கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கலையும் வழிபாடும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றின் மூலம் ஒரு சமூக மக்களின் கலாச்சாரப் பரிவர்த்தனைகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஒரு சமூகத்திற்கு உரிய கலையானது எப்படி அனைவருக்கும் பொதுவானக் கலையாக மாறிய முறையினையும் அச்சமூகத்தின் வழிபாட்டு முறையானது மற்ற சமூகத்தில் இருந்து வேறுபடும் நிலையையும் இக் களாய்வுக் கட்டுரை எடுத்துரைக்க முயலுகிறது.

களம்

எங்கு பார்த்தாலும் கருவேலமுள் மரங்களும் கானல் அலைகளுமாய் கண்ணில் தென்படும் பகுதிதான் வானம் பார்த்த பூமியான கரிசல் நிலம். அந்நிலத்தில் பயிரிட்டு மகசூல் எடுத்தல் என்பது இயற்கையோடு போராடி வெற்றி பெற்றால் தான் உண்டு. அத்தகைய சூழலில் வாழ்பவர்கள் தான் கரிசல் மக்கள். வாழ்க்கை விளையாத இடத்தில் கலைப்பயிரின் விளைச்சலானது எந்த நிலத்திலும் இல்லாத மகசூலைப் பெறும் பூமியாகும். கலையினை உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள கம்பள நாயக்கர்களின் கலை வாழ்வை அறியும் நோக்கில் ஜமீன் கோடாங்கிப்பட்டியை களமாகக் கொண்டு தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

கம்பள நாயக்கர்கள்

விளாத்திக்குளம் தாலுகாவில் அமைந்துள்ள ஜமீன் கோடாங்கிபட்டி, தங்கம்மாள்புரம், புதூர், நாகலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் தான் கம்பளத்து நாயக்கர்கள். ஜமீன் கோடாங்கிப்பட்டி என்ற ஊரின் பெயரைக் கேட்டு பயணச்சீட்டு வாங்கும்பொழுது பக்கத்து இருக்கையில் உள்ளவர் பார்வையை ஆய்வாளரின் மீது வேறு விதமாகச் செலுத்துகிறார். ஏன் எனக் காரணம் அறியும் போது அவ்வூரில் பில்லி, சூனியம், மை வைத்தல் தொழில் அதிகமாக உள்ளதால் அதனை நினைத்துக் கொண்டு அப்பயணி என்னைப் பார்த்தார் என்பதை அறிய முடிந்தது. இவர்களின் பூர்வீகம் என்று அறியும்போது கி.ரா. மற்றும் பா. செயப்பிரகாசம் நயக்கர், ரெட்டியார் உயர்சாதி மக்கள் ஆந்திரநாட்டில் இருந்து வந்தனர் என்பதை கோபல்லகிராமம், தெக்கத்தி ஆத்மாக்கள் படைப்புகள் மூலம் அறிய முடிகின்றது. அதுபோல் கம்பளத்து நாயக்கரின் பூர்வீகம் இங்கு இல்லை என்பதைத் தெளிவாக அறியலாம்.

இவர்கள் பேசும் மொழியானது தெலுங்காகும். கிராமத்திற்குள் (ஜமீன் கோடாங்கிப்பட்டி) நுழைந்த உடனே தெலுங்கு வார்த்தைகள் சரளமாய் காதில் பாய்கின்றது. ஜமீன் கோடாங்கிப்பட்டியில் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால் அம் மக்களை முன்னிருத்தியே கட்டுரையில் பேசப்படுகிறது. இவர்கள் ஒன்பது கம்பளத்து நாயக்கர் பரம்பரையில் வந்தவர்கள். வரலாற்றுப் பூர்வமாக அறியும் போது விஜயநகர அரசின் ஆட்சியில் தான் இவர்களுக்கு அதிகமான சலுகைகள் இடம், பொருள் எனச் செயற்கரிய உதவிகளைப் பெற்றனர்.

கம்பளத்து நாயக்கர்களின் வீட்டுக் கூரையானது கூம்பு வடிவத்தில் கம்மந்தட்டையினால் வேயப்பட்டுள்ளது.

கம்பளத்து நாயக்கர்களின் குடும்ப வாழ்வானது கூட்டுக் குடும்ப முறையினைக் கொண்டது. இங்கு நாட்டாமை பதவி இல்லாமல் குலகுரு பதவி உள்ளது. குருவின் கட்டளை தான் அவர்களின் வேதவாக்காக உள்ளதை அறிய முடிந்தது. இவர்களின் பெயர்கள் குலதெய்வப் பெயர்களாக உள்ளது. இன்றைய நவீன காலத்திலும் அப்பணசாமி, பொம்மம்மா, சீலாத்தா எனப் பெயர்களைச் சூட்டுகின்றனர்.

விவசாயம், குறிபார்த்தல் போன்றவற்றை ஆண்கள் செய்கின்றனர். பெண்கள் தீப்பெட்டித் தொழில் விவசாயம் போன்றவை செய்கின்றனர். மாடு, ஆடு போன்ற கால்நடை வளர்ப்புதான் இவர்களின் பொருளாதாரக் காரணிகளாக உள்ளன. வீடுகளில் கிளி வளர்க்கின்றனர். பள்ளிக் கல்வியுடன் முடித்துக் கொள்வதால் கல்வியில் பின்தங்கியே உள்ளனர். குலதெய்வத்திற்கும் குருவாக்கிற்கும் கட்டுப்பட்டவர்கள் என்பதால் பெரும்பான்மையான மக்கள் போதை பழக்கம் இல்லாதவர்களாக உள்ளனர்.

திருமண முறை

கம்பளத்து நாயக்கர்களின் திருமண முறையினைப் பற்றி ஒரு குறு ஆய்வே செய்யலாம். அந்தளவிற்கு அவர்களின் திருமணமுறை உள்ளது. சுமார் இருநாட்கள் திருமணச் சடங்கு முறை நிகழ்கிறது. சடங்குகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு முறைகளில் நடைபெறுகிறது. திருமணத்தில் குடிசை மாற்றுச் சடங்கானது முக்கிய இடம் வகிக்கிறது. இனி கம்பள சமூகத்தின் கலையினை விரிவாக அறியலாம்.

கரிசல் நிலத்தில் ஒயிலாட்டம், தேவராட்டம், இராசா ராணி ஆட்டம் பிரசித்தி பெற்றவை. இதில் தேவராட்டம் என்பது கம்பளத்து நாயக்கர்களுக்கு மட்டுமே சொந்தமானக் கலையாகும். கம்பளத்து நாயக்கர்கள் கலையை உயிராக மதிக்கின்றனர். அவர்களின் ஒவ்வொரு நல்ல நிகழ்ச்சிகளிலும் தேவராட்டம் தவறாமல் நடைபெறுகின்றது. இவ்வூரில் (ஜமீன் கோடாங்கிபட்டி) ஐந்தாம், ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கூட ஏதாவது ஒரு நாட்டுப்புற இசைக்கருவியை நன்கு கையாளத் தெரிந்துள்ளதைக் காணமுடிந்தது. உருமி மேளத்தை ஒரு சிறுவன் கையாளும் முறையினைக் கண்டு வியப்பாக இருந்தது.

ஆரம்ப காலகட்டத்தில் தேவராட்டம் இந்த சமூகத்திற்கே உரிய கலையாக இருந்ததால் மற்ற நிலத்து மக்கள் அதனை அறியாதவர்களாக இருந்தனர். சமூகக் கண் கொண்ட சில பெரியவர்கள் அக்கலை நம் சமூகத்திற்கு மட்டும் இருந்தால் அழியும் சூழல் உருவாகும். எனவே மற்ற மக்களுக்கு பரப்ப வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தனர். குலகுரு, அவருடம் இருக்கும் மற்ற பெரியவர்கள் இக்கருத்தினைக் கேட்டு நீண்ட சிந்தனைக்குப் பின் சில கட்டுப்பாடுகளுடன் மற்ற மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

  1. நிகழ்ச்சி எந்த இடத்தில் நடைபெற்றாலும் குல குருவை அழைத்துச் செல்ல வேண்டும்.
  2. நிகழ்ச்சி குல குருவுக்கு என்பது கலைஞர்களுக்கு மட்டும் தெரியும். பார்வையாளர்கள் தமக்குத்தான் இந்நிகழ்ச்சி என்ற நினைப்பை உருவாக்கிவிடுகின்றனர். தேவராட்டப் பாடல்கள் தெலுங்கில் பாடப்படுகின்றன.

இச்சமூக மக்கள் எந்தச் செயலைத் துவங்கும் முன்பும் தங்கள் குலதெய்வத்தை (சக்கம்மா) வேண்டிய பின்னரே அதில் ஈடுபடுகின்றனர். பொது நிகழ்ச்சிகளில் தங்களது சமூகத்தையும் குலதெய்வத்தையும் தெலுங்கில் பாடிய பின்னரே நிகழ்ச்சியை ஆரம்பிக்கின்றனர். தேவராட்டம் மொத்தம் முப்பத்திரண்டு அடவுகளைக் கொண்டு ஆடப்படுகிறது. இசைக்குத் தக்கவாறு நடன அசைவுகள் உள்ளது. ஒவ்வொரு அடவுக்கும் ஒவ்வொரு அசைவுடன் ஆடுகின்றனர். கீழே மூன்று அடவுகளின் இராகங்களைக் காணலாம்.

தான...னான னான

னான ணன்னானே னான

டக் டகடி டீம்.......(1)

தான னா தான ணா ன

தான ணாரி னான னான

டட்ட கோ டட்ட

டட்ட கோ டட்ட.......(2)

தன்ன னன்ன னானே ணன்ன னா னானே

னன்ன னான னானே ணன்ன னன்ன னானே

டக் டக்டக் டகடி டக்

டக் டக்டக் டகடி டட்...(3)

இதற்குத் தகுந்தாற்போல அடவுகளை மாற்றி ஆடுகின்றனர். சேவைக்குரிய ஆட்டமாக ‘‘டக் டகடி டட்டகடி’’ என்ற இசையுடன் ஆடப்படுகிறது.

வழிபாட்டு முறைகள்

கரிசல் நில மக்கள் பெரும்பான்மையாக குலதெய்வ வழிபாட்டினைக் கொண்டுள்ளார்கள். கம்பள சமூகமும் குலதெய்வ வழிபாட்டில் மூழ்கியவர்களாக உள்ளனர். கம்பள மக்கள் சக்கம்மா, சீதலம்மா, பொம்மம்மா, நரசம்மா, வடக்குத்தி அம்மா போன்ற பெண்தெய்வங்களையும், வீரபுத்திரசாமி, பொம்மசாமி போன்ற ஆண் தெய்வங்களையும் வழிபடுகின்றனர். ஜமீன் கோடாங்கிப்பட்டியில் மட்டும் பதினைந்து குலதெய்வங்கள் உள்ளன.

இச்சமூக மக்களின் கோவில் பொங்கலானது சித்திரை மாதம் நடைபெறுகிறது. கோவிலில் காப்புக் கட்டியவுடன் விரதம் இருக்கத் தொடங்குகின்றனர். பொதுவாகக் கோவில்களில் பீடத்தைச் சுற்றி சுற்றுச் சுவர்கள் இருக்கும். ஆனால் இச்சமூக மக்களின் பெண் தெய்வமான சக்கம்மாவிற்கு சுவர் இல்லாமல் இலந்தைமுள் கொண்டு சுற்றிலும் போடப்பட்டுள்ளது. (சக்கம்மா உருவம் இவ்வழிபாட்டில் மாடு முக்கியப் பங்கினை வகிக்கிறது. எட்டு நாட்கள் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. வழிபாட்டின்போது ஆணும், பெண்ணும் சட்டை போட மாட்டார்கள் பெண்கள் மாராப்பினைச் சேலையால் மறைத்துக் கட்டியிருப்பார்கள். ஒன்பது வசிய முறை உள்ளது. ஒவ்வொரு வசிய முறை ஓதும் போதும் மூன்று ஐந்து என ஓதி குலகுரு கட்டளை இடுவார். அதன்படி சடங்கு நடைபெறும்.

இச்சடங்கில் வல்லையப் பூசை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இப்பூசையில் கொழுக்கட்டை இடம்பெறுகிறது. இப்பூசையை நிகழ்த்த வயதுக்கு வராத ஏழு பெண் குழந்தைகளை அழைத்து ஆவாரஞ்செடி கொண்டு பெருக்கி பசுஞ்சாணத்தால் மெழுகி மஞ்சள்பொடி கொண்டு ஒன்பது கோடுகள் போடப்படுகின்றன அதில்தான் கம்மங் கொழுக்கட்டையை (வல்லையம்) வைத்து பழம் தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இவ்வழிபாட்டுச் சடங்கினை வைப்பவர்கள் மற்ற வீடுகளுக்கும் செல்லமாட்டார்கள். மற்றவர்களை வீட்டிற்கு அழைத்து வரவும் மாட்டார்கள். இச்சமூகத் தெய்வங்களுக்கு மது ஆகாது. மது, மாது, சூது இம்மூன்றையும் இச்சடங்கு நிகழ்த்துபவர்கள் விட்டுவிட வேண்டும். இச்சமூக மக்களுக்கு குலதெய்வம் பற்றிய நம்பிக்கையில் ஆழ்ந்து இருப்பதை ஒவ்வொரு நிகழ்விலும் அறிய முடிகின்றது.

வானம் பார்த்த வறண்ட கரிசல் பூமியில் வாழும் கம்பள நாயக்கர்களின் மொழி நிலை, அடையாளங்கள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை மற்ற நில, சமூக மக்களிடமிருந்து பெரிதும் வேறுபடுவதை அறிய முடிந்தது. அதற்கு மேலாக தனிச் சொத்தாக இருந்த தேவராட்டத்தினை அனைத்து மக்களும் அறிந்த பொதுச்சொத்தாக மாற்றிய பெருமை இம்மக்களுக்கே உரியதாகும்.

தகவலாளிகள்

  1. கலைமாமணி குமாரராமன், 66 (கம்பள நாயக்கர்) கலைஞர், ஜமீன் கோடாங்கிபட்டி.
  2. ராஜேஸ்வரி, 52 (கம்பள நாயக்கர்) கூலி, ஜமீன் கோடாங்கிப்பட்டி.
  3. ஜெகஜோதி, 40 (கம்பள நாயக்கர்) தீப்பெட்டித் தொழில், ஜமீன் கோடங்கிப்பட்டி.
  4. அப்பணசாமி, 20 (கம்பள நாயக்கர்) கலைஞர், விளாத்திக்குளம்.
  5. அமுதவேல், 65 (கம்பள நாயக்கர்) குறிபார்ப்பவர், ஜமீன் கோடாங்கிப்பட்டி.
  6. பொம்மம்மா, 56 (கம்பள நாயக்கர்) கூலி, விளாத்திக்குளம்.
  7. சரஸ்வதி, 36 (கம்பள நாயக்கர்) விவசாயம், விளாத்திக்குளம்

களாய்வாளர் .பூவை சுப்பிரமணியன், பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளர். ''பா. செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல் காட்டு மக்கள் வாழ்வியல்'' எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறார்.