பாசிச பாஜக ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தங்களைப் பற்றியும். தங்களது கூட்டாளிகளான அம்பானி, அதானி ஆகியோரின் ஊழல்களைப் பற்றியும் பேசும் அரசியல் தலைவர்களுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் பலவிதமான நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. அதேபோது, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் நபர்களுக்கும், ஊடகங்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் பாஜகவின் மதவெறிக் கோட்பாட்டையும், எதேச்சதிகார அரசியலையும் மக்களிடம் தோலுரித்துக் காட்டும் வகையில் கரிகாலனின் ரூட்ஸ் தமிழ் வலையொளி ஊடகம் முற்போக்கு இயக்கங்களின் ஆதரவை வெகுவாகப் பெற்றிருந்தது. இதையறிந்த ஒன்றிய அரசு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் மூலம் பல நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது. அதன் முதற்கட்டமாக கடந்த மே மாதம் 16ஆம்நாள், ரூட்ஸ் தமிழ் ஊடகம் பதிவிட்டிருந்த எட்டு காணொலிகளை நீக்குவதற்கு வலையொளி நிர்வாகத்திடம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்தக் காணொலிகள் நீக்கப்பட்டன.

நீக்கப்பட்ட காணொலிப் பதிவுகள்:
­
1) யாரெல்லாம் தமிழர்கள் என்ற தலைப்பில் பாவலரேறு தமிழ்க்களத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் தோழர் பொழிலன் அவர்கள் ஆற்றிய உரை.

2) "வள்ளுவர் நெறியில் வள்ளலாரை அறிவோம்" என்ற தலைப்பில் அடையாறு முத்தமிழ் அரங்கத்தில் நடைபெற்ற வள்ளலாரின் 200 ஆம்ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பேராசிரியர் செயராமன் அவர்கள் ஆற்றிய உரை.

3) திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் திரு ஆ.இராசா அவர்களின் மனுஸ்மிருதி குறித்த உரைக்கு எதிராக பாஜகவினர் உருவாக்கிய சர்ச்சைக் குறித்து திமுகவின் மாணவர் அணி அமைப்பாளர் திரு இராசிவ் காந்தி அவர்களுடனான நேர்காணல்.

4) மனுஸ்மிருதி குறித்து மே 17 இயக்கத் தோழர்கள் திரு. பிரவீன் குமார், திரு. கொண்டல்சாமி ஆகியோரின் பொதுக்கூட்ட உரை.

5) "பெரியாரின் திராவிட மாடல்" என்னும் தலைப்பில் தோழர் தியாகுவின் கருத்தரங்க உரை.

6) அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், என்ற தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பு குறித்து "கருவறைத் தீண்டாமை" என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் திரு.கலி. பூங்குன்றன் அவர்கள் உரை.

7) மேற்கண்ட நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்புக் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சீனி. விடுதலைஅரசு அவர்கள் ஆற்றிய உரை.

8) பகவத் கீதையா? / திருக்குறளா? தலைப்பில் பேராசிரியர் மனிக்கோ பன்னீர்செல்வம் அவர்களுடன் நேர்காணல் நடத்தியது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த எட்டு காணொலிகளில் பேசியவர்கள் யாரும் குற்றவாளிகளோ, தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களோ கிடையாது. அவர்கள் பேசியதும் முரணான கருத்துகள் கிடையாது. ஆனால் பாசிச சிந்தனை கொண்ட இந்த அரசுக்கு முரணாகத் தெரிகிறது. ஆகையால் அந்தக் காணொலிகளை நீக்கிவிட்டது.

இந்த நிலையில் தோல்வியின் விளிம்பில் நிற்கும் பாஜக, ஒன்றிய அரசின் தோல்விகளை மறைக்க, தங்களுக்கு எதிரானக் கருத்துகள் மக்களிடம் சென்று சேர்ந்து விடக்கூடாது என்ற நிலையில் தோழர் கரிகாலனின் ரூட்ஸ் தமிழ் வலைத்தளத்தை முற்றிலுமாக முடக்கியுள்ளது.

மனந்தளராத தோழர் கரிகாலன், தனது வலையொளித்தளம் முடக்கப்பட்ட நிலையிலும் தனது கருத்துப் பரப்பல்கள் முடங்கி விடக்கூடாது என்ற நிலையில் ரூட்ஸ் 24X7 என்ற புதிய ஊடகத்தை அறிமுகப்படுத்தி முன்னைவிட பல மடங்கு வேகத்தில் இயங்கத் தொடங்கினார். மிரண்டு போன ஒன்றிய அரசு, "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்" என்ற முதுமொழிக்கேற்ப அச்சத்தின் உச்சிக்கே சென்று விட்டது. அதன் விளைவு 21-06-2023 அன்று தோழர் கரிகாலனின் புதிய ஊடகத்தையும் முடக்கி விட்டது.

ஒன்றிய அரசின் இத்தகைய அதிகாரத் திமிரை இப்படியே நீடிக்க விடக்கூடாது,இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்தாக வேண்டும். பாதிக்கப்பட்ட தோழர் கரிகாலனின் உரிமைகளை வென்றெடுக்க சனநாயக ஆற்றல்கள் அவருக்குப் பக்க வலுவாக இருந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

- தமிழ்முகம்

Pin It