corona kumphmelaஉலகையே ஒரு கை பார்த்து வரும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக மிக தீவிரமாக இந்தியாவை பதம் பார்த்து வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை இன்னும் வீரியமாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது என்பது தான் கவலைக்குறிய செய்தி. பல்வேறு மாநிலங்களும் செய்வதறியாது கையைப் பிசைந்துக் கொண்டு நிற்கின்றன.

ஆனால் இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு கூட்டம் வேலை செய்துக் கொண்டிருக்கிறது என்றால் அது சங்கி கூட்டம் தான். பெரும்பான்மை மக்களின் பாதுகாவலர்கள் நாங்கள் தான் என்று கொக்கரித்துக் கொண்டே அதே பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களையும், உடைமைகளையும் அழிப்பதில் கை தேர்ந்தவர்கள் சங்கிகள். அதனால் தான் சங்கிகள் நாட்டுக்குக் கேடானவர்கள் என்கிறோம்.

கொரோனா உலகம் முழுவதும் பரவத் தொடங்கிதுமே பல்வேறு நாடுகளும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின. ஆனால் இந்தியாவோ தனி நபர் துதிப்பாடல்களிலும், ஹீரோயிச நடவடிக்கைகளிலும், ஆட்சிக் கவிழ்ப்பிலும் பிஸியாக இருந்தது. ஜனவரி மாதமே இந்தியாவிற்குள் கொரோனா ஊடுருவி விட்ட போதும் மத்திய பாஜக அரசு எந்தவித தடுப்பு நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை.

மாறாக அமெரிக்க அதிபர் டிரெம்ப்பை வரவேற்று தன்னுடைய இருப்பை மோடி காட்டுவதில் குறியாக இருந்தது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் தீவிரத்தைக் காட்டியது. குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடியவர்களை அச்சுறுத்த கலவரம் செய்வதில் அக்கறைக் காட்டியது. ஜக்கி போன்றோர்களின் கல்லா கட்டும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையா இருந்தது. அதற்குள் இந்தியாவிற்குள் படிப்படியாக கொரொனா ஊடுருவ நெருக்கடி அதிகரித்த நிலையில் ஒருநாள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி.

அதற்கடுத்த இரண்டு நாட்களில் முன்னறிவிப்பில்லாத, முன்னேற்பாடில்லாத நீண்ட கால ஊரடங்கை திடீரென அறிவித்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். சாரை சாரையாக புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்தே ஊர் போய்ச் சேர்ந்ததை பார்த்து நாடே அனுதாபப்பட்டது.

சென்னையில் இருந்து கிடைத்த வாகனங்களில் எல்லாம் மக்கள் சொந்த ஊர்களுக்கு ஓடினார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் பசியால் உயிரை இழந்தனர். உச்சகட்டமாக தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு செத்தவர்களையும், ரயில் நிலையத்தில் குழந்தையை அனாதையாக விட்டுவிட்டு இறந்த பெண்ணையும் பார்த்து நாடே அழுதது.

ஆனால் இது எதைப்பற்றியும் கொஞ்சம் கூட கவலைப்படாமல் கொரோனாவிற்கு மதச்சாயம் பூசும் வேலையில் கவனமாக ஈடுபட்டது சங்கி கும்பல். வருடா வருடம் நடைபெறும் இஸ்லாமிய மதம் தொடர்பான மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்தவர்களால் தான் இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவியது என்று கதைக் கட்டி அதனை திட்டமிட்ட வகையில் பரப்பவும் செய்தார்கள் சங்கிகள்.

தப்லீக் ஜமாத்தில் கலந்துக் கொள்ள வந்தவர்களை முறையாக சோதனை செய்யாமல் அனுமதித்தது மத்திய அரசின் கீழ் வரும் விமான நிலைய அதிகாரிகள் தான் என்பதை இந்த சங்கிகள் வசதியாக மறைத்து அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். தமிழக சுகாதரத்துறை செயலாளரும் தினசரி அறிக்கையில் சிங்கிள் சோர்ஸ் என்று அறிவித்து சங்கிகளின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

அதன் பிறகு நடந்த உச்சக்கட்ட கோமாளித் தனத்தைக் கண்டு நாடு மட்டுமல்ல உலகமே இந்திய மக்களின் நிலை குறித்து சிரித்தது. கைத்தட்டியும், விளக்கு பிடித்தும், ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவியும் கொரோனாவை ஒழிக்க இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் மூட்டைப் பூச்சியை ஒழிக்க கருவி விற்ற வடிவேலுவின் கதையாகிப் போனது.

இப்படியாக ஒரு வழியாக முன்னேற்பாடில்லாத ஊரடங்கை அமல்படுத்தி, கோமாளித்தன நடவடிக்கைகளால் கொரோனாவை ஒழிக்க முடியாமல் திணறி, முட்டாள்தனமான ஊரடங்கு விலகலை அறிவித்து கொரோனா இரண்டாம் அலையை வரவேற்று இருக்கிறது சங்கி கூட்டம்.

முதல் அலையை விட இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. ஏற்கனவே நாட்டு மக்கள் வாழ்வாதரத்தை இழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்துவதில் மாநில அரசுகள் நெருக்கடியை சந்தித்துது வருகின்றன.

இப்படிப்பட்ட நேரத்திலும் கும்பமேளா நடத்தி மக்களை கூட அனுமதித்து இருக்கிறது உத்தரகாண்ட் சங்கி அரசு. 2000 பேர் கூடிய தப்லீக் ஜமாத் கூட்டத்தை ஜிகாதி வைரஸ் என்று கதை கட்டிய சங்கிக் கூட்டம் லட்சக்கணக்கில் கூடி வரும் சாமியார்களை எந்த வித கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டுவரவில்லை. ஊடகங்கள் கூட இதைப்பற்றி மூச்சு விடுவதில்லை என்பதில் இருந்தே தெரிகிறது இவர்கள் யாருக்கானவர்கள் என்பது.

மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தி சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை திராவிட கட்சிகள் உருமாற்றி வைத்திருக்கும் நிலையில் ஒன்றுமில்லாத குஜராத்தை ஊதி ஊதி பெரிதாக்கி குஜராத் மாடல் என்று பொய்யை பரப்பிய சங்கி கூட்டம் இன்றைக்கு குஜராத் சுடுகாடுகள் ஓயாமல் எரிவதைக் கண்டு வாயடைத்து போயிருக்கின்றன.

மத்தியபிரதேசம், குஜராத், உத்திரபிரதேச அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன. பரிசோதனை முடிவுகள் வருவதற்கே 5 முதல் 7 நாட்கள் ஆகின்றன. சரியான மருத்துவக் கட்டமைப்புகள் கூட இல்லாமல் தான் இந்த மாநிலங்கள் இருக்கின்றன என்பதை இந்த பேரிடர் காலத்தில் நாடே உணர்ந்துள்ளது.

அடிப்படை மருத்துவக் கட்டமைப்புகள் கூட இல்லாமல் தான் நம்முடைய மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடி நம்முடைய வளமான கட்டமைப்புகளை பறிக்கும் வகையில் நீட் தேர்வை கொண்டுவந்துள்ளார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.

திராவிட கட்சிகளால் தமிழ்நாடு சீரழிந்து விட்டதாக ஓயாமல் ஒப்பாரி வைத்த சங்கி கும்பல் தங்களுடைய மாநிலங்கள் சீரமைக்கவே முடியாத அளவிற்கு அலங்கோலமாக கிடப்படை ஊடக வெளிச்சம் கொண்டு மறைத்தது அம்பலமாகிவிட்டது.

மக்கள் நல அரசாங்கங்களை தேர்ந்தெடுக்காமல் மதவெறி கும்பல்களை தேர்ந்தெடுத்தால் என்ன நடக்கும் என்பதை இந்த மாநில மக்கள் உணர்ந்திருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி உணராவிட்டால் அவர்களை எத்தனை தடுப்பூசிகளாலும் காப்பாற்ற முடியாது.

- இரா.வெங்கட் ராகவன்

Pin It