தூக்கு தண்டனைக்கு எதிரான மனித உரிமைக் குரல் உலகம் முழுதும் வலிமை பெற்று வருகிறது. 74 நாடுகளில் மரண தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. 26 நாடுகளில் சட்டப் புத்தகங்களில் மட்டும் மரண தண்டனை இருக்கிறது. ஆனால், அதை அமுல்படுத்துவதில்லை. போர்க் குற்றவாளிகளுக்கு மட்டும் மரண தண்டனை என்ற கொள்கை 15 நாடுகளில் அமுலில் இருக்கிறது. அய்.நா. மன்றமும், மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச நாடுகளிடம் வலியுறுத்தி வருகிறது.

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முகம்மது அப்சலுக்கு, உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை விதித்துள்ளது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. அக்டோபர் 20 ஆம் தேதி அவருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் நாளும் குறித்துவிட்டது. இந்தத் தூக்குத் தண்டனைக்கு எதிராக காஷ்மீரில் போராட்டம் வெடித்து வருகிறது. இது காஷ்மீர் மக்களின் உணர்வு. ஆனால், ‘இந்து’ நாளேட்டில் ஆசிரியருக்குக் கடிதம் எழுதும் பார்ப்பனர்கள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய தீர வேண்டும் என்று கடிதங்களை எழுதி குவிக்கிறார்கள். பயங்கரவாதத்தை மன்னிக்கக் கூடாது என்று வாதிடுகிறார்கள்.

பயங்கரவாதத்துக்கான தண்டனை மற்றொரு பயங்கரவாதமாக இருக்க முடியுமா என்பதே, மனித உரிமையாளர்களின் கேள்வி! தாக்குதலுக்கு வந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். நாடாளுமன்றக் காவலில் இருந்த ஒன்பது பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துவிட்டனர். தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தார் என்பது அப்சல் மீதான குற்றச்சாட்டு.

9 பாதுகாப்புப் படையினரை உயிரிழக்கச் செய்தமைக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயிரையும் பறிக்க வேண்டும் என்பது நாகரிக சமூகத்துக்கு ஒவ்வாத கோட்பாடு அல்லவா? கையை வெட்டிய குற்றத்துக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை தான் வழங்குகிறதே தவிர பதிலுக்கு குற்றம் சாட்டப்பட்டவரின் கைகளை வெட்டச் சொல்வதில்லையே. அத்துடன், தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாலேயே குற்றங்கள் குறைந்துவிட்டன என்பதை எந்த ஆய்வுகளும் உறுதிப்படுத்திடவும் இல்லை.

தென்னாப்பிரிக்க அரசமைப்பு நீதிமன்றத்தின் அரசு தலைமை வழக்கறிஞர், இதுபற்றிக் கூறியதை, இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

“மரண் தண்டனைகள், மீண்டும் குற்றங்கள் நிகழாது தடுத்து நிறுத்தும் என்பது தன்னை மெய்ப்பித்துக் கொள்ள இயலாத ஒரு கோட்பாடு ஆகும். ஏனெனில் குற்றம் செய்யாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருப்போரை நம்மால் ஒரு போதும் அறிந்து கொள்ள முடியாது. குற்றம் செய்யாமல், தடுத்து நிறுத்தப்படாதவர்களை மட்டுமே நாம் அறிவோம்” - என்று மிகச் சரியாகக் குறிப்பிட்டார்.

அப்சலுக்குத் தூக்குத் தண்டனை தர வேண்டாம் என்று, குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்களிடம் கருணை கோருவதற்கு அவரது மனைவியும், தாயாரும் டெல்லி வந்துள்ளார்கள். குடியரசுத் தலைவர் தூக்குத் தண்டனைக்கு எதிரான தனது கருத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ள மிகச் சிறந்த மனித உரிமையாளர்.

காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சர் பதவி ஏற்றுள்ள குலாம் நபி ஆசாத்தும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான பரூக் அப்துல்லாவும், இந்தத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல், பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதை, அலட்சியப்படுத்திவிட முடியாது. துணிவுடன், இந்தக் கருத்துகளை முன் வைத்த அவர்களை, மனித உரிமையாளர்கள் சார்பில் பாராட்ட வேண்டும்.

காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அமைச்சரவையும், குடியரசுத் தலைவரும், மனித உரிமைக் கண்ணோட்டத்தில், முடிவெடுத்து, இந்தத் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

“நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும் மனித உரிமைக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது” என்று, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டுகிறோம்.

Pin It