கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

nirmala sitharaman budget2021-22ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கான புதிய கொள்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். புதிய கொள்கையில், பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து மத்திய அரசின் முதலீட்டை திரும்ப பெறுவதற்கான பாதை வகுக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார். குறிப்பிட்ட சில துறைகளை தவிர மற்ற அனைத்தும் தனியார் மயமாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

தனியார்மயமாக்கப்படும் துறைகளாக அறிவிக்கப்பட்டவை:

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் பொதுமுடக்கம் கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசு ஆத்மநிர்பார் பாரத் (தற்சார்பு பொருளாதாரம்)) திட்டம் குறித்த  விவரங்களை வெளியிட்டது.

அணு ஆற்றல், விண்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து, தொலைத் தொடர்புத்துறை ஆற்றல், நிலக்கரி, சுரங்கம், நிதி சேவைகள், வங்கிகள், காப்பீடு உள்ளிட்ட முக்கிய துறைகளை  தனியார் மயமாக்குவதற்கான கொள்கைகள் அதில் வெளியிடப்பட்டன.

தனியார் மயமாக்குவது மட்டுமின்றி மற்றொரு பக்கம், நன்கு இயங்கிக் கொண் டிருக்கிற பொதுத் துறை நிறுவனங்களுடன் நட்டத்தில் விழுந்த நிறுவனங்களை இணைப் பது, இழுத்து மூடுவது போன்ற அறிவிப்புகளும் இடம் பெற்றிருந்தன. மொத்தத்தில் பொதுத் துறை நிறுவனங்களை சுருக்குவதும், தனியார் துறையில் புதிய முதலீடு களுக்கு வித்திடுவதுமே இக்கொள்கை.

தனியார்மயமாக்கல் குறித்த விவாதங்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த நாளிலேயே பொதுத்துறை முதலீடுகளை திரும்பப் பெறு வதற்கான தீவிர உத்திகள் வகுக்கப்பட்டு விட்டன. மத்திய அரசு தொழில்துறையில் ஈடுபடாது என்று அப்போதே அவர்கள் அறிவித்தது, தனியார்மயத்துக்கான அவர்களின் பாதையை தெளிவாகக் காட்டியது.

குறிப்பாக முதல் 5 ஆண்டுகால ஆட்சியில் ஏர் இந்தியாவின் 76 விழுக்காடு பங்குகளை விற்பதாக மத்திய அரசு அறிவித்தது, சில பொதுத்துறை நிறு வனங்களை மற்ற நிறுவனங்களுடன் இணைத்தது போன்ற பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

50,000 கோடி ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சியை சந்தித்த ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க யாரும் முன்வராத நிலையில், இரண்டாவது முறை பாரதிய ஜனதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் 100 விழுக்காடு பங்குகளையும் விற்பனை செய்வதாக புதிய அறிவிப்பு வெளியிட்டது. ஒருகாலத்தில் லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஏர் இந்தியாவுடன், நட்டத்தில் வீழ்ந்த இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2007ஆம் ஆண்டில் இணைக்கப் பட்ட பின்புதான் இதன் சரிவு தொடங்கியது.

இப்போது பாரத் பெட்ரோலியம், இந்திய கப்பல் போக்குவரத்து கழகம், கன்டெயினர் கார்பரேசன் ஆஃப் இந்தியா, பவன் ஹன்ஸ் போன்ற நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால் பெருந்தொற்று காலத்தில் நிறுவனங்கள் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன.

ஆனால் தனியார்மயமாக்கத்தின் வழியாக, பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கான சூழல்களை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு சீராக ஏற்படுத்தி விட்டது என்பதை மறுக்க இயலாது.

தற்போது கையிருப்பில் உள்ள 439 பொதுத் துறை நிறுவனங்கள் மட்டும் அதன் துணை நிறுவனங்களில், 151 நிறுவனங்களை மூடுவது அல்லது விற்பது என மத்திய அரசின் புதிய தொழில் கொள்கையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இதற்கு முன்பு இல்லாத வகையில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் முதலீடுகளை திரும்பப் பெறும் உத்திகளும் வகுக்கப்பட்டுள்ளன. விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை கடந்த ஆண்டில் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன. 10 பொதுத் துறை வங்கிகளை இணைத்து வெறும் நான்காகக் குறைக்கப் போவதாக நடப்பாண்டுக்கான பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தனியார் மயமாக்க தனி அமைச்சகம் அமைத்த வாஜ்பாயி

பொதுத்துறை முதலீடுகளை முழு வீச்சில் விற்பதற்கான பணிகளை மோடி அரசு கையாண்டு வரும் நிலையில், இதன் தொடக்கப் புள்ளி வாஜ்பாயி தலைமையிலான பாஜக ஆட்சிக்காலத்திலேயே வைக்கப்பட்டுவிட்டது. 1999 முதல் 2004 வரையிலான வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் பொதுத்துறை முதலீடுகளை விற்பனை செய்வதற்காகவே அருண் ஜெட்லி தலைமையிலும், பின்னர் அருண் சோரி தலைமையிலும் தனி அமைச்சகம் இயங்கியது. பங்குகளை விற்பதற்கான உத்திகளை இந்த அமைச்சகம் வகுத்தது.

1999 முதல் 2004 வரையிலான அடல்பிகாரி வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் மாடர்ன் ஃபுட்ஸ், பால்கோ, ஹிந்துஸ்தான் ஜிங்க், வி.எஸ்.என்.எல் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப் பட்டன.

அப்போதே ஏர் இந்தியாவை விற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அரசியல் ரீதியான எதிர்ப்புகள் காரணமாக கைவிடப் பட்டது. 1990களிலேயே பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை சிறிய அளவில் பங்குச் சந்தையில் பட்டியலிடும் முறை தொடங்கிவிட்டது. பின்னர்  2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்திலும் இது தொடர்ந்தது.

மோடி ஆட்சியில் விற்பனைக்கு வரும் பொதுத் துறை நிறுவனங்கள்

ஏர் இந்தியா, பிபிசிஎல் உள்ளிட்ட சில நிறுவனங்களை முழுமையாக விற்பனை செய்து விடுவோம் என கடந்த ஆண்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு காப்பீட்டுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு விற்கப்போவதாகவும் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் கூறினார்.

பொதுத்துறை நிறுவனங்களில் பெரும் லாபமீட்டும் நிறுவனமாக உள்ள எல்.ஐ.சி-யை பங்குச்சந்தையில் பட்டியலிடவும் திட்டமிட் டுள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதேபோல எல்.ஐ.சி.-யின்  25 விழுக்காடு பங்குகளை விற்பதற்கான திட்டங்களும் கொரோனா காலத்திலேயே மத்திய அரசால் வகுக்கப்பட்டது.

2021-22ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையின்படி, ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை இந்த ஆண்டுக்குள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நடப்பு நிதியாண்டில் ரூ.2.10 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை பங்குகளை விற்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 20,000 கோடி ரூபாய் அதிகமாகும். இவற்றை செயல் படுத்தியே தீருவோம் என்ற குரல்களும் அரசுத் தரப்பில் இருந்து ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

நிதியமைச்சரின் பணியே பொதுத் துறை நிறுவனங்களை இழுத்து மூடுவதும், விற்பதும் என்பதாகவே கடந்த 2 ஆண்டுகால நிர்மலா சீதாராமனின் செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன. வணிகம் செய்வது அரசின் வேலையல்ல என்ற பிரதமர் மோடியின் பேச்சும் இதன் நீட்சியாகவே தெரிகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுமா அல்லது நீடிக்குமா?

அரசின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் இருப்பை தக்க வைக்க வேண்டுமென்றும், மற்ற நிறுவனங்களை தனியார்மயமாக்கலாம் அல்லது பிற நிறுவனங்களுடன் இணைக்கலாம் அல்லது இழுத்து மூடிவிடலாம் என மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

முக்கிய துறைகளின் செயலாளர்களும் நிதி ஆயோக்கின் பரிந்துரை களுக்கு முக்கியத்துவம் அளித்து, அடுத்தகட்ட பணிகளுக்காக அமைச்சரவை குழுவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த குழுவில் நிதியமைச்சர் மட்டுமின்றி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் சம்மந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் ஒப்புதலை தொடர்ந்து, நிதியமைச்ச கத்தின் கீழ் வருகிற முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையானது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிடம் முன்மொழிதலை வழங்குகிறது.

77 பொதுத்துறை நிறுவனங்களை மட்டும் அரசின் வசம் தொடரலாம் என நிதி ஆயோக் மத்திய அரசுக்கு பரிந்துரைகளை தயாரித் துள்ளது. குறிப்பாக வேளாண் சார்ந்த அதன் இணை துறைகளில் பொதுத்துறை நிறுவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும் தொடரலாம் என நிதிக் குழு பரிந்துரைக்கிறது.

விவசாயிகளுக்கு விதைகளை வழங்குவது, கொள்முதல் செய்வது மற்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு உணவுப் பொருட்களை வழங்குவது பொதுத்துறை நிறுவனங்களின் வசம் இருக்க வேண்டும் என்றும் அந்த பரிந்துரையில் உள்ளது.

ரயில்வே, அஞ்சலகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர்கள், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவை வழங்கும் துறைகளை அரசின் வசம் இருந்து விலக்கிக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.  நாட்டின் பாதுகாப்பு தொடர்பான  முக்கியமான தரவுகளை பராமரிப்பதை அரசே தொடர வேண்டும் என்பது நிதி ஆயோக்கின் பரிந்துரை.

ஆபத்தான காரணிகள் என்ன?

உலகப் பொருளாதாரத்தின் பாதிப்பு தனியார் மயமாக்கப்பட்ட நிறுவனங்களை நேரடியாகப் பாதிக்கும். பல சாத்தியமான முதலீட்டாளர்கள் கூட, அத்தகைய காலங்களில் வர்த்தக நடவடிக்கைகளை விரும்புவதில்லை. வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில பரிவர்த்தனைகளுக்கான வழக்குகளே இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

பொருளாதார மந்த நிலை நீடிக்கும் சூழலில், தனியார் மயமாக்கலை மேற்கொள்வது, இருக்கும் நிலையை மேற்கொண்டு ஆபத்தாக்கும் என பொருளாதார அறிஞர் பிரணாப் சென் எச்சரிக்கிறார். பெரும் சரிவு ஏற்படும்போது கார்பரேட் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, இருக்கும் திறன்களை விற்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

நன்றி- “தி இந்து” ஆங்கில நாளேடு

தமிழில் : ர.பிரகாஷ்