(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான K.T.தாமஸ், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நான்கு கைதிகளுக்கு மரண தண்டனை விதித்த ஆயத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் ஆவார். கடந்த செப்டம்பர் 2, 2011ல் ஏசியன் ஏஜ் இதழில் வெளியான அவரது கட்டுரையின் மொழியாக்கம் இது)

afzalguru_360இந்திய குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்ததும், தமிழக சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அப்சல் குரு குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் சமூக வலைப்பின்னல் தளமான ட்விட்டரில் சமீபத்தில் பதிவு செய்தவையும், மரணதண்டனை குறித்த விவாதத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது. உண்மையில், பரபரப்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு நீதிமன்றங்கள் இந்த அதீதமான தண்டனையை எப்போதெல்லாம் விதிக்கிறதோ அப்போதெல்லாம் இந்த சர்ச்சை சூடுபிடிக்கத்தான் செய்கிறது. மற்ற நேரங்களில் இது குறித்த விவாதம் துடிப்பற்றே இருக்கிறது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் 26 பேருக்கும் அமர்வு நீதிபதி ஒருவர் மரணதண்டனை விதித்தபோது விவாதம் ஏதும் எழாமலேயே போனது. பின்னர் உச்ச நீதிமன்றம் 22 குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான மரண தண்டனை தீர்ப்பை தள்ளுபடி செய்து, நால்வருக்கு எதிரான மரண தண்டனை தீர்ப்பை மட்டும் உறுதி செய்தது. அப்போதும் கூட கொந்தளிப்பை உருவாக்கக்கூடிய இப்பிரச்சனை பொது விவாதத்திலிருந்து தப்பியது.

இது இவ்வாறிருக்க, வன்புணர்ச்சிக் குற்றத்திற்காக ஒருவருக்கு உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பில் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி தள்ளுபடி செய்தபோதுதான் இப்பிரச்சனை முன்னிலைக்கு வந்தது. மிக நீண்ட காலத்திற்குப்பிறகு அவர் தூக்கில் இடப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உள்ள கைதிகளின் நிலையும் வேறொன்றில்லை, ஏனெனில் மிக நீண்ட காலமாக தூக்குக்கயிர் கண்கள் முன்னால் ஆட, அவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள்.

இந்த நான்கு குற்றம்சாட்டப்பட்டோருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற ஆயத்திற்கு தலைமை வகிக்க நேர்ந்தது எனது துரதிர்ஷ்டம்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முதலில் தூக்கிலிடப்படுவதற்காக தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, என் ஞாபகத்தில், சரித்திரத்தில் வேறு எந்த வழக்கிலும் இருந்ததில்லை. நான் வழக்கறிஞராகப் பணியைத் துவங்கிய காலகட்டத்தில் மரண தண்டனை தீர்ப்பு அடிக்கடி வழங்கப்பட்டு வந்தது. அப்போதெல்லாம், சட்டப்படி, அமர்வு நீதிபதி மரண தண்டனை தீர்ப்பு அளிக்கவில்லையெனில், அதற்கான காரணங்களை அளிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. பின்னர் சட்டம் மாற்றப்பட்டு ஆயுள் தண்டனையே சராசரி தண்டனை ஆன போது, மரண தண்டனை விதிப்பதற்கு அமர்வு நீதிபதிகள், சிறப்புக் காரணங்களை அளிக்கவேண்டிய நிலை வந்தது!

அரிதிலும் அரிதான வழக்கு இல்லையெனில் இவ்வதீதமான தண்டனையை சுமத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் பின்னர் கட்டுப்பாடு விதித்தபோது, சட்டம் மேலும் முறுக்கப்பட்டது. ஆனால் “அரிதிலும் அரிதான” என்ற இந்த கருத்து சொற்பொருளியல் அளவிலேயேதான் இருந்து வந்தது.

ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் மற்ற வழக்குகளை விட குரூரமான மேலோட்டங்கள் அதிகமாக இருப்பதாகத் தோன்றிய போதெல்லாம் உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களும் மரண தண்டனையை விதித்து வந்துள்ளன. பெரும்பாலான கொலைகள் கொடூரமான முறையில் நிகழ்த்தப்படுபவையாகவே இருக்க, ஒரு குறிப்பிட்ட வழக்கை அரிதிலும் அரிதானது என்று தனது சொல்லாடலால் விவரிப்பது நீதிபதியின் விருப்பத்தைப் பொருத்து அமைந்தது. தீவிரவாதிகளின் தாக்குதல்களில் நிகழும் பெரும்பாலான கொலைகள் அரிதிலும் அரிதான வழக்குகளாக கருதப்படவில்லை என்று அறிந்து நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் கொலை செய்யப்படுவது பிரபலங்களாக இருக்கும் பட்சத்தில், அரிதிலும் அரிதானதாக விவரிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்திரா காந்தி படுகொலை வழக்கிலும், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கிலும், ஜெனரல் வைத்யா கொலை வழக்கிலும் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகள் இதை உறுதி செய்கின்றன. ஆனால் 1984இல் நடந்த சீக்கியர் கலவரங்களின்போதைய கொலை வழக்குகள் ஏதும் அரிதிலும் அரிதான வழக்காகக் கருதப்படவில்லை. அரிதிலும் அரிதான வழக்குகள் என்ற கோட்பாட்டை எடுத்துரைத்த உச்ச நீதிமன்றத்தின் பிரபலமான பச்சென் சிங்க் வழக்கின் தீர்ப்பை இயற்றியவர் நீதியரசர் சர்க்காரியா ஆவார்.

இதுபோன்ற வழக்குகளை அடையாளம் கண்டுகொள்வதற்கான அளவுகோல் குறித்து அவர் கூறுகையில், “அரிதிலும் அரிதான வழக்கு என்பது ஆயுள் தண்டனை என்ற மாற்று கேள்விக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளமுடியாத வழக்குகளே ஆகும்” என்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்தபோது சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நிகழ்ந்தமையால் இதைச் சுட்டிக்காட்டுகிறேன்.

அது, நான், நீதியரசர் வாத்வா மற்றும் நீதியரசர் முஹம்மது காத்ரி ஆகியோர் அடங்கிய ஆயம். நளினி குறித்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் அவரையும் குற்றவாளியாகவே அறிவித்தது. ஆனால் மூவரில் ஒரு நீதிபதி தனது காரணங்களை முன்வைத்து, அவர் தூக்கில் இடப்படக்கூடாது என்றார். எனினும், மற்ற இரு நீதிபதிகளும் அவரும் சாகும் வரை தூக்கில் இடப்பட வேண்டியவரே என்று எடுத்துரைத்தனர். ஆகவே, பெரும்பான்மை தீர்ப்புக்கேற்ப அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் முன்னர் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டபோது, இந்த தீர்ப்பு மறுஆய்வுக்கு வந்தது. ஆயத்தின் ஒரு மூத்த நீதிபதி என்ற முறையில் வழக்கறிஞர்களிடம் மறுஆய்வுக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்பதை நான் கூறினேன். நான் அப்படிச் செய்ததற்கான காரணம், வெளிப்படையான தவறுகள் ஏதும் முந்தைய பதிவுகளில் இல்லாத பட்சத்தில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மற்றிக்கொள்ளாது என்பது தான். ஆகவே நாங்கள் அந்த மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய முடிவுசெய்தோம்.

எனினும் அந்த மறுஆய்வு மனு மீதான தீர்ப்பு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் என் மனதில் ஒரு புது யோசனை உதித்தது. அதனால், புதிய அடிப்படையில் அந்த மறுஆய்வு மனுவை அனுமதித்துக்கொண்டு தீர்ப்பைப் பிறப்பித்தேன். மூவர் ஆயத்தில் ஒருவர் ஆயுள் தண்டனைக்குச் சாதகமான நிலைப்பாடு எடுக்க, இரு நீதிபதிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சூழலில், அரிதிலும் அரிதான வழக்குகளை அடையாளம் காண்பதற்கான அளவுகோல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம் என்று கூறினேன். அதாவது, ஒரு நீதிபதி மரண தண்டனைக்கு எதிராக பேசிய சூழலில், குறைவான மாற்று என்பது கேள்விக்கிடமின்றி தள்ளுபடி செய்யப்படவில்லை. மற்ற இரு நீதிபதிகளும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியாக குடியரசுத் தலைவர் நான் கூறியதை ஏற்றுக்கொண்டார். சட்டத்தால் நிறுவப்பட்ட செயல்முறைக்கேற்ப அல்லாமல், ஒரு மனிதனின் உயிரையோ சுதந்திரத்தையோ பறிக்கக்கூடாது என்று அரசியலமைப்புச்சட்டத்தின் சரத்து 21 கூறுகிறது. இதன் பொருள், சட்டம் நியாயமாக, நேர்மையாக, சரியானதாக இருப்பின் உங்களது உயிர் கூட அச்சட்டத்தால் எடுக்கப்படலாம். மரண தண்டனை என்பது ஒரு மனிதனைக் கொல்வதாகும். சட்டத்தின் பாதுகாப்பு இருந்தால் ஒரு நபரைக் கொல்வது குற்றம் இல்லை என்பதே இப்போது சட்டம்! சட்ட அனுமதி இருப்பின் ஒரு மனிதன் கொல்லப்படலாமா?

மரண தண்டனை இருக்க வேண்டும் என்று சொல்வோரும், ஒழிக்கப்படவேண்டும் என்று சொல்வோருமாக, சட்டம் அறிந்தோரும், மனித உரிமை ஆர்வலர்களும் தங்களை இரு குழுக்களாக பிரித்துக்கொண்டுள்ளனர். நீங்கள் ஒருவரைக் கொன்றால் எப்படி உங்களை தண்டனையிலிருந்து விலக்க முடியும்? தண்டனை என்பது என்ன? நீங்கள் உங்கள் குழந்தையை எதற்கு தண்டிக்கிறீர்கள்? ஒருவரை சீர்திருத்தவே அவரை தண்டிக்கின்றீர்கள் என்பது திண்ணம். முன்பெல்லாம் தண்டனைக்கு மூன்று பரிமாணங்கள் கொண்ட நோக்கம் இருந்தது: சீர்திருத்தம், குற்றங்களைத் தடுத்து நிறுத்துவது மற்றும் பழிவாங்குவது. பழிவாங்குதல் என்ற குறிக்கோள் இப்போது வழக்கற்றுப்போன, பட்டிக்காட்டுத்தனமான ஒன்றாக கருதப்படுகிறது. பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்ற கோட்பாட்டை பெரும்பாலான நவீன கால குற்றவியல் நிபுணர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எஞ்சிய இரு நோக்கங்களில், சீர்திருத்தம் என்ற நோக்கம் குற்றம் இழைத்தவரை இல்லாமல் செய்யும் போது, அடையமுடியாததாகிறது.

எஞ்சுவது, குற்றங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கம். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று கூறும் குழுவினர் தங்கள் கூற்றை நியாயப்படுத்த முன்வைப்பதும், மரண தண்டனை குற்றங்கள் நிகழ்வதை தடுக்கும் என்ற வாதமே ஆகும். ஆனால் இது நிஜமாகவே குற்றங்கள் நிகழ்வதை தடுக்கிறதா? இன்றைக்கும் சவுதி அரேபியாவில் வெள்ளிக்கிழமைகளில் ஜுமா வழிபாட்டிற்குப் பின்னர் ஒருவர் காண நிர்பந்திக்கப்படுகிற கொடூரமான காட்சி, குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்படுவதாகும்.

இதற்கான பொருள் என்னவென்றால், மக்கள் தொகை மிகவும் குறைவான ஒரு நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு பின்னரும் குற்றம் புரிவோர் ஒழிக்கப்படவில்லை என்பதேயாகும். ஒரு குற்றவாளி தண்டனையில் இருந்து தப்பினால் மற்றவர்களை அதே போன்ற குற்றங்கள் இழைக்க அது ஊக்குவிக்கும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் மரண தண்டனை நிஜமாகவே குற்றம் இழைப்பதிலிருந்து குற்றவாளிகளை தடுக்கிறதா என்று ஒரு ஆய்வை நாம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. எனக்கு தெரிந்த வரை, மரண தண்டனையின் தாக்கத்தையும் ஆயுள் தண்டனையின் தாக்கத்தையும் எவரும் ஒப்பீடு செய்து பார்த்ததில்லை.

perarivalan_267ஆனால் நம்மிடம் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி மாகாணங்களைச் சார்ந்த பதிவுகள் உள்ளன. திருவிதாங்கூர் அரசர்தான், 1940இல் முதலில் மரண தண்டனையை ஒழித்தார். பின்னர் அதே வருடம் கொச்சியின் அரசரும் இதே போன்றதொரு அறிவிப்பை விடுத்தார். பின்னர் இந்த மாகாணங்கள் 1950இல் இந்திய குடியரசில் இணைந்த போது இங்கு மரண தண்டனையையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரவேண்டியிருந்தது. இது இவ்வாறிருக்க, இவ்விரு மாகாணங்களிலும் 1940லிருந்து 1950 வரையிலும், 1950லிருந்து 1960 வரையிலும் நடந்தேறிய கொலைகளை குற்றவியல் நிபுணர்கள் ஒப்பீட்டு ஆய்வு செய்தனர். மரண தண்டனை நிலுவையில் இல்லாத காலத்தில் இருந்ததை விட 1950லிருந்து 1960 வரையிலான காலத்தில் கொலை விகிதம் அதிகமாக இருந்ததைக் கண்டறிந்து அவர்கள் திகைப்புற்றனர். குற்றம் நிகழ்வதிலிருந்து தடுக்கும் கருவியாக மரண தண்டனை அமையும் என்ற கருத்தில் உண்மையில்லை என்பதை இது தெளிவாக்குகிறது.

இங்கிலாந்தில் சிறு திருடர்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவரசியமான சம்பவத்தை மாபெரும் தத்துவவாதியான ஆர்தர் கொட்ஸ்லர் விவரிக்கிறார். குட்டித் திருட்டுகள் புரியும் நபர்களை மரண தண்டனை தடுக்கும் என்ற எண்ணத்தில்தான் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு திருடன் தூக்குமேடையேற்றப்படும் போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக அக்காட்சியை காண வருவர். அவ்வாறு ஒரு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அக்காட்சியைக் கண்டுகொண்டிருந்த மக்களில் 63 நபர்களின் பணம் அந்நிகழ்ச்சியின் போது திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு செய்திகள் கிடைத்தது. மரண தண்டனை, குற்றத்தைத் தடுக்காது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

இனி எஞ்சுவது மரண தண்டனையைச் சூழும் மனிதத்தன்மையற்ற அம்சங்களே ஆகும். முதலாவதாக, குற்றவாளியை சீர்திருத்துவதற்கான குறிக்கோளை அது அழிக்கிறது. இரண்டாவதாக, உங்கள் முடிவைத் திருத்தும் கடமைக்கு (குறிப்பாக, உங்கள் தீர்மானம் தவறானது என்று பின்னர் தெரியவரும் போது) முன்கூட்டியே முடிவுகட்ட உங்களை நிர்பந்திக்கிறது. மூன்றாவதாக, குற்றவாளியை கொல்வதின் மூலம், சட்டத்தின் மறைவில் இருந்துகொண்டுதான் என்றாலும், நீங்கள் ஒரு கொலையைத் தான் புரிகிறீர்கள். நான்காவதாக, சட்டம் கொடுக்கும் அதிகாரத்தால் ஒருவரை கொல்லும்போது, நீங்களும் அந்த நபரின் பழிவாங்கும் மனப்போக்கையே பகிர்ந்துகொள்கிறீர்கள்.

ஐந்தாவதாக, ஆத்மீகமான முறையில் சொன்னால், உங்களால் திருப்பிக் கொடுக்க முடியாத உயிரை நீங்கள் எடுக்கவும் கூடாது. ஆறாவது காரணம், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றை வைத்து மரண தண்டனை விதிக்க முடிவு செய்வதைக் குறித்ததாகும். வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் இருந்த எனது அனுபவங்களின் அடிப்படையில், சாட்சிகள் சாட்சியம் சொல்ல பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்று என்னால் அதிகாரப்பூர்வமாகக் கூற முடியும். கொலையின் தீவிரத்தை கொலை செய்யப்பட்டவரின் உற்றார் உறவினர் பொதுவாக மிகைப்படுத்தித் தான் கூறுவர். ஆகையால், ஒரு கொலை மிகக் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டது என்ற உங்கள் முடிவு மிக பலவீனமான அடிப்படையைக்கொண்டு எடுத்த முடிவாகவும் இருக்கக்கூடும். மேலும், கொலை வழக்குகளில், குற்றவாளிகளாக கருதப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் இவர்களில் 90 விழுக்காட்டினர் சமூகத்தின் கீழ் படிநிலைகளைச் சார்ந்தோர் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

நான் கொலை புரிவதில்லை, நீங்களும் செய்யாமல் இருக்கலாம். இதற்கு நாம் வளர்க்கப்பட்ட விதமே காரணமாகும். ஆனால், கல்விபெற்ற வகுப்பினரின் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் மதிப்பு தெரிந்த அளவுக்கு சேரியில் வாழ்பவர் மற்றும் நாடோடியாக அலைபவர்களின் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்காமல் இருக்கலாம். அவர்களுக்கு ஆத்மீகம் குறித்தும் தெரியாமல் இருக்கலாம். அதனால் அவர்கள் எந்தவிதமான தார்மீகமான தடைகளும் இன்றி வன்முறையில் ஈடுபடுகின்றனர். மகசேசே விருது பெற்ற கிரண் பேடி எழுதியுள்ள புத்தகத்தைப் படித்த பின்னர் எந்தவொரு குற்றவாளியும் சீர்திருத்தப்படலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அரசோ பொதுமக்களோ சீர்திருத்தம் என்ற இப்பிரச்சனையில் போதிய கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கு குறுக்கு வழிதான் தெரியும்; குற்றவாளியைத் தீர்த்துக்கட்டி அதில் கிடைக்கும் காட்டுத்தனமான மகிழ்ச்சியில் களிப்பது. எனது நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் உங்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன். குற்றவாளியை நிரபராதி என்று நீதிமன்றம் கூறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் சில நேரங்களில், அரிதாகத் தான், நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப்படுவர்.

இது வழக்குகளைப் பரபரப்பாக்குவதின் விளைவே ஆகும். குற்றம் சுமத்தப்பட்டவர் உண்மையில் நிரபராதி என்று நீதிபதி கண்டறிந்த ஒரு உதாரணம் சரித்திரத்தில் உள்ளது. இருப்பினும் குரோதம் நிறைந்த மக்கள் கூட்டம் ஒன்றை சமாதானப்படுத்துவதற்கு அவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டியிருந்தது. இது 2000 வருடங்களுக்கு முன்னர் எருசலேம் நகரில் நடந்தது. அந்த நீதிபதியின் பெயர் பொந்தியு பிலாத்து என்றும் அந்த கைதியின் பெயர் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு என்றும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இல்லை!

(K.T. தாமஸ், T.S. ஸ்ரீநிவாச ராகவனிடம் கூறியது - http://www.asianage.com/ideas/death-penalty-nothing-brutal-murder-state-814)

தமிழில்: சபிதா, இராபர்ட் சந்திரகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It