இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்யத் தொடங்கியபோது, இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட அறிவுத் துறைகளுள் ஒன்றே ‘மானுடவியல்.' உடற்தோற்றத்தாலும் மொழியாலும் பண்பாட்டாலும் வேறுபடும் பல்வேறு இந்திய இனக்குழுக்களைச் சரிவரப் புரிந்து கொள்ள விரும்பிய ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு உற்றதொரு அறிவுசார் புலமாக இம்மானுடவியல் பெரிதும் உதவியது. இந்திய மண்ணில் தாங்கள் அறிந்து, புரிந்துகொண்ட பல் வேறுபட்ட இனக்குழுக்கள் பற்றிய தரவுகளை எல்லாம் முறையாக ஆவணப்படுத்துவதற்கான முன்னெடுப்புப் பணிகளை ஆங்கிலேய மானுடவியலாளர்கள் மேற்கொண்டனர். இதற்குச் சரியான சான்றாக, எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston) படைத்து அளித்த 'Castes and Tribes of Southern India' ("தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும்") நூற் தொகுதிகளைக் குறிப்பிடலாம்; இவற்றைத் தொடர்ந்து தர்ஸ்டன் - ஆல் வெளியிடப்பட்ட 'Ethnographic Notes of Southern India' ("தென்னிந்திய இனக்குழுவரைவியல் குறிப்புகள்") மற்றுமொரு சிறந்த ஆவணமாக்கமாக அமைந்தது.

1908-09 கால கட்டங்களில் உருவாக்கப்பட்ட இவ்விரு ஆவணமாக்கப் பதிவுகளே தென்னிந்தியாவில் இன்றளவும் இனங்காணப்படும் பல் வேறு சாதிக் குழுக்களையும் பழங்குடிக் குழுக்களையும் முழுமையாக அறிந்துகொள்ள நல்ல அறிமுக ஆவண நூல்களாக ஆய்வுலகிற்கு அமைந்துள்ளன. பின்னாளில், 1980-கள் தொடங்கி இந்திய மானுடவியல் அளவீட்டாய்வுத் துறையினரால் (Anthropological Survey of India) ஆவணப்படுத்தப்பட்ட 'Peoples of India' ("இந்திய மக்கள் குழுக்கள்") நூற்தொகுதிகளுக்கும் தர்ஸ்டன் -இன் மேற்குறிப்பிட்ட நூற் தொகுதிகளே அடிப்படை ஆவணங்களாக அமைந்தன என்பதை மறுப்பதற்கு இல்லை.

tribe sculptureஇந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மானுடவியல் ஆய்வுகளில் மேலை நாட்டு மானுடவியலாளர்கள் அளப்பரிய பங்களிப்புகளை வழங்கி இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்தியாவின் இனக்குழுக்கள் குறித்த தவறான புரிதல்களும் அவர்களுடைய படைப்புகளில் இடம்பெற்றுவிட்டன என்பது கசப்பான உண்மை ஆகும்; அத்தகைய தவறான பதிவுகள் இன்றளவும் சரி செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிடும் வகையில், மானுடவியல் ஆய்வுப் பதிவுகளில் இனங்காணப்படும் சில தவறான சொல்லாட்சிகளை மீளாய்வு செய்வதே இக்கட்டுரைக் களம்.

பேய்க்கூத்தாக மாறிப் போன தெய்யம்

‘மனிதர் மீது மீயியல் ஆற்றல்' (Supernatural Prowess) இறங்குவதால், தெய்வ நிலைக்கு மனிதர் உயர்வதாகவும் அவ்வாறு தெய்வ நிலைக்கு உயர்ந்திட்ட மனிதர், தாம் சார்ந்துள்ள சமுதாய மக்களுக்கு நேரிடும் நோய், இழப்பு உள்ளிட்டவற்றிற்கான தீர்வுகளை அருள்வாக்காகக் (Oracle) கூறுவதாகவும் அமையும் ‘சாமியாடுதல்' (Divination) 'தெய்யம்' எனும் வழிபாடு சார்ந்த நிகழ்த்துக் கலையாகத் திகழ்கிறது. எட்கர் தர்ஸ்டன் தமது Caste and Tribes of Southern India நூற் தொகுதிகளில் இம் மரபைப் பேய்க் கூத்து என்று பொருள் படும் வகையில் 'Devil Dancing' என்று பதிவிடப்பட்டுள்ளமை இன்றளவும் ஒரு நீங்காத வடுவாகவே அமைந்துவிட்டது.

சிறு மரபாகிப் போன மண்ணின் இயல் மரபு

வட இந்தியாவின் நாட்டுப்புற வழிபாட்டு மரபை ஆய்வு செய்ய முற்பட்ட மில்டன் சிங்கர் (Milton Singer) எனும் மேலை நாட்டு மானுடவியலாளர் அவ்வழிபாட்டு மரபில் மண்ணிற்கு இயல்பான மரபுடன் மண்ணிற்கு அயலான மரபும் இரண்டறக் கலந்துள்ளமையை முதன் முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்; இருப்பினும், மண்ணிற்கு இயல்பான வழிபாட்டு மரபைச் ‘சிறு மரபு' எனப் பொருள்பட ‘Little Tradition’ எனவும் மண்ணிற்கு அயலான வைதிக வழிபாட்டு மரபைப் பெரு மரபு எனப் பொருள்பட ‘Great Tradition' எனவும் குறிப்பிட்டு மிகப் பெரும் பிழையைச் செய்துவிட்டார்; வரலாற்றில் இதுவொரு நீங்காத வழுவாகவும் நிலைத்துவிட்டது. உண்மையில், சொந்த மண்ணிற்கு இயல்பான மரபை ‘இயல் மரபு' என்று பொருள்படும் வகையில் ‘Native Tradition' எனவும் சொந்த மண்ணிற்கு அயலாக வெளியிலிருந்து வந்த மரபை ‘அயல் மரபு' என்று பொருள் படும் வகையில் ‘Alien Tradition' எனவுமே பதிவு செய்திருக்க வேண்டும்.

‘குறுமர் தொகுதி' எனும் தவறான இனக்குழுவரைவியல் பதிவு

ஒவ்வொரு இனக்குழுவிற்கும் ‘புறப் பெயர்' (Exonym), அகப் பெயர்' (Endonym) என்னும் இருமைப் பெயர்கள்' (Binary Nomenclatures) அடங்கியதாகவே அதன் இனக்குழுப் பெயர்' (Ethnonym) அமையும் என்பதே இனக்குழுப் பெயர்மையின் (Ethnonymy) இலக்கணம் ஆகும்; அதாவது, ஓர் இனக்குழுவை ‘அயலவர்' (Outsiders) குறிப்பிடும் ‘அழை பெயர்’ (Call Name) புறப் பெயராகவும் தம்மைத் தாமே ஓர் இனக்குழு விரும்பிக் குறிப்பிட்டுக் கொள்ளும் சொந்தப் பெயரானது அகப் பெயராகவும் அமைகின்றன. சொந்தப் பெயரான அகப் பெயரானது ஒற்றைப் பெயராக அகப் பெயராகவும் அமைந்திட, அயலவரால் அழைக்கப்படும் பெயராக அமையும் புறப் பெயரானது ஒன்றுக்கு மேற்பட்டனவாகவே அமைகின்றன; இது மட்டும் அல்லாமல், புறப் பெயரான அழை பெயர்கள் சொந்த இனக்குழுவினரால் இழி பெயராகவே கருதப்படும் போக்கே தூக்கலாக இனங்காணப்படுகிறது.

இத்தகைய குறைபாட்டை உடைய புறப் பெயரானது பெரும்பாலும் தவறாகவே அமைந்திடக் காண்கிறோம். சான்றாக, ‘நீலகிரி உயிரிச்சூழல் காப்பிடத்தின் (Nilgiri Biosphere Reserve) பல்வேறு பகுதிகளில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் ஆலு குறுமர், பெட்ட குறுமர், ஜேனு குறுமர், மற்றும் முள்ளு குறுமர் என்னும் நான்கு வேறுபட்ட பழங்குடிக் குழுக்களைக் ‘குறும்பாஸ்' (Kurumbas) என்கிற ஒற்றைப் பெயரால் தமிழ்நாட்டின் மாநிலப் பழங்குடிப் பட்டியலில் குறித்திடும் நிலையில், மேலை நாட்டு மானுடவியலாளரான டேவிட் ஜி.மாண்டல்பாம் (David G. Mandelbaum) இன்னும் ஒரு படி மேலே சென்று, மேற்படி நால் வகைமைப் பழங்குடிக் குழுக்களை ஒரே தொகுதியாகக் கருதிக் ‘குறுமர் தொகுதி' எனும் பொருள் படுமாறு Kurumba Complex என்று தவறாகப் பதிவு செய்துவிட்டார்; இவரது இத்தவறான பதிவை எவ்வித எதிர்க் கேள்வியும் கேட்காமல் - சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைபோல - எல்லா மேலை நாட்டு மானுடவியலாளரும் அதைத் தொடர்ந்து இந்திய மானுடவியலாளர் அனைவருமே ‘குறுமர் தொகுதி' என்கிற வகையில் 'Kurumba Complex' என்றே தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றனர்.

மாண்டல்பாம் குறிப்பிடும் இக் ‘குறுமர் தொகுதி' என்பதனுள் அடக்கப்படும் ஒவ்வொரு பழங்குடிக் குழுவும் அதன் பேசு மொழியாலும் தனித்துவமான பண்பாட்டாலும் ‘குறுமர்' என்னும் பெயருடன் குறிக்கப்படும் ஏனைய பழங்குடிக் குழுக்களுடன் முற்றிலும் மாறுபட்டதாகவே அமைகிறது என்பதை மொழியியல் தரவுகளும் மானுடவியல் தரவுகளும் தொடர்ந்து மெய்ப்பித்து வந்தாலும் மாண்டல்பாம் பதிவிட்ட 'Kurumba Complex' எனும் தவறான சொல்லாட்சியானது இன்றளவும் மானுடவியல் ஆய்வுப் பதிவில் களையப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

‘பால் பண்ணைக் கோவில்' எனப் பதிவிடப்பட்டுள்ள தொதவர் கோவில்

தமிழ்நாட்டின் ‘பழங்குடி மாவட்டம்' எனக் குறிப்பிடப்படும் ‘நீலகிரி', எல்லா மானுடவியலாளர்களாலும் ஒரு சேர முதன்மையான ஆய்வுப் பரப்பாகத் தொடர்ந்து கருதப்படலாகிறது; அதிலும் குறிப்பாக, நீலகிரியில் உள்ள தொதவப் பழங்குடியினர் வெளிநாட்டு அளவிலும் உள்நாட்டு அளவிலும் மிகுதியாக அறியப்பட்ட பழங்குடியாகப் பரந்துபட்ட நிலையில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட இனக்குழுவாகத் திகழ்கிறது என்றால் அது மிகை அல்ல; இருப்பினும், தொதவர் குறித்த மானுடவியல் ஆய்வுகளில் சில தவறான புரிதல்களும் காலங் காலமாகத் தொடரவே செய்கின்றன. எடுத்துக்காட்டாகத், தொதவப் பழங்குடியினரால் பொது வெளியில் பராமரிக்கப்படும் சாதாரண எருமைகளிலிருந்து பெறப்படும் பால்படு பொருள்கள் பொதுப் பயன்பாட்டில் உள்ள நிலையில், தொதவப் பழங்குடிப் பூசாரியால் பராமரிக்கப்படும் புனித எருமைகளிலிருந்து பெறப்படும் பால்படு பொருள்களுக்கான மூங்கில் பாண்டம், சுடுமண் கலயம், பிரம்பு மத்து உள்ளிட்ட புழங்கு பொருள்களை வைத்துப் பாதுகாத்திடும் புனித வெளியாக (Sacred Space) விளங்கும் தொதவரது கோவிலைப் ‘பால் பண்ணைக் கோவில்' எனப் பொருள்பட 'Dairy Temple' என்று மானுடவியலாளர் ஆர்.எச். ஆர். ரிவர்ஸ் - ஐத் தொடர்ந்து, ஏனைய மானுடவியலாளர்களும் குறிப்பிடுவது மிகப் பெரிய பிழை என்று அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறார் தொதவப் பழங்குடிச் செயல்பாட்டாளரான திருமதி. வாசமல்லி போத்திலி குட்டன்.

'போலி எருமைக் கொம்பாகி’ப் போன குறியீட்டு நிலை எருமைத் தலை

நீலகிரித் தொதவப் பழங்குடியினரது நம்பிக்கை அமைப்பொழுங்கில்' (Belief System) அவர்களுடைய தெய்வமானது தொதவ மக்களைப் படைப்பதற்கு முன்பாக எருமைகளையே படைத்தமையால், எருமைகளுக்கு மட்டுமே அவை வந்த வழியான மறுவுலகு இருக்கும் இடம் தெரியும் என்கிற நம்பிக்கை உள்ளது. எனவே, தொதவ ஆணோ, பெண்ணோ இறக்க நேரிடும்போது, உடனடியாக மேற்கொள்ளும் பச்செ சாவு (Green Funeral) என்னும் ஈமச் சடங்கின் போது எருமைகளைப் பலி கொடுப்பதன் வாயிலாகப் பலியிடப்பட்ட எருமையுடைய (ஆவியின்) வாலைப் பிடித்துக்கொண்டு, அதனுடனேயே இறந்துபோன தொதவர் மறுவுலகை அடைய இயலும் என்று தொதவப் பழங்குடியினர் உறுதியாக நம்புகின்றனர். புலால் உணவை அறவே தவிர்க்கும் தொதவர், தங்களால் பலியிடப்பட்ட எருமையின் தலையைத் தமது வீட்டிற்குள் அனுமதிக்காமல், வீட்டிற்கு வெளியே, குடியிருப்புப் பகுதியின் முகப்பில் உள்ள ஏதேனும் ஒரு மரத்தின் மீது - அனைவரும் காணும் வகையில் - காட்சிப்படுத்தி வைப்பர்.

வீட்டிற்குள் அனுமதிக்க இயலாத பலியிடப்பட்ட எருமைத் தலைக்கு மாற்றாக, சில திணைசார் மரங்களிலிருந்து ஒடித்து எடுக்கப்படும் சிறு கிளையைக் கொண்டு, தாவர ஈடாகத் (Vegetative Substitute) தொதவர் தாங்கள் உருவாக்கிய எருமைத் தலையின் குறியீட்டுநிலை வடிவத்தை (Symbolic Form) நடு வீட்டின் உள்ளே மிகுந்த விழுமியத்துடன் வைத்து, அதன் முன்பாக நாள்தோறும் விளக்கு ஏற்றி வழிபாடும் மேற்கொள்கின்றனர். இத்தகைய குறியீட்டுநிலை எருமைத் தலையை (Symbolic Buffaloe Head) மேலை நாட்டு மானுடவியலாளர் தமது ஆய்வுப் பதிவுகளில் தவறுதலாகப் ‘போலி எருமைக் கொம்பு' என்று பொருள்படும் வகையில், 'Imitation Buffalo Horn' என்றே தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்; இந்திய மானுடவியலாளர்களும் எவ்விதக் கேள்வியும் கேட்காமல் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்கு மாறாக, இம்முகாமையான சடங்குசார் வழிபாட்டுப் பொருளை மிகச் சரியாகக் ‘குறியீட்டுநிலை எருமைத் தலை' என்று குறிப்பிடுவதே பொருத்தமானதும் முறையானதுமான சொல்லாட்சியாக அமையும்.

வில் - அம்புச் சடங்காக மாறிப்போயுள்ள கருப்ப - இணைப்புச் சடங்கு

பெண் பூப்பு அடைவதற்கு மேற்கொள்ளும் பூப்பு முன்நிலைத் திருமணச் சடங்கு வாயிலாக, (Pre-Puberty Marriage Ceremony) "இந்த ஆணுக்கு இந்தப் பெண்தான் வாழ்விணையர்" என்று நீலகிரித் தொதவப் பழங்குடியினர் முடிவு செய்துவிடுகின்றனர்; இவ்வாறு சிறார் நிலையிலேயே தொதவரது மண உறவானது உறுதி செய்யப்பட்டாலும் பெண்ணானவள் பூப்படைந்த பின்னரே தனது வாழ்விணையர் வீட்டிற்குச் சென்று இல்லற வாழ்வைத் தொடங்குகிறார். இத்தகைய இணைசேர் வாழ்வின் போது பெண் கருவுற, கருவற்ற அத்தொதவப் பெண்ணின் ஏழாம் மாதம் அவளது வாழ்விணையரான தொதவ ஆடவன் அப்பெண்ணின் கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தைக்குத் தானே தகப்பன் என்று தனது உறவினர்க்கு உணர்த்திடும் வகையில் ஒரு வகை வாழ்க்கைச் சுழற்சிச் சடங்கானது கடைப்பிடிக்கப்படுகிறது; மேற்படி வாழ்க்கைச் சுழற்சிச் சடங்கை மேற்கொள்ளும் நாளன்று அக்கருவுற்ற பெண்ணின் வாழ்விணையரான பொதவ ஆடவன் தனது நண்பர் புடை சூழ அருகில் உள்ள சோலைக் காட்டிற்குச் சென்று, அங்குப் புவ் (Sophorea Fuca) எனும் திணைசார் குற்று மரத்தின் (Endemic Shrub) சிறு கிளையொன்றை வெட்டி எடுத்து, அதை அரை வட்டதாக வளைத்து, அதன் நடுவே நர்க் (Andropogan shoenanthes) எனும் ‘திணைசார் புல்'லின் (Endemic Grass) ஒரேயொரு நீண்ட தனி இலையை வைத்து, ஒரு வகையான சடங்குசார் பொருளை உருவாக்குகிறார். இவ்வாறு, தான் பெரிதும் முயன்று உருவாக்கிய சடங்குசார் பொருளைத் தனது கைகளில் ஏந்தியவாறு, அருகில் உள்ள புனித நாவல் மரத்தின் அருகே குழுமியுள்ள உறவுக் கூட்டத்தினர் இடையே அமர்ந்திருக்கும் தனது வாழ்விணையரது தந்தையைப் பார்த்து, “அச்சடங்குசார் பொருளைத் தன் கருப்பிணி மனைவிக்குக் கொடுக்கட்டுமா?" என்று கேட்டு, அவரது இசைவைப் பெற்று, அத்தொதவ ஆடவன் தனது இணையர்க்கு அதை அளிக்க முற்படுகிறார்;

அப்போது, அந்நிறை சூலியான தொதவப் பெண், "நீ எந்த குலத்தைச் சார்ந்தவன்?" என்றோ , "உன் குலத்தின் பெயர் என்ன?" என்றோ அவனிடம் வினவுகிறாள். இதற்குத் தக்க மறுமொழியாகக் கூடியுள்ள தனது தொதவ உறவுகளுக்கும் நட்புகளுக்கும் கேட்கும் வகையில், தனது தந்தைவழிக் குலத்தின் பெயரை மும்முறை அத்தொதவ ஆடவன் உரக்கக் கூறுகிறார். இதைத் தொடர்ந்து, அத்தொதவ ஆடவன் அளிக்கும் அச்சடங்குசார் பொருளைப் பெற்றுக்கொண்ட அத்தொதவப் பெண்மணி, அதைத் தனது நெற்றியில் படுமாறு வைத்துக்கொண்டே, தங்களுடைய புனித நாவல் மரத்தின் கீழ்ப் பக்கத் தண்டில் புதிதாக வெட்டி உருவாக்கியுள்ள மாடம் போன்ற அமைப்பில் வைக்கப்பட்டுள்ள எரியும் விளக்கைக் கண் இமைக்காமல் பார்க்கிறாள். இதையடுத்து, இணையர் இருவரும் அங்குக் குழுமியுள்ள உறவினர் அனைவரையும் வணங்கி வாழ்த்துக்கள் பெறுகின்றனர். அதைத் தொடர்ந்து, தொதவர் ஆடவர் குழு, பெண்டிர் குழு இரண்டும் தனித் தனியாகத் தமது மரபார்ந்த நிகழ்த்துக் கலையைப் பாடலுடன் ஆடி மகிழ்கின்றனர். பின்னர், விருந்து உணவுடன் இக்கருப்ப - இணைப்புச் சடங்கானது நிறைவு பெறுகிறது.

பெண்ணின் கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தைக்கு உரிய சமூகத்திற்கான தந்தையை (Sociological Father) அறிந்தேற்பு செய்து (குழந்தையையும் தந்தையையும்) இணைக்கும் வகையில் மேற்குறிப்பிட்ட வாழ்க்கைச் சுழற்றிச் சடங்கு அமைவதால், இதைக் ‘கருப்ப இணைப்புச் சடங்கு' (Pregancy - binding Ceremony) எனத் தமது ஆய்வில் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ள மானுடவியலாளர்கள், இச்சடங்கு ஆற்றுகையின் போது (Ceremonial observance) தொதவ ஆடவன் அரை வட்ட வடிவ அமைப்பின் நடுவே நீட்சியாக அமையுமாறு தனது வாழ்விணையரான தொதவப் பெண்ணிற்குத் தானே உருவாக்கி அளித்திடும் சடங்கு சார் தொட்டுணர் பண்பாட்டுப் பொருளைக் (Tangible Object of Culture), குறியீட்டுநிலை வில் - அம்பு (Symbolic Bow & Arrow) என்று தவறாகக் கருதித், தொடர்புடைய வாழ்க்கைச் சுழற்சிச் சடங்கை வில் (அம்பு) அளித்திடும் சடங்கு (Bow-giving Ceremony) என்று தவறாகப் பதிவு செய்துள்ளமை வருத்தம் மேலிடச் செய்கிறது. தொடர்ந்து, அனைத்து (வெளிநாட்டு, உள்நாட்டு) மானுடவியலாளர்களும் இவ்வாறே தவறாகப் பதிவிட்டும் வருகின்றனர். இதில் உள்ள நகை முரண்' என்னவென்றால், தொதவப் பழங்குடியினரும் - மானுடவியலாளர்களைப் பின்பற்றி - இச்சடங்கை ‘வில் - அம்பு சாஸ்த்ரம்' எனக் குறிப்பிடத் தொடங்கி விட்டதோடு, தற்போது இதற்கான அழைப்பிதழ்களிலும்’ வில்-அம்பு சாஸ்த்ர அழைப்பிதழ்' என்றே அச்சிடத் தொடங்கிவிட்டனர்; இதனால், அரை வட்ட அமைப்பானது தொதவரது அரை பீப்பாய் வடிவக் குடிலைக் குறியீடாகச் சுட்டி நின்று, அவர்தம் தந்தைவழிக் குலத்தைக் குறிக்கிறது - என்கிற உண்மையானது கால ஓட்டத்தில் கரைந்தே போய்விட்டது.

நிறைவுரை

குற்றப் பழங்குடிகள் (Criminal Tribes) என்னும் தனது தவறான சொல்லாடலை மானுடவியலானது நீக்கி விட்டு, ‘சீர் மரபினர்' (Denotified communities) என்கிற சொல்லாட்சியை ஏற்றுக்கொண்டுள்ள இன்றைய கால கட்டத்திலும், மனிதராகப் பிறந்து, சமூகத்தில் ‘குற்றவாளிகள்' என்று கருதப்பட்டு, அதனால் கொலை செய்யப்பட்டு, பின்னர் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டுவிட்ட நிலையிலும் அத்தகைய நாட்டுப்புறத் தெய்வங்களைக் குறிக்கத் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட 'Criminal Gods' (அதாவது, ‘குற்றவாளிக் கடவுளர்’) என்பது இன்னும் அப்படியே மானுடவியல் பதிவுகளில் நீங்காத கறையாக நிலைத்துவிட்டமை ஓர் அவலமே.

"எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்" என்கிற வகையில், மானுடவியல் ஆய்வுப் பதிவுகளுள் தற்செயலாக நேர்ந்துவிட்ட மேற்சுட்டியுள்ள வரலாற்றுப் பிழைகளை இன்றுவரை தொடர அனுமதிப்பதும் அறிவுடைமை ஆகாது.

"மானுடவியல் புலமானது மாந்தர் இனக்குழுக்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்காது - வேறுபாடும் பார்க்காது" அதாவது, ‘உயர் பண்பாட்டு மனப்பான்மை’ (Ethnocentrism), ‘தாழ் பண்பாட்டு மனப்பான்மை' (Xenocentrism) இரண்டுமே அறவே கூடாது" - என அறிவுறுத்தும். எனவே, ‘மானுடவியல் புலத்தின் ஆய்வுப் பதிவுகளில் இத்தகைய தவறான சொல்லாட்சிகளுக்கு இனி இடம் இல்லை" என்று சொல்லும் வகையில், மானுடவியலாளர்களுடைய ஆய்வுப் பதிவுகள் இனி வருங்காலங்களில் அமைய வேண்டும்..

- முனைவர் சி.மகேசுவரன், மேனாள் இயக்குநர், பழங்குடியினர் ஆய்வு நடுவம், தமிழ்நாடு அரசு.