ஒரு திரைப்படத்தைப் பார்த்து இவ்வளவு மிரண்டவர்களை இதுவரையில் நாம் பார்த்ததில்லை. அதுவும் மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. ஒரு திரைப்படத்தில் வரும் சில உரையாடல்களைக் கண்டு இப்படிக் கதிகலங்குவதைப் பார்க்கப்  பரிதாபமாகத்தான் இருக்கிறது!

vijay 320நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ என்ற திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. எதிர்பார்த்ததை விட மக்களிடம் கூடுதல் ஆதரவைப் பெற்று அது இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் ஜிஎஸ்டி வரி பற்றி ஏதோ சில உரையாடல்கள் வருகின்றனவாம். அந்தக் காட்சிக்குத் திரையரங்கில் பெரிய வரவேற்பும் கிடைத்ததாம். பொறுக்கவில்லை இங்குள்ள பாஜகவினருக்கு. அந்தக் காட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரே இரைச்சல். அது மட்டுமின்றி, நடிகர் விஜய் வருமானவரி ஒழுங்காகக் கட்டியுள்ளாரா என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ஓ...வருமானவரித் துறையின் பயன்பாடு இப்படித்தான் உள்ளது என்று நமக்குப்  புரிகிறது.

பாவம் தயாரிப்பாளர், நமக்கு எதற்கு வம்பு என்று கருதி, அந்தக் காட்சியை நீக்கிவிடுவதாகக் கூறியுள்ளார். ஆனால் அதற்குப்  பிறகுதான் அந்தக் காட்சி மக்களிடம் வெகு விரைவாகப் பரவத்  தொடங்கியுள்ளது. ஆம், வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும், அங்கிங்கெனாதபடி எங்கும் இப்போது அந்தக் காட்சிதான் ஒடிக் கொண்டிருக்கிறது.  படம் பார்க்காதவர்கள் கூட, அந்த உரையாடல் வரும் காட்சியை இன்று பார்த்துவிட்டனர். பாஜகவினருக்கு நம் நன்றி!

அண்ணா, கலைஞர் படங்களுக்கு அன்று எவ்வளவு எதிர்ப்பு, எவ்வளவு விமர்சனங்கள்! என்றைக்காவது அது கண்டு அஞ்சியதாக யாரேனும் சொல்ல முடியுமா? பராசக்தி படத்திற்குப் ‘பரப்பிரம்மம்‘ என்று ஓர் ஏடு விமர்சனம் எழுதியது. கலைஞர் தன் அடுத்த நாடகத்திற்கு அதனையே தலைப்பாக்கினார். அறிஞர் அண்ணாவின் ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய குமுதம் இதழ், ஒரு பக்கம் முழுவதையும் காலியாக விட்டுவிட்டு, கடைசியில், கீழே, “வெட்கக்கேடு” என்று மட்டும் எழுதி இழிவுபடுத்த முயன்றது. எல்லாவற்றையும் கடந்துதான் வந்திருக்கிறோம்!

ஆனால் இன்றோ, மெர்சலைக் கண்டு மெர்சலாகிப் போனார்கள் பாஜகவினர். வென்றுவிட்டார்கள் விஜய் ரசிகர்கள்!!

------------

மன்னிப்பு கேட்க வேண்டியவர் யார்?

பணமதிப்பிழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் அண்மையில் ஓர் அறிவிப்பைச் செய்துள்ளார். "சென்ற ஆண்டு  1000, 500 ரூபாய்த்  தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை இந்திய அரசு சார்பில் பிரதமர் மோடி வெளியிட்ட போது, அதனை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். அது சரியான நடவடிக்கை இல்லை என்பதை உணர்ந்து, இப்போது அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். மன்னிப்பு கேட்க வேண்டிய இன்னொரு மனிதர் இருக்கிறார், அவர் பெயர் மோடி. 

Pin It