உலகில் எந்த ஒரு குற்றத்துக்கும் வழங்கப்படும் தண்டனையிலும் மிக அதிகபட்சமான தண்டனை மன்னிப் புத்தான் என்பது நீதிமொழி. நாட்டில் செய்யப்படும் குற்றங்களை எல்லாம் காவல்துறை கண்டுபிடித்து, புலனாய்வு செய்து, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், அல்லது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்து நீதிமன்றம் முன்பு நிறுத்துகிறார்கள்.
பல சட்டங்களில் பல்வேறு வகையான குற்றங்களுக்கு அதிகப்பட்ச ஜெயில் தண்டனையாக “ஆயுள் தண்டனை” என்ற வாசகம் இருக்கிறது. ஆயுள் தண்டனை என்றால் என்ன? ஆயுள் முழுவதும் அவர் ஜெயிலில் இருக்க வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட சில ஆண்டுகள் இருந்தால் போதுமா? என்ற வகையில் காலங்காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. உச்சநீதிமன்றத்தில்கூட சில வழக்குகளில் “ஆயுள் தண்டனை என்பது அவர் கடைசி மூச்சு வரை ஜெயிலில் இருக்க வேண் டும்” என்று குறிப்பிட்டுள்ளது. பல நேரம் மாநிலங்களில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே விடுவது மரபாக இருக்கிறது.
உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி கள் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தால் போதும் என்று உத்தர விட மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கி, சில நிபந்தனைளுடன் தீர்ப்பு வழங்கியுள்ளது. கற்பழிப்போ, அல்லது கொலையோ செய்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும், இத்தனை ஆண்டுகள் ஜெயிலில் இருக்க வேண்டும் என்று உறுதியாகக் குறிப்பிட்டு உச்சநீதி மன்றமோ அல்லது உயர்நீதிமன்றமோ வழங்கிய தீர்ப்புகளுக்கும் மத்திய சட்டத்தின் அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட்டு, சிறையில் இருப்பவர்களுக்கும் சி.பி.ஐ. போன்ற மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் இருப்பவர்களுக்கும் இந்த 14 ஆண்டுகள் என்பது பொருந்தாது என்று கூறி யிருக்கிறது. இந்தத் தீர்ப்பைப் பொதுவாக வரவேற்கும் போது கொலை, கற்பழிப்புக் குற்றங்களில் ஈடுபட்டவர் களுக்குப் பொருந்தாது என்பது உள்பட சில நிபந்தனைகளை விதித்து இருப்பது எதிர்பார்க்கும் பலனை அளிக்காது. பெரும் பாலும், இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்குத்தான் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு 14 ஆண்டுகள் என்று நிர்ணயிப்பதன் மூலம், அவர்கள் ஜெயிலில் மனம் திருந்தி வெளியில் வந்தபிறகு மிகுந்த நம்பிக்கையோடு ஒழுக்கமான ஒரு வாழ்க்கையைத் தொடங்குவதற்கு நிச்சயமாக இந்த தீர்ப்பு வழிவகுக்கும், இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகள் வெளியில் வந்த பிறகு நல்ல தொரு தொழிலைத் தொடங்குவதற்காக அவர்கள் திறனை வளர்க்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருவது பாராட்டுக் குரியது.
ஜெயிலில் இருக்கும் போதும் இந்தப் பயிற்சிகளால் சம்பாதித்து வெளியே வந்தபிறகும் அதே தொழிலைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள்.
சிறைவாழ்க்கை அவர் களைத் திருத்தியிருந்தால் அவர்கள் வெளியேவர ஏன் தடை? பொதுவாக ஆயுள் தண்டனை என்பதை மாற்றி 14 ஆண்டு தண்டனை என்று நிர்ணயிக்கப் பரிசீலனை செய்யலாமே!
(நன்றி : தினத்தந்தி, 4-8-2015)