பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் குறித்து சாமானிய மக்களிடம் நடைபெறும் உரையாடல்கள் ---

  1. அந்த 200 பெண்களுக்கும் அறிவு இல்லாமலா போய்விட்டது? காலம் காலமாக பெண்ணடிமைத்தனம் நடந்து கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தைத் திடீரென்று மாற்ற முடியாது. நாம்தான் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும்.
  2. பாலியல் துன்புறுத்தல்கள் ஆண்களைப் பாதிக்காது, அவர்களைப் பாதுகாக்க சில சமயங்களில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் துணை நிற்கிறார்கள்.
  3. அராபிய நாடுகளைப் போன்று பாலியல் குற்றங்களுக்கு நம் நாட்டில் கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் இல்லை.
  4. எந்தச் சூழலிலும் பாதிப்பு என்பது பெண்களுக்குத்தான்.
  5. நல்ல வேளை எனக்குப் பெண்பிள்ளை இல்லை.
  6. எனது பெண்ணை நல்ல இடம் அமைந்தால் உடனே திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும்

இப்படியான உரையாடல்கள் பல இடங்களில் நடைபெறுவது ஆரோக்கியமானதல்ல… இந்த எண்ணங்கள் மேலும் பதற்றத்தைத்தான் உண்டாக்கும்.

sexual assaultஇவ்விடத்தில் உங்களது பெண்ணை இன்னும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்களது மனது பதை பதைக்கிறது. இந்தப் பதட்டம் மிக நேரடியாக காதல், நட்பு என்ற பெயரில் எந்தத் தேர்வும் செய்யாதே எனத் தடை விதிக்கிறது. அத்தகைய தேர்வு உறுதியாக ஆபத்தாகத்தான் இருக்கும் என எச்சரிக்கை செய்கிறது. மேலும் இந்தச் சமூகம் மிகவும் பயங்கரமானது, எனவே செய்ய வேண்டியது, செய்ய கூடாதது எனப் பெண்ணை இறுக்கமான தளத்திற்குத் தான் உங்களது உரையாடல் தள்ளுகிறது.

          அனைத்து நாடுகளிலும் கல்வி, வேலை, வருவாய், ஓட்டு, கோவில் நுழைவு என்று படிப்படியாகப் போராடி /குரல் எழுப்பி பெண்களுக்கான உரிமைகளைப் பெற்று தற்பொழுதுதான் மூச்சுவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். தற்போது பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் உரையாடலை நடத்தினால் என்னவாகும் நிலைமை? மீண்டும் பழைய பெண்ணடிமை காலத்திற்குக் கொண்டு சென்று விடும்.

          நீங்கள் எடுத்துக் காட்டும் அசிங்கமான சமூகத்தில் இருந்துதான் நீங்கள் மருமகனையும் எடுக்க வேண்டியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். மகள் எப்படி இருக்க வேண்டும் என்ற படப் படப்பைச் சற்று நிறுத்தி விட்டு எனது மகன் மற்றும் மருமகன் எப்படி இருக்க வேண்டும் என்ற உரையாடலை நகர்த்திச் செல்ல வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது… உரையாடல் அடுத்த நகர்வை நோக்கியதாக இல்லாமல் பெண்களைப் பாதுகாப்பதிலேயே அவதியாகப் பிரச்சாரம் செய்யும் உங்களது பேச்சு, பெண்களை வீட்டில் அடைத்து விட்டு அடிமை வாழ்வு வாழத் தயாராக இருப்பதைத்தான் காட்டுகிறது.

“ஆண்”

          உடைமையின் அரசன். பொருளாதாரம், வலிமை, அரசியல், சமூகம், பணி, குடும்பம் என்று அனைத்து நிலைகளிலும் அதிகாரம் பெற்றவன். முக நூலில் பேசினால் மயங்கி அவனைத் தேடிச் செல்லும் பெண்ணின் நடத்தைக் குறித்துக் கவலைப்படுவதற்குப் பதிலாக ஆணின் மனதில் இருக்கும் பெண்ணைப் பற்றிய பொது புத்தியை முதலில் மாற்ற வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

          அந்தக் காமக்கொடூரன்களைக் கணவன்களாக, மருமகனாக பெற்ற அப்பாவிகைள நினைத்துப் பாருங்கள். 200 பெண்கள் அவர்களைத் தேடிச் செல்லா விட்டாலும் ஆண்கள் பிஞ்சுக் குழந்தைகளைப் பாலியல் பண்டங்களாக நினைத்துத் தேடிப் போகிறான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல் புள்ளிவிவரங்கள் அதிகரித்துவிட்டன. பெண்ணிற்கு 80 வயதானால் என்ன? 3 வயதாக இருந்தால் என்ன? வலிமை மிக்கவன் மனதில் பெண்ணைப் பற்றிய மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

          பெண்ணைக் கடவுளாக, கங்கை, யமுனா என்று நீர் வள ஆதாரமாக, ஏன் தாய் நாடாக மதிக்கும் அதே ஆணின் புத்தியில் தான் இவள் நம்மை விட குறைந்தவள். நமக்கு அடங்கி நடக்க வேண்டியவள். இவள் நாகரீக மங்கையாக மாறக்கூடாது. பொது வெளியில் கவர்ச்சியான உடை அணியக்கூடாது(சினிமாவில் நடிக்கலாம்). எதிர்த்துப் பேசக்கூடாது. அரசியலுக்கு வரக்கூடாது. 12 மணிக்கு ஒரு பையனுடன் அதுவும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு வெளியே வரக்கூடாது. வேறு சமூகத்தைச் சார்ந்த ஆணைக் காதலிக்க கூடாது. திருமணம் ஆனபின்பு ஒருபக்கம் சாவித்திரியாகவும் ஒரு பக்கம் நளாயினியாகவும் இருக்க வேண்டும் என்று எத்தனை வகையான படபடப்பு சதாகாலமும் ஓடிக் கொண்டே இருக்கிறது. இத்தனையும் சுமந்து கொண்டு திரியும் மனநோயாளியால் எப்படி தன் கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்க முடியும். எல்லா ஆண்களும் காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதன் அளவுகள்தான் இடத்திற்குத் தக்கவாறு மாறுபட்டுக் காணப்படுகிறது.

          ஆணின் மனதில் உள்ள இத்தனை படபடப்பையும் சமாதானப்படுத்தாமல் / அவனது பார்வையை மாற்றாமல் பெண்ணிற்கு அழுத்தம் கொடுப்பதில் பலன் ஒன்றும் இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

          ஊழல் நிறைந்த சமூகம் அனைத்துக் கொடூரங்களையும் செய்வதற்கு வழிவகுத்துக் கொடுக்கிறது என்ற ரீதியில் எடுத்துக் கொண்டாலும் பெண்களின் மீது இத்தகைய கொடுமைகள் பாய்வதற்குக் காரணம் ஆணின் மனதில் உள்ள பெண்ணின் மீதான அதிகாரப் பார்வைதான் என்று உரையாடல் நிகழ்த்தும்போதுதான் இந்தச் சமூகத்தை மாற்ற முடியும். சமூகத்தில் உள்ள பொது புத்தியையும் / நடத்தை முறைகளையும் மாற்றாமல் உங்களது பெண்களைப் பூட்டுப்போட்டு பூட்டிக் கொண்டால் நஷ்டம் பெண்களுக்குத்தான்.

          ஆண்-பெண் சமத்துவத்திற்கான ஒரே வழி பொருளாதாரம் பெண்களின் கைகளுக்கும் கிடைப்பது தான். அதற்கான கதவையும் பூட்டிக்கொண்டு விட்டால் காலா காலத்துக்கும் சமமான மனுஷியாக வாழ இயலாது. ஏற்கனவே குடும்பம் என்ற பழங்கால வேலை / பொருளாதார வேலை என்று இரண்டு மடங்கு சுமை அவளை அமுக்கிக்கொண்டு இருக்கிறது. தற்போது தொழில்நுட்பம், சமூக வலைதளங்கள், பொழுது போக்கு அம்சங்கள், நடை பாதைகள், போக்குவரத்து சாதனங்கள் என்று பல பூதங்களைக் காட்டி பயமுறுத்தாமல் எப்படி நவீன யுகத்தை எதிர்கொள்வது? இயல்பான சமூகத்தை எப்படி கட்டமைப்பது? ஆணின் மனதில் சமத்துவப் பார்வையை விதைப்பது எப்படி? என்று சிந்திக்க வேண்டியவர்களாக மட்டும் இல்லாமல் செயல்படுத்த வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது என்று உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

- செ.சௌந்தரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 11

Pin It