‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (நவம்பர் 2, 2020), குஷ்பு, வி.சி.க. தலைவர் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று போராடுவது குறித்து மனு சாஸ்திரத்தை முன் வைத்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அருண் ராம் என்பவர் எழுதியுள்ளார்.
இப் பிரச்சினைக்குப் பிறகு மனு சாஸ்திரம் ஆங்கில மொழி பெயர்ப்பை (வெண்டிடோனிகர் மற்றும் பிரியன் கே ஸ்மித் இணைந்து மொழி பெயர்த்து, பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட நூல்) முழுமையாகப் படித்ததாக குறிப்பிட்டுள்ள அவர், 9ஆவது அத்தியாயத்தில் பெண்களை இழிபடுத்தும் ‘ஸ்மிருதிகள்’ இடம் பெற் றிருப்பதை பட்டியலிட்டுள்ளார்.
தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. முன்னோடிகள் மனுஸ்மிருதியைப் பாராட்டியுள்ளதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். இது பற்றி கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகளின் சுருக்கமான தமிழ் வடிவம்:
• பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் முருகன் மனு ஸ்மிருதி பற்றி குறிப்பிடும்போது அது குழப்பமானது (Illusion) என்று கூறுகிறார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த வரும், ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ (Bunch of Thoughts) என்ற சித்தாந்த நூலை உருவாக்கித் தந்தவருமான எம்.எஸ். கோல்வாக்கர் அப்படி கூறவில்லை. “மனித சமூகத்துக்கு அறிவுக் கூர்மையான சட்டத்தை முதன் முதலாக வகுத்துத் தந்தவர் மனு என்று பாராட்டுகிறார் (Manu, the first greatest and the widest law giver to mankind).
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் தத்துவவியலாளர் நீட்சே மனுவைப் பற்றி இவ்வாறு புகழ்கிறார்: “ஆரியர்களுக்கான சான்றாதாரம் மனுசாஸ்திரம் புரோகிதர்கள் வேதத்தின் அடிப்படையில் ஒழுக்கமுடன் நடந்து கொள்வதற்கான வழிகாட்டி. முன்னோர்கள் உருவாக்கிய ஜாதிய முறையின் சிறப்புகளைப் பேசுவது; மதம் பற்றிய என்னுடைய கருத்தாக்ககத்தை செழுமைப் படுத்தியதோடு முழு வடிவம் தந்ததும் மனு சாஸ்திரம் தான்” என்று கூறுகிறார் நீட்சே. ஆரிய இனப் பெருமை பேசிய ஜெர்மன் தத்துவவியலாளர் இனவெறி பேசிய நாஜிக்களால் கொண்டாடப்பட்டவர்.
‘இந்துத்துவா’ என்ற அரசியல் கருத்தை உருவாக்கிய சாவர்க்கர் மனுஸ்மிருதி பற்றி இவ்வாறு கூறுகிறார்:
“வேதத்துக்குப் பிறகு மிகவும் வணங்கப்படக் கூடிய நூல் மனுஸ்மிருதி தேசத்தை ஆன்மிகம் மற்றும் புனிதப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு அடிப்படையாக இருப்பது மனுஸ்மிருதி.” (Manusmirithi, the scripture that is most worshippable after the Vedas... the basis of its spiritual and devine march of the nation) - இது சாவர்க்கர் கருத்து.
‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இணையத்தில் மனுஸ்மிருதி பற்றிய தொடர் கட்டுரைகளை 2017ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ். முன்னணி அமைப்பான ‘சன்ஸ்கார் பாரதி’ (sanskar bharathi) அமைப்பின் தலைவரான சஞ்சீவ் ஷப்லோக் (sanjeev sabhlok) என்பவர் ஒரு கருத்தை பதிவு செய்தார்.
மனுஸ்மிருதியில் திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். இறங்கியுள்ளது. இந்து சாஸ்திரங்களை எதிர்த்துப் பேசுகிறவர்கள் மனுஸ்மிருதியில் இடம் பெற்றுள்ள தீண்டப்படாத தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான பகுதிகளை எடுத்துக் காட்டுவதா? அவைகளை ஆர்.எஸ்.எஸ். திருத்தி மாற்றியமைக்க இருக்கிறது” என்று பதிவு செய்துள்ளார்.
மனுஸ்மிருதி குழப்பமானது மாயை என்று பா.ஜ.க. தலைவர் முருகன் கூறுகிறாரே; அந்தக் குழப்பதில் எப்படித் திருத்தங்களை செய்யப் போகிறார்கள்? சாவர்க்கர், வழிபடக்கூடியது மனுஸ்மிருதி என்று கூறிய பிறகு, அதைத் திருத்தி அமைக்கும் உரிமையை ஆர்.எஸ்.எஸ்.சுக்கு யார் கொடுத்தார்கள்? இதற்கு ஆர்.எஸ்.எஸ். காப்பீட்டு உரிமை வாங்கி வைத்திருக்கிறதா?
மனுஸ்மிருதியை இந்த காலத்தில் நியாயப் படுத்தவே முடியாது என்பது பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நன்றாகவே தெரியும். இந்த நிலையில் மனுஸ்மிருதிக்கு ஆதரவாகப் பேசி குஷ்பு பா.ஜ.க.வுக்குள் நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறார் என்பதுதான் உண்மை.
இவ்வாறு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ எழுதியிருக்கிறது.
- விடுதலை இராசேந்திரன்