தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நிதி நிலை அறிக்கை தயாரிப்புக்கு முன்னோட்டமாக துறை ரீதியான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் பொறுப்பேற்புகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. பட்டியல் இனப் பிரிவு மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத பணியிடங்களை நிரப்புவதற்கும் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலினப் பிரிவினரிடம் வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ள முதல்வர் முனைப்பு காட்டியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சுமார் 5 இலட்சம் கோடி கடன் சுமையால் நிர்வாகத்தை சீரழித்துள்ள கடந்த கால அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, 35 சதவீத பணியிடங்களை ஊதியம் தர இயலாமையால் நிரப்பப்படாமலேயே விட்டுச் சென்றிருக்கிறது. தமிழக நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இதைத் தெரிவித்திருக்கிறார். நிதிநிலை அறிக்கைக்கு முன்பு தமிழக அரசின் நிதி நிலை குறித்து நிதியமைச்சர் தாக்கல் செய்யவிருக்கும் வெள்ளை அறிக்கை தமிழக அரசின் மோசமான நிதி நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் என்று நம்பலாம்.
தமிழக அரசின் எதிர்கால இலக்குகளை தெளிவாக வரையறுத்த தமிழக முதல்வர், தமிழக அரசுக்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதார நிபுணர்களைக் கொண்ட அய்வர் குழுவினரிடம் காணொளி வழியாக நிகழ்த்திய உரை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆய்வாளர் ஜீன்டிரீஸ், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுடன் இணைந்து எழுதிய நூலில், தமிழ்நாட்டின் வலிமையான கட்டமைப்புக்குக் கூறப்பட்ட காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.
1920களில் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் உருவாக்கிய தாக்கம், பட்டியலினப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கிடைத்த அதிகாரம், மனித வளம், ஆக்கப்பூர்வமான பெண்ணுரிமை இயக்க செயல்பாடுகள் தமிழகத்துக்கு வலிமையான கட்டமைப்புகளை வழங்கியிருப்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துக் காட்டி, ‘திராவிடன் மாடல்’ என்ற சொற்றொடரையும் வழங்கியிருக்கிறார்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொழில் வளர்ச்சி, தொழில் முதலீடு, தனி நபர் வருவாயை குறியீடுகளாக அடையாளம் காணப்பட்டு வந்தது. அது உண்மையான வளர்ச்சியின் குறியீடு அல்ல. அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை என்பதே சரியான அளவுகோல் என்ற கருத்தை, ஏற்கனவே தமிழக வளர்ச்சிக்கான பொருளாதார ஆய்வுக் குழுக் கூட்டத்தில் பேசும்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுட்டிக் காட்டியதையும், இணைத்துப் பார்க்க வேண்டும்.
1936இல் நிறுவப்பட்ட ‘டாட்டா சமூக விஞ்ஞான நிறுவனம்’ தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மண்டல் அறிக்கை உருவாக்கத்திலும் சமூக விஞ்ஞானம் குறித்த ஆய்வுகள் மற்றும் தரவுகளை வழங்கிய பெருமை இந்த நிறுவனத்துக்கு உண்டு. இந்தியாவில் சமூகம் குறித்த ஆய்வுகள் - மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று அண்மையில் இந்த நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவில் சமூகம் ஜாதிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்கிறது. சமூகக் குழுக்களின் சமூக நிலை பொருளாதாரம், அரசியல், அவர்கள் வாழும் பகுதிகளைச் சார்ந்து தீர்மனிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு குழுவையும், வாழும் இடம், அரசியல் சார்ந்து பகுப்பாய்வு செய்து, அந்தந்தக் குழுக் களுக்கான தனித்தனிப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அந்தக் கண்ணோட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்று டாட்டா சமூக விஞ்ஞான நிறுவனத்தின் இயக்குநர் எஸ். பரசுராமன் விரிவாக விளக்கியிருக்கிறார்.
தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, நகரமயமாதல் என்ற கோட்பாடுகளை அரசுகள் முன்வைத்து வளர்ச்சியைப் பேசுவதோடு, உற்பத்தி உறவுகளின் கட்டுப்பாடு அரசிடம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. உண்மை நிலவரம் என்னவென்றால் உலகின் 99 சதவீத சொத்துக்கள் ஒரு சதவீதப் பேரிடம் மட்டுமே குவிந்திருப்பதை அந்த ஆய்வாளர் சுட்டிக் காட்டுகிறார். விளிம்பு நிலை சமூகக் குழுக்களை அடையாளம் கண்டு, அவர்களை சமூக பொருளாதார, கல்வி நிலைகளில் அதிகாரப்படுத்துவதற்கான அரசின் முதலீடுகளும் திட்டங்களுமே பல்வேறு இனம், பண்பாடு, மொழிகளை உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கான பாதையாக இருக்கும் என்ற புரிதலுக்கு சமூக விஞ்ஞானிகள் பலரும் வந்து சேர்ந்துள்ளனர். (ஆதாரம் : பிரன்ட்லைன், ஜூன் 26, 2015)
இதையே திராவிடர் இயக்கங்கள் கல்வி வளர்ச்சி, இலவச கல்வித் திட்டங்கள், கிராமப்புற கல்வி, இடஒதுக்கீடு, பெண்கள் மறுவாழ்வு திட்டங்கள், உணவுப் பொருள்களுக்கான உத்தரவாதம், பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு, தன்னாட்சி, உள்ளாட்சி அதிகாரம் போன்ற திட்டங்களாக மக்களிடம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. இலவசங்களைத் தந்து மக்களை பிச்சைக்காரர்களாக்குகிறார்கள் என்றும், பசித்தவருக்கு மீன் தரக் கூடாது; மீன் பிடிக்கக் கற்றுத் தர வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் ஏளனம் பேசினார்கள். திராவிட இயக்கத்தின் விளிம்பு நிலை மக்களுக்கான முதலீடும் அதிகாரப்படுத்தலுமே தமிழகத்தை வளர்ச்சிப் பாதை நோக்கி திருப்பியிருப்பதை இப்போது சமூக ஆய்வாளர்கள் பொருளாதார நிபுணர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
பெருந் தொழில் நிறுவனங்களை வளர்த்தால் நாட்டின் பொருளாதாரம் செழித்து விடும் என்ற கொள்கை படுதோல்வியடைந்து நிற்பதை உலக மயமாக்கலின் தோல்வி உணர்த்தி நிற்கிறது. எனவே ‘திராவிட மாடல்’ என்ற விளிம்பு நிலை மக்களுக்கான சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சர்வதேச பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்க முன் வந்துள்ள தமிழ்நாட்டு முதல்வர் உலகத்தின் கவனத்தையே ஈர்க்கத் தொடங்கியுள்ளார்.
- விடுதலை இராசேந்திரன்