பொருளியல் ஆய்வாளர் ஜெயரஞ்சன் விளக்கம் (2)
வேறு மாநிலங்களில் இல்லாத தமிழகத்தின் கட்டமைப்பு வளர்ச்சிகள்
திராவிட விழுதுகள் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழகப் பொருளாதாரம் கடந்த 50 ஆண்டுகளில் வளர்த்தெடுக்கப்பட்ட வரலாறுகள் குறித்து பொருளியல் ஆய்வாளர் ஜெயரஞ்சன் ஆற்றிய உரையின் தொடர்ச்சி:
அடுத்ததாக மீதமுள்ள 40 விழுக்காடு மக்கள் கிராமப்புரங்களில் வசித்து வருகின்றனர். அவர்களிலும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழக்கூடிய மக்களின் எண்ணிக்கை தினம்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.
கிராமப்புறத்தில் இருப்பவர்கள் ஏன் விவசாயத்தை நம்பி இல்லையென்றால் விவசாயமும் பார்ப்பார்கள் அடுத்து வேறு ஒரு தொழிலும் ஈடுபட்டு வாழக் கூடியவர்களாக இருப்பார்கள். விவசாயத்தை மட்டுமே கிராமப்புறங்களில் நம்பி இல்லை. சென்ற வருடத்தில் ஒரு கணக்கெடுப்பு எடுத்திருக்கிறார்கள்.
அதன்படி கிராமப்புறங்களில் வசிக்கக் கூடியவர்களின் வருமானம் 100 ரூபாய் என்றால் அதில் 30 ரூபாய் தான் வேளாண் துறையிலிருந்து வருகிறது. மீதமுள்ள 70 ரூபாயில் வேறு தொழில்களில் அல்லது வேலைகளில் இருந்து வருகிறது.
கிராமப்புறத்திலேயே இப்படியான வருமானம் தான் வருகிறது. நான் முன்கூட்டியே கூறியதை போல் அதிகமான மக்கள் கிராமப் புறங்களில் இருந்து நகர்புறத்திற்கு வந்துவிட்டார்கள். மற்றொரு புறம் கிராமத்திலிருப்பவர்கள் கிராமங் களையே நகரங்களாக்கி கொண்டிருக்கிறார்கள்.
கிராமங்கள் நகரங்களாகிக் கொண்டிருக்கிற தென்றால் வெறும் கட்டிடங்களால் அல்ல. வாழ்க்கை முறையினால். அதனால் தான் தமிழ் நாட்டில் பயிர் பொய்த்துப் போய்விட்டதென்றால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆயிரக்கணக் கானவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக சொற்பமான அளவில் தான் நடைபெறும். அதற்கான காரணமும் மிக மிக அதிகமாக கடன்பட்டவர்கள் தான் அப்படி தற்கொலை செய்து கொள்வார்கள் தமிழகத்தில். இதற்கான காரணம் என்ன? அது இரண்டாவது பகுதியில் சொல்கிறேன்.
அடுத்ததாக சேவைத் துறை (Service Sector). கணக்கெடுப்புத் துறையில் ஆரம்பத்தில் வேளாண் துறை பெரியதாக இருந்தது அடுத்து தொழில் துறை வருகிறது அடுத்து தான் சேவைத் துறை வருகிறது. உலகளவில் பெரும்பாலான மக்கள் சமுதாயம் வேளாண் சமுதாயமாக இருந்து அதற்குப் பின் தொழில் சமுதாயமாக மாறி 300 வருடங்கள் கடந்து அதற்குப் பின் தான் சேவைத் துறைக்கு வந்தார்கள்.
இந்தியா போன்ற மூன்றாம் தர நாடுகள் என்ன செய்துவிட்டார் களென்றால் தொழில் துறையில் போதுமான வளர்ச்சியடையாமல் 50 வருட காலங்களிலேயே நேரடியாக சேவை துறைக்குள் நுழைந்து விட்டார்கள். சேவைத்துறைக்கு சென்றது தவறில்லை ஆனால் சேவை தான் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பு செலுத்துகிறது. சாதாரணமாக ஒரு தரவைப் பார்ப்போம்.
ஒரு மாநிலத்தில் வேளாண் துறையின் பங்களிப்பு என்ன ? நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே போகிறது. சுருங்குகிறதென்றால் உற்பத்தியில் இல்லை. உற்பத்தி குறைந்தால் நமக்கு உணவில்லாமல் போய்விடும். உற்பத்தி குறையவில்லை. மாறாக மற்ற தொழில் துறையின் வளர்ச்சி அதிகமாகியுள்ளது. அதனால் வேளாண் துறை சுருங்கியுள்ளது.
சின்னக்கோடு ஆகிவிட்டது பக்கத்தில் பெரிய கோடு வந்ததால். எது பெரிய கோடு என்றால் 'சேவைத் துறை' பெரிய கோடாக உள்ளது. சேவைத் துறை புதிய புதிய வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது. அந்த வாய்ப்புகளைப் பிடித்து முன்னேறிச் செல்லும் திறன் நம்மிடம் இருந்ததால் அதனுடைய பலனை நாம் அனுபவிக்க முடிந்தது.
இது சேவைத் துறையால். ஒட்டுமொத்த பொருளாதாரம் என்று பார்த்தால் முதலில், இந்திய பொருளாதாரத்தில் தமிழகம் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம், இரண்டாவது பரந்துபட்ட வளர்ச்சியடைந் திருப்பது, மூன்றாவது வேளாண் துறையைச் சார்ந்திருப்பவர்கள் மிகக் குறைவான ஆட்கள்.
நான்காவதாக சேவைத்துறை மிக முக்கியமான துறையாக வளர்ந்துகொண்டுள்ளது. இவை யெல்லாம் முக்கியமான கூறுகள். அய்ந்தாவது ஒரு மாநிலத்தில் நகரங்கள் என்று பார்த்தால் ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கும். மற்றவை களெல்லாம் கிராமங்களாக இருக்கும். தமிழகத்தில் பார்த்தால் பெரு நகரங்களே 5 நகரங்கள் இருக்கும். அடுத்து நடுத்தரமான நகரங்கள் 50 இருக்கும். சிறு நகரங்கள் 300 இருக்கும்.
அதன்பின் தான் கிராமம். இதனால் வளர்ச்சி எப்படிப் பரவலாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டோமானால், கல்கத்தாவிற்குத் தான் போக வேண்டும். நகரம் என்றாலே கல்கத்தா தான். மகராஷ்டிராவில் மும்பை அல்லது பூனா.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 40 கிலோமீட்டருக்கு ஒரு நகரம் இருக்கும். வாழ்வாதாரத்திற்கான வழிகள் இருக்கும். இந்தியாவிலேயே மிக அதிகமாக நகரமயமாகக்கூடிய நகரமென்றால் அது திருப்பூர் தான் மிக வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்களும் தமிழகத்தில் அதிகம்.
இதை வளர்ச்சி பரவலாகச் சென்றடைந்தற்குக் காரணம் முன்னமே கூறியதை போல 30 ரூபாய் பணம் வேளாண் துறையில் என்றால் மீதமுள்ள 70 ரூபாய் பணம் இது போன்ற நகரங் களுக்கு வேலைக்குச் சென்று திரும்புவது மூலமாகத் தான்.
அனைவரும் நகரங்களுக்கு குடிபெயர்ந்து வருவது இல்லை. அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்று திரும்புவதன் மூலம் அவர்கள் வருமானத்தை ஈட்டு கிறார்கள். அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? நூறு வகையான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.
அவை என்ன என்ன வேலைகள் என்று இதுவரை எந்த அரசாங்கத்திடமும் கணக்குகள் இல்லை. சாதாரணமாக கைப்பேசி பழுதுபார்க்கும் கடைகளை எடுத்துக் கொண்டோம் என்றால், ஒரு நகரத்தில் குறைந்தது 10 கடைகள் இருக்கும். அந்த கடைகளில் குறைந்தது 20 நபர்களுக்கு மேல் வேலை செய்வார்கள்.
அது போல நூற்றுக் கணக்கான தொழில்கள் தமிழகத்தில் உள்ளன. இவையனைத்தும் எப்படி சாத்தியமானது என்றால் நகர்மயமாதல் மற்றொரு புறம் இதுபோல சிறு நகரங்கள் வளர்ச்சியடைவது. இந்த சிறு நகரங்களால் ஒரு பொருளாதார முறையும் உருவாகிறது.
இந்த பொருளாதாரம் சுழற்சியில் வெளிப்பட்டு அதுவே பூர்த்தியடைந்து (Cater) மாற்றமடைந்துள்ளது. அதன் விளைவாக தமிழ்நாட்டில் தற்போது என்ன விளைவு ஏற்பட்டுள்ளது என்றால், தமிழ்நாட்டின் நகர்ப்புற முறை (Urban Pattern) இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
இந்த நகர்ப்புறத்தை எது நிலைநிறுத்துகிறதென்றால், நாம் மிகவும் கவனத்துடன் உருவாக்கிய போக்குவரத்து. இந்த போக்குவரத்தை 1968 இல் தேசியமயமாக்கியதும் ஒரு காரணம் தான். போக்குவரத்தை தேசியமயமாக்கி யதால், அனைத்து கிராமங்களும் நகரத்துடன் இணைக்கப்பட்டன. இவை 100ரூ என்பது கிடையாது.
95 அல்லது 96 விழுக்காடு இருக்கும். இதை நீங்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்திய ஒன்றியத்தினுள்தானே நாம் இருக்கிறோம்.
அய்ரோப்பாவுடன் ஒப்பிட்டுவிட்டு அதுபோல இல்லையே என்று கேட்டால் அது தவறானது. இந்திய ஒன்றியத்திற்குள் உள்ள மற்ற மாநிலங்களைஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி என்னவென்று புரியும்.
குஜராத் தான் இந்தியாவின் மாடல் என்று கூறி தற்போது ஒருவர் பிரதமராகியுள்ளார் ! இரவு நேரத்தில் கோயம்புத்தூர் பேருந்து நிலையம் சென்று நீங்கள் எந்த மாவட்டத் தலைநகரத்திற்கும் பயணம் செய்யலாம். சென்னையிலிருந்து, நாகர்கோவில் வரை கூட நீங்கள் சென்றுவிடலாம். இரவு பயணம் செய்து காலை விடியும் முன் நீங்கள் சென்றுவிடலாம்.
அதற்குண்டான போக்குவரத்து வசதி தமிழ்நாட்டில் உள்ளது. எப்படி இரவில் உள்ளதோ அதே அளவில் பகலிலும் உள்ளது. ஆனால் இது போன்ற வசதி குஜராத்தில் இல்லை. அகமதாபாத்தில் இருந்து ‘வதோதரா' செல்ல இரண்டே இரண்டு பேருந்துகள் தான் இரவு நேரங்களில் இருக்கும்.
அது தான் அங்கே இருக்கக் கூடிய பொதுப் போக்குவரத்தின் நிலை. பேருந்துகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருப்பது போன்ற ‘சாலை போக்குவரத்து' இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. நான் தற்போது பேசுவது ஒரு கட்சியின் மேடைப் பேச்சு அல்ல. நான் கூறிய அனைத்து தகவல்களுக்கும் ஆதாரங்கள் உள்ளன. அனைத்துக்குமான புள்ளிவிவரங்களும் உள்ளன.
தற்போது ஒன்றிய அரசு ஒரு திட்டத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அது என்ன திட்டம் தெரியுமா? ‘மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின்சாரம் கொடுக்கும் திட்டம்'. எப்போது 2020 இல் அறிவித்திருக்கிறது. தமிழ் நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமம் என்று எப்போது மாற்றினோம்? 1974 இல் தமிழ்நாடு முழுவதும் மின்சாரமில்லாத கிராமங்களே இல்லை என்ற திட்டத்தை செயல்படுத்தினோம்.
நாம் எவ்வளவு உயரத்தை அடைந்துள்ளோம் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். எனவே, 50 வருடங்களாக தமிழகம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்று கூறுபவர்களை என்ன செய்ய வேண்டும்? அவர்களிடம் இந்த புள்ளிவிவரங்களைக் காட்டி கேள்விகளை நாம் கேட்க வேண்டும்.
நான் இதுவரை கூறியது கட்டமைப்புகள் பற்றி. அடுத்ததாக 'சமூகம்' சார்ந்தும் தமிழ்நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. அதில் நான் மிக மிக முக்கியமாக பார்க்கக்கூடியது 'இட ஒதுக்கீடு'. ஏனென்றால் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவில் தமிழகத்தில் தான் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இட ஒதுக்கீடு வருவதற்கே முன்மாதிரியாக இருப்பதும் தமிழகம் தான். இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்ததும் தமிழ்நாடுதான்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தி லும் இல்லை. அதிகமான மருத்துவக் கல்லூரிகளை அமைத்து அதிகமான மருத்துவர்களை உருவாக்கி யுள்ளது தமிழ்நாடு. எனவே, கொரோனா போன்ற பெருந்தொற்று ஏற்படும் போது அதை சமாளிக்கும் அளவிற்கான கட்டமைப்புகள் தமிழ்நாட்டை விட வேறு எந்த மாநிலத்திற்கும் கிடையாது.
மற்றொன்று 'பொது சுகாதாரம்', பொது சுகாதாரத்தை தமிழ்நாடு இன்றளவும் கட்டுப்பாடாகவும் கவனமாகவும் இயக்கி வருகிறது. மற்ற மாநிலங்களில், காப்பீடு (Insurance)களை கொடுத்து பொது சுகாதாரத்தை ஒன்றுமில்லாதவையாக மாற்றிவிட்டார்கள். காப்பீடுகளை கொடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி செய்து விட்டார்கள்.
தமிழ்நாட்டில் எந்த அரசு மருத்துவமனைக்குச் சென்றாலும் பெரும்பாலான வியாதிகளுக்குத் தேவையான மருந்துகளை இலவசமாக வாங்க முடியும். வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று கிடையாது. தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் முன்னுதாரணத்தை இதுவரை எந்த மாநிலத்தாலும் பின்பற்ற முடியவில்லை. அரசு மருத்துவமனைக்குச் சென்று ‘சிறுநீரகம்' வேலை செய்யவில்லையென்றால் அதற்குத் தேவையான மருந்துகளை வழங்குவார்கள்.
மருத்துவர் உங்களை சோதனை செய்த பின் உங்களுக்கான மருந்துகளை பரிந்துரைப்பார். அந்த மருந்துகளை நீங்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் சென்று வாங்கி வரலாம். இது போன்ற ஒரு அமைப்பு இந்தியாவில் எங்கும் கிடையாது. ஆனால் சிலர் கேவலமாக, ‘மருத்துவர்கள் இல்லை, சரியாக கவனிப்பதில்லை' என்று அரசு மருத்துவ மனைகளை விமர்சனம் செய்கிறார்கள். உலகமே இந்த 'மாதிரியை'ப் (Model) பார்த்து பாராட்டி பேசிக் கொண்டுள்ளது. உலகமே வியந்து பாராட்டுகிறது என்று சோ ராமசாமி எழுதுவாரா ? எழுதினாரா?
(தொடரும்)
- ஜெயரஞ்சன்