாதியை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், தொடர்ந்து ஆய்வு செய்து, இடஒதுக்கீடு மிகவும் தேவைப்படும் சமூகங்களை அடையாளம் காணவேண்டும். இதற்காக, சாதிக்கும் அப்பாற்பட்ட கூறுகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் கூறி யுள்ளனர். உச்சநீதிமன்றம் முதன்முதலாக என்.எம். தாமஸ் வழக்கில் 1975 செப்டம்பரில் அளித்த தீர்ப்பில், “இடஒதுக்கீடு என்பது சமூக சமத்துவத்தை உண் டாக்குவதற்காக என்று இருப்பினும், அதையும் தாண்டிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்” என்று கூறி இந்த விவாதத்தைத் தொடக்கி வைத்தது.
நீதிபதிகளின் இக்கருத்து, நீண்டகாலமாக இடஒதுக்கீட்டிற்கான அளவுகோலாகப் ‘பொருளாதார நிலை’ இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற பார்ப்பன ஆதிக்கச் சக்திகளின் நிலைப் பாட்டுக்கு உரம்சேர்ப்பதாக உள்ளது. பொருளா தார அளவுகோலை அனுமதித்தால் பார்ப்பனர் உள்ளிட்ட 15 விழுக்காடாக உள்ள மேல்சாதியினர் ‘ஏழைகள்’ என்ற போர்வையில் 90 விழுக் காடு இடங்களைக் கைப்பற்றிக் கொள்வார்கள். இவர்கள் இப்போது அரசு உயர் பணிகளில் 75 விழுக்காட்டைக் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். எனவே சாதி தவிர்த்த வேறு எந்தவொரு அளவு கோலும் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய மூன்று பிரிவினரின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிப்ப தாகவே இருக்கும்.
“கடந்த காலத்தில் சாதியின் காரணமாக உரிமை கள் மறுக்கப்பட்ட சாதிகளுக்கு, ‘வரலாற்றுத் தவறு களுக்கு’ ஈடுகட்டும் வகையில் இடஒதுக்கீடு அளிக்கப் பட்டது உண்மைதான். ஆனால் இப்போது சுதந்தர இந்தியாவில் முன்போல் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற நிலை இல்லையே; எவரும் அவர் விரும்புகின்ற தொழிலைச் செய்ய உரிமை இருக் கிறதே! ஆகவே சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது தவறு” என்கிற நச்சுக்கருத்தை பார்ப்பன-பனியா ஆதிக்கச் சாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றன.
ஆனால் இந்திய சமூக வாழ்வில் சாதியே இன்னும் அச்சாணியாக உள்ளது. சாதியப் பாகுபாடு மனப்பான்மையும் அகமண முறையும் அப்படியே நீடிக்கின்றன. வரலாற்றில் ஒடுக்கப்பட்ட சாதிகள் இன்று எல்லா நிலைகளிலும் பின்தங்கிய நிலையிலேயே இருக் கின்றன. எனவே சாதி அமைப்பு நீடிக்கின்ற வரையில், சாதி அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்கிற கோட்பாடும் நீடிக்க வேண்டும்.