தமிழ்நாட்டில் திராவிட அணிதிரட்டலின் மதிப்பீடுகள் பெரும்பாலும் பொருளாதார வளர்ச்சியிலும் மக்கள் நலத்திட்ட உதவிகளின் விளைவுகளிலும் அவர்களின் சாதனையாக முன்னிறுத்தப்படுகிறது. நகரமயமாக்கத்தின் மய்யக்கரு வளர்ச்சியினாலும் மேம்பாட்டினாலும் ஏற்பட்ட நன்மைகள், அதிக மக்களை உள்ளடக்கிச் சென்றடைந்துள்ளதுதான் என்பது போதிய அளவில் கவனம் பெறவில்லை. தமிழ் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியின் பாதை இந்தியாவின் பெரும்பான் மையான பிற பகுதிகளில் இருந்து இரண்டு காரணங்களால் தனித்தது ஆகும். ஒன்று, வழிவழியாக சாதி அடிப்படையில் அதிகாரத்தில் இருப்பதைத் தகர்த்திடத் தொடர்ந்து முயற்சித்தது; அதன்மூலம் எளிய மக்கள் மேலுக்கு வர உதவியது; அவர்களை நகரமயமாக்கலின் முன்னோடிகளாக்கியது. இரண்டு, தமிழ்நாட்டின் நகர்மயமாக்கம் மிகவும் பரந்த அடிப்படையிலானது; மராட்டியத்திலோ, குசராத்திலோ உள்ளது போல் சில பெருமாநகரங்கள் என்பதற்கு மாறாக, தமிழ்நாட்டில் பல கூறுகளுடனான நகர்ப்புற மய்யங்கள் உருவாகியுள்ளன.
கடந்த 70 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் வரலாற்று நிலைமைகளைப் பயன்படுத்தி, பலமுனை உத்திகளின் வழியாக எளிய மக்களை நகரக உருமாற்றத்தின் காரணர் களாக்கின. பொருண்மையாகவும் சமூகத்திலும் அடிப்படை வசதிகளைச் செய்தளித்து நகரமயமாக்குதலை விரைவுப் படுத்தியும் மறுபகிர்வு நடவடிக்கையை -குறிப்பாகக் கல்வி யில் மேற்கொண்டதும் உற்பத்தியாளர் நெறிமுறைகளைப் பரவலாக்கியதும் இதில் அடங்கும். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் சராசரியாக 34 விழுக்காடாக இருப்பதுடன் ஒப்பிடுகையில் இது தமிழ்நாட்டில் 48.4 விழுக்காடாக இருப்பதற்கு மேற்சொன்ன நடவடிக்கைகள் ஒரு பகுதிக் காரணமாகும். 8 குடும்பங்களுள் 7 குடும்பங்கள் வேளாண்மை சாரா தொழில்களைச் சார்ந்துள்ளனர். மராட்டியம் அல்லது குசராத்தில் உள்ளதுபோல் சில பெருமாநகரங்களை மட்டுமே நம்பியிராமல் தமிழ்நாட்டு நகர மயமாக்கலின் தன்மை பன்முகப்படுத்தப்பட்ட நகர மய்யங்கள், சிறு நகரங்களுடனும் ஊரக-நகரக இணைப்பு வலையமைப்புகளைக் கொண்டுள்ளன. நகரமயமாக்கம் எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு இது இன்றியமையாதக் கூறாகும்.
வரலாற்று தகவுநிலை, திராவிடக் கொள்கை
பிரித்தானிய ஆட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநகர மான சென்னை, ஓரளவு தொழிற்சாலைகள் நிறைந்த தாகவும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருந்தது. பின்னால் கு. காமராசர் ஆட்சிக்காலத்தில் தொழிற் பேட்டைகளுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் பெரும் எண்ணிக்கையினர் கல்வி பெறுவதிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் தமிழ்நாடு குறிப்பிடத்தக்கப் பயனடைந்தது. 1967இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. தமிழ் நாட்டில் தொழிற்சாலைகளுக்கான அடித்தளத்தை மேலும் விரிவாக்கியது.
வேளாண்மைக்குப் பாசன வசதி ஏற்படுத்தல், மின்பொறி மூலம் நீர்ப்பாசனம் செய்வதை ஊக்குவித்தல் முதலான நடவடிக்கைகள் மூலம் வேளாண்மையை நவீனப்படுத்துதல் முடுக்கி விடப்பட்டது. வாய்க்கால் பாசனம், கிணற்றுப் பாசனம் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரலாற்று ரீதியாகக் கடைப்பிடித்து வந்த தனிச்சிறப்புடைய உத்தியில் பாசன முறை நவீனப்படுத்தப்பட்டது. வெவ்வேறு பயிர்களின் வகை மாதிரிகளை -தனிச்சிறப்புப் பயிர்களைப் புதிய பகுதிகளில் பயிரிட வழிகோலியது. அந்தந்தப் பகுதிப் பயிருடன் தொடர்புடைய பதனப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை அல்லது தொழில் முனைவு ஆகிய இவை ‘வேளாண் நகரங்கள்’ ஏற்படுவதைச் சாத்தியமாக்கியது.
பொருண்மை மற்றும் சமூகக் கட்டமைப்பை மேம் படுத்துவதில் திராவிடக் கட்சிகளின் கொள்கை முடிவுகள் இந்த மாற்றத்தை மேலும் எளிதாக்கியது. வணிகத்தில் மேலாதிக்கம் வகிக்கும் சமூகமான ‘வைசியர்’ இங்கு இல்லாமையால் முதலீடு ஜனநாயகப்படுத்தப்பட்டு, கீழ்நிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் தொழில்முனைவோர்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டு, உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வது ஏதுவாயிற்று.
இதனால், திறமையான கைவினைஞர்கள் கூட தொழிற் சாலைகள் நடத்துவதில் நுழைய முடிந்தது.
மானுடவியலாளர் யன்பிலிப்டேஸ்டவின் எடுத்துக் காட்டுவது போல தச்சுப் பணியாற்றுபவர்களும் இரும்புக் கொல்லர்களும் தங்களைத் தாங்களே பொறியாளர்களாக ஆக்கிக்கொண்டனர்; இவர்கள் போக்குவரத்து ஊர்திகளின் உடனடித் தேவைகளுக்குப் பல்வகைப்பட்ட செப்பனிடும் பணிமனைகளை அமைத்துக் கொண்டுள்ளனர். அவை, சரக்குந்துகளின் உடற்பகுதிக் கட்டும் தொழிலகங்களாக உருமாற்றம் அடைந்தன. மேலும் நடமாடும் துளையிடும் எந்திரம் மூலம் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் தொழிலாகவும் வளர்ச்சி பெற்றன. இத்தொழில்கள் நாமக்கல், சேலம் மாவட்டங்களின் தொழில்துறையின் தோற்றத்தை மாற்றியுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் சிறிய நகரங்கள் குறிப்பிட்டத் தொழிற்பேட்டைகளாக மாற்றமடைந்து தமிழ் நாட்டில் எப்படி நகரமயமாக்கம் நிகழ்ந்துள்ளது என்பதை விளக்குகிறது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை மிக உயர்ந்த விகிதத்தில் தொழில்முனைவோர்களாகக் கொண்டுள்ளது இம்மாநிலம்; இவர்களில் பலரும் சிறிய நகரங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
சிற்றூர்களின் மறுசீரமைப்பு என்ற காந்தியாரின் கூர் நோக்குக்கு மாறாக, சிற்றூர்கள் ஒடுக்குமுறையின் களமாக உள்ளன என்றும் நகரமயமாக்கம் அதிலிருந்து விடுவிக்கும் என்பதும் திராவிடக் கருத்தாடலாக இருந்தது. திராவிட ஒழுங்கமைவு இரு அரசியல் திட்டங்களாக வேலை செய்தது. ஒன்று, உற்பத்தியாளர் நெறிமுறைகளை விரிவாக்கி, நிலவும் படிநிலைப்படுத்தப்பட்ட சமூக அமைப்பைத் தகர்த்தல் மற்றும் தாங்கள் கருதிய புதிய சமூக உறவுகளை உருவாக்கல். இரண்டாவது, உள்கட்டமைப்புகளில் பொது மக்கள் முதலீடு கள் மூலமாக பல்வேறு வகைப்பட்ட செயல் பங்கேற்பாளர் களை மூலதனம் குவிக்கும் அரங்கிற்குள் நுழைய அனு மதித்தது ஆகும்.
போக்குவரத்துத் தொடர்புகள், மின்சாரம், மருத்துவம், கல்வி ஆகியவை எளிதில் பெறச்செய்தல் ஆகிய வசதிகளை மேம்படுத்தியது போன்றவை, ஒப்பீட்டளவில் வளர்ச்சி பெற்ற நிலையில் தமிழ்நாடு முழுவதும் விரவிப் பரவியுள்ளது. குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள் சில: 1961இல் 47 விழுக் காடாக இருந்த ஊரகச் சாலைகள் 1991இல் 80 விழுக்காடாக உயர்ந்துள்ளது; கொள்கைத் தலையீடு காரணமாக அகன்ற சாலைப் போக்குவரத்துக் கட்டமைவு, சிறு பேருந்து தொடர்புகள், ஊரக-நகரகப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளமை, ஊரகக் குடும்பங்களை வேளாண்மை சார்பற்ற வாழ்வா தாரத்தை விரிவடையச் செய்தது ஆகியன ஏற்பட்டன. அதேபோல் சிற்றூர்களுக்கு வெளியே வேலைகளுக்குச் செல்ல ஏதுவாக சிற்றூர்களையும் நகரங்களையும் இணைத் துள்ளதனால் சாதி இறுக்கத்தை ஓரளவுத் தளர்வடைய உதவியுள்ளது.
பிரித்தானிய ஆட்சிக்குப் பிந்திய இந்திய அரசு, வளர்ச்சி யைத் தூண்ட திட்டமிடல் எனும் செயலமைப்பைச் சார்ந் திருந்தது. அதனால் புதிய விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரசு ஆட்சி பிரித்தானிய மரபைப் பின்பற்றியும் மேல்தட்டில் உள்ளவர்களால் கட்டுப்படுத்தப் பட்ட அதிகார வர்க்க அமைப்பு முறையையும் நடைமுறை களையும் கொண்டிருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், மக்களின் தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்ப, முன்பு சிந்தித்திருந்த கொள்கைகள் அடிப்படையில் திட்டங் களைச் செயலாக்கத் தொடங்கியது. அடுத்த சில பத்தாண்டு களில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதிகளில் இருந்தும் ஊரகங்கள் மற்றும் சிறுநகரங்களில் இருந்தும் அதிகமா னோர் அரசுப் பணிகளில் அமர்த்தப்பட்டனர். இதனால், புறக்கணிப்புக்கு உள்ளாகியிருந்த மக்களின் தேவைகளுக் கும் விழைவுகளுக்கும் ஏற்ப நிர்வாகத்தின் துலங்குதன்மை அதிகரித்தது. மாநில நிதி மேலாண்மையின் பழமைச் சார்பு, மாநில அரசால் வழங்கப்படும் நல உதவிகளுக்கு ஏற்ற வகையில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.
இந்த நகரமயமாக்க மாற்றமானது திராவிட இலக்குக்கு ஏற்ப, கீழ்நிலையில் உள்ளவர்களை சாதியுடன் பிணைக் கப்பட்டத் தொழில்களில் இருந்து வெளியே நகர்த்தியது. அதேவேளையில் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ள இயலாமல் பின்தங்கியவர்களுக்கு ஓரளவு சமூகப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வலுவான பொது மக்கள் உணவுப் பொருள் வழங்கல் திட்டத்தை (P.D.S.) ஏற்படுத்தியதிலும் முறைசாராத் தொழிலாளர்களுக்கு ந ல வாரியங்கள் ஏற்படுத்தி, அவற்றின் வழியாகப் பாதுகாப்புகள் அளிப்பதிலும் தமிழ்நாடு உண்மையில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
முன்னோக்குப் பாதை
தாராளமயமாக்கல் -தனியார் மயமாக்கல் அளித்த சாதகமான சூழலை நன்கு பயன்படுத்தி துணி, தோல் போன்ற ஏற்கெனவே இருந்த உற்பத்தித் தொழில்கள் வேகமாக வளர்ச்சியடைந்தன. மேலும் சேவைத் தொழில் களான தகவல் தொழில்நுட்பம் போன்றவை முடுக்கிவிடப் பட்டன. இவை அனைத்தும் மேலும் நகர்மயமாதலுக்கு வழிகோலியது. கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சி ஒரு நன்மை; இடஒதுக்கீட்டினால் இடை நிலை, கீழ்நிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் உயர்கல்விப் பெற்றதும் பொதுநல்வாழ்வு கிடைத்ததும் பொருளியல் சமூக, புவிசார் அடிப்படையிலும் தாராளமயமாக்கலினால் அதிக மக்கள் பயனடைய வழியேற்படுத்தியது.
எனினும், பெரும்பாலும் முறைசாரா துறைகளினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையற்ற வேலைகளினால், இப்போது ஏழ்மை நகரமயமாகியுள்ளது. நகர்ப்புறங்களில் உருவாகியுள்ள கண்ணியமான வேலைகளை விட, மரபு சார்ந்த மற்றும் வேளாண் அடிப்படையிலான தொழில்களில் இருந்து உடைமைகளை இழந்துள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். இது நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் உடனடித் தேவை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. சாதிப் படிநிலையமைப்பு ஓரளவு வலுக்குன்றியுள்ள அதேவேளையில், தமிழ்நாட்டின் நகர்ப்புறம் உட்பட சாதிப் பாகுபாடு தொடர்கிறது. திராவிட மாதிரியின் வெற்றியை விளம்பரப்படுத்துகின்ற அதேபொழுதில், நகர்ப்புற ஏழையரை சென்னை மாநகரத்திலிருந்து வெளி யேற்ற அனுமதிப்பதால் தி.மு.க. ஆட்சி நியாயமான திறனாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
நகர்மயமாக்கல் விழுமிய செயல் என்று திராவிடத் தலைவர்கள் அதிகமாக வலியுறுத்துகின்ற அதேநேரத்தில், நகரமயமாக்கல் செயல்படுத்தப்படுகின்ற போது அவர்கள் தேவையான அளவு அதில் கவனம் செலுத்தவில்லை போலும். 74ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நடை முறைப்படுத்தும் போது கொள்கை முடிவெடுப்பதில் போதுமான மக்கள் பங்கேற்பு இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் மக்களை அதிகாரப்படுத்துவதற்கு மாறாக, அதிகார வர்க்கத்தையும் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளையும் சார்ந்திருப்பதை அதிகமாக்கி விட்டது. திராவிட நகர்மயமாக்கம் இப்போதுள்ள கட்டமைப்புச் சிக்கலுடன் போராட வேண்டி யுள்ளது. குறிப்பாக இயற்கை வளங்களுக்கு மட்டுமீறிய வாடகைக் கோரப்படுகிறது. ஒப்பீட்டளவில் தமிழ்நாடு வளர்ச்சியில் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆயினும் அதில் உள்ள குறைபாடுகள் சீராக்கப்பட வேண்டும்.
(The Hindu ஏட்டில் 8.10.2022 அன்று வெளியான கட்டுரை)
தமிழாக்கம் : சா. குப்பன்
(கட்டுரையாளர் ஆ.கலையரசன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தெற்காசிய நிறுவனத்தில் ஆய்வாளர். பிரீதி நாராயணன் கனடா, பிரிட்டிஷ், கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்)