இந்திய ஒன்றியத்தின் 2021 - 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை பிப்ரவரி 1 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்கள் எண்மின் (digital) முறையில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் என்று பெருமை பட்டுக் கொண்ட இந்த அறிக்கை சுமார் 34.52 லட்சம் கோடி ரூபாய்களை இந்த நிதி ஆண்டுக்குச் செலவு செய்யப்போவதாக அறிவிக்கிறது.
ஒரு மக்கள் நல அரசு, தன் நாட்டு மக்கள் தொகைக்கும், பல்வேறு பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளில் வாழும் மக்கள் பிரிவுக்கு ஏற்ப வருவாயை யாரிடம் எவ்வளவு, எவ்வாறு எனத் திட்டமிட்டு எப்படி இயற்றும், அவ்வாறு இயற்றியதை எம்முறைகளில் நேர்முக, மறைமுக வரிகளாகவும் அல்லது மாற்று வருமானமாக ஈட்டும், அவ்வாறு ஈட்டியதை சிந்தாமல் சிதறாமல், சேதாரம் இன்றிக் காத்து, அதை யாருக்கு, எதற்கு எவ்வளவு, எப்போது என வகுத்துச் செலவு செய்யும் என்பதை ஆண்டு அறிக்கையாகத் தாக்கல் செய்வது அரசின் கடமை.
மக்களாட்சி மலராத மன்னராட்சிக் காலத்திலேயே இதை அவ்வளவு தெளிவாக “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்று சொல்லி வைத்தார் நம் பேராசான் வள்ளுவப் பெருந்தகை. அந்தக் குறளை மட்டும் கிளிப் பிள்ளையைப் போல வாயால் உதிர்த்துவிட்டு அதன் சாரத்தை நடைமுறையில் சிதைத்துப் போட்டிருப்பதே இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் சாதனை.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு ஓர் ஆண்டு கடந்த நிலையில், இந்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் தம் வேலைகளை இழந்தும், வீடுகளில் குறைவான ஊதியத்துக்குப் பணி செய்தும், வேலையின்றி வருமானமும் இன்றி சொந்த ஊர்களுக்குத் திரும்பியும், உயிர் பிழைத்து வருகின்றனர்.
மறுபக்கத்தில் பெருந்தொற்றுக் காலத்தில் 138 கோடி மக்களில் 100 க்கும் கீழான பெரும் பணக்காரர்களின் வருவாய் மட்டும் 35% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசு, உயிர் மட்டுமே பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய நூறு நாள் வேலைத் திட்டத்தின் செலவை, ரூ.42000 கோடி வரை இந்த ஆண்டுக்குக் குறைத்திருக்கிறது.
இது கிட்டத்தட்ட 40% சென்ற ஆண்டை விடக் குறைவான ஒதுக்கீடு. ரூ..1.15 லட்சம் கோடி செலவு செய்தபோதே 45 நாள்களுக்கு மட்டுமே குடும்பத்தில் ஒருவருக்கு பணி உறுதி கிடைத்தது என்று பொருளாதார நிபுணர் அருண்குமார் தெரிவிக்கிறார்.
பள்ளிக் கல்விக்கு, சென்ற ஆண்டைக் காட்டிலும் ரூ.5000 கோடியைக் குறைத்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை, கட்டுமானச் சிதைவு என பல்வேறு சிக்கல்கள் இருக்கும்போது, கல்விக்கான நிதிக் குறைப்பு பள்ளிக் கல்வியை முற்றிலுமாகச் சிதைத்து, புதிய கல்விக் கொள்கை வழி தனியார் கொழிக்கும் தொழிலாக மாற்றப்போவதைத் தான் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
நல்ல லாபம் ஈட்டி, பொது மக்களுக்கு உற்ற காப்பீட்டுப் பாதுகாப்பு நண்பனாகவும் இயங்கி வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை 74% வரை விற்கும் முடிவை இந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார்கள். அது போன்று பல அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்கப்போகிறார்கள்.
அறிக்கையின் பின்பக்கங்களில் அந்தத் துறையின் சீரமைப்புக்கும் விரிவாக்கத்திற்கும் செலவு செய்வதாக அறிவித்துவிட்டு, முன் பக்கங்களில் அந்தத் துறையை விற்கப் போவதாக அறிவிப்பு. மக்கள் பணத்தில் பழுதுபார்த்து, தன் பணக்கார முதலாளிகளுக்கு அந்தச் செலவைக் கூட வைக்காமல் தாரை வார்க்கும் பண்பு என்னே!
ஆளும் பா.ஜ.க அரசு வந்தவுடன், பெருமுதலாளிகள் செலுத்திய வரியை 10% வரை குறைத்த பெருந்தன்மை என்ன?! அதனாலும் பல்வேறு தள்ளுபடிகளாலும் 35% வரை அதிகப்படியாக நிறைந்து போன அவர்களின் கல்லாப் பெட்டிகள் சிறிதும் குறையாமல் அவர்கள் மீது ஒரு துளி சுமையையும் ஏற்றாத பக்குவம்தான் என்ன?! ஆனால், 50க்கும் 100க்கும் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் நிற்கும் சாமானியனிடம் ஜேப்படி நடத்திப் பொருளாதாரத்தை மீட்க நினைக்கும் குரூரம்தான் என்ன?
பொருளாதார மந்தச் சூழலில், மக்களின் வாங்கும் திறத்தை உயர்த்த நோக்கமற்ற இந்த அரசு, தங்கள் வாகனத் தொழிலதிபர்களுக்கு வசதியாக அவசரமாக இந்த நிதி நிலை அறிக்கையிலேயே 15 ஆண்டுகள் கடந்த தொழில் வாகனங்களும், 20 ஆண்டுகள் கடந்த சொந்த வாகனங்களும் உடைக்கப்பட வேண்டும் என்ற திட்டத்தை முன்வைக்கிறது. அதை ஓரிரண்டு ஆண்டுகள் தள்ளிப் போட்டால் கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொள்ள சிறுகுறு தொழில் முனைவோருக்கு வாய்ப்பாகி விடுமோ?
இந்த நிதிநிலை அறிக்கை முழுக்க முழுக்க மோடிக் கூட்டத்தை அரசு நாற்காலிகளில் உட்கார வைக்க ஒத்துழைத்த பெரு முதலாளிகளுக்கானதே அல்லாமல் கிஞ்சித்தும் எளிய மக்களுக்கானது இல்லை! எளிய மக்களின் வலியை இந்த அரசுக்குப் புரிய வைக்க வேண்டுமென்றால் போராட்டம் ஒன்றே அதற்கான மொழி!
- சாரதாதேவி