இரண்டு கோவிட் அலைகளால் இந்திய பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் பெரும் சேதத்தை சந்தித்தப் பிறகும் தொற்று தடுப்பு, பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் பாஜக அரசு பெரும் அலட்சியத்தையே காட்டி வருகிறது. இந்தியாவில் இதுவரை 4 விழுக்காட்டினருக்கு மட்டுமே ஒரு முறையேனும் கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. பெருவாரியானோருக்கு கோவிட் தடுப்பு மருந்துகளை செலுத்துவதன் மூலமே பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளமுடியும் என மத்திய அரசு தரப்பில் இருந்து கருத்து கூறப்பட்ட போதிலும், அதற்கான நடவடிக்கைகள் வேகமில்லாது வெகு நிதானமாகவே செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசே 75 விழுக்காடு தடுப்பு மருந்துகளை பெற்று மாநிலங்களுக்கு வழங்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் கோவிட் தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு காணப்படுகிறது.

modi and nirmala sitharaman 596பெருந்தொற்று காலத்தில் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மீதான வரியை நீக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமை. மருந்து பொருட்களின் மீதான சரக்கு சேவை வரியை முற்றிலுமாக நீக்கவேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்த போதும் பாஜக அரசு அவற்றின் மீதான சரக்கு சேவை வரிகளை முற்றிலுமாக நீக்கவில்லை. வைரஸ் தடுப்பு மருந்து ரெம்டெசிவிர், ஹெப்பரின், ஆக்ஸிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், கிருமி நீக்கிகள் மீது முன்னர் விதித்துள்ள 12 விழுக்காடு வரியை வெகு தாமதமாக ஜூன் மாதத்தில் தான் 5 விழுக்காடாக குறைத்துள்ளது. பாஜக அரசு ‘ஏழை பாழைகளான’ வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீது தான் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது. மாற்று முதலீட்டு நிதிகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீதான வரியைக் குறைப்பதற்கான வழிகளை மத்திய அரசு மதிப்பீடு செய்து வருகிறது!.

இந்தியத் தரமதிப்பீட்டு ஆய்வு நிறுவனமான இன்ட்-ரா இல்லங்களின் மீதான வரிச் சுமை, குறிப்பாக மறைமுகவரிச் சுமையானது உள்நாட்டு நுகர்வின் மீட்டெடுப்பை தாமதப்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. எரிபொருட்களின் மீதான வரி உயர்வு, அதிகரித்து வரும் மறைமுக வரிகள் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 2009-10 ஆம் ஆண்டில் இல்லங்களின் மீதான மொத்த வரிச்சுமையின் பங்கு 60 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. இதற்கு பெரும்பாலும் எரிபொருள் மீதான கூடுதல் கலால் வரி, கார்ப்பரேட் வரி குறைப்பு ஆகியவையே காரணமாக இருந்துள்ளது. இல்லங்களின் மீதான வரிச்சுமை அவற்றின் வரவு செலவுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது. வேலையிழப்பு, ஊதியக்குறைவு, தொற்று நோய் தடுப்பிற்கான கூடுதல் மருத்துவ செலவுகள் இல்லங்களை இரட்டைச் சுமையாக அழுத்துவதாகவும், உண்மையான ஊதிய வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவானது நுகர்வு, வேண்டலின் மேம்பாட்டையும் குறைக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் 2, 000 நிதி அல்லாத நிறுவனங்களில் ஊதிய வளர்ச்சியை பகுப்பாய்வு செய்ததில், 60 விழுக்காடு பெருநிறுவனங்கள் தங்களது பணியாளர் செலவினங்களை 2021ல் குறைத்துள்ளதாக கண்டறிந்துள்ளது.

2020-21 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நேர்முக வரி வருவாயின் பங்கு 4.79 விழுக்காடு குறைந்துள்ளது, மறைமுக வரி வருவாயின் பங்கு 5.48 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மாநிலங்களின் வரி பெறும் உரிமை, நிதி இறையாண்மையை பறித்து அவற்றைக் கடனில் தத்தளிக்கவிட்டுள்ள சரக்கு சேவை அறிமுகப்படுத்தப்பட்டு ஜூலை 1, 2021டன் 4 வருடங்கள் ஆகிவிட்டது. 2022 ஆம் ஆண்டு வரை ஐந்து வருடங்களுக்கு மாநிலங்களுக்கு 14 விழுக்காடு வரி வருவாய் உறுதியளிக்கப்படும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால் இழப்பீட்டுத்தொகையை வாக்குறுதியின் படி சரியாக வழங்கவில்லை. சரக்கு சேவை வரியின் மூலம் மாநிலங்களின் வரி வருவாயில் வளர்ச்சி ஏற்படாத போதும், இழப்பீட்டுத் தொகையை 2022க்கு மேல் நீட்டிக்க முடியாது எனக் கை விரித்துள்ளது பாஜக அரசு.

இந்தியாவின் பொருளாதார வெளியில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது என்றும், வெளிப்படைத்தன்மையுடனும், இணக்கத்துடனும் ஒட்டுமொத்த வசூலை கணிசமாக அதிகரித்துள்ள அதே வேளையில், சரக்கு சேவை வரி சாதாரண மனிதர்கள் மீதான வரிகளின் எண்ணிக்கையையும், ஒட்டுமொத்த வரிச்சுமையையும் குறைத்துள்ளதாக புகழ்பாடுகிறார் நரேந்திர மோடி. எப்பேர்ப்பட்ட பச்சைப் பொய் இது. ஜி. எஸ். டியால் எண்ணற்ற சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாநிலங்களின் இறையாண்மை முழுமையாக அழித்துள்ளது. பெட்ரோல், டீசல் ஆகிய பொருட்கள் இன்னும் சரக்கு சேவை வரிமுறைக்குள் கொண்டுவரப்படவில்லை, பாஜக அரசு பெட்ரோல், டீசலில் 2020-21இல் ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடியை கலால் வரியாக பெற்றுள்ளது. கூடுதல் வரிகளின் பங்கை அதிகரிப்பதன் மூலம் மாநிலங்களின் வரிவருவாய் பங்கைக் குறைத்து சதி செய்கிறது. கோவிட் மருந்துகளுக்குக் கூட வரி விலக்கம் அளிக்கவில்லை. சரக்கு சேவை வரிக்குள்ளே ஒரு சுரண்டல், சரக்கு சேவை வரிக்கு வெளியே ஒரு சுரண்டல் என இரண்டு வகையிலும் எளிய மக்களை வதைத்து வருகிறது பாஜக அரசு.

 ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பான முறையில் நிதி வருவாயை பெரிதும் மையப்படுத்தி மாநிலங்களை அதிகாரமற்ற கைப்பாவைகளாக்கும் ஒடுக்கும் முறை ஆயுதமாகத் தான் சரக்கு சேவை வரி முறை செயல்படுத்தப்படுகிறது. இந்திய ஒன்றியத்தில் பெயரளவிற்கேனும் கூறப்படும் கூட்டாட்சிக் கூட்டுறவு நடைமுறைக்கான குறுகிய வழியையும் சரக்கு சேவை வரி. முற்றிலும் அடைத்துவிட்டது.

கோவிட் தொற்றுநோய் வேலை சந்தையில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், நாட்டில் 40 விழுக்காடு ஊழியர்களின் ஊதியம் குறைந்துள்ளதாக கிராண்ட் தோர்ன்டன் கணக்கெடுப்பு காட்டுகிறது.

அமைப்புசார் துறை மட்டுமே 2020-21ல் 18 மில்லியன் வேலைகளை இழந்துள்ளது. சென்ற ஆண்டு கோவிட் தொற்று தாக்கம் ஆரம்பித்ததிலிருந்து இந்தியாவில் 97 விழுக்காடு குடும்பங்களின் வருவாய் சரிவடைந்துள்ளது. கரோனா இரண்டாவது அலையால் மே மாதத்தில் வேலையின்மை விகிதம் 12 விழுக்காடாக உயர்ந்துள்ளது, நாடு முழுவதும் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளனர் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலையால் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து மாநில அளவில் இந்தியாவெங்கும் பொது முடக்கம் நடமுறைபடுத்தப்பட்டதால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் வேண்டலால் தூண்டப்படவில்லை. வழங்கலில் உள்ள சிக்கல்களினாலே அதிகரித்துள்ளது. மொத்த பணவீக்கம் வரலாறு காணாத அளவிற்கு 12.94 விழுக்காடாக அதிகரித்துள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வே இதற்கு முக்கியக் காரணம்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். உற்பத்தி அளவின் மீதான கட்டுப்பாட்டை நீக்குமாறு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியினால் தான் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது என்ற உண்மையை மறைக்கவே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஏனெனில் கோவிட் தொற்று தாக்கம் ஏற்படுவதற்கு முன்பும் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 63. 66 டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை நெருங்கக்கூடும் என்று முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார். அரசால் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களாலும், மேலும் பல துறைகளை வெளிநாட்டு முதலீட்டிற்காக திறப்பதாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை நெருங்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

"பெரும்பாலான நாடுகள் வேண்டலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தின (ஆனால்) நாங்கள் விநியோக பக்கத்திலும் கவனம் செலுத்தினோம்... கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் புதிய துறைகள் திறக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை, பிபிஓ துறை (BPO-Business Process Outsourcing), புவியியல் துறை ஆகியவற்றில் நாங்கள் பெரிய சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம், மேலும் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக நாங்கள் இருக்க விரும்புவதால் பல துறைகளையும் திறக்க முடியும்,” என்கிறார்.

ஆனால் இவ்வளவு பெருமிதம் கொள்ளும் விதத்திலா இந்தியாவின் பொருளாதார நிலை உள்ளது?. மற்ற நாடுகள் வேண்டலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டன. பாஜக அரசு அதைத் தட்டிக் கழித்துவிட்டது. வழங்கலிலும் கவனம் செலுத்தியிருப்பதாகக் சஞ்சீவ் சன்யால் குறிப்பிடுகிறார். பிறகு எவ்வாறு பணவீக்கம் கட்டுப்படுத்த முடியா வண்ணம் அதிகரித்துள்ளது நிச்சயமாக வேண்டலின் அதிகரிப்பால் பணவீக்கம் அதிகரிக்கவில்லை. வழங்கல் சரியாக ஒழுங்குபடுத்தப்படாதால் தான் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

உலக அளவில் 2019-ம் ஆண்டைக் காட்டிலும் 2020-ல் நேரடி அந்நிய முதலீடுகள் 35 சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரம் இந்தியாவில் 2020-ம் ஆண்டில் நேரடி அந்நிய முதலீடு 2019-ம்ஆண்டைக் காட்டிலும் 27 சதவீதம்அதிகரித்துள்ளது. ஆனால் அந்நிய முதலீடுகள் பெருமளவில் நிதி, எரிஆற்றல் துறையிலே செய்யப்படுகின்றன. உற்பத்தி சார்ந்த துறைகளில் செய்யப்படுவதில்லை எனும் போது அந்நிய முதலீடுகளால் பொருளாதாரம் தானாகவே வளர்ச்சி பெறும் என்பது வெறும் பகல் கனவே.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் பங்கை 40 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என நிதின் கட்கரி வலியுறுத்துகிறார். ஆனால் கோவிட் பொருளாதார முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறு குறு மத்திய நிறுவனங்களை அழிவிலிருந்து மீட்காமல் எவ்வாறு அவற்றின் பொருளாதாரப் பங்களிப்பை அதிகரிக்க முடியும். கோவிட் முதல் அலையின் போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கடன் உதவித் திட்டங்களால் 10 விழுக்காட்டிற்கும் குறைவான குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களே பயனடைந்துள்ளன.

நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளை தனியார் துறைக்கு விற்பதன் மூலம் ரூ . 1.75 லட்சம் கோடியை திரட்டுவதாக பாஜக அரசு அறிவித்தது. தற்போது யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்க என்ஐடிஐ ஆயோக் பரிந்துரைத்துள்ளது. இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்காக அமைச்சரவை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு அதில் உள்ள நிர்வாக சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு கூட்டத்தை சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்தக் கடனில் பொதுத்துறை வங்கிகளின் கடன் வழங்கும் பங்கு இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. 2010ல் அளிக்கப்பட்ட மொத்தக்கடனில் 75.1 விழுக்காடாக இருந்த அரசு வங்கிகள் அளித்த கடனின் பங்கு 2021 மார்ச்சில் 56.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் மொத்தக் கடனில் தனியார் வங்கிகளின் பங்கு 2010ல் 17.4 விழுக்காடாக இருந்தது 2021 மார்ச்சில் 35.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மூலமே பெரும்பாலும் பெருமுதலாளிகளுக்கு 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான கடன் அளிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும் பகுதி வாராக்கடனாகவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கள்ளக் கூட்டு நிர்வாக முறைகேடுகளால் பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்துள்ள வாராக்கடன்களும், தனியார்மய ஊக்குவிப்புமே மொத்தக் கடன் சேவையில் இன்று பொதுத் துறை வங்கிகளின் பங்கு குறைவதற்கான முக்கியக் காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமை வங்கியின் தரவுகளின் படி 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 21 விழுக்காடாக இருந்து இல்லங்களின் நிதிச் சேமிப்பு இரண்டாம் காலாண்டில் 10. 4 விழுக்காடாகக் குறைந்து, மூன்றாம் காலாண்டில் 8. 2 விழுக்காடாக சரிவடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீட்டு (வங்கி) வைப்பு விகிதம் இரண்டாம் காலாண்டில் 7. 7 விழுக்காடாக இருந்தது மூன்றாம் காலாண்டில் 3 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டி சுப்பாராவ் பொருளாதாரத்தில் நாட்டின் உயர் வருவாய் பிரிவுகளுக்கும், குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் தீவிரமடைந்துள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ளார், இந்த போக்கு முன்னோக்கி செல்லும் வளர்ச்சி வாய்ப்புகளைத் தாக்கும் என்றும் எச்சரிக்கிறார். பெரும்பான்மையான மக்கள் வேலைகளை இழந்து, வருவாய் குறைவை கண்ட போதும், சில பணக்காரர்களின் செல்வம் தொற்று காலத்தில் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரத்தில் நுகர்வையும், வேண்டலையும் ஊக்குவிப்பதற்காக ரூ . 3 லட்சம் கோடி நிதி ஊக்கத்தை மத்திய அரசு அளிக்கவேண்டும் என (சிஐஐ) கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராக உள்ள டாடா ஸ்டீலின் தலைமை நிர்வாக இயக்குநர் டி. வி. நரேந்திரன், இந்த நிதித் தொகையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக பணமாக அளிக்கவேண்டும் என்றும், மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும், குறுகிய காலத்திற்கு சரக்கு சேவை வரிகளை குறைக்கவேண்டும், எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். ஓராண்டிற்கும் மேலாக தொடர்ந்து எதிர்க்கட்சியினர் இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். பாஜக அரசு செவி சாய்க்கவே இல்லை. ஆனால் இம்முறை இத்தகையக் கோரிக்கைகளை முன்வைத்தது எதிர்க் கட்சிகளோ, இடதுசாரிகளோ அல்ல. முதலாளித்துவக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளே, ஏனெனில் எந்த அளவுக்கு எளிய மக்களின் நுகர்வும், வேண்டலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை முதலாளிகளே உணர்ந்துள்ளனர் என்ற போதும் பாஜக அரசால் தன் முட்டாள் தனத்தைக் கைவிடமுடியவில்லை. செல்வத்தை உருவாக்குபவர்களாக பாஜக அரசால் போற்றப்படும் அவர்களின் முதலிய நட்புக் குழுமத்திலிருந்து தான் இம்முறை கோரிக்கைகள் வந்துள்ளன. இம்முறையாவது செவி சாய்த்ததா பாஜக அரசு?. இல்லையே.

கோவிட் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க 8 புதிய திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். புதியதாக நிதித் தொகுப்பு அளிக்காமல் வெறும் கடன் உறுதியளிப்புத் திட்டங்களையே அறிவித்துள்ளார். மக்களின் வாங்கும் திறனையும், நுகர்வையும் மீட்டெடுக்கும் விதமாக புதிய வேலைவாய்ப்புகளோ, உதவித்தொகைகளோ எதுவும் அளிக்கப்படவில்லை. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பணவீக்கம்:

மொத்த விலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 12.94 விழுக்காடாக உயர்ந்துள்ளது, பெட்ரோல், டீசல், உற்பத்திப் பொருட்களின் விலையுயர்வினாலே பண வீக்கம் இந்தளவு அதிகரித்துள்ளது. எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 37.61 விழுக்காடு உயர்ந்துள்ளது!. மே மாதத்தில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு 6.3 விழுக்காடு அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களின் விலைவாசி 4.52 விழுக்காடு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 1.92 விழுக்காடு குறைந்துள்ளது. பழங்களின் விலைவாசி 11. 98 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 9.39 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை. 15.16 விழுக்காடு உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 30.84 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலைவாசி 9.03 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஏப்ரலில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி மார்ச்சில் மொத்த உற்பத்திக் குறியீடு 126.6ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, செய்பொருளாக்கத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றின் உற்பத்தி முறையே 108.0, 125.1 and 174.0ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட் தொற்று பரவலை தடுக்க சென்ற ஆண்டு மார்ச் இறுதியிலிருந்து நாடு தழுவிய பொது முடக்கம் செயல்படுத்தப்பட்டதால் பெரும்பான்மையான நிறுவனங்கள் மூடப்பட்டன. அதனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாத உற்பத்தி எந்தளவு உயர்வு/தாழ்வை அடைந்துள்ளது என்பதை மதிப்பீடு செய்வதற்கு அடிப்படையான ஒப்பீட்டுத் தரவுகள் இல்லாததால் உற்பத்தியின் உயர்வு/தாழ்வு விழுக்காடு கணக்கிடப்படவில்லை. முதன்மை பொருட்கள், மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், உற்பத்தி அளவுகள் முறையே 126.7, 82.4 , 137.9, 134.8 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்கள் நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி அளவுகள் முறையே 112.4, 142.3 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மே மாத தொழில்துறை வளர்ச்சி:

இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக் குறியீடு ஏப்ரலில் 16.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு மே மாதத்தின் உற்பத்தி அளவோடு ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 6.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 6.3 விழுக்காடு குறைந்துள்ளது, பெட்ரோலிய சுத்திகரிப்பு வழிப் பொருட்கள் உற்பத்தி 15.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 9.6 விழுக்காடு குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 22.5 விழுக்காடும், எஃகு உற்பத்தி 59.3 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 7.9 விழுக்காடும், மின்சார உற்பத்தி 7.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

2021ல் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகளவில் 160 மில்லியனாக உயர்ந்துள்ளது - கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 8.4 மில்லியன் அதிகரித்துள்ளது. கோவிட் -19 இன் தாக்கத்தால் மேலும் பல லட்சக் கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகளவில், அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களின் தொகை 6.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. அவர்களின் செல்வம் 2020 ஆம் ஆண்டில் 7.6 விழுக்காடு அதிகரித்து, 80 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக நிகர மதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கை 5.9 விழுக்காடு அதிகரித்துள்ளது

கிரெடிட் சூசி அமைப்பு வெளியிடும் உலகளவிலான செல்வம் குறித்த அறிக்கையின் படி 2021ல் உலகளவில் முதல் ஒரு விழுக்காடு பெரும்பணக்காரர்கள் (56 மில்லியன்) உலகின் மொத்த சொத்து/செல்வங்களில் 45 விழுக்காட்டை வைத்திருக்கிறார்கள். எஞ்சியுள்ள பங்கையே உலகின் 99 விழுக்காட்டினர் கொண்டுள்ளனர். உலகில் கிட்டத்தட்ட 300 கோடி மக்களிடம் செல்வமோ/சொத்துக்களே இல்லை என்றும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

அமெரிக்காவில் மூலதன ஆதாய வரிகளையும், பணக்கார வாரிசுகள் சொத்துக்களைப் பெறும்போது செலுத்தும் தொகையையும், பெரு நிறுவனங்களின் மீதான வரியையும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் வரிஏய்ப்பு செய்வதற்காக பன்னாட்டு நிறுவனங்களாக செயல்பட்டு லாபங்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவது தொடர்ந்தால் பெரு நிறுவன வரி அதிகரிப்பால் அமெரிக்க அரசு கூடுதல் வரி வருவாய் பெறமுடியாது. பெரு நிறுவன வரி குறைவாக உள்ள வரி ஏய்ப்பு புகலிடங்களிலும் குறைந்த பட்ச வரியை கொண்டு வந்தால் தான் அமெரிக்க அரசின் வருவாய் குறைவது தடுக்கப்படும். இதற்கான முயற்சி ஜி7 கூட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி -7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உலகளவில் குறைந்தபட்ச பெரு நிறுவன வரியை நடைமுறைபடுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஜோ பைடன் நிர்வாகம் குறைந்த பட்ச பெரு நிறுவன வரி வீதத்தை 21 விழுக்காடாக பரிந்துறைத்தபோதும் அது அனைவராலும் ஏற்கப்படாததால் இறுதியாக அனைவரது ஒப்புதலுடனும் 15 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து போன்ற வரி ஏய்ப்பு புகலிடங்களில் பெரு நிறுவனங்கள் மீதான வரி 12.5 விழுக்காடாக இருக்கும் போது 15 விழுக்காடு என்பது மிகவும் குறைவே. ஐக்கிய முடியரசில் சொத்துவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. . அர்ஜென்டினா, பொலிவியா உள்ளிட்ட பிற நாடுகளில் கடந்த ஆண்டில் பணக்காரர்களிடம் இருந்து நிதிவளம் திரட்டப்பட்டுள்ளது. இவற்றுடன் ஒப்பிடும் போது இந்திய அரசின் பிற்போக்கு நிலையை என்னவென்று சொல்லுவது!. பிற்போக்குத்தனத்தில் ஊறிய பாஜக அரசின் ஆட்சியில் பெயரளவிற்கு கூட பெரு நிறுவன வரியை உயர்த்துவது பற்றி எண்ணிப் பார்ப்பதற்கு கூட வாய்ப்பற்ற நிலையே காணப்படுகிறது. நேரடி வரியைக் குறைத்து மறைமுகவரியை அதிகரித்து மக்களின் வாயிலும், வயிற்றில் அடித்துள்ளது பாஜக அரசு. நிதித் தொகுப்பு என்ற பெயரில் பெயருக்குதவாத கடன் உறுதியளிப்புத் திட்டங்களை அறிவித்து அதன் மூலம் பொருளாதாரம் மீட்சி அடையும் என்று பெருமிதமும் அடைகிறது. பாஜக அரசின் செயல்பாடுகள் கோவிட் மூன்றாவது அலையைத் தடுப்பதாக இல்லை வரவேற்பதாகவே உள்ளது.

- சமந்தா

Pin It