பிரான்சில் சென்ற நூற்றாண்டின் முதல் கால்கூற்றில் வரலாற்றினை எழுதுதலில் அன்னல் சிந்தனைப்பள்ளி தோன்றியது. அதற்கு முன்புவரை வரலாற்றில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட தளங்கள் கண்டறியப்பட்டு அத்தளங்களில் இச்சிந்தனைப்பள்ளியின் ஆசிரியர்கள் தம் கவனிப்பைச் செலுத்தினர். அவ்வாறு கவனம் பெற்ற தளங்களில் கொள்ளையர் பற்றிய ஆய்வுமாகும். இதனை முதலில் ஆயத்தொடங்கியவர் இப்பள்ளியினைச் சார்ந்த Fernand Braudel. இரண்டாம் பிலிப் காலத்தின் மத்தியதரைக்கடல் நாடுகள் என்று தலைப்பிடப்பட்ட தம் நூலில் அய்ரோப்பாவின் கொள்ளையர் பற்றிய ஆய்வுக்குறிப்புகளைத் தந்துள்ளார். அதே சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்த Marc Bloch என்பவரும் Feudal Society என்ற தம் இரட்டைத் தொகுதி நூலில் கொள்ளையர் இயக்கத்தினை விளக்கியுள்ளார். அடுத்து Eric Hobsbawm கொள்ளையரை முதன்மை ஆய்வுக்களமாகத் தெரிவு செய்து நூல்கள் வெளியிட்டுள்ளார். அவருடைய ஆய்வுநூல்கள் வெளிவந்தவுடன் David Shulman தென்னிந்தியப் பின்புலத்தில் தமிழக வரலாற்றில் கொள்ளையர் பற்றி ஆய்ந்துள்ளார். David Arnold, William Blackburn போன்றோராலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும், இம்மூவரின் ஆய்வுத்தடம் நா.வானமாமலையின் கட்டுமாணத்தில் நின்று உருவானது. என்றாலும், இப்புதிய ஆய்வுப்போக்கினைத் தொடங்கி வைத்தவர் அன்னல்பள்ளியினைச் சேர்ந்தோரே. ஆனால், இது மார்க்சிய சிந்தனையின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. எப்படியெனில், எந்த ஒரு அரசும் வருவாய்த்துறைமூலமாக மக்களைக் கொள்ளையிடுகிறது என்று மார்க்ஸ் வரையறுத்தார். Eric Hobsbawm கொள்ளையர் கூட்டம் ஆட்சிக்கூட்டமக மாறியதனை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.
கொள்ளையர் என்ற தமிழ்ச்சொல்லிற்கு Tamil Lexicon, DED இரண்டிலும் roberry, plunder என்று பொருள் அறியலாம். அதாவது ஒருவருக்குச் சொந்தமானப் பொருளினை அவரின் அனுமதியின்றி பறித்துக்கொள்ளுதல் என்று இதற்கு விளக்கம் கொள்ளலாம். அரசியல், ஆட்சித் தளங்களில் இதற்கு பல பொருள்களைத் திரட்ட இயலும்.
முன்னோடி ஆய்வுகள்
நிலமானியமுறை உருபெற்று வளர்நது வரும் தொடக்கக் காலங்களில் கொள்ளையர் இயக்கமும் தொடங்கியுள்ளது என்று Marc Bloch தம் நூலில் வெளிப்படுத்தியுள்ளார். தொடக்கத்தில் ஒருநாட்டின் படைவீரர்களே பிறிதொரு நாட்டின் கொள்ளையராக இயங்கியுள்ளனர் என்பதனைச் சான்றுகளுடன் நிறுவினார். காட்டாக கி.பி.890 இல் மத்தியதரைக்கடல் பகுதியில் புயற்காற்றில் கரையொதுங்கிய ஸ்பானிஷ் கப்பல் Saint-Tronez அருகே நின்றது. பகல் நேரங்களில் கப்பலில் பதுங்கிக் கொண்ட இக்கப்பல் பணியாளர்கள் இரவுநேரங்களில் அருகிலிருந்த கிராமங்களில் கொள்ளையிட்டனர். கிராமத்து மக்களைப் படுகொலை செய்தனர். மலைகளிலும், வனங்களிலும் ஒளிந்துகொள்வது அவர்களுக்கு ஏதுவாக அமைந்தது. இதே காலக்கட்டத்தில் அரபியர்கள் முட்புதர்கள் நிறைந்த/அடர்ந்த மலையுச்சிகளில் மறைந்திருந்தனர். நாட்டுபுறத்து மாவட்டங்களை (country districts) கொள்ளையிட்டனர். தொங்குபாறைகள் (abbeys) கொள்ளையர்கள் பதுங்கிக் கொள்ள ஏதுவாக அமைந்திருந்தன.
Navalesa என்ற இடத்திலிருந்த ஒரு மடாலயத்திலிருந்து தப்பியோடிய துறவிகள் சிலர் கி.பி.960 இல் கொள்ளையரால் கொல்லப்பட்டனர். ரோமிலுள்ள அப்போஸ்தலர்களின் சமாதிகளை தரிசிப்பதற்கு வந்த Anglo-Saxon பயணிகளை வழிபறி கொள்ளையர்கள் (920/921) அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். கி.பி.1000வது ஆண்டுகளில் ஸ்பெயினில் நிகழ்ந்த போர்களில் கடற்கொள்ளையும் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இதில், வழிபறி கொள்ளையரும் கலந்திருந்தனர். Sarcenes என்ற கொள்ளையர் கூட்டத்தின் ஊடுருவல் மேற்கு ஐரோப்பாவை நிலைகுலையச் செய்தது. இவர்கள் கி.பி.842 இல் Rhone பகுதிவரை சென்றனர். Arles நதிவரை சென்று நதியின் இருமருங்கிலும் அமைந்திருந்த கிராமங்களில் கொள்ளையிட்டனர். கி.பி.848 இல் கிரேக்க கடற்கொள்ளையர் Marseilles என்ற நகரினைக் கொள்ளையிட்டனர். கி.பி.972 இல் இத்தாலியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த Clunny என்ற மடாலயத்தின் தலைவர் வழிபறித்திருடர்களால் பிடிக்கப்பட்டார். மடாலயத்துறவிகள் ஒரு கணிசமானத் தொகையினை அளித்தபிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.
கி.பி.11 ஆம் நூற்றாண்டில்கூட அரபிய கடற்கொள்ளையர் கிறித்தவர்களைப் பிடித்து அடிமைகளாக ஸ்பெயினுக்கு அனுப்பினர். கி.பி.1178 இல் Marseilles என்ற இடத்தில் நடத்தப்பட்ட கொள்ளையர் தாக்குதலில் பலர் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டனர். ரஷ்யாவின் ஸ்டெப்பி புல்வெளியில் அலைகுடிகளாக இருந்த இடையர்கள் திருடர்களாகவும் இருந்தனர். அவர்கள் தம்மைக் கொள்ளையராக ஆக்கிக் கொண்டனார்.
வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கொள்ளையர்கள் முற்றுகையிட்ட மக்கள்தொகையினரை துயரப்படுத்தாமல் இருக்க அவர்களிடம் பெருமளவு பணத்தினை வேண்டினர்;சில சந்தர்ப்பங்களில் அவர்களிடமிருந்து நிரந்தரமாக பணம் கேட்டுக் கொண்டேயிருந்தனர். Bavaria, Saxony போன்ற நிலப்பகுதிகள் அடிக்கடி இதுபோன்ற தொந்தரவிற்கு ஆளாயின. இதுபோன்றே Hungery எல்லைப்பகுதிகளில் மக்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
கொள்ளையர்கள், ஐரோப்பாவில் கோட்டை நகரங்களைத் (fortified towns) தாக்கினர். Pavia என்ற ஒரு முக்கிய நகரம் இவ்வாறு தாக்கப்பட்டது. கொள்ளையரைக் கண்டு கிராமவாசிகள் அஞ்சினர்; மடாலாயங்கள் பயந்தன. ஒதுக்கமான நகரங்கள் தாக்கப்படன. நகரக்கொள்ளைகளில், சிறையிலடைக்கப்பட்ட நபர்கள் கைப்பற்றப்பட்டனர். இளம்பெண்கள், இளம்பையன்கள்தவிர அனைவரும் கொல்லப்பட்டனர். பையன்களும், பெண்களும்கூட கொள்ளையர்களின் தேவைக்காக வைத்துக் கொள்ளப்பட்டனர்;அவர்கள் பெரும்பாலும் விற்கப்பட்டனர். கி.பி.954 இல் ஒரு கூட்ட நெரிசலில் பிடிக்கப்பட்ட ஒரு உயர்குடியினைச் சேர்ந்த பெண், நகர் ஒன்றில் விற்கப்பட்டார். பலர் Danube வட்டாரத்தில் பிடிக்கப்பட்டு கிரேக்க வணிகர்களிடம் விற்கப்பட்டனர்.
மத்தியதரைக்கடலின் நிலப்பகுதியிலும், கடலிலும் நிகழும் banditry இன் பொதுவான கூறுகள் (many affinities) பல உண்டு என்பதனை Fernand Braudel தம் ஆய்வில் விளக்கினார். கொள்ளையர்கள் ஒரு திட்டமிட்டமுறையில் இயங்கியுள்ளனர் என்பார்.
கொள்ளையர்கள் உருவானதனை காலத்தால் கணக்கிட இயலாது. எப்போது மக்கள் கடற்புரங்களில் வாழத்தொடங்கினார்களோ அப்போதே கொள்ளையர் கூட்டமும் உருவானது. இவர்களை அழிக்கமுடியவில்லை. கொள்ளையர்கள் இன்றும்கூட இயங்குகின்றனர். கால ஓட்டத்தில் இவர்கள் தம் பெயரினையும், தம் அமைப்பினையும் மாற்றிக்கொள்கின்றனர். இவர்கள் Malandrini, Masuandieri, Funorusciti bandit என்று பலவாறாக அழைக்கப்பட்டுள்ளனர். Masuandieri என்பவர் உண்மையில் கூலிப்படையினர். Funorusciti என்பவர் கொள்ளையர். விளக்கமான பொருளில், இவர்கள் அனைவருமே கொள்ளையர். இவர்களை misfit, rebel against society எனச் சுட்டலாம் என்று Fernand Braudel மதிப்பிடுவார். கொள்ளையரின் துன்பத்திலிருந்து மத்தியதரைக்கடலின் எந்தப்பகுதியும் தப்பவில்லை. Anatolia, Calabria, Albania போன்ற பகுதிகளில் பலவகையான கொள்ளையர் இயங்கினர்.
கொள்ளையர் இயக்கம் வெவ்வேறு முகம்கொண்டு அரசியல், சமூகம், பொருளியல், தீவிரவாதம் போன்ற தளங்களில் தொழிற்பட்டது. இடைக்காலத்தில், Alexandria, Egypt, Damaascus, Allepe போன்ற நகரங்களின் வாயில்களில் Naples நகரினைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொள்ளையரைக் கண்காணிக்க காவற்கோபுரங்கள் அமைக்கப்பட்டன. ஸ்பெயினில், தபால்காரர்கள் வழிபறி செய்யப்பட்டனர். Portugal, Venice, Italy முழுவதும் Ottoman பேரரசு முழுவதும் கொள்ளையர் இயங்கினர். சிறு சிறு குழுக்களாக இயங்கினர். சிறுபடை போல் இயங்கிய இக்கொள்ளையர் அரசுகளுக்கு எரிச்சலை ஊட்டியது. ஆனால், இவர்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு இருந்தது. இவர்கள் சிரமமின்றி Catalan Pyreness முதல் Granada வரையும் Albania முதல் Black Sea வரையும் இயங்கினர்.
Fernand Braduel, Bandit and the State என்ற தலைப்பில் கொள்ளையர் பற்றி ஆய்ந்தார். இவர்கள் நிறுவன அரசுகளுக்கு எதிராக வஞ்சம் தீர்க்கும் நோக்குடன் இயங்கினர் என்று அறிந்தார். அவர்கள் அரசியல், சமூக கட்டமைப்பினைக் காப்பவராகக் கருதப்பட்டனர். இவர்கள் கொடூரமான அரசுகளை (vile governments) எதிர்த்தனர். இத்தாலியின் மத்திய குடியரசுகள் (medieval republics) இது போன்றுதான் இயங்கின. Sicilly இல் கொள்ளையர்களுடன் பார்வையற்ற பாடகர்களும் இருந்தனர். இவர்கள் urvi என்று அழைக்கப்பட்டனர். இப்பாடகர்கள் ஒரு எளிய வயலினைக் கொண்டு (a kind of small, dustry violin) பாடல்களை இசைத்தனர். இவர்களின் இசைப்பாடல்களை இசைப்பதற்கு மக்கள் கூட்டமாகக் கூடினர். இதுபோன்ற கொள்ளையர் கூட்டம் Spain னின் Andulasia பகுதியில் மிக எளிதாக Heroes என்ற அளவிற்கு உயர்ந்தனர். Yugoslav, Romania மொழிகளில் நாட்டுப்புறப்பாடல்களில் Haiduks என்ற கொள்ளையர் பற்றிய கதை உண்டு. கொள்ளையர்கள் தவறுகளைத் திருத்தும் நபர்களாக (righter of wrongs) கருதப்பட்டனர். ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும், நீதியை நிலை நிறுத்துவதற்கும் எங்கும் வஞ்சம் தீர்ப்பதற்கும் கொள்ளையர் இயங்கினர். Calabaria என்ற பகுதிலிருந்த ஒரு கொள்ளையர் நீதிமன்றத்தில் தாம் செல்வந்தர்களின் சொத்துகளை கொள்ளையடித்து அவற்றை ஏழைகளுக்குத்தரும் Robinhood என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். இவர் நாள்தோறும் ஜெபமாலை வைத்திருக்கும் சாமியாரிடமும், கிராமப்பூசாரியிடமும் ஆசிபெற்று வந்தார். தனிப்பட்ட தமக்கு வேண்டிய நீதியை நிலை நாட்டுதற்கு தம் முப்பது வயதிற்குள் முப்பது பேரினைக் கொன்றார்.
கொள்ளையர்கள் பெரும்பாலும் அரசு அதிகாரம் வலுபெற்றிராத நிலப்பகுதிகளில் இயங்கினர். மலைகள் நிறைந்த பகுதியில் அரசுபடைகள் இயங்கமுடியாது. அங்கு ஆளும் உரிமையினை நிலைநாட்டுதற்கு இயலாது. இவர்கள், பெரும்பாலும் இருநாடுகளிடையிலான எல்லைப்பகுதிகளில் இயங்கினர். காட்டாக, 16 ஆம் நூற்றாண்டில் கொள்ளையர்கள் Venice, Turkey இடைப்பட்ட நிலப்பரப்பில் இயங்கினர். 1561இல் கொள்ளையரை ஒடுக்கும் பொருட்டு கூட்டு முயற்சி மேற்கொள்வதற்காக France இன் அரசர் Philip II டன் உடன்பாட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இது வெற்றிபெறவில்லை. Rome, Naples என்ற இரு அரசுகளும் இதுபோன்றதொரு ஒப்பந்தத்தினைச் செய்தன. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்பட வில்லை. Venice கொள்ளையர்களால் பாதிக்கப்டும்போது Naples நகருடன் 1572;1580 களில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி, இவ்விரு அரசுகளும் தங்கள் எல்லைப்பகுதியில் ஆறு மைல் தொலைவு அளவிற்கு குற்றவாளிகள்மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஒத்துக்கொண்டனர். 1578 இல் Marquis of Montesar Calabrian பகுதியிலுள்ள கொள்ளையரை ஒடுக்கும் நடவடிக்கையில் Malta, Lipari Islands போன்ற அரசுகளுக்கு முன்கூட்டியே செய்தியனுப்ப்பட்டது. ஆனால், நாடுகளிடையேயான இதுபோன்ற பேச்சுவார்த்தை தேசிய இறையாண்மையினை (national soverignty) இழுத்ததால் நாடுகளிடையேயான நம்பிக்கையற்ற தன்மையினை உருவாக்கியது. குற்றவாளிகளை பரிமாறிக்கொள்வது அத்திபூத்தாற்போல் நடந்தது; சிறைக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டனர். இது போன்றதொரு பரிமாற்றத்தில் Rizzodi Scponara என்ற Naples, Sicily பகுதிகளில் 25 ஆண்டுகளாக கொள்ளைசெய்து வந்தவர் விசாரணைக்கு அழைத்துவரப்படும் வழியிலேயே நஞ்சுவைத்து கொல்லப்பட்டார்.
ஒவ்வோர் அரசும் தம் தம் நிலப்பிரதேசத்தினை சட்டப்படி பாதுகாக வேண்டும். ஆனால், இது எளிதன்று. கொள்ளையர்கள் ஆழமாக வேர்விட்டுள்ள பகுதிகளில் இதற்கு சாத்தியமே இல்லை. 1578 இல் Naples ஆட்சியாளர், Calabria வின் கொள்ளையர் தலைவர்மேல் தாக்குதல் தொடுத்தார். இக்கொள்ளையர் விளைநிலங்களை அழித்தார். வழிபயணிகளைக் கொன்றார். சாலைகளில் தடைகளை உருவாக்கினார். இவரால் தேவாலயங்களின் புனிதம் அபுனிதமாக்கப்பட்டது. பணத்திற்காக ஆள்களைக் கடத்தினார்.
Spain னில் கொள்ளையரை ஒடுக்குவதற்காக expeditionary force என்ற படை உருவாக்கப்பட்டது. குதிரைப்படை கொண்ட இவர்கள் கொள்ளையரை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்டனர். ஒரு கொள்ளையரின் தலைக்கு 30 ducats எனும் ஸ்பானிய பணம் அறிவிக்கப்பட்டது; கொள்ளையர் தலைவருக்கு 200 ducats அறிவிக்கப்பட்டன. Don Pedro என்ற expeditionary force ன் தலைவர் 17 கொள்ளையரை கொன்று அவர்களின் தலைகளை Naples நகரின் வாயில் கதவில் சொருகிவைத்தார். சிலர் சிறையிலடைக்கப்பட்டனர். மாரிக்காலத்தில் எடுக்கப்பட்ட இம்முயற்சி சரியாக பலனளிக்கவில்லை. கி.பி.1580 இல் வெனிஸ் நகரின் வணிக முகவர் அரசாங்கம் முழுவதும் கொள்ளையர்கள் மலிந்துள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.
மேற்சொல்லப்பட்ட Fernanad Braduel, Marc Bloch என்ற இரு அறிஞர்களின் கொள்ளியர் பற்றிய குறிப்புகளின் அடிப்படையிலேயே Eric Hobsbawm கொல்ளியர் பற்றிய ஆய்வினை தொடார்ச்சியாக மேற்கொண்டார். அவை கீழே தரப்படுகின்றன. இக்கருத்துகள் அவர் எழுதிய இரு நூல்கலில் இருந்து ( Primitive Rabales , Bandits ) எடுக்கப்பட்டன
கொள்ளையர் : ஒரு சமூக விளக்கம்
கொள்ளையர் இயக்கம் வேளாண்சமூகத்தின் வாழ்க்கைத் திட்டமன்று; சில சூழல்களில் இருந்து தப்பிக்கவே இவ்வியக்கம் வேளாண்குடிகளுக்கு சுய உதவியாக அமைகிறது. பொதுவாக, கொள்ளையர்கள் தாமாக முன்வந்து சரணடைவர். அவர்கள் வேளாண்மை தவிர வேறு தொழில் அறியாதவர். அவர்கள் இயக்கவாதிகள் (activists); கருத்தியலாளர்கள் (not ideologists) அன்று. அவர்கள் தேவதூதர்களும் அன்று. அவர்களின் இயக்கப்போக்கினின்று எவ்வித அரசியல், பொருளியல் திட்டங்களையும் சிந்தனைகளையும் பெற இயலாது.
கொள்ளையர்:ஆய்வின் தேவை
கொள்ளையரை கிரிமினல் கொள்ளையர் சமூகக்கொள்ளையர் என்று தனித்தனியே பிரித்து ஆராய்ச்சி செய்ய இயலாது. சமூகக் கொள்ளையர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் தம் தம் சமூகத்தில் ஆழ்ந்த தாக்கத்தினை உருவாக்கவில்லை. ஆனால், குற்றக்கொள்ளையர்கள் Robinhood போன்று ஒரு படிமத்தினை உருவாக்குவர். வணிகர், செல்வச்செழிப்புள்ள பயணிகள், எழைகளை இரக்கமற்று தாக்கும்போது, ஏழைகளுக்கு Robinhoods உதவிசெய்வர். எனவே, சமூக, பொருளியல், வரலாற்று ஆய்வாளர்களுக்கு கொள்ளையரின் சமூகக் கட்டமைப்பு பற்றி அறிவது முக்கியமானது. பெரும்பாலான கொள்ளையர்கள் கதைகளிலும், பாடல்களிலும் விதந்து பேசப்படுகின்றனர். அவர்களின் பெயர் விபரங்கள் பற்றி ஓரளவே குறிப்புகள் கிடைக்கின்றன. கொள்ளையர் பற்றிய புனைவுகளில் யதார்த்தம் இரண்டாம் இடம் பிடிக்கும். இவர்களைப்பற்றி ஆவணக்காப்பகங்களில் சான்றுகள் கிடைப்பது அரிது. அரசியல் ரீதியாக சமூகக்கொள்ளையர்கள் பற்றிய வரலாறு ஒரு நாடகத்தன்மை வாய்ந்த்து. அரசர்களும், பேரரசர்களும்கூட கொள்ளையராகத்தான் வாழ்க்கையினைத் தொடங்கினர்.
கொள்ளையரின் நோக்கம்
அச்சமூட்டி மக்களையும், மூலவளங்களையும் கைப்பற்றுவதே சமூகக்கொள்ளையரின் நோக்கம். எனவே, இவற்றை ஆட்சி, அதிகாரம், அரசு, என்ற பின்னணையில் அறிதல் நலம். நாட்டுபுறப்பகுதிகளில் இவ்வேலையினை நிலவுடைமையாளரும், ஆயர்குடிகளும் செய்துவந்தனர்.
கொள்ளையர் பற்றிய பாடல்கள்
கொள்ளையர் பற்றிய பாடலுக்கும், கதைப்பாடலுக்கும் இடையே இருவித சிக்கல்கள் உண்டு. முதலில், அதாவது அவர்களை அரசியல் அளவிற்கு உயர்த்தி அவர்களுக்கு சமூக மரியாதையினை உருவாக்குவது. அதாவது, Robinhood என்ற பாத்திரத்தினை Huntington பிரபுவாக உயர்த்திப் பார்ப்பது. இரண்டாவதாக, கொள்ளையரை ஆளுமையுள்ள ஒரு பெரியமனிதர் அளவிற்கு உயர்த்துவது. ஆனால், உண்மையிலேயே Hungerian வேளாண்கொள்ளையர்கள் Sandor Rosa, SobryJoszi என்ற இருவரும் பெருமை வாய்ந்த பழைய குடும்பத்திலிருந்து வந்தவர்.
கொள்ளையரின் தோற்றம்
கொள்ளியரின் ஆடை அணிகலன்கள்:
புகழ்பெற்ற கொள்ளையர் Lampiqo வின் ஆடை அணிகலன்கள்
Hat: தொப்பி, தோலினால் செய்யப்பட்டது. இது ஆறு சாலமன் நட்சத்திர வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
Neck kerchief : கழுத்துத் துணி. இது பூவேலை செய்யப்பட்ட சிவப்புநிற பட்டுத்துணி.
Blanket: தரைவிரிப்பு. இது அச்சிடப்பட்ட calico linen with cotton.
Sandals:நன்கு தரமாக செய்யப்பட்ட ஒரு ஜோடி செருப்பு.
கொள்ளையர் வகைகள்
கொள்ளையர் மூன்றுவகைப்படுவர்
I Noble robbers or Robinhoods :இவர்கள் நற்கொள்ளையர் என்று அழைக்கப்படுகின்றனர்.
II Haiduks:தொழில்முறை திருடர்கள்
III Terror bringing avengers :இவர்கள் பழிவாங்கும் கொள்ளையர் என்று வகைபடுத்தப்படுவோர்.
ஆனால், இவர்களிடையே பொதுத்தன்மையினை வரையறுக்க இயலாது.
கொள்ளையர் பற்றிய வரையரை
- இவர்களின் சட்டமீறுதல் குற்றவிழைவினால் உருவாகவில்லை; அநீதியால் பாதிக்கப்பட்டதால் உருவானது.
- தவறுகளை திருத்துபவர்.
- செல்வரிடம் எடுத்து எளியோரிடம் தருபவர்.
- அவர்கள் யாரையும் கொள்வதில்லை;தற்காப்பிற்கும் பழிவாங்குதலுக்கும் சிலரைக் கொல்வர்.
- பழிவாங்குதலில் இவர் மீண்டுவந்தால் இவர்கள் மக்களால் பெரிதும் மதிக்கப்படுவர்.
- இவர்கள் தம் மக்கள் கூட்டத்துடனேயே இருந்து அவர்களை விட்டு அகலாதவர்.
- மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர், போற்றப்படுபவர், உதவி செய்பவர்.
- உலகம் முழுவதும் இவர்கள் துரோகத்தால் காட்டிகொடுக்கப்பட்டு இறப்பர்.
- இவர்கள் அரசர்களுக்கும், பேரரசர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை; ஆனால், வட்டாரத்தலைவர்களுக்கும், நாட்டாண்மைகளுக்கும் பண்ணையார்களுக்கும்எதிரானவர்.
இதனை விமர்சனமாக இப்படிக் கூறலாம். அதாவது பெரிய அதிகாரத்துடன் இணக்கம்; சம அளவு அதிகாரம் கொண்டவர்களுடன் பிணக்கம். அதாவது ஒரு புறம் அனுசரணை; மறுபுறம் கோரோசணை.
Noble Robbers சமூகநலக் கொள்ளையர்
இவர்கள் தனிமனிதரை துன்புறுத்துவது இல்லை;கூட்டமாக இருப்பவரை கொள்ளையடித்தனர். இவர்கள் எப்போதும் கொடுரமான கொள்ளையருடன் மோதுவர். போலந்தில் இருந்த Salapkk என்ற கொள்ளையர் தனிமனிதரை துயறுத்தியது இல்லை. ஏழைகளுக்கு உதவியுள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு இனிப்புகள் தருவார். வங்கியில் கொள்ளையடித்த பணத்தினை பொதுமக்கள் முன் கொட்டி எடுத்துக்கொள்ளச் சொல்வார். இவர் போலந்தின் விடுதலைக்கும் போராடியுள்ளார்.
ஐரோப்பாவில் தொழிற்புரட்சிக்குமுன் இருவித கொள்ளைக்கூட்டங்கள் உருவாயின: இவற்றை உருவாக்கியவர்கள் புறக்கணிக்கப்பட்ட மக்கள், இரகசிய குழுக்கள். இதுபோன்ற குழுக்கள் சீனம், வியட்நாம் போன்ற நாடுகளில் இயங்கின. அதாவது 1700 களின் பிற்பகுதியில். அவை சிசிலியில் இயங்கிய மாபியா போன்றது. இதனை இன்னும் நாம் சரிவர புரிந்துகொள்ளவில்லை. இவர்கள் நற்கொள்ளையருடன் எளிதில் கலப்பர். இதுபோன்ற அமைப்புகளே சமூகக் கொள்ளைக்கூட்டமாக மாறி பிறகு அரசியல் கலகத்தின் உள்கட்ட ஆட்களாக மாறுகின்றனர். இருந்தபோதும் சமூகக்கொள்ளையர்கள் பிறகொள்ளையரிடமிருந்து பிரிக்கமுடியாதவர்களாக இருந்தனர்.
பழிவாங்கும் கொள்ளையர்
இவர்களின் இயக்கத்தன்மைகளாக சில வரையறுக்கப்பட்டுள்ளன.
- காரணகாரியங்களுக்கு உட்பட்ட வன்முறையும், கொலையுமே சமூகக்கொள்ளையரின் மதிப்பினை நிர்ணயிக்கும்.
- ஒழுக்க நியதிகளுக்கு (moral standards) உட்பட்டு அவர்களின் சமூக இயல்பு அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது.
- இவர்கள் தீவிரமாகவும், குரூரமாகவும் இயங்குவார்கள் என்று மட்டும் எதிர்பார்க்க இயலாது. இக்குரூரம் அவர்களின் பழிவாங்கும் நடவடிக்கை.
- அவர்களின் தீவிரவாதத் தன்மையே அவர்களின் மீதான மரியாதையினைக் கூட்டும்.
- அச்சமூட்டும் நடவடிக்கையால் அவர்கள் கதாநாயகர்களாக மதிக்கப்படவில்லை.
- அவர்கள் இயல்பாகவே பயங்கரமானவர்கள். அவர்களில் பலர் தவறினை திருத்திக்கொள்பவர் அல்ல; பலர் பழிவாங்கப்படுவோர்.
- அவர்கள் அதிகாரத்தினை செயல்படுத்துபவர். அவர்கள் நீதிதேவதையின் தூதுவர்கள் அன்று; இரத்தத்திற்கு இரத்தம் பழிவாங்கும் குணமுடையவர்.
- அவர்கள் ஒருவகையான சமூகக்கொள்ளையர். ஒழுக்கம் சார்ந்த உலகில் சஞ்சரிப்பவர்களாக இலக்கியத்தில் வருணிக்கப்படுபவர்.
சமூகக்கொள்ளையர் இயங்கும் நிலவியல் பரப்பு
இவர்கள் மக்கள் கூட்டமும் அதிகாரத்தில் இருப்போரும் நெருங்கமுடியாத மலையும், காடும் சார்ந்த பகுதியில் கூட்டமாக (பொதுவாக பெண்கள் இல்லை) ஆயுதங்களுடன் வன்முறையுடன் இயங்குவர். இவர்கள் மக்களைச் சுரண்டுபவர்களையும், சமூக, பொருளாதார அரசியல் கட்டமைப்பையும் எதிர்ப்பவர். இயற்கை வளங்களையும், சட்டத்தினையும், அதிகாரத்தினையும் அடையத்துடிப்பவர்களைக் கேள்வி கேட்பவர். இந்த சமூகக்கொள்ளையரின் முக்கியக் கூறுகள் என்பன சமூகம், அரசு, வர்த்தகம் போன்றவற்றுடன் இணைந்தது. எனவே, கொள்ளை (banditry) சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பிற்கு வெளியில் இயங்கவில்லை.
உலக வரலாற்றில் கொள்ளையர்
சீனத்து வரலாற்றில் கொள்ளையர் பற்றிய குறிப்புகள் கி.மு.481-221 காலகட்டத்திலேயே கிடைக்கின்றன. அடுத்து கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் கிடைத்துள்ளன. பதினாறு-பதினேழு நூற்றாண்டுகளைச் சார்ந்த கொள்ளையர் பற்றிய நாட்டுப்புறப்பாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டன. Hiduks என்ற கொள்ளையர் கூட்டம் முதலில் பதினைந்தாம் நூற்றாண்டில் Bosnia, Herzagovina போன்ற இடங்களில் தோன்றினர். முதலில் Haiduk தலைவர் Bulgaria ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டார். தொடக்கத்தில் இவர்களே கொள்ளையர் என்று அறியப்பட்டனர். இதுபோன்ற கொள்ளையர்கள் தென்கிழக்கு ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க பல்வேறு பெயர்களில் இயங்கினர். Indo-nesia, Imperial China போன்ற நாடுகளில் இயங்கினர். பதினாறு-பதினேழாம் நூற்றாண்டுகளில் Catalan என்ற கொள்ளையர் ஒரேயொருமுறை தன்மானத்தினை காத்துக்கொள்வதற்காக கொலை செய்ததாக கதைப்பாடல்கள் உண்டு. பதினேழாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் போரிலும், பிரன்ஞ்சுப்புரட்சியிலும் கொள்ளையரின் காலம் பொற்காலம். 1840 களில் Dancho Vagach என்ற கொள்ளையர் துருக்கியில் கொடூரக்க்கொலைகாரர்களை கொன்றொழித்தார். Bulgarian ஏழைகளுக்கு உதவினார்.
Shittas என்ற கலகக்குழுவினர் ஆப்பிரிக்காவின் கொம்பு (the horn of Africa) எனப்பட்டனர். இவர்கள் கொள்ளையர்கள் என்று அறியப்பட்டனர். காடுகளில் மறைந்து வாழ்ந்த இவர்கள் அரசர்களின் பேரரசர்களின் அதிகாரத்தினை கேள்வி கேட்டனர். இவர்கள் வரிகட்டவும், கப்பம் செலுத்தவும் மறுத்தனர். இவர்கள் கலகக்கொள்ளையர் (rebel robbers)எனப்பட்டனர்.
உலகம் முழுவதும் கொள்ளையர்கள் ஒரேமாதிரி இயங்கியுள்ளனர். இவற்றில் இரண்டு, மூன்று பாணிகள் உண்டு. இவர்களிடையேயான பொதுத்தன்மைகள் பண்பாட்டுப்பரவலில் உருவானவை அன்று; வேளாண்குடிகளில் இருந்து உருவானவை. இடைக்கால வரலாற்றில் சீனாவின் குற்றவியல் சட்டம் கொள்ளையர் புழங்கும் வட்டாரத்தினை பிறவற்றில் இருந்து பிரித்தது. அவை கொள்ளையர் வட்டாரம் (brigand area) எனப்பட்டது. Si-china, Henon, Anhui Heberi, Shanxi, Kiangs Shandang போன்ற வட்டாரங்கள் அவ்வாறு அறியப்பட்டன.
பெரும்பாலும் உலகம் முழுவதும் கொள்ளையர்கள் வேளாண்குடிகளில் இருந்து உருவாயினர். அவர்கள் உருவாகும் சூழல் ஒரு பொதுத்தன்மை பெற்றிருந்தது. அது போன்ற தன்மைகள் சீனம், பெரு, சிசிலி, உக்ரைன் இந்தோனேசியா போன்ற நாடுகளில் அமைந்தன. நிலப்பரப்பியல் ரீதியாக இக்கூற்றினை ஐரோப்பா, அமெரிக்க, இஸ்லாமிய உலகம் தெற்கு-கிழக்கு ஆசிய நாடுகள் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணலாம். இத்தாலியின் தென்பகுதி கொள்ளையர் கூட்டத்திற்கு பெயர்பெற்ற ஒன்று. ஒரு நூற்றாண்டிற்கு முன் இது உச்சகட்டத்தினை அடைந்தது. 1861-65 இல் இது வேளாண்குடிகளின் புரட்சியாக வடிவு பெற்றது. மேலும், கொரில்லா போராக உருபெற்றது. கொள்ளையருக்குப்பெயர் பெற்ற ஸ்பெயினில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொள்ளையின் கொடூரத்தினை ஒவ்வொரு பயணியும் உணர்ந்தனர். இக்காலத்தில் Andulasia என்ற பகுதியில் Fransico Rios என்பவர் புகழ்பெற்ற கொள்ளையராகத் திகழ்ந்தார். இக்காலக்கட்டத்தில் கொள்ளையர்கள் Greek, Balkan ஆகிய நாடுகளில் வெளிப்படையாகவே இயங்கினர். பிரேசிலின் வடக்குப்பகுதியில் 1870 கள் வரை கொள்ளை நோய்போல் பரவியது. இது 20 ஆம் நூற்றாண்டின் 1975 வரையும் தொடர்ந்தது. அண்மைக்காலம்வரையில் தென்கிழக்காசியப்பகுதிகளிலும், இலத்தீன் அமெரிக்காவின் சிலபகுதிகளிலும் கொள்ளையர்கள் இயங்கினர். அங்கெல்லம் பரம்பரையான கொள்ளையர்கள் தம் கைவரிசையினைக் காட்டினர்.
கொள்ளையரும் அரசியலும்
அரசியல், அதிகாரத்தின வரலாறு என்ற பின்னணியிலேயே கொள்ளையர் வரலாறு, சமூகக்கொள்ளையர் வரலாறு போன்றவற்றைப் புரிந்து கொள்ளலாம். இங்கு, அரசியல் அதிகாரம் என்பது, அரசினையும், பேரரசினையும் நிறுவுதலாகும். உண்மையில் உபரி உற்பத்தியில் ஈடுபடுவோரே கொள்ளையருக்கும், அரசுடமையாளருக்கும், அச்சமூட்டக்கூடிய நிலையை உருவக்குபவர் என்று கருதப்படுகின்றனர். வரலாற்றில் பெரும்பாலான வேளாண்குடிகள் அரசியல் அதிகாரத்தின்கீழ் இனக்கூட்டங்களாக வாழ்கின்றனர். அவர்களின் பொதுவான சூழ்நிலை வட்டார அளவில் அல்லது உள்ளூர் அளவில் அமைந்திருக்கும். அவர்கள் நிலவுடமையாளர்களின் கீழ் வந்தனர். இந்த உறவின் அடிப்படையில் அமைந்த கடவுள் நம்பிக்கை, கடமையுணர்வு இவற்றினடிப்படையில் மக்கள் திரட்டப்பட்டனர். அரசுகள் நலிவுறுகையில் கொள்ளையர் எழுவர். ஆனால், சீனப்பேரரசும், ரோமனியப்பேரரசும் உச்சநிலையில் இருந்தபோதுகூட கொள்ளையர் இயங்கினர். அவர்கள் மேய்ச்சல்நிலப்பகுதியிலும், தங்களுக்குச்சாதகமானப் பகுதியிலும் வழ்ந்தனர்/இயங்கினர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் Corsica வின் 355 கிராமங்க்ளில் 600 கொள்ளையர் இருந்தனர். 1933 இல் குறைந்தது 100 பேர் இருந்தனர். 1847 ஆம் ஆண்டு Calabria என்ற பிரதேசத்திற்கு சோதனையான ஆண்டாக அமைந்தது. அங்கு, 600 முதல் 700 வரை கொள்ளையர்கள் 50;60 குழுக்களாக இயங்கினர். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 0.1/-ஆவர்.
முன்பு சொல்லப்பட்டது போல் நிலவியல் சூழல்கள் அமைந்திருந்தாலும் பெரு என்ற நாட்டில் கொள்ளையர்கள் இல்லை. காரணம், அங்கு நிலவுடைமையாளர்கள், நிலபிரபுக்கள் இல்லை. கூலித்தொழிலாளிக்கான கண்காணிகள் இல்லை. சுருக்கமாக, அங்கு வேளாண்குடிகளுக்கு அவ்வளவாக பிரச்சினைகள் இல்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜாவாவின் வடக்குப்பகுதியில் கொள்ளையர்கள் மையம் கொண்டிருந்தனர். இது கலகத்தின் நிரந்தர மையமனது. கொள்ளையர் நடமாட்டம் ஒரு வட்டத்தின் சில இடங்களில் வலுவாகவும் சில இடங்களில் வலுவற்றும் இருந்தன. வறுமையும், பொருளதாரச்சிக்கலும் உருவாகும்போது கொள்ளையர் நோய்போல் பரவுவர்.
வரலாற்றில் கொள்ளையர் உருவாகும் சமூகச்சூழல்
அரசு கட்டமைப்பு இல்லாத சமூகங்களில் சமூகச்சட்டங்கள் இரத்தப் போட்டியை உருவாக்குகிறது. அங்கு கொல்லப்படுபவர் சமூகச் சட்டத்தினை உடைப்பவர். அவர்கள் மக்களின் சட்டப்படி (public law) தண்டிக்கப்படுவர். நாட்டுப்புறங்களில் விவசாயமும், வேளாந்தொழிலும், உலோகத்தொழிலும் நுட்பத்துடன் வளரும்போதும் நகரங்களில் ஆவணப்படுத்துதலின் அடிப்படையில் அலுவலங்கள் வளரும்போதும் கொள்ளையர்கள் தம்மை தனிக்கூட்டமாகக் கருதுகின்றனர். செல்வந்தர்களிடமிருந்தும், அதிகாரமிக்கவர்களிடமிருந்தும் தம்மைப் பிரித்துப் பார்க்கின்றனர். காரணம், சமூகத்தின்மீதான ஒருவித வெறுப்பு. சமூகவியல்ரீதியாக கொள்ளையர் வரலாறு மூன்று கடங்களாக அமைந்துள்ளது. அவர்களின் தோற்றம்;அதற்கு முன்பு உருவான அமைப்பு; வர்க்க சமூகத்திலும், அரச கட்டமைப்பு சமூகத்திலும் உருவானபோது. இதன் உருமாற்றம் தோன்றிய காலத்திலும், வட்டார, உலக அளவிலான மாற்றத்தில் இருந்தும் எழுந்தது. இது அரச கட்டமைப்பிற்கும், சமூகக் கூட்டங்களுக்கும் இடையில் உருவான முரண். அதாவது, நிலைத்த வேளாண்குடிகளுக்கும், அலைகுடிகளான ஆயர்குடிகளுக்கும் இடையிலான முரண். நகர்ப்புறம், ஊர்ப்புறம் இரண்டிற்குமான சமூக வெடிப்பு.
Balkan, Anatolia, பகுதிகளில் சமூகக் கொள்ளையருக்கு அலைகுடிகளின் இன உறவுக்கூட்டங்களே ஆதரவாக இருந்தன. 19 ஆம் நூற்றாண்டில் Argentina வில் கால்நடை வளர்க்கும் சமூகம், சமூகக்கொள்ளையர்களுடன் ஊரகத்தலைவர்கள் (rural chieftains) துணை நின்று நகரம் சார்ந்த பூர்சுவா சட்டங்களை எதிர்த்தனர். இருபதாம் நூற்றாண்டில் Colombia வில் காப்பித்தோட்டக்காரர்கள் கொள்ளையருக்குப் பாதுகாப்பளித்தனர்.
சமூகக்கொள்ளையர் இயக்கத்தின் இரண்டாம் கட்டம் வர்க்கம், சொத்து,அதிகாரம் என்ற பின்னணியில் வேளாண்சமூகத்தில் முகிழ்த்த ஒன்று. கிராம்ஷியின் கூற்றுப்படி அவர் வசித்த தீவில் 20 நூற்றாண்டில் வர்க்கப்போராட்டம் புதுமாதிரியான போராட்டங்களைக் கொண்டிருந்தது. ஆள்கடத்தல், நாடுகளுக்கு தீவைத்தல், பெண்களைக் கடத்தல், குழந்தைகளைக்கடத்தல், நகராட்சி அலுவலகங்களைத் தாக்குதல், வழிபறிக்கொள்ளை போன்ற கூறுகளைக் கொண்டிருந்தது.
மூன்றாம்கட்ட சமூகக்கொள்ளை, பசியால் எழுந்த ஒன்று. 19-20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவ வேளாண்பொருளியலில் உருவானதே சமூகக்கொள்ளையர் கூட்டம். இது USA,Australia,Argentina போன்ற நாடுகளில் எழுந்தது. சமூகக் கொள்ளைத் தளங்களாக விளங்கிய மத்தியதரைக்கடல் வட்டாரங்கள் இடைக்கலத்திலும் நவீன காலத்திலும் தொடர்ந்து பஞ்சத்தில் உழன்றன. வயிற்றுப்பசியின் உறுமல்களே, வழிபறிகொள்ளையின் உறுமலாயின. 1877-78 களில் பிரேசிலில் வறட்சியின் காரணத்தல் கொள்ளையர் கூட்டம் உருவாயினர். இவர்கள் 1919 வரை இயங்கினர். இவர்களின் செயலுக்கு ஒரு சீனப்பழமொழி பொருந்தும் : பசியால் சாவதைவிட சட்டத்தினை மீறுவது மேல்.
கொள்ளையரின் இயல்பு
மலைப்பகுதிகளில் உள்ள கொள்ளையர்: 1860 களில் இத்தாலியின் தென்பகுதியில் உள்ள கொள்ளைக் கூட்டத்தலைவரில் பலர் கால்நடைகள் மேய்ப்பவர், ஆடு மேய்ப்பவர், பசு மேய்ப்பவர், நிலமற்ற கூலிகள், முன்னாள் ராணுவத்தினர் என்று பலரும் இருந்தனர்.
நிலச்சுவான்தார்களும் அவர்களின் அடியாட்களும் தாம் விரும்பியபடி வேளாண்குடி பெண்களிடம் நடந்து கொண்டனர். இச்சூழலில் பழிவாங்கும் கொள்ளையர் உருவாயினர். இப்பழிவாங்கும் கொள்ளையர் சமூகக்கொள்ளையராக மாறமாட்டார். அவர்கள் கிராமத்தின் காவலர்களக்க இயங்குவர். நிலப்பிரபுவிற்கு சிப்பாயாக மாறுவர். ஆனால், இவர்களே பிறகு ஆயுதமேந்திய பூர்சுவாவாக மாறுவர். அதாவது, சிசிலியில் உள்ள மாபியா போன்று. சட்டத்தினை மீறும் இவரைப்போன்றவர்கள் பற்றி கதாநாயர்கள் என்றும், சாதனையாளர்கள் என்றும் பழிதீர்ப்பவர்கள் என்றும் கதைப்பாடல்கள் உண்டு. இவ்வகையில் தனித்த கலகக்காரர்களும் உண்டு. அவர்களை அர்சியல்ரீதியாக பொருளியல்ரீதியாக கணிக்க இயலாது. இவையெல்லாம் ஏழ்மையின் வெளிப்பாடு.
கொள்ளையர் பற்றி வேறுவேறு விளக்கங்களும் உண்டு: கொள்ளையர் என்போர் பணிய மறுப்போர். அதிகாரத்திற்கு அப்பாற்பட்டோர், தீரத்துடன் செயல்படுவோர். ‘Bandito’ என்ற இத்தாலியச் சொல்லிற்கு சட்டத்திற்கு புறம்பாக இயங்குபவர் என்று பொருள் (man placed outside the law). அதாவது சட்டத்திற்கு கட்டுப்படாதவர் என்று பொருள். எனவே, எளிதில் கொள்ளையராவது ஆச்சரியமன்று. 15 ஆம் நூற்றாண்டிலிருந்தே கொள்ளையர் பற்றிய கணிப்பு இருந்து வந்தது. Bandalora என்ற கொள்ளியரைக் குறிக்கும் சொல் Cataloria என்ற வட்டாரத்தில் உள்ள ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகளைக் குறிக்கும். இந்த பண்டலோராக்கள் 15-17 ஆம் நூற்றாண்டுகளில் இயங்கினர். இவர்கள் இயல்பாகவே கொள்ளையராக மாறிக்கொண்டனர். Ottoman பேரரசில் Celalis என்ற பெயரில் அறியப்பட்ட கொள்ளையர்கள் 16-17 ஆம் நூற்றாண்டுகளில் இயங்கினர். இப்பெயரினை அவைதீக இஸ்லாமிய கலகக்காரரைக் குறிக்கும் Seyh-celel என்ற சொல்லில் இருந்து பெற்றனர்.
இனக்குழு வெடிப்பினால் உருவான கொள்ளையர் கூட்டம்
ஒரு பழங்குடிச்சமூகம் இரத்த உறவினை அடிப்படையாகக் கொண்டு பரிணாம வளர்ச்சியுறும்போது இதுபோன்று வரலாற்றுப்போக்கு நிகழும். நவீன முதலாளியம் தொழிற்சாலை சமூகமாக மாறும்போதும் நிகழும். இரத்த உறவுச்சமூகம் (kinship society) உடைபட்டு வேளாண்சமூகம் முதலாளியசமூகமாக மாறும்போதும் நிகழும். இவ்வகைச்சமூகத்தின் உள்கட்டமைப்பு கலகலத்து அமையும் போது கலகக்காரகள் கொள்ளையராக மாறுவர்.
கொள்ளையரும் வர்க்கமும்
வேளாண்குழுக்களில் இருந்து உடைந்து வந்த கொள்ளையர் குழுக்கள் வேட்டைச் சமூகத்தையும், மேய்ச்சல் சமூகத்தையும் திடீர் திடீர் என்று தாக்கினர். இதனால் இவர்களுக்குள் வர்க்கமுறை உருவானது. பொருள் குவிய குவிய கொள்ளையர் கூட்டங்கள் பல்கிப்பெருகின. இதுபோன்ற கொள்ளையர் கூட்டங்கள் 15-18 ஆம் நூற்றாண்டுகளில் Ottoman பேரரசில் உருவாயின. 19 ஆம் நூற்றாண்டில் Sardania, Hungery போன்ற வட்டாரங்களில் இது போன்ற கொள்ளையர் கூட்டங்கள் உருவாயின. வரலாற்றின் மறுமுனையில் முதலாளியமயமான வேளாண்சமூகத்தில், குறிப்பாக மரபுரீதியான வேளாண்சமூகத்தில் சமூகக்கொள்ளையர்கள் உருவாவது முடிவிற்கு வந்தது. ஆனால், நிலையான முதலாளியமயமான நாடுகளான USA, Australia, Argentina போன்ற நாடுகளில் இம்மாற்றம் நிகழவில்லை.
அரசும் கொள்ளையரும்
17 ஆம் நூற்றாண்டில் கொள்ளையர் பற்றிய ஒரு கருத்தாக்கம் உருவானது. அவர்கள், நெடுஞ்சாலைத்திருடர், நெடுஞ்சாலைக்குற்றவாளி என்று அறியப்பட்டனர். 18 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நாடுமுழுக்க கொள்ளைகள் நடந்தன. 1861 இல் பண்ணையடிமைகள் ஒழிக்கப்பட்டவுடன் அரசு தொடர்ந்து பல ஆணைகளை கொள்ளையருக்கு எதிராக வெளியிட்டது. இறுதியாக 1864 இல் ஓர் ஆணை வெளியிட்டது. சீனாவின் மேற்கில் ஹெனென் மலைப்பகுதியில் கொள்ளையர் கிராமங்கள் இருந்தன. சீன வரலாற்றில் எப்போதெல்லம் அரசு வீழ்ந்ததோ அப்போதெல்லாம் கொள்ளையர் எழுந்தனர். 1920 களில் ஜப்பான், சீனா, மஞ்சூரியா போன்ற நாடுகளில் கொள்ளையர்கள் படையில் சேர்க்கப்பட்டனர். அப்போது மஞ்சூரியாவின் மக்கள்தொகையில் 0.5% லிருந்து 0.8% வரை கொள்ளையர் இருந்தனர். சீன முழுவதும் கொள்ளையர் கூட்டத்திலிருந்து 1.5% சதம் பேர் போர் வீரர்களாக தெரிவு செய்யப்படனர். உலகம் முழுவதும் வேளாண்சமூகமும், மேய்ச்சல்சமூகமும் ஒருங்கிணைது காணப்படும் இடங்களில் சமூகக்கொள்ளையர்கள் இயங்கியுள்ளனர்
கடவுளும் களவாணியும்
சமூகம்சார் கொள்ளையரை இனம்கான இயலுமா? அவர்கள் அன்றாட மனிதர் உடையில் எளிதில் கண்டுபிடிக்கமுடியாமல் உலவி வருவர். அதிகாரத்தில் இருப்பவ்ருக்கு தட்டுப்படபமாட்டர். இதாலியின் தெற்கிலுள்ள கொள்ளையர் போப், அரசர் போன்றோரின் ஆசிபெற்றவராவர். அவர்கள் கன்னிமேரியின் பாதுகாப்பில் உள்ளவர் என்று அறியப்பட்டனர். பெரு நாட்டின் கொள்ளையர் Our Lady of Luren என்ற கடவுளுக்குப் பாத்திரமானவர் என்று அறியப்பட்டனர். பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் கொள்ளையர் ஒரு சாதுவினால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தனர்.
கொள்ளையரும் தீயசக்தியும்
கொள்ளையர்கள் தீய சக்தியோடு ஒருவித உடன்படிக்கை கொண்டிருந்தனர் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் திருடர்கள் தீய சக்தியோடு உடன்படிக்கைக் கொண்டிருந்தனர் என்று நம்பப்பட்டது. இன்றும்கூட இந்த நம்பிக்கை உண்டு. வேளாண்கொள்ளையர்கள் அவைதீகர்கள் அன்று. அவர்கள் அன்றாடம் வேளாண்மக்களோடு புழங்கினர். அவர்கள் இயல்பான உணர்வுகளுடன் இயங்கினர். ஆனால், மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா போன்ற பகுதிகளில் செமிட்டிக் இனத்தினருக்கு எதிராக இயங்கினர்.
கொள்ளையரும் மந்திரவாதியும்
தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளில் கொள்ளையர்கள் மந்திரச்சொற்கள் அறிந்தவராக அறியப்பட்டனர். ஜாவாவின் Rampok கொள்ளையர்கள் பரம்பரையான மந்திரமும், மாயமும் அறிந்தவராக கருதப்பட்டனர். இந்தோனேசியக் கொள்ளையரின் மந்திரத்தன்மைகள் பொதுமைப்படுத்தப்பட்டன. அவர்களின் மந்திரத்தன்மை அவர்களுக்கு ஆன்மவியல் அறிதேற்பினை தந்தது. இந்தோனேசியக் கொள்ளையர்கள் மாயவித்தைகளையும் காட்டவேண்டியிருந்தது.
காட்டிகொடுக்கப்பட்ட கொள்ளையர்
இவர்கள் கதைப்பாடல்களில் காட்டிகொடுக்கபட்டதாக பல செய்திகள் உள்ளன. இது 20 ஆம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. Robert Ford என்பவர் Jesse James என்ற கொள்ளையரை காட்டிக் கொடுத்தார். Pat garrest என்பவர் Billy the kid என்பவரைக் காட்டிகொடுத்தார். Jim Murphy என்பவர் Sam Bass என்பவரைக் காட்டிக் கொடுத்தார். Oleksa Doubus என்ற 18 ஆம் நூற்றாண்டின் Carpathian கொள்ளையர் Stephen Dzvinka என்ற விவசாயினால் காட்டிகொடுக்கப்பட்டார்.
கொள்ளையர் ஏன் நல்லவர் என்று நம்பப்படுகின்றனர்.
Jesse James என்ற கொள்ளையர் ஒருபோதும் விதவைகளை, அநாதைகளை, சமயபிரசங்கிகளை, முன்னாள் குற்றாவாளிகளை கொள்ளையடித்ததில்லை. இவற்றுக்கெல்லாம் மேலாக இவர் ஒரு தேவாலயத்தில் இசையாசிரியாரகப் பணியாற்றினார். ஞானஸ்நானம் செய்விக்கும் பணியினையும் செய்துள்ளார்.
சமூகம்சார் கொள்ளையர்கள் இறப்பிற்குப்பிறகு தெய்வத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான தன்மையினைப் பெறுவர். அர்ஜெண்டினாவில் கொள்ளையர் தலைவர்களின் கல்லறைகளைச் சுற்றி பல வழிபாட்டுமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவர்கள் பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் உள்நாட்டுப்போரில் பங்குபற்றி பின் கொள்ளையராக மாறினர். இவர்களுக்கு பொதுமக்கள் பெரிதும் உதவினர். பெரும்பாலும் இவர்கள் துரோகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டனர்.
கொள்ளையரும் பெண்களும்
கொள்ளையர்கூட்டத்தில் பெண்கள் காதலி என்ற நிலையில்தான் இயங்கினர். சமூகத்தின் anti-social bandits பெண்களைக் கற்பழிக்கப்பயன்படுத்துகின்றனர். ஆனால், Lampiao என்ற என்ற கொள்ளையர் கூட்டத்தில் கற்பழிப்பில் ஈடுபடக்கூடாது என்பது சட்டமாக இருந்தது. கொரில்லா கூட்டத்தில் ஒருவர் கற்பழிப்பில் ஈடுபட்டால் தண்டனையுண்டு. காதலிகளின் வீடுகளுக்கு கொள்ளையர்கள் வந்து போவது வழக்கமாயிருந்தது. இப்பழக்கம் தொடர்ந்து கொள்ளையரின் பலதாரமுறைக்கு வழிவிட்டது. பொதுவாகக் கொள்ளைக்கூட்டத்தில் பெண்கள் வெளியாருடன் உறவு கொள்வது வழக்கில் இல்லை. அவர்கள் பொதுவாக துப்பாக்கி ஏந்துவதில்லை. சண்டைகளில் பங்குபெறுவதில்லை.
Bavaria வின் Schattinger எனும் பெண் கொள்ளையர் 200 ஆண்டுகளாக குற்றம் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரின் குடும்பத்தினர், தந்தை, சகோதரி அனைவரும் சிறையிலடைக்கப்பட்டனர்,அங்கேயே கொல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் வேளாண்குடிகளிடமிருந்து கருணை, இரக்கத்தினை எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், நேர்மையான மக்களை கொள்ளையர்கள் எதிரிகள் என்றும் ஒடுக்குவர் என்றும் அதிகாரத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும் கருதினர்.
Lampiao என்ற கொள்ளையரின் மனைவி Maria Bonita என்பவர் தையல்வேலை, பூவேலை, சமையல், பாட்டு, சமையல், நடனம் போன்றவற்றில் கவனமாயிருந்தார். Lampiao வின் Lieutenanant Corisio என்பவரின் மனைவி தமக்கென ஒரு குழுவினை வைத்திருந்தார். ஒரு பெண் சிறைபட்டிருந்த தம் கணவனை மீட்பதற்காக கைநிறைய பணம் தரத் தயாரய் இருந்தும் அவளின் கணவனை Lampiao கொன்றார். ஒரு மூதாட்டியை சித்திரவதை செய்தார். தண்டனையாக, சாகும்வரை ஒருபெண்ணை நிர்வாணமாக நடனமாட வைத்தார். ஆனால், தாம் பெண்களிடம் sexual morality பின்பற்றுபவராக இருந்தார். இவருடைய கொள்ளைக் கூட்டத்தில் பெண்பித்தர்கள் (women seducers) ஆண்மை நீக்கம் செய்யப்பட்டனர்; கற்பழிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. துரோகம் செய்த பெண்களின் தலை மொட்டையடிக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துவரப்படுவது பொதுமக்களால் கண்டிக்கப்பட்டது. பல்கேரியாவின் ஒரு கதைப்பாடல்படி Stoian என்ற கொள்ளையர் ஒரு கிராமத்தினை கொள்ளையிட்டார். அப்போது ஒரு மூதாட்டி அவரை அவமதித்தார். எனவே, இப்பெண் கடத்தப்பட்டார். வேலைக்காரியாக்கப்பட்டார். அவர் தலை துண்டிக்கப்பட்டது.
பொதுவாக, பெண்களை வைத்துக்கொண்டு கொள்ளையர் கூட்டம் ஒழுக்கமாக இயங்காது என்பதால் கொள்ளைக் கூட்டத்தில் பெண்கள் பங்குபெறுவது தடைசெய்யப்பட்டது.
கொள்ளையரும் புரட்சியும்
ஒரு லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியில் இயங்கிய ஆயுதம் தாங்கிய குழுவினரின் இயக்கத்தால் பிரேசில் இடர்பாடின்றி காலனிய நுகத்தடியிலிருந்து விடுதலை பெற்றது. ஆயுதம் ஏந்திய அந்த குழுவே அங்கு அரசமைத்த்து. இது1960-1970 களில் a national symbol of resistance and even revolution என்று வருணிக்கப்பட்டது. ஜாவாவில் இயங்கிய KenAngrok என்ற கொள்ளையர் Modjopair என்ற அரசகுடும்பத்திற்கு அடித்தளம் இட்டார்.
கொள்ளையரும் அரசும்
அரசியல்ரீதியாக சமூகக்கொள்ளையர் பற்றிய வரலாறு ஒரு நாடகத்தன்மை வாய்ந்த்து. அரசர்கள், பேரரசர்கள்கூட கொள்ளையராகத்தான் வாழ்க்கையினைத் தொடங்கினர். எத்தியோப்பியாவின் பேரரசன் (Tewodros) Theodre II (1855-1858) மஞ்சூரியாவின் Chang-T-Solin (Zhang-Zuolin) போன்றோர் இதற்கு நல்லதோர் காட்டாகும். உருகுவே என்ற சுதந்திர நாட்டினை உருவாகிய Jos-Antonio Artigas என்பவர் ஒரு கொள்ளையராகவே தம் வாழ்க்கையினத் தொடங்கினார்.
கொள்ளையரும் கூலிகளும்
1863 Italy இல் Calabria வில் நடந்த நீதிமன்றத்து வழக்கில் கொள்ளையர் என்ற பெயரில் விசாரிக்கப்பட்டவர்களில் பலர் கூலிகள், விவசாயிகள், வேளாண்குடிகள், கைவினைஞர்கள். இச்சூழலில் இவர்கள் இன்னொருவகையில் பணம் திரட்டநினைப்பது இயல்பு. இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக கொள்ளையராவதில்லை. குமரப்பருவத்தினைத் தாண்டி திருமணவயதினை எட்டும் நிலையில் உள்ளவர்களே குழுவாக இணைந்து இயங்குவர். குடும்பப் பிரச்சனையினை தாங்கும் முன் இதுபோல் நிகழும். வேளாண்சமூகத்தின் இளைஞர்கள் சுதந்திரமாகவும், ஊக்கமான கலகக்காரர்களாகவும் இயங்குவர். ஒத்த வயதுடைய இவர்கள் குழுவாக, தெரிந்தும் தெரியாமலும், முறையாகவும் முறையற்றும் ஒருவேலையினை விட்டு மறுவேலைக்குச் செல்வதும் சண்டைபோடுவதும் என இயங்குவர். ஹங்கேரியின் சமவெளியில் உள்ள ஏழைப்பையனகள் (poor lads) தனித்திருக்கும்போது பிரச்சனையற்று இருப்பர்; இருபது, முப்பது பேராக இணையும்போது கொள்ளையராவர்.
கொள்ளையரின் வயது
சீனத்தில், திருமணத்திற்கு முன்னதாகவே, இளம்பிராயத்தினரை கொள்ளைக்கூட்டத்திற்கு என்று ஆள் எடுப்பர். எனவே, கொள்ளையருக்கு முப்பது வயது என்பது முக்கியமான காலகட்டம். அவ்வயதில் கொள்ளை வாழ்வினை விடுத்து திருமண வாழ்வினைத் தொடருவர். கொள்ளையர் கூட்டத்தில் சேராமலும், திருமணமாகமலும் இருக்கும் இளைஞர், அக்கூட்டத்தில் இருந்து விளிம்புநிலைக்கு தள்ளப்படவேண்டியிருக்கும். பெண்குழந்தைகள் கொல்லப்படுவதால் கொள்ளையரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால், சீனாவில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை 20% அதிகரித்தது. பிரேசிலின் வடகிழக்குப்பகுதியில் புகழ்பெற்றிருந்த Lampiao என்ற கொள்ளையர் தம் தொழிலை 18 வயதில் தொடங்கினார். மஞ்சூரியாவில் கொள்ளையர்கள் தம் தொழிலை 1920 களில் தம் 25-26 வயதுகளில் தொடங்கினார்.
விளிம்புநிலையும் கொள்ளையரும்
சமூகத்தில் தனித்துவிடப்பட நபர்கள், விளிம்புநிலைக் கூட்டதினருடன் சேரும்நிலை உருவானது. பழைய ரஷ்யாவில் மக்கள் எளிதில் கடக்க இயலாத, குறைவான மக்கள்தொகை கொண்ட விளிம்புநிலப்பிரதேசத்தில் Rasbioniki என்ற கொள்ளைக்கூட்டம் உருவானது. இவர்கள், பெரும்பாலும் தனித்துவிடப்பட்ட விளிம்புநிலை மனிதர்கள், புலம் பெயர்ந்தவர்கள். ரஷ்யாவின் தெற்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் இவர்கள் இயங்கினர். அங்கு நிலப்பிரப்புக்களோ, அடிமைமுறை அரசோ நுழையமுடியவில்லை. இவர்களே, பிறகு புரட்சியினை உருவாக்கினர். Land of freedom என்ற அமைப்பினை உருவாக்கினர். (அவர்கள் அலைகுடிகளாகவும் வாழவேண்டியிருந்தது). இந்த அமைப்பில் தப்பிவந்த அடிமைகள், வாழ்ந்து கெட்டதனிமனிதர்கள், செல்வந்தரின் பிடியினிறும் ஓடிவந்தவர்கள், சிறையினின்றும் தப்பியோர், கோயில் மடங்களில், படையில், கப்பற்படையில் இருந்து தப்பியோர் இருந்தனர். இவர்களுடன் குருமார்களின் வாரிசுகள் ஒன்றிணைந்து இக்கொள்ளையர் கூட்டதினை உருவாக்கினர். இவர்கள் எல்லைப்புறங்களில் இயங்கிவந்த கூட்டத்தோடு கலந்தனர். இதுபோன்ற விளிம்புநிலைக் கூட்டத்தில் ராணுவவீரர், முன்னாள்படை வீரர், படையினின்றும் ஓடிவந்தோர் முக்கியமாக பங்காற்றினர். இவர்கள் எளிதில் கொள்ளையராயினர்.
1860 களில் இத்தாலியின் தென்பகுதியில் அவ்வப்போது எழுந்த கொள்ளைக்கூட்டத் தலைவர்கள் Bourborn Army யில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினர் என்றும், நிலமற்ற கூலித்தொழிலாளிகள் என்றும் அறியப்பட்டனர். இகொள்ளையர் கூட்டத்தின் முன்னாள் ராணுவத்தினர் கிராமத்து இளைஞர்களுக்கு கல்வி போதிப்பவராக இருந்தனர். புரட்சிப்படையின் பள்ளிகள் இவர்களைப் பயன்படுத்தின. ஓடிவந்த முன்னாள் ராணுவத்தினர் வேளாண்சமூகத்துடனும் இருந்தனர். ஓய்வான நேரங்களில் பிற வேலைகளைச் செய்தனர். சிலவேலைகளுக்கு ரகசிய குழுக்கள் அமர்த்தப்பட்டன. இவர்கள் ஆயுதம் தாங்கிய மனிதராகவும், தோட்டக் காவலராகவும், வண்டியோட்டிகளாகவும், பாணர்களாகவும் பணியாற்றியுள்ளனர். பொதுமக்கள் புழங்கமுடியாத மணற்பகுதிகளில் சுற்றித்திரிந்தனர். அங்கு, கொள்ளையர்கள் கால்நடை மேய்ப்பவருடன் கலந்து திரிந்தனர்.
குடியானவரும் கொள்ளையரும்
அரசியலில் கொள்ளையர் நுழைவது மரபுவாதிகள் புரட்சியாளர் ஆவதுபோலாகும். கொள்ளையர்கள் புரட்சியாளராக மாறுவது வேளாண்சமூகத்தின் உள்ளீடாகும். கொள்ளைத்தொழில் ஒருவகையான சுதந்திரம். ஆனால், வேளாண்குடியில் ஒருசிலர் மட்டுமே சுதந்திரமாக இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் ஒருவகையில் நிலப்பிரபுக்களாகவும் இன்னொருவகையில் கூலித்தொழிலாலும் பிணைக்கப்பட்டுள்ளனர். வேளாண்குடிகள் அதிகாரத்தின்பிடியில் பலியாகின்றனர். அவர்கள் தன்னிறைவு பெறவும் இல்லை. புலம் பெயரவும் இயலவில்லை.
குடியானவர் திருமணமானவுடன் மனைவி மக்களுடன் கட்டுண்டு பணிபுரியும் இடத்தினைவிட்டு நகரமுடியாமல் இருக்கிறார். வளர்ந்த குடியானவன் கொள்ளையனாக மாறுவதற்கு வாயுப்பு உண்டு. இது ஒரு ஆண்டுச்சுழற்சி. கோடைகாலம், வசந்தகாலம், பனிபொழியும் காலம் என்று மாறி மாறி கொள்ளை நடக்கும்.
வேளாண்சமூகத்தினின்றும் கொள்ளையர் உருவாகும் சூழல்
வளமற்ற நிலப்பகுதியிலும் மேய்ச்சல் நிலப்பகுதியிலும் உள்ள வேளாண்குடிகள் உபரிஉழைப்பாளர்கள் வேலையின்றி இருப்பதால் அவர்கள் கொள்ளையராக மாறும் சூழல் உருவாகும். இது போன்று ஆல்ப்ஸ் மலைகள், அல்ஜீரியாவின் Kabyk மலைகள், Albania, Switzerland, Corsica, Naples போன்ற பகுதிகளில் இவ்வாறு கொள்ளை நடந்தது. இதனால், சிக்கனமாக குடும்பத்தினை நடத்த வேண்டியிருந்தது. அது mini-feudalism என்ற சொல்லால் அழைக்கப்பட்டது. இதனால், நிலமற்ற நிலை விரும்பப்பட்டது. வேலையில்லாதவர் வாழ்க்கையைத்தேடி ஓடிக்கொண்டிருந்தனர். வேளாண்குடிகள் அப்படியில்லை. மலைகளும், மேய்ச்சல்வட்டாரங்களும் கொள்ளையரின் களங்களாயின.
கொள்ளையின் விளைவு
கொள்ளையர்கள் ஆட்சியரின் தவறுகளைத் திருத்தினர். அநீதியினை சரி செய்தனர். எளிய மனிதனுக்கும், தனிமனிதனுக்கும் இடையிலான உறவினையும் சரிசெய்தனர். இது, நல்ல நோக்கமாக இருந்தது. செல்வந்தன் ஏழையை சுரண்டுவது நின்றது. கொள்ளைச்சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழக்கூடிய வேளாண்குடிகளின் புரட்சிக்கு அடித்தளமாக அமையும். கடந்த இரு நூற்றாண்டுகளில் முதலாளிய பொருளியல் சமூகத்தில் பெரும் மாற்றத்தினை உருவாக்கியது. இது, முற்றாக வேளாண்சமூகத்தினை அழித்து கொள்ளையர் உருவாக வழிவிட்டது. 19-20 ஆம் நூற்றாண்டுகளில் உலகம் முழுவதும் பரவலாக சமூகக்கொள்ளைகள் நிகழ்ந்தன. இன்றைக்கு முற்றிலும் ஒழிந்தன என்றாலும் சில இடங்களில் நிகழ்கின்றன. இன்னும் ஐரோப்பாவில் ஸ்காண்டினேவியன் மேட்டுநிலப்பகுதிகளில் கொள்ளையர்கள் இயங்குகின்றனர்.
Haiduks (ஹய்துக்கள்)
Haiduks என்பது ஒரு சகோதரத்துவ அமைப்பு. அதாவது male brotherhood. இதற்கு நல்ல உதாரணங்கள் உண்டு. இவர்கள் இயல்பாகவே ஊக்கமானவர்கள். நோக்கமும், ஆக்கமும் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் நிறுவனப்பட்ட அலுவலர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இவர்கள் robinhood லிருந்து வேறுபட்டவர்கள்; அகப்பட்டவர்களை பலி போடுவர். Haidus என்ற சொல்லிற்கு கால்நடை திருடுபவர் என்று பொருள். இவர்கள் தானாக உருவாகவில்லை. Hungery யின் சிலபகுதிகளில் பிரபுக்களுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர். இவர்கள் free-robber liberation எனப்பட்டனர். இவர்கள் பிரபுக்களுக்கு இலவசமாக சண்டைக்காரர்களை உருவாக்கித் தந்தனர். இவர்கள் ரஷ்யாவிலும், ஹங்கேரியிலும் அரசு மற்றும் இளவரசர்களிடமிருந்து நிலம் பெற்றனர். பதிலுக்கு, ஆட்சியாளர்களுக்கு ஆயுதங்களையும், குதிரைகளையும் அனுப்பி பாதுகாப்புப் பணிகளைச் செய்தனர். ரஷ்யாவிலும் ஹங்கேரியிலும் துருக்கியரை விரட்டியடிக்கவே இவ்வேற்பாட்டினைச் செய்தனர். இவ்விரு நாடுகளின் எல்லைப்பகுதிகளில் வீரர்களுடன் பணியாற்றினர். இவர்கள் பற்றி பலகதைப்பாடல்கள் இருந்தாலும் அவர்களின் அடிப்படை நோக்கம் பொருளாதாரம் பற்றியது. இவர்களின் பாடல் ஒன்று:
மாரிக்காலம் மோசமானது;
கோடைக்காலம் வறண்ட்து;
செம்மறியாடுகள் மரிக்கின்றன.
எனவே Stoian, Haiduk என்று மாறுகிறான்.
இன்னொருவகை ஹய்துக்கள் உண்டு. அவர்கள் கிறித்தவ ஆட்சியோடு சேர்வதில்லை. இவர்கள் அரசகுலத்தினரும் அன்று; போர்க்குலத்தவரும் அன்று; துருக்கிக்கு எதிரான கொள்ளையர்கள். பழிவாங்கும் கொள்ளையர்.
இவர்கள் விடுதலை விரும்பிகள். தொடக்கத்தில் கொரில்ல்லாமுறை போராளிகளாக இருந்தனர். இவர்கள் முதலில் 15 ஆம் நூற்றாண்டில் Bosnia, Herzagovina போன்ற இடங்களில் உருவாயினர். அடுத்து Balkan, Bulgaria போன்ற இடங்களில் உருவாயினர்.
முதல் ‘Haidot’ தலைவர் 1454 இல் Bulgaria ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளார். தொடக்கத்தில் இவர்கள் கொள்ளையர். இதுபோன்ற கொள்ளையர் தென்கிழக்கு ஐரோப்பாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் இயங்கினர். இந்தோ-நேசியா, இம்பீரியல்-சீனா போன்ற நாடுகளில் இயங்கினர். இவர்கள் பொதுமக்களின் ஆதரவினைப்பெறுவதற்குப் பலகாரணங்கள் உண்டு. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை. அவர்கள் பேசும் மொழி, பின்பற்றும் சமயம் போன்றவை மட்டும், கருத்தியலும் வர்க்க உணர்வுகள் மட்டும் அவர்களைக் கொள்ளையராகவில்லை. பல்கேரியாவில் ஒரு ஹைது தலைவர தன்வரலாறு எழுதினார். 1850 களில் அவர் தம் 25 வது வயதில் ஒரு துருக்கிய அலுவலருடன் சண்டையிட்டார். பிறகு, ஒரு மணற்பிரதேசத்திற்குச் சென்று ஒளிந்துகொண்டார்.
ஹய்துக்கள்:கதை ஒன்று
Tatuncho என்ற Haidu கொள்ளைத்தொழிலை விட்டு தம் தாய் வேண்டிக்கொண்டதற்கு இணங்க குடும்பவாழ்க்கைக்குத் திரும்பினார். அத்தாய் அவரிடம் சொன்னார்: கொள்ளையன் குடும்பத்தினைக் கவனிக்க மாட்டான். ஆனால், நடந்தது வேறு. அவனைக்கொல்வதற்கு சுல்த்தான்கள் அனுப்பிவைத்த ஆட்களைக் கொன்றான். அவர்கள் பெல்ட்டில் வைத்திருந்த பணத்துடன் வீடு திரும்பினான். இது தாயின் கூற்றுக்கு மாறாக உள்ளது. ஒரு விவசாயியின் வாழ்க்கையைவிட ஒரு கொள்ளையரின் வாழ்க்கை பொருளாதாரரீதியில் வளமானது. இச்சூழலில் நேர்மையான ஒரு சமூகம்சார் கொள்ளையரை எதிர்பார்ப்பது அரிது.
ஹைதுக்களின் கொடூரத்தன்மை யாவரும் அறிந்தது. இவர்கள் வேளாண்குடிமக்களிடமிருந்து நிரந்தரமாக அந்நியப்பட்டவர். இங்கும் அங்குமாக ஓடித்திரிபவர். அலைகுடிகளைப்போல் இருந்தனர். இவர்களுக்கு தனித்த ஒரு தலைவர் இல்லை. இவர்கள் Voivode Ordukes என்ற தலைவர்களால் வழிநடத்தப்படுகின்றனர். இத்தலைவர்களே ஹைதுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குகின்றனர். ரஷ்யாவில் இதுபோன்ற கொள்ளையரை Jamadars என்ற குழுவினர் வழிநடத்தினர். பதிலுக்கு கொள்ளையில் உருபங்கு வசூலித்த்னர். 10% தீவர்த்திகளுக்கும், ஆயுதங்களுக்கும் இன்னும் பல பொருள்களுக்கும் கொடுக்கவேண்டியிருந்தது. ஹைதுக்கள் பால்கன் பகுதிகளில் தேசிய கொள்ளையர் (national bandits) என்று அறியப்பட்டனர். சில மரபு சட்டங்களின்படி இவர்கள் கிறித்தவர்கள் சார்பாக நின்று துருக்கியரை பழிவாங்கினர். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சார்பாக சண்டையிட்டனர்.
Robinhood
Robinhood என்ற கதாபாத்திரம் வேளாண்குடிகளின் கதாநாயகன் என்று அறியப்பட்டாலும் சில நேரங்களில் அவன் தெய்வாம்சம் பொருந்தியவன் என்றும் அறியப்பட்டான். எங்கெல்லாம் அரசாங்கத்திற்கும், பிரபுக்களுக்கும் இடையிலான உறவு தெளிவில்லாமல் உள்ளதோ அங்கு இவர் ஒரு சமூகத்தலைவராக எழுவார். ராபின்ஹூட் பற்றிய கதைப்பாடல்கள் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கிறது. ஆனால், 16 ஆம் நூற்றாண்டுவரை இவர் ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இங்கிலாந்தின் தொடக்கக்காலத்திய வரலாற்றில் இதுபோல் ஒருவர் வாழ்ந்தாரா? என்பதனை இங்கிலாந்தின் இடைக்காலத்தினை ஆயும் ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
இக்கதாபாத்திரம் உலகம் முழுக்க புகழ்பெற்றது. இதற்கு பல கதைப்பாடல்கள் உண்டு. இருந்தாலும் இப்பாத்திரம் நடைமுறையில் அரிது. உண்மைக்கும், புனைவிற்கும் இடையிலான இடைவெளி அதிகமன்று. இதனை இப்படி புரிந்துகொள்ளலாம். குதிரைவீரனுக்கும் படைத்தளபதிக்கும் இடையிலான இடைவெளி அதிகமன்று.
ராபின்ஹூட்டின் வரையறுக்கப்பட்ட இயல்புகள்
1.ஒரு சாதாரண ராபின்ஹூட் தம்முடன் 6முதல் 20 வரையிலான ஆட்களை வைத்திருப்பார். இது நிரந்தரமான நிறுவனம்போல் இயங்கும்.
2.இவர் மரபுவழிப்பட்ட சமூகக்கொள்ளையர் (traditional noble rober) என்று அறியப்படுகிறவர். இவர் ஆதிகாலத்திய முறையிலான சமூக எதிப்பினையே வெளிப்படுத்தினார்.
3.இவரை ஒரு தனிப்பட்ட வணங்காமுடி எனலாம்.
4.தம் கிராமத்தில் உள்ளவர் தவிர, பிற இடங்களில் உள்ள ஏழைகளியும், செல்வந்தர்களையும் கொள்ளையிடுவர்.
5.இவரால் ஒடுக்குமுறையினை அழிக்கமுடியவில்லை. ஆனால், ஏழைநாடுகளுக்கு நீதியினைப் பெற்றுத்தரமுடியும் என்று நம்பினர்.
ராபின்ஹூட் கதாபாத்திரம் தொடர்ந்து உருவாக்கப்படும். அவர், ஏழைகளுக்குத்தேவை. அவர் நீதியின் அடையாளம். இங்கு Saint Augustine கருத்தினை மனம்கொள்ள வேண்டும். ‘அரசுகள் பெரிய அளவிலான கொள்ளைக்கூட்டங்கள்’. ஆனால், ராபின்ஹூட்களால் ஒடுக்குமுறையினை அழிக்கமுடியவில்லை என்றாலும் அவற்றினை குறைக்க முயன்றனர்.
Diego Carrienses என்ற (1757-81) noble robber, Andulasia நிலப்பிரதேசத்தில் இயேசு கிறிஸ்தோடு ஒப்பிடப்பட்டார். ஆனால், காட்டிக்கொடுக்கப்பட்டார். உண்மையில், பல robinhoods noble robbers இல்லை. Noble robbers என்ற image உருவாக்கம் சமூக உறவுகளாலும், வேளாணுறவுகளாலும் உருவானது. இவர் ஒரு சாதனையாளராக, தவறுகளை சரிசெய்பவராக நீதியைக்கொண்டுவருபவராக சமூகத்தில் சமநிலையினை உருவாக்குபவராக அறியப்படுகிறார். வன்முறையின் நீக்கு-போக்கு பொறுத்து அவற்றினை அளவிடுதல் பொறுத்து ராபின்ஹூட்டின் புகழ் நிர்ணயமாகும். இவர், செல்வந்தரை கொள்ளையிடுவார், ஏழைகளுக்கு உதவுவார்;யாரையும் கொல்லமாட்டார். Billy the Kid என்ற தெனமெரிக்காவின் ரபின்ஹூட் வெள்ளையரிடம் கொள்ளையடித்து தம் மக்களிடம் கொடுத்ததால் அவர் நல்லவராக பார்க்கப்பட்டார். 18 ஆம் நூற்றாண்டில் France, England, Germany நாடுகளில் முறையே Dick Tuprin, Cartouche, Schnder hanns போன்றோர் ராபின்ஹூட்களுக்கு இணையாகப் பார்க்கப்பட்டனர்/போற்றப்பட்டனர். ஆனால், அப்போது robinhood seasons முடிந்திருந்தது. Robinhood என்று ஒருவர் இருந்திருப்பாரேயானால் அவார் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார். ஆனால், 16-17 ஆம் நூற்றாண்டுகளில் அச்சு நூல்கள் வந்த பின்னரே இவர் பற்றிய கதைகள் புகழ்பெற்றன. Robinhoods எழுத்து ஆவணங்களை விட்டுச்செல்லவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட பயணிகள் குறிப்புகள் வழியேதான் அவர்களைப்பற்றி அறிய இயலும். 20 ஆம் நூறாண்டில்தான் Bandoleer கொள்ளையர் பற்றிஒரு பத்திரிக்கையாளர் செய்தி தருகிறார். 19 ஆம் நூற்றாண்டின் தென்கிழக்கு ஐரோப்பா பகுதியில் பயணிகள் கொள்ளையரால் பிடித்துவைக்கப்பட்டனர்.
கொள்ளையர் : மதிப்பீடு
கொள்ளையர் பொதுவாக உள்ளூர்க்காரர்களே. ஒரு வட்டாரத்தில் நிகழும் கொள்ளை இன்னொரு வட்டாரத்தில் இருப்பவர் அறிவதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு கூட்டத்தினைச் சார்ந்த ஒருவன் கொள்ளையடித்தால் சட்டத்திற்குமுன் அவன் கொள்ளையன். ஒரு நகரின் மூலைமுடுக்கில் ஒருவன் சம்பளப்பையினை பறித்துக்கொண்டு ஓடினால் இன்றைக்கு அவன் தீவிரவாதி என்று கொள்ளையனை மதிப்பிடுவர்.
சிலர் மானமிகு கொள்ளையர் (gentleman robbers) எனப்பட்டனர். வேளாண்சமூகத்திலிருந்து தோன்றிய கொள்ளையர் நாகரிகமாதலை வெறுப்பர். இடைக்காலத்தில் ஜெர்மனியில் தோன்றிய வீரக்கொள்ளையர்கள் அல்லது கொள்ளைவீரர்கள் (robber knights) வேளாண்குடிகளோடு கலப்புற்று இருந்தனர். அவர்களைஅரசும் நிலவுடைமையாளர்களும் குற்றாவாளிகள் என்றனர். மக்கள் அவர்களை கதாநாயகள் என்றும், சாதனையாளர்கள் என்றும், பழிதீர்ப்போர் என்றும், நீதிக்காக போராடுவோர் என்றும், விடுதலைத்தலைவர்கள் என்றும் போற்றினர்.
ஒருவார் தம் சொந்த மண்ணில் சமூகக்கொள்ளையராகவும், மலைப்பகுதிகளில் சமவெளிகளில் திருடனாகவும் இயங்குவர்.
என்னதான் கூட்டாகக் கொள்ளையடித்தாலும் கொள்ளியடித்தவற்றை தம் சகபாடிகளுக்கு அவற்றைத் தக்கவைத்துக்கொள்ளும் உரிமையினை தலைவர்கள் வழங்குவது இல்லை. சமூகக் கொள்ளையர்கள் சீர்திருத்தவாதிகள் புரட்சியாளர்கள் அன்று. இருந்தும் இவர்களால் ஓர் இயக்கத்தினை இவர்களால் முடியவில்லை. நேபில்ஸ் நகரில் தோன்றிய கொள்ளையர் அயல்நாட்டவருக்கும் Jacobins க்கும் எதிராக எழுந்தனர். அவர்கள் போப்பின் பெயரால் புனித நம்பிக்கையின் பெயரால் புரடசியாளர்களாயினர்.
சமூகக்கொள்ளை என்பது சில சந்தர்ப்பங்களில் சரியாகவும் சில சந்தர்ப்பங்களில் தவறாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. கொள்ளையர்கள் குற்றவாளிகளாகளாகவும் பார்க்கப்படுகின்றனர்; கொள்ளையர் தலைவராகவும் கருதப்படுகின்றனர். இத்தாலியர்கள் கொள்ளையரை சமாளிக்க Dumas என்ற முகமூடியர்களை காவலர்களாக வாடகைக்கு அமர்த்தினர். மரபுரீதியான சமூகக்குற்றவாளிகள் அதாவது சமூகக்கொள்ளையர்கள் பெரும்பாலும் வெளியாராக கருதப்படுவார். அவர்கள் தங்களுக்குள் ஒரு சமூக அமைப்பினை உருவாக்கிக் கொள்கின்றனர். அவர்கள், அவர்களுக்கான மொழியில் பார்க்கப்ப்டுகின்றனர. அது, குற்றவாளிகளின் மொழி. அது, argot என்ற மொழியாகும். இவர்கள் Gypsis என்ற நாடோடிகளோடு தொடர்பு கொண்டிருந்தனர். கொள்ளையர்கள் Gypsis, French, Spanish, ரவுடி கூட்டத்தினின்றும் சில சொற்களைப் பெற்றனர். ஆனால், வேளாண் கொள்ளையர்கள் இதுபோன்ற ஒருகலவை மொழியில் பேசவில்லை; மக்கள்மொழியில் பேசினர்.
கொள்ளையரின் குற்றவகைகள்
இருவேறுவகையான குற்றவகைகள் உண்டு: (1) தொழில்ரீதியான அடியாள் கூட்டத்தினரின் நடவடிக்கைகள். இவர்கள் பொதுவாக திருடர்கள். (2) குழுக்களாக ஊர்புகுந்து திடீரென்று கொள்ளையிடல். கொள்ளையர்களும், ஊர்புகுந்து திருடுபவர்களும் வேளாண்குடிகளை தங்கள் இரைகளாகக் கருதினர். ஒரு சமூகக்கொளையன் வேளாண்குடிகளின் விளைச்சலைப் பிடுங்குவது சிந்திக்க இயலாத ஒன்று. அவர்கள் பண்ணையாரின் வேளாண்விளைச்சலைக் கொள்ளையிடுவர். சமூகக் கொள்ளையர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படாததால் கொள்ளைத்தொழிலை விட்டபிறகும் மீண்டும் சமூத்தில் இணைந்துகொள்ள அவர்களுக்குத் தடையில்லை. தம் சமூகம் இயங்கும் வட்டாரத்துக்குள்ளேயே அவர்களின் இயக்கம் இருந்தது.
பயன்பட்ட நூல்கள்
1.David Arnold (1979). Dacoity and Rural Crime in Madras,1860-1940, The Journal of Peasant Studies, 6:2.140-167.
2.Fernand Braudel (1995).The Mediterranean and ther Mediterranean World in the Age of Philip II.Vol.II Translated from the French [II revised edition,1966 (Tr.Sian Renolds)]. First California Paper Pack Printing.
3. Fernand Braudel (1992).Civilization and Capitalism 15-18th century, 3.Vols. (translated from French by Sian Reynolds) University of California Press.
4.Marc Bloch (1971). Feudal Society:The Growth of Ties of Dependance,Vol.I.Translated from French by L.A.Mauyon, First English Translation.1961.Reprint in 1971.
5.----------------(1978). French Rural History: An Essay on its Basic Characteristics. Translated from the French by Janet Sondheimer.
6.Eric Hobsbawm (1959). Primitive Rebels:Studies in Archaic Forms of Social Movement in the 19th and 20th Centuries.
7.----------------(1969). Bandits.[First published in Great Britain.(reprintted in 2012)].Abacus,London.