இக்கால இலக்கியங்களில் புதினங்கள் மக்களையும் அவர்கள் வாழ்க்கை முறையையும் முழுமையாக விளக்குகின்றன. இவை துப்பறியும் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், சமுதாயப் புதினங்கள், வட்டாரப் புதினங்கள் என நுவல் பொருள் அடிப்படையில் பாகுபாடு செய்யப்படுகின்றன.

ஆட்சி, நிர்வாகம் போன்றவற்றுக்காக தஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் எனப் பிரிக்கப்பட்டிருந்தாலும் கலை, இலக்கியம், பண்பாடு, தொழில் போன்றவற்றால் ஒன்றிணைந்தே காணப்படுகிறது.

தஞ்சை வட்டாரத்திலும் மற்ற வட்டாரங்களைப் போலவே படைப்பாளர்கள் பல புதினங்களை எழுதி இம்மண்ணையும் மக்களையும் அறியச் செய்துள்ளனர். தி. ஜானகிராமன், க.நா.சுப்பிரமணியன், தஞ்சை பிரகாஷ், சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள், ச.சுபாஷ்சந்திரபோஸ் போன்ற பல படைப்பாளர்கள் பல புதினங்களை எழுதியுள்ளனர். அவ்வரிசையில், படைப்பாளர் சு.தமிழ்ச்செல்வியும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றார்.

ஆய்வுச்சுருக்கம்:

ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்விடம், செய்தொழில், பழக்கவழக்கம் போன்றவற்றைப் படிமமாக்கிக் காட்டும் வகையில் புதினங்களைப் படைத்துள்ளார். அப்புதினங்களில் பதிவாகியுள்ள தொழில்களைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

su tamilselviபடைப்பாளரின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு பொருளாதாரச் சூழலை மையமாக வைத்துக் கதைக் களங்களிலும் பெரும்பாலான தொழில்கள் நிகழ்கின்றன. இருப்பினும் படைப்பாளர் தாம் கூற வந்த கதைப் பின்னலுக்கேற்பத் தொழில் சார்ந்த விவரிப்பை முதன்மைப்படுத்தியுள்ளார். அவற்றில் பதிவாகியுள்ள பல்வேறு தொழில்களைப் பின்வருமாறு காணலாம்.

தொழில்கள்

உப்பளத் தொழில்

மீன்பிடித் தொழில்

வேளாண்மைத் தொழில்

ஆடு மேய்த்தல், வளர்த்தல்

மாடு வளர்த்தல், மேய்த்தல்

பிற தொழில்கள்

உப்பளத் தொழில்

படைப்பாளரின் ‘அளம்' நாவலில் உப்பளத் தொழிலாளர்களைப் பற்றி படம்பிடித்துக் காட்டியுள்ளார். உப்பளத்தின் வர்ணனைகள், உப்பள வேலையின் கடினம், பராமரிப்பில் சிரமம், தொழில் நடைபெறும் முறைகள், உப்பளம் அமைக்கப்படுதல், உப்பு விற்றல் ஆகியன விளக்கப்பட்டுள்ளன.

பண்டை நாளில் கடலைச் சார்ந்து வாழ்ந்தவர்கள் பரதவர் என்று அழைக்கப்பட்டனர். "கடல் அருகில் வாழ்நர் பரதவர் எனப்பட்டனர். இத்தகைய பரதவர் மீன் பிடித்தலையும் உப்பு எடுத்தலையும் தொழிலாகக் கொண்டனர்". (1) என மா. இராசமாணிக்கனார் கூறுவது நோக்கத்தக்கது.

நதிநீர் பிரச்சனைகளால் முதல் மடைப்பகுதியே பாதிக்கப்பட்டதால் கடைமடைக்கு தண்ணீர் போவது கனவாகிவிட்டது. அதனால் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் உப்பளத்தையே நம்பி வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது பற்றிய பதிவுகள் அளம் புதினத்தில் மட்டுமே காணப்படுகின்றன.

அளம் புதினத்தில் சுந்தரம்பாளின் கணவன் சுப்பையன், மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளையும் விட்டு வாழ்வாதாரம் தேடி சிங்கப்பூர் செல்கிறான். போனவன் திரும்பி வரவில்லை. சுந்தரம்பாள் மூன்று பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு சிரமப்படுகிறாள். நந்தனா வருசத்தின் புயலுக்குப் பிறகு கடற்கரையைச் சார்ந்த மக்கள் உப்பளத்தையே நம்பி வாழ்ந்தார்கள். பெரிய பெரிய தனியார் உப்பு நிறுவனங்களும் அந்தப் பகுதிகளில் வளர ஆரம்பித்தன. முற்றிலுமாக வேளாண்மை கைகொடுக்காததால் உப்பளமே பெரும்பாலான மக்களுக்கு கைகொடுத்தது. உப்பை மூட்டையில் எடுத்து மொத்த விற்பனையாகவும், சில்லரை விற்பனையாகவும் விற்பனை செய்து வந்தனர்.

சுந்தரம்பாள் குடும்பம் அளத்தில் உப்பை அள்ளித் தலைச்சுமையாகவே கொண்டுசென்று தூரத்து ஊர்களில் உப்பை நெல்லாக்கியும், பிற தானியங்களைப் பெற்றும் வாழ்ந்துள்ளனர். இப்பதிவு தனியாள் மூலம் பண்டமாற்று முறையில் உப்பு விற்பனை நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மீன்பிடித் தொழில்

கடலும் கடல் சார்ந்த பகுதிகளில் மீன்பிடித்தல், உப்புக் காய்ச்சுதல், முத்துக்குளித்தல் போன்ற தொழில்கள் இருந்தன. படைப்பாளரின் படைப்புகளில் முத்துக்குளித்தல் இடம் பெறவில்லை. ஆறுகாட்டுத்துறை, மாணிக்கம் என்னும் இரு புதினங்களிலும் மீன்பிடித் தொழில் பற்றிய செய்திகள் நிறைய பதிவாகியுள்ளன.

மீன்பிடித் தொழிலைப் பரம்பரையாகச் செய்பவர்கள் பரதவர். இந்த இனம் பற்றிய செய்தி பழந்தமிழ் இலக்கியங்களிலேயே பதிவாகியுள்ளது.

ஆறுகாட்டுத்துறையில் சுறாமீன் வேட்டைக்குப் போக சாமுவேல் வெறியாக இருப்பது போல சங்க இலக்கியம் பட்டினப்பாலையில் சுறாமீன் கொம்பை நட்டு வழிபட்ட செய்தி பதிவாகியுள்ளது என்பதை,

கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி

நடுகல்லின் அரண் போல

நெடுந்தூண்டிலில் காழ்சேர்த்திய

குறுங்கூரைக் குடி நாப் பண்

நிலவடைந்த இருள்போல்

வலை உணங்கும் மணல் முன்றில் (ப.பா-78-83) 2

இப்பாடலின் மூலம் அறியலாம். வேதாரண்யம் கோவிலுக்கு ஊழியம் செய்தவர்கள் மீன்பிடிப்பதைப் பார்த்துத் தாங்களும் செய்ய ஆரம்பித்தார்கள். படையாச்சி என்னும் வன்னியர் இனத்தைச் சார்ந்த இவர்கள், இத்தொழிலைச் செய்ய ஆரம்பித்தால் இதே இனத்தைச் சார்ந்த மற்ற ஊர்க்காரர்கள் ஆறுகாட்டுத்துறை என்னும் ஊரில் பெண் எடுக்கவும் மாட்டார்கள் கொடுக்கவும் மாட்டார்களாம்.

எல்லாத் தொழில்களிலும் ஆபத்துக்கள் இருக்கின்றன. ஆனால், கடலில் மீன் பிடிப்பது மட்டும் சிரமங்கள் நிறைந்த தொழிலாகும். தொடக்கத்தில் கட்டுமரங்கள் மூலமாகவே மீன் பிடித்தார்கள். மீனைப் பிடிப்பது ஆடவர் தொழிலாக இருந்தாலும் அதனை விற்று முதலாக்குவதும், காயப்போட்டுக் கருவாடாக்கி விற்பதும் பெண்களின் தொழிலாகவே அமைந்துள்ளது என்று ஆறுகாட்டுத்துறை புதினத்தில் பதிவுசெய்துள்ளார்.

‘மாணிக்கம்' புதினத்தில் வரும் மாணிக்கம் தொழிலையும் கடலையும் தெய்வமாக மதிக்கின்றான். மீன் பிடிக்கும்போது சிறுநீர் வந்தால் எவ்வளவு நேரமானாலும் கரைக்கு வந்துதான் சிறுநீர் கழிப்பான்.

வேளாண்மைத் தொழில் செய்யும் மக்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குவது போல தனியார் நிறுவனங்கள் பல மீன்பிடிப்பவர்களுக்கு முன்பணம் கொடுத்துக் குறைந்த விலைக்கு வாங்குகின்றன. இதனைத் தடுப்பதற்கு மக்கள் ஒன்றுகூடிச் சங்கம் அமைக்கின்றார்கள். சுரண்டும் வர்க்கங்களின் செயலை முறியடிக்க இது போன்ற அமைப்புகள் தேவை என்னும் கருத்தைப் பின்வருமாறு அறியலாம்.

"சமுதாய வளர்ச்சியில் வரலாற்று ரீதியில் முற்றக்கூடிய கடமைகளை முரண்பாடுள்ள வடிவ அமைப்புகளில் தீர்வு காண்பதற்கும் பழையவற்றின் மீது புதிய வெற்றி பெறுவதற்கும் புரட்சிகர வர்க்கப் போராட்டம் ஒன்றே வழியாகும்". (3)

ஆறுகாட்டுத்துறையில் வரும் சவரிமுத்து, அவன் மகன் சாமுவேல், மாணிக்கம் புதினத்தில் வரும் மாணிக்கம் ஆகிய மூன்று பேரும் கடலிலேயே தங்கள் உயிரை விடுகிறார்கள்.

ஆறுகாட்டுத்துறையில் மாணிக்கம், கண்ணகி, அளம் என்னும் நான்கு புதினங்களிலும் மீன்பிடித் தொழில், அதைச் சார்ந்து வாழக்கூடிய மக்களின் வாழ்க்கை நிலை காணப்படுகிறது. நிலையற்ற வாழ்க்கை, நிலையற்ற வருமானம், கடுமையான உழைப்பு இவற்றுடனே அவர்கள் வாழ்க்கை இருப்பதை உணரமுடிகிறது.

வேளாண்மைத் தொழில்

தமிழக வரலாற்றைக் காணும்போது, காவிரியும் அதன் கிளை நதிகளும் பாய்ந்து சோழநாட்டை வளங்கொழிக்கச் செய்துள்ளன.

பட்டினப்பாலை காவிரியின் பெருமையை வெகுவாய்ப் புகழ்ந்துள்ளது. விண்மீன் திசைமாறி தெற்காகப் போனாலும் போகுமேயன்றிக் காவிரி என்றும் வற்றாது எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் புகழ்ந்துள்ளார்.

வசையில் புகழ், வயங்கு வெண்மீன்

திசை திரிந்து தெற்கு ஏகினும்,

தற்பாடிய தளி யுணவின்,

புள் தேம்பப் புயல்மாறி,

வான் பொய்ப்யினும், தான் பொய்யா,

மலைத் தலைய கடற் காவிரி

புனல் பரந்து பொன் கொழிக்கும் (ப.பா-1-5) (4)

சோழ நாட்டில் பொன் கொழிக்கப் பாய்ந்த காவிரி ஆறுக்கு தற்போது வறண்டு கிடக்கின்றது. இக்கால இலக்கியப் பதிவுகள் அனைத்திலுமே காவிரியின் வறட்சியே அதிகமாகப் பேசப்படுகிறது. உலகில் ஓடுகின்ற ஆறுகளில் தமிழகத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்குத் தனிச் சிறப்புண்டு. தோன்றிய இடத்திலிருந்து கடைமடைப் பகுதிவரை மக்களுக்குப் பயன்படும் ஒரே ஆறு காவிரி மட்டுமே.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைப் பின்புலமாகக் கொண்ட படைப்பாளர் சு.தமிழ்ச்செல்வியின் புதினங்களில் உப்பளம், மீன்பிடி, தொழில்களைப் பற்றி பதிவாகி இருக்கும் அளவிற்கு வேளாண்மை பற்றிய செய்திகள் பதிவாகவில்லை. படைப்பாளர் செழிப்பு, வறட்சி என்ற இரு நிலைகளில் வேளாண்மைச் செய்திகளைப் பதிவு செய்துள்ளார். வேளாண்மை பற்றிய செய்திகள் மிகக் குறைந்த அளவிலேயே கீதாரி, அளம், மாணிக்கம், கண்ணகி ஆகிய புதினங்களில் காணப்படும் செய்திகளைக் காணலாம்.

மாணிக்கம் எனும் புதினத்தில் மாணிக்கம் ஊதாரியாகத் திரிந்துகொண்டு நிலத்தை எல்லாம் விற்றுச் செலவுசெய்கிறான். அவன் கூலி வேலைக்கு அறுவடை செய்யப்போகிறான் என்ற செய்தியை (87-88) ஆகிய பக்கங்களில் சு.தமிழ்ச்செல்வி விளக்குகிறார். பிழைப்புக்கு வேறு வழியில்லாமல் தொழிலே தெரியாத பலர் மீன்பிடித் தொழிலுக்கு வருகின்றார்கள்.

"கடல் மட்டும்தான் பிழைப்புக்கு ஒரே ஆதாரமாயிருக்கிறது. மீன்பிடிப்பதைப் பழித்தவர்களெல்லாம் வலையையும் குண்டானையும் எடுத்துக்கொண்டு தெற்கே போய்க் கொண்டிருந்தார்கள். காவிரித்தாய் ஏமாற்றிய போதிலும் தன்னை நம்பி வந்த பிள்ளைகளைக் கடல்தாய் காப்பாற்றி வந்தாள்'' (மாணி.ப.278)

இவ்வாறு காவிரி நீர் வரத்துக் குறைந்ததால் கடல் மக்களைக் காப்பாற்றுவதாகப் படைப்பாளர் கூறுகிறார்.

காவிரியின்வழி தமிழகத்திற்குத் தண்ணீர் வருவதைக் கர்நாடகம் பல அணைகளைக் கட்டித் தேக்கிவிட்டது. இதனால்தான் எண்பதுகளிலிருந்து முறையாகக் காவிரியில் நீர் வருவதில்லை. சாகுபடியாளர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். 02.06.1990 இல் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

உழவுத் தொழில் ஒன்றே அனைவருக்கும் உணவளிக்கக்கூடியது. அதனால்தான் திருவள்ளுவர்,

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை (1031) 5

எனக் குறிப்பிடுகின்றார்.

‘கீதாரி’ என்னும் புதினத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வந்து நாற்றுவிட்டிருந்த செய்தியைப் படைப்பாளர்.

"புதுத் தண்ணீர் மேட்டூரணை திறந்து விட்டு இரண்டு வாரம்தான் ஆகியிருந்தது. அதற்குள் உழுது ஆற்றங்கரை நெடுகிலுமுள்ள கொல்லைகளில் ஆங்காங்கே நாற்று விட்டிருந்தார்கள். நாற்றங்கால்களில் பயிர்கள் முளைத்து விரலுயரத்திற்கு வளர்ந்து அடர்ந்திருந்தது." (கீதாரி.ப. 9).

அளம் புதினத்தில் கோயில் வளவு என்னும் கிராமத்தில் எழுபதுகளுக்கு முன் அந்தப் பகுதியில் சிறப்பாகவே வேளாண்மை நடைபெற்றிருக்கின்றது என்ற செய்தியையும் மழைக்காலத்தில் நெல்சாகுபடி செய்திருக்கிறார்கள். ஆனால், போகப் போக அந்தப் பகுதி முழுவதும் வறண்டுபோய்விட்டது. வெள்ளம் வரும் அல்லது வறண்டுபோகும் எனப் பதிவு செய்துள்ளார்.

"வற உழவாய் உழுது தெளித்துவிடுவார்கள். தெளித்த நெல் முளைத்து அப்படியே வளர்ந்து விளைய வேண்டியதுதான். தெளிப்பதில் நடுவதைப் போல அதிக மகசூலும் கிடைக்காது. வானம் ஏமாற்றிவிட்டால் ஒன்றும் கிடைக்காது. மாவுக்கு ஐந்து கலம் ஆறுகலம் கிடைப்பதே பெரிது. கோடைப் பயிராகக் கம்பு, கேழ்வரகு, காடகண்ணி, வறகு என்று விளைவதை வைத்துக்கொண்டு பாதிநாள் ஓட்ட முடிந்தது." (அளம்.ப.32)

விதைப்பு நெல் விளைந்து வெள்ளத்தில் வீணாகப் போவதை அளம் புதினத்தில் சுந்தராம்பாளின் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.

"ஓம் பேச்சுக் கேட்டு நெல்லு வெரச்சி நா கடன்பட்டுப் பாழாப்போனது பத்தாதா? நெல்லு வெரச்சி வெள்ளத்தோட வுட்டுப்புட்டுக் கொரவம்பில்ல தின்னுகிட்டுருக்குறமே இது பத்தாதா நம்பளுக்கு?" (அளம்.ப.108)

மழையிலும் வெள்ளத்திலும் வயிற்றுப் பிழைப்பிற்காகப் பெண்கள் படும்பாடும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

‘கற்றாழை’ புதினத்தில் மணிமேகலை குடிகாரக் கணவனிடம் இருந்துகொண்டு வயிற்றுப் பிழைப்புக்காகப் படாதபாடுபடுகின்றாள். சேறடித்த வயலில் முளைத்துள்ள புல்லைக் களைந்து எடுத்தல், நடவு நடுதல் போன்ற வேலைக்கு மற்றவர்களுடன் போய் செய்வாள்.

மழை, வெயில் எனக் கூலிக்காகப் பாடுபடும் இப்பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியமில்லை. நடவு நெருக்கடியாக இருக்கும்போது பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குப் போவார்கள். ‘கண்ணகி’ புதினத்தில் கரும்பு விவசாயம் செய்ததை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

"சேத்தியா தோப்பிலிருந்து தன் கொல்லையில் விளைந்த கரும்பை விருத்தாசலம் சந்தையில் விற்பதற்காக மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார் தப்புசாமி”. (கண்ணகி.ப.48)

கண்ணகியும் நாகம்மாளும் நடவு, கதிர் அறுப்பு, களை புடுங்குவது, கடலை ஆய்வது, கம்பு, சோளம் விதைப்பது போன்ற கூலி வேலைக்குச் செல்வார்கள் என்பதை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

கண்ணகியின் சின்ன மாமியார் சின்ன வெடை கண்ணகியை ஆதரித்து, அவள் கூலி வேலைக்குச் செல்லும்போது இவளையும் கூட்டிச் செல்வாள். இருவரும் சேர்ந்து அடுத்த ஊர்களுக்கெல்லாம் கூலி வேலைக்குச் செல்வார்கள் என்றும் ஆசிரியர் கூறியுள்ளார்.

‘பொன்னாச்சரம்’ புதினத்தில் சிங்கம்பிடாரி என்னும் ஊரில் நிலக்கடலை பரவலாய் பயிர் செய்யப்பட்டிருந்தது என்றும் மதுக்கூர் பகுதியில் நெல் அறுவடையாகி தாளடி பயிராய் உளுந்தும், பச்சப்பயிறும், பசலியும் விளைவித்தார்கள் என்ற செய்தியை பதிவு செய்துள்ள ஆசிரியர் "ஆற்றில் தண்ணீர் வராததால் கோட்டகமெங்கும் தரிசாய் விடுமோ" என்ற பயம் நிலம் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் கூலி வேலை செய்யும் சனங்களுக்கும் ஏற்பட்டிருந்தது. காவிரியின் கடைமடைப் பகுதி எங்குமே ஒருபோகம் மட்டுமே விளைச்சல். காவிரியின் தண்ணீரைப் பார்த்து ஆடியில் நாற்றுவிட்டு, அடுத்தடுத்து நடவு நட்டு, மார்கழி-தையில் அறுவடையாகும் ஆறுமாதப் பயிர் தண்ணீர் இல்லாமல் எப்படி விளையும்" (பொன்.ப.167) என்ற செய்தியையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

ஆடு மேய்த்தல், வளர்த்தல்

ஆரம்ப காலத்தில் மனித சமுதாயம் நிலையாக வாழ்வதற்கு முன்பு ஆடு மாடுகளை மேய்த்தே நாடோடியாக வாழ்ந்திருக்கிறது. அவையே அவர்களுக்கு உணவு, உடையை அளித்திருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் நிலையாக வாழத் தலைப்பட்ட பிறகு, ஆடுகள் உரத்திற்கும் உணவிற்கும் பயன்பட்டன. மாடுகள் வேளாண் தொழிலுக்குப் பெரிதும் பயன்பட்டன.

ஆடு மேய்த்து பிழைப்பு நடத்துபவர்கள் கீதாரி, கோனார், இடையர், யாதவர் எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகின்றார்கள். படைப்பாளர்களின் புதினங்களான மாணிக்கம், கீதாரி, அளம், கண்ணகி ஆகியவைகளில் ஆடு, மாடுகள் வளர்ப்பு பற்றிப் பேசப்படுகின்றன.

ஆடு வளர்த்தலை முழு நேரமாகக் கொண்டவர்கள் கீதாரிகள். பெரும்பாலானவர்கள் ஆடுகளை மேய்த்து நாடோடிகளாகப் பிழைப்பவர்கள். இராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களிலிருந்து தை பிறந்ததும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஓட்டி வருவார்கள். அறுவடை முடிந்த பிறகு தரிசு நிலத்தில் மேய்வதற்கும் கருவைக்காய் தின்பதற்கும் ஆடுகளுக்கு ஏற்ற பருவமாகும்.

ஆட்டு உரம் அந்த வருடமே பலன் தரும் என்பது கிராம மக்களின் பொதுவான கருத்தாகும். இதனால் தான் சாகுபடியாளர்கள் ஆட்டுக்கிடை போடுவதை அதிகம் விரும்புவர்.

"ஆட்டின் கழிவுகள் எளிதாக மட்கக் கூடியவை. கழிவில் 0.95 விழுக்காடு தழைச்சத்தும் 0.35 விழுக்காடு மணிச்சத்தும் மற்றும் 1 விழுக்காடு சாம்பல் சத்தும் உள்ளன" என தே.சம்பத் அவர்கள் இயற்கை உரங்களும் செயற்கை உரங்களும் என்ற நூலில் ஆட்டு உரத்தைப் பற்றிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். (7)

பொதுவாக வேளாண்மை, ஆடு வளர்ப்பு போன்ற தொழில்கள் அவ்வளவு எளிதாகச் செய்யக் கூடியவை அல்ல. வேளாண்மையில் பயிராகின்றன. வறட்சியால் காய்ந்து போவதும் வெள்ளத்தில் அழிவதும் இயல்பாகும். இதே போன்று ஆடுகளும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.

கடற்கரை சார்ந்த பகுதிகளிலும் தீவு போன்ற பகுதிகளிலும் ராமு கீதாரியும், வெள்ளச்சாமியும் வளசைக் கட்டிக் கொண்டு ஆடு மேய்த்தார்கள் என்ற செய்தியை கீதாரி புதினம்வழி அறிந்து கொள்ள முடிகிறது.

நாடோடிகளாக வந்து பிழைப்பு நடத்தும் கீதாரிகளுக்குப் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. ஆடுகள் நோய்வாய்பட்டு செத்துப்போகும், சிலர் கிடைக் கூலியை ஒழுங்காகக் கொடுக்க மாட்டார்கள்.

கீதாரிகளுக்கு ஆட்டின் வழி வருமானம் வந்தால் வரும், இல்லாவிட்டால் மிகவும் சிரமப்படுவார்கள். ஆடுகளை விற்பார்கள், கிடை போடுவார்கள், புழுக்கை விற்பார்கள், எவ்வளவுதான் விழித்திருந்து காத்திருந்தாலும் திருடர்கள் ஆட்டைப் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்.

கீதாரி, பொன்னாச்சரம் புதினங்களின் வழி ஆடு வளர்த்தல் தொழிலைப் பற்றி விவரித்துள்ளார்.

மாணிக்கம் புதினத்தில் மாணிக்கம் மனைவி செல்லாயி, குடும்ப செலவிற்கு ஆகுமென்று ஆடு வளர்த்தலைப் பற்றிய செய்தியை சு.தமிழ்ச்செல்வி கூறியுள்ளார். (மாணி.ப. 38-39)

மாடு வளர்த்தல்

வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருப் பவர்களுக்கும் பால் விற்றுப் பிழைப்பு நடத்துபவர்களுக்கும் மாடுகள் பெரிதும் துணைபுரிகின்றன. மாணிக்கம், கீதாரி, அளம், கண்ணகி போன்ற புதினங்களில் மாடு வளர்ப்பு பற்றிய சிறு குறிப்புகள் காணப்படுகின்றன.

மாணிக்கம் புதினத்தில் பால் விற்கும் காசைக் கொண்டு மாணிக்கத்தின் மனைவி செல்லாயி குடும்பம் நடத்துகிறாள். மாணிக்கம் வாங்கிக் கொண்டு வந்த பசுங்கன்று வளர்ந்து கிடாரியாகிக் கன்று போட்டது. அது கறக்கும் பாலை விற்று வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கி கொண்டாள்.

வேளாண்மைத் தொழில் நொடித்துப் போனது போலவே ஆடுமாடுகள் வளர்ப்பதும் சிறிது சிறிதாகக் குறைந்து வருவதை சு.தமிழ்ச்செல்வியின் புதினங்களின் வழி அறியமுடிகிறது. கடினமான இந்த தொழில்களிலிருந்து விடுபட மக்கள் முனைவதையும் இப்புதினங்களின் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

"ஒரு படைப்பாளனுக்கு இருக்க வேண்டிய சமூகப் பிரச்சனையும் பொறுப்புணர்வும் குறித்த அறிவு இருப்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமே இருப்பார்கள்.'' (6) என்னும் ம.மதிவண்ணனின் கருத்து, புதின ஆசிரியர் சு.தமிழ்ச்செல்விக்கும் பொருந்தி வருவதைக் காணலாம். சமுதாயத்திலும் குடும்பத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களைப் படிமமாகக் காட்டுகிறார்.

கீதாரி புதினத்தில் அத்திவெட்டியில் சுந்தரமூர்த்தி சேர்வைப் பண்ணையில் வேலை கேட்டு வந்த அவன், அவர் பண்ணையில் உள்ள மாடுகளோடு தானும் கொஞ்சம் சேர்வையிடம் கடன் வாங்கி, இரண்டு மூன்று கிடாரிகளை வாங்கி மேய்த்து வந்தான் என்ற செய்தியை அறிய முடிகிறது.

வேளாண்மை பொய்த்தாலும் உழவு எந்திரங்கள் வந்தாலும் பெரும்பாலும் மாடுகள் அறுப்புக்காக கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சிலர் மாடுகளைத் திருடி சந்தைக்குக் கொண்டுபோய் விற்பது பற்றிக் கீதாரி புதினத்தில் பதிவாகியுள்ளது.

கண்ணகி புதினத்தில் கண்ணகியின் அம்மா சிந்தாமணி, மாட்டுத்தரகு செய்யும் கணவனிடம் அடிமாட்டிற்கு வரும் சினை மாடுகளை வீட்டில் கொண்டுவந்து கட்டச்சொல்லி அவைகளை ஈனவைத்து பால் கறந்து டீ கடைகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தாள்.

பிற தொழில்கள்

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புதினங்களில் மேலும் சில தொழில்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

மாணிக்கம் புதினத்தில் வரும் மாணிக்கம் ஒரு நிலையில்லாத மனமுடையவன். ஓமியோபதி மருத்துவம் செய்துகொண்டிருந்தான். அதைவிட்டு விட்டு சைக்கிள் வித்தை காட்டுவதற்கு அலைந்தான். இறுதியில் மீன்பிடிக்கும் தொழிலே செய்தான்.

அளம் புதினத்தில் சுந்தரம்பாளும் மகள்களும் தொம்பட்டி காய் விற்றல், பலாப்பழம் விற்றல் போன்ற தொழில்களைச் செய்கிறார்கள்.

"ஆறுகாட்டுத்துறையில் நாட்டார் குடும்பத்தில் பிறந்த சமுத்திரவல்லி, விறகு வெட்டி விற்று தன் கொழுந்தனைப் படிக்க வைக்கிறாள்." (ஆறு.ப.177-178)

"கற்றாழை புதினத்தில் வரும் மணிமேகலை, திருப்பூருக்குச் சென்று பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.'' (கற்.ப.386)

மான், கூழைக்கிடா போன்றவற்றை திருட்டுத்தனமாக வேட்டையாடி விற்பது பற்றி ஆறுகாட்டுத்துறையிலும், கற்றாழைப் புதினத்தில் கடற்கரையோரமுள்ள காட்டுப் பகுதியில் வாழும் விலங்குகள், பறவைகள் போன்றவற்றைப் பிடிப்பது பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.

பெரும்புள்ளியாக இருந்தவர் அருணாசலம். அந்தப் பகுதியில் கடத்தல் பொருள் கொண்டு வருபவர்களைக் கொன்றுவிட்டு பொருட்களை எடுத்துக்கொள்வார்.

கேட்டால் எனக்குத் தெரியாது என்று கூறிவிடுவார். (அள.ப.101) இதே போன்று ஆறுகாட்டுத்துறையிலும் கடத்தல் பற்றிய செய்தி வருகின்றது.

இவ்வகையான தொழில்கள் நிலையற்றவை. சூழலுக்கு ஏற்பச் செய்வார்கள். கண்ணகி புதினத்தில், கண்ணகி முதலில் வயல் வேலைக்கு கூலிக்காகச் செல்கிறாள். பிறகு மீன் வியாபாரம் செய்கிறாள். பிறகு வெளிநாடு சென்று சம்பாதித்து வருகிறாள். வந்தவுடன் திரும்பவும் மீன் வியாபாரம் செய்கிறாள்.

கண்ணகியின் கணவன் ஆசைத்தம்பி மின்சார வாரியத்தில் மாதம் நூற்று ஐம்பது ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டான் என்று ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

முடிவுரை

ஆசிரியரின் அனைத்து புதினக் கதைக் களங்களிலும் பெரும்பாலான தொழில்கள் நிகழ்கின்றன. கூறவந்த கதைப் பின்னலுக்கேற்ப தொழில் சார்ந்த விவரிப்பை அத்தொழில் நோக்கி முதன்மைப்படுத்தியுள்ளார். பெண்களின் உழைப்புப் பற்றியும், ஒரு பெண்ணின் உணர்வு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது பற்றியும் இவருடைய புதினங்கள்வழி பல்வேறு தொழில்களை எடுத்துக் காட்டியுள்ளார்.

முதன்மை ஆதாரம்

கீதாரி - சு.தமிழ்ச்செல்வி

மாணிக்கம் - சு.தமிழ்ச்செல்வி

அளம் - சு.தமிழ்ச்செல்வி

ஆறுகாட்டுத்துறை - சு.தமிழ்ச்செல்வி

கற்றாழை - சு.தமிழ்ச்செல்வி

கண்ணகி - சு.தமிழ்ச்செல்வி

துணைமை ஆதாரங்கள்

1. தமிழர் நாகரிகமும் பண்பாடும் - மா. இராசமாணிக்கனார்

2. உருத்திரங்கண்ணனார்- பட்டினப்பாலை

3. வெளிச்சங்களைப் புதைத்த குழிகள், கருப்பு பிரதிகள் - மா.மதிவாணன்

4. திருக்குறள் - திருவள்ளுவர்

5. இயற்கை உரங்களும் செயற்கை உரங்களும் - கண்ணகி

- ப.இந்திரா, முனைவர்பட்ட ஆய்வாளர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்), ஒரத்தநாடு