ஒருவரை பல வருடங்களாக காவலில் வைத்த பிறகு தூக்கிலிடுவது மனிதத் தன்மையற்ற செயல் என்ற உச்ச நீதிமன்றம் மற்றும் உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்களின் பார்வையை அப்சல் குருவின் மரண தண்டனையை நிறைவேற்றியதில், அரசு வேண்டுமென்றே அலட்சியம் செய்துள்ளது.

2013 பிப்ரவரி 9ம் நாள் நடந்த அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் இந்திய அரசின் மனித தன்மையற்ற நடவடிக்கை. 2005 ஆகஸ்ட் 4ம் நாள், உச்ச நீதிமன்றம் அப்சல் குருவிற்கு மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டு ஏழு ஆண்டுகள் கழித்தும், 2006 நவம்பர் 8ம் நாள் அவரது கருணை மனு குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்தும் அவர் தூக்கிலிடப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் அவரது விதி என்னவாக அமையும் என்று எண்ணி அனுதினமும் மிகுந்த மனவேதனைகுள்ளானர். இந்த நிலையானது உச்ச நீதிமன்றத்தாலும், நாகரீகமடைந்த நாடுகளாலும் கண்டிக்கப்படுகிறது. காலங்கடந்து மரண தண்டனை நிறைவேற்றுதல் குறித்து நீதிமன்றத்தில் இதர வழக்குகளில் நேர்ந்துள்ளது போல், இவ்வழக்கும் நீதித்துறை பரிசீலனைக்கு போய் விடக்கூடாது என்பதற்காக, ஆறு ஆண்டுகள் கழித்து 2013 பிப்ரவரி 3ம் நாள் அப்சல் குருவின் கருணை மனு குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது, வேண்டுமென்றே அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் விடப்பட்டது. கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் அவரது குடும்பத்தினருக்குக் கூட அறிவிக்காமல் இரகசியமாக 2013 பிப்ரவரி 9ம் நாள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதுடன், அதே அளவு இரகசியத்துடன் அவரது உடல் புது தில்லி, திகார் சிறையில் புதைக்கப்பட்டது.

ஆறு ஆண்டுகள்

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை மன்னிக்கவோ, தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ குடியரசு தலைவருக்கு மனு செய்வது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 72ன் படி, ஒரு தண்டனை கைதியின் உரிமையாகும். மேலும் அந்த மனுவானது நிராகரிக்கப்படாத வரை அவருக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 72ன் கீழான மனுவை அரசின் உதவி அல்லது அறிவுரை ஏதுமின்றி குடியரசு தலைவர் தனது சுய விருப்புரிமையின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று 1989ம் ஆண்டில் கெஹர் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது. இங்கு முக்கியமான கேள்வி என்னவென்றால் குடியரசு தலைவருக்கு அப்சல் குரு மனு செய்து ஆறு ஆண்டுகள் கடந்து போன சூழலில், காலங்கடந்து தாமதமாக மரண தண்டனை நிறைவேற்றப்படலாமா என்பது தான்.

அப்சல் குருவிற்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய பாரதீய ஜனதா கட்சி, எதிர்வரும் தேர்தலின்போது இப்பிரச்சனையை மீண்டும் எழுப்பும் என்பதால் அப்சல் குருவின் கருணை மனு அரசியல் பிரச்சனை ஆனது. குடியரசு தலைவரிடம் உள்ள மனுவை, அரசு முடிவுக்கு கொண்டுவராதது தனது சொந்த அரசியல் நோக்கத்திற்காகவே ஆகும். எதார்த்தத்தில் கடந்த 2006 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் டெல்லி அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட அப்சல் குரு தொடர்பான கோப்புகளை வேண்டுமென்றே தாமதப்படுத்த அப்போதைய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். 2008ம் ஆண்டு, அப்சல் குரு அவரது மன வருத்தத்தின் காரணமாக, ஒரு நேர்காணலின் போது, “இந்தியாவின் அடுத்த பிரதமராக எல். கே. அத்வானி வர வேண்டும் என்று நான் மெய்யாகவே விரும்புகிறேன் ஏனெனில் அவர் ஒருவரால் மட்டுமே என்னை தூக்கில் போட முடிவெடுக்க முடியும். குறைந்த பட்சம் எனது வலியும், அனுதின வேதனைகளும் அப்படியாவது முடிவுக்கு வரட்டும்” என்று கூறினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து 2012 நவம்பர் 21ம் நாள் தீவிரவாதி அஜ்மல் கசபுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவுடனே, அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை எதிர்கட்சியினர் மீண்டும் எழுப்ப ஆரம்பித்தார்கள். எதிர்க்கட்சிகள் இச்சூழலை தங்கள் நலனுக்காக பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாக அரசு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. கசாப் ரகசியமாக தூக்கிலிடப்பட்டதை முன்மாதிரியாக கொண்டு அதே போல ரகசியமாக அப்சல் குருவிற்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2012 நவம்பர் 15 அன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, அப்சல் குருவின் கருணை மனுவை மீண்டும் பரிசீலனை செய்ய அவரது கோப்புகளை உள்துறை அமைச்சரகத்திற்கு திரும்ப அனுப்பினார். அந்த மனுவை 2013 ஜனவரி 23 அன்று உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்ய பரிந்துரைத்ததை தொடர்ந்து 2013 பிப்ரவரி 3ம் நாள் அன்று குடியரசு தலைவர் அந்த மனுவை நிராகரித்தார். அந்த நிராகரிப்பினை தொடர்ந்து உள்துறை அமைச்சர் 2013 பிப்ரவரி 4ம் நாள் தண்டனையை அமல்படுத்தி, ஐந்து நாட்களுக்கு பிறகு, 2013 பிப்ரவரி 9ம் நாள் அதிகாலையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.

அப்சல் குருவின் மரண தண்டனை நிறைவேற்றம் காலங்கடந்து போனதால் அவரும் அவரது குடும்பத்தினரும் என்ன நடக்குமோ என்ற அச்சத்திற்கும் மன வேதனைக்கும் உள்ளானார்கள். உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவாதப்படுத்தியுள்ள சட்டத்தை இதன் மூலம் அரசு மீறியுள்ளது. 1974ம் ஆண்டில் எடிக்மா அனமா எதிர் ஆந்திர பிரதேச அரசு எனும் வழக்கின் தீர்ப்பில், நீதியரசர் கிருஷ்ணய்யர் “சிறையிலுள்ள தண்டனை கைதிகளை ஆண்டுக்கணக்காக சூழ்ந்து கொள்ளும் பயத்தையும் பீதியையும்” பற்றி குறிப்பிடுகிறார். டி. வி. வைதீஸ்வரன் எதிர் தமிழ்நாடு அரசு எனும் வழக்கில் 1983ம் ஆண்டு நீதியரசர் சின்னப்ப ரெட்டி, காலங்கடந்து மரண தண்டனை நிறைவேற்றுவது மனிதத்தன்மையற்ற விளைவை கொண்டது மற்றும் ஒருவரது உயிரை நியாயமற்ற, முறையற்ற, அநியாயமான முறையில் பறிப்பதால், அரசியலமைப்பு சாசனம், சரத்து 21ன் கீழ் உத்தரவாதப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைக்கு குந்தகம் விளைவிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர் காலங்கடந்த தண்டனை நிறைவேற்றம் குறித்து பிரிவி கவுன்சில் வழங்கியுள்ள தீர்ப்பில், “மாறி மாறி வரும் நம்பிக்கை மற்றும் ஏமாற்றத்தின் துயரம், நிலையின்மையின் வேதனை மற்றும் இவை ஒரு நபரின் உடல், மனது மற்றும் உணர்வுகளின் மீது செலுத்தும் தாக்கம் ஆகியவற்றை கணக்கில் கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்.

குற்றவாளிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மன வேதனை

1983 ஆம் ஆண்டில், ஷேர் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு எனும் வழக்கில், நீதிமன்றம் மேற்கண்ட அதே மேற்கோள்களை மீண்டும் உறுதி செய்தது. மேலும் 1989ம் ஆண்டில் திரிவேணி பேன் எதிர் குஜராத் மாநில அரசு எனும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச், தாமதமாக நிறைவேற்றப்படும் மரண தண்டனையானது, அநீதியானதும், நியாயமற்றதும், முறையற்றதுமாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தியது. கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் பொழுது தண்டனையாளி உடல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படாவிட்டாலும் மிகுந்த மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாகிறார் என்பது உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். தண்டனை நிறைவேற்ற நீண்டகால தாமதமாகும் சூழலில் தண்டனை கைதி நீதிமன்றத்தை அணுகி, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையானது நியாயமானது தானா, சரியானது தானா என்பதை கோர முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது. ஆகவே, கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்த விபரங்கள் கட்டாயமாக வெளிப்படுத்தியிருக்கவேண்டும். 2012ம் ஆண்டில் ஜக்தீஷ் எதிர் மத்திய பிரதேச மாநிலம் என்ற வழக்கில் தண்டனை நிறைவேற்ற அதிக காலம் கடத்துவது தண்டனையாளிக்கு மட்டுமன்றி அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் மனவேதனையையும், துயரத்தையும் உண்டுபண்ணும் என்பதை உச்ச நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

1994ம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் மேற்கோளை ஏற்றுக்கொண்ட பிரிவி கவுன்சில், தனது தீர்ப்பில், “மரண தண்டனை தீர்ப்பிட்டு பல வருடங்களுக்கு பிறகு, ஒரு நபரை தூகிதூக்கிலிடும் சாத்தியக்கூறுக்கு எதிராக இயல்பானதொரு வெறுப்பு எழுகிறது. ஏன் இந்த இயற்கையான வெறுப்பு எழுகிறது? ‘நமது மனிதநேயம்’ என்பது மட்டுமே அதற்கு பதிலாக இருக்க முடியும். மரண தண்டனை நிறைவேற்றத்தை எதிர்நோக்கி நீண்ட காலமாக ஒருவரை மன வேதனையுடன் காத்திருக்க வைப்பதை மனிதத்தன்மையற்ற செயலாக நாம் கருதுகிறோம்... நீண்டநெடும் காலமாக காவலில் வைத்து, பின் மரண தண்டனை நிறைவேற்றுவது என்பது மனித தன்மையற்றதாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1989ம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றமும், கனடா உச்ச நீதிமன்றமும் இதே கருத்தை முன்வைத்துள்ளன. அப்சல் குருவிற்கு மரண தண்டனை நிறைவேற்றியதில், நமது உச்ச நீதிமன்றம், மற்றும் இதர அதிகார வரம்புகளைக் கொண்ட நீதிமன்றங்களின் கருத்துகளை அரசு வேண்டுமென்றே அலட்சியபடுத்தியுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றத்தில் ஏற்படும் தாமதமானது, தண்டனை கைதி மட்டுமல்லாது அவர் மீது அன்பும், நேசமும் கொண்டவர்களுக்கும் மனவேதனையையும், பெருந்துயரத்தையும் ஏற்படுத்தும் என்பது உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கருத்து. மரண தண்டனை குறித்த பிரபலமான பாடபுத்தகம் ஒன்றில், “தண்டனை நிறைவேற்றத்திற்கான நாள் நெருங்கும் போது, குறிப்பாக கைதியின் உறவினர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதனை அங்கீகரிக்கும் விதமாக, மரண தண்டனை இன்றளவும் வழக்கத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில், தண்டனை கைதியை, தூக்கு நிறைவேற்றத்திற்கு முன்பாக அவரது உறவினர்களை சந்திப்பதற்கு அனுமதிப்பதோடு, அவர்களுக்கு தூக்கு தேதியை அறிவிப்பதுடன், தண்டனை நிறைவேற்றத்திற்குப் பிறகு இறந்த உடலை அவர்களிடம் ஒப்படைப்பதும் பொதுவான வழக்கமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்சல் குரு வழக்கில் தண்டனை நிறைவேற்றம் குறித்து, அவரது குடும்பத்தினருக்கு அறிவிப்பு கொடுக்கப்படாததுடன், தண்டனை நிறைவேற்றதிற்கு முன்பாக அப்சல் குருவை அவர்களால் இறுதியாக ஒருமுறை சந்திக்கவும் முடியவில்லை. 2013 பிப்ரவரி 8ம் நாள் விரைவு தபாலில் அறிவிப்பு அனுப்பப்பட்டது என அரசாங்கம் அறிவித்திருப்பது அர்த்தமற்றது. அந்த கடிதமானது காஷ்மீரிலுள்ள அவரது குடும்பத்தினருக்கு, தண்டனை நிறைவேற்றப்பட்டு இரண்டு நாள் கழித்துதான் சேர்க்கப்பட்டுள்ளது!!

2012 மார்ச் - ஏப்ரலில் உச்ச நீதிமன்றமானது, தேவேந்தர் பால் சிங் புல்லர் மற்றும் நரேந்தர் நாத் தாஸ் ஆகிய இரண்டு மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 8 முதல் 11 ஆண்டுகள் தாமதம் செய்த பின்னர் தண்டனை நிறைவேற்றம் செய்ய முனைந்தது தொடர்பான வழக்குகளை விசாரித்தது. நீதிமன்றமானது, இவற்றுடன், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு நீண்ட காலமாக தண்டனை நிறைவேற்றாமல் வைக்கப்பட்டிருக்கும் இதர தண்டனை கைதிகளின் வழக்குகளையும் கருத்தில் கொண்டு, அக்கைதிகள் தொடர்பான விபரங்களையும் கோப்புகளையும் சமர்பிக்க இந்திய அரசுக்கு, உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவரிடம் நிலுவையிலுள்ள கருணை மனுக்கள் தொடர்பான விபரங்களை அரசாங்கம் அளித்தது.

நீண்ட தாமதத்தின் சட்ட தகுதி

நிலுவயிலிருந்த வழக்குளில் ஒன்று அப்சல் குருவின் வழக்கு. மிகநீண்ட தாமதத்திற்கு பின் தண்டனை கைதிகளை தூக்கிலிடுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டி நீதிமன்றம் என்னை நீதிமன்ற நண்பனாக (அமிகிஸ் குரே) நியமித்தது. எனது தரப்பு வாதத்தில் நான் குறிப்பாக அப்சல் குரு வழக்கின் பொருண்மைகளை மேற்கோள் காட்டினேன். 2012 ஏப்ரல் 19ம் நாள் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனை நிறைவேற்றத்தில் ஏற்படும் நீடித்த தாமதத்தின் சட்டத்தகுதி தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருப்பது குறித்து அரசாங்கத்திற்கு முழுமையான தெரிவு இருந்தது. இருந்தும், இந்த வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் அறுதியான தீர்ப்பு வரும் வரையிலும் காத்திருக்க வேண்டிய அரசாங்கமானது, அவ்வாறு செய்யாமல், 2013 பிப்ரவரி 9ம் நாள் அப்சல் குருவை தூக்கிலிட்டது.

மொத்தத்தில், இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மிகவும் இறக்கமற்ற மரண தண்டனையாக அப்சல் குருவின் தூக்கு சரித்திரத்தில் இடம்பெறும்.

- டி. ஆர். அந்தியருஜினா

(இந்த கட்டுரையாளர், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும் ஆவார்)

(பிப்ரவரி 19, 2013 அன்றைய தி ஹிந்து பத்திரிகையில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

மொழியாக்கம்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சா. சபிதா

Pin It