அறிவியலைத் தமிழில் கற்பிக்க முடியாது என்ற கருத்து நெடுங்காலமாகவே இருந்தது. அதற்கு அடிப்படையான காரணம் தமிழ் உரைநடை போதிய அளவுக்கு வளர்ச்சி அடைய வில்லை.  கடந்த 1890-Ýஆம் ஆண்டு பாரதியின் ‘ஞானரதம்’ வாயிலாகத் தமிழ் உரைநடை உயிர்பெற்று வளர்ந்து உரம் பெற்றது என்பது ஆய்வாளர்களின் கருத்து.  அதுவரை, கவிதையும், இசைப்பாடலுமே தமிழின் வடிவங்களாக இருந்து வந்திருக்கின்றன.  நிலவுடைமைச் சமுதாயத்தின் தன்மை களையும், அவற்றின் சிறப்பியல்புகளையும் கலை இலக்கிய வடிவங்களின் உள்ளடக்கமாக அமைப்பது மரபாக இருந்து வந்திருக்கிறது. அந்நியர்களின் தொடர்பும், ஆங்கிலேயர்களின் தாக்கமும் தமிழ் மொழியை உருமாற்றின.  அதன் விளைவாகத் தோன்றியது தான் தமிழ் உரைநடை என்று கருதலாம்.

அன்றைய தமிழரின் அறிவியல் மண்ணும் விண்ணும் ஒருங்கிணைந்த இயற்கைச் சுழற்சியின் கண்ணோட்டத்தில் வடிவமைக்கப்பட்டதாக இருந்தன என்பதைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறியலாம். இயற்கை சார்ந்த அந்த அறிவியல் வளர்ச்சியின் அடிப்படையிலேயே தமிழர் வாழ்க்கை இயங்கிப் படிப்படியாக வளர்ந்தது.

தமிழில் தோன்றிய வளர்ச்சி, மொழிக்கு ஏராளமான சொல்வளத்தை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது. பல்வேறு துறை சார்ந்த அறிதல்களும், புரிதல்களும் மிகமிக வேகமாக வளர்ந்து, இன்றைய நவீன தமிழ் உருவாகியுள்ளது.  கடவுளைப் பற்றியும், நீதிநெறிகளைப் பற்றியும், காதலைப் பற்றியும், வீரத்தைப் பற்றியும் கருத்துக் களை வெளிப்படுத்தி வந்த நிலையில் சமுதாய, பொருளாதார, அறிவியல் கண்ணோட்டத்தில் தமிழ் வாழ்க்கை பலவகையான கோணங்களில் அறியப் பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு மக்களிடையே ஊடகங்களின் வழியாகப் பரவலாக்கப்பட்டது.  ஆனாலும், நவீன அறிவியலைத் தமிழில் கற்றுக் கொள்ளவோ, கற்பிக்கவோ போதிய அளவு மொழி வளர்ச்சி இல்லை என்று கருதப்பட்டுவந்தது.  ஆங்கிலத்தின் வழியாகவே, நவீன உலகை அறிந்து கொள்ள முடியும்.

மனிதத்துவம், ஒத்திசைவு, அறிவு, உள்ளுணர்வு, தன்னலம், நெருக்கடி, வரலாறு, அமரத்துவம், மனம், மரணம், அறியாமை, சாதி, நான் யார்? என்ற தலைப்புக்களின் கீழ் மனிதனின் தன்மை களையும், அவன் சார்ந்துள்ள உலகின் இயல் புடைய இயற்கை விதிமுறைகளையும் மிகுந்த சுவையுடன், விளக்கி அறிவியல் உணர்வையும், ஆர்வத்தையும் மனதில் மலரச் செய்கிறார்.

அறிவியல் நமது கல்வித்திட்டத்திற்கு உட்பட்ட பாடத்தைச் சார்ந்தது என்ற கருத்தை மாற்றி மனிதனின் இருப்பையும், இயங்கு தன்மைகளையும் புலப்படுத்தி வாசிக்கும் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய முழுமையான ஓர் உண்மையை அடை யாளம் காட்டும் ஒரு நுண்ணோக்கியாக ‘மனித ஜினோம்’ என்ற இந்த நூல் வடிவமைக்கப் பட்டுள்ளது.  ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய செய்திகளை அறிந்துகொண்டு வியப்புடன் பெருமூச்சுவிடும் அனுபவத்தை இந்த அறிவியல் நூல் கதைகளுக்குரிய தன்மையுடன் அளிக்கிறது.

அறிவியலை நோக்கி ஒவ்வொருவரையும் ஈர்க்கும் வண்ணம் எளிமையாகவும், தெளிவாகவும், துல்லியமாகவும் ‘மனித ஜினோம்’ அமைந்துள்ளது.  அனைவரும் படித்து மகிழும் முறையில் அறிவியல் தகவல்கள் முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.  மனிதனின் அக புற அனுபவங்கள் குறித்த ஒரு தெளிவைப் பெறுவதற்கு இந்த அறிவியல் நூல் உதவுகிறது.

ஒவ்வொருவரும் தன்னைத்தானே அறிந்து கொண்டு தன்னுடைய உள்மன ஆற்றலை வளர்த்து வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழிகாட்டக் கூடிய நூலாக இது அமைந்துள்ளது.

ஒவ்வொருவரையும் உள்ளடக்கியுள்ள இந்தப் பேரண்டத்தின் அறியப்படாத அற்புதங்களை அறிந்து கொள்ள பேராசிரியர் முனைவர்.க.மணியின் நூல்கள் உதவுகின்றன.  அறிவியலைத் தமிழில் கற்றுக் கொள்ள முடியும் என்பதைப் போலவே கற்பிக்கவும் முடியும் என்பதை அவர் உறுதிப் படுத்துகிறார்.  தமிழில் இது ஒரு புதுமை! புதிய வளர்ச்சி! என்ற கண்ணோட்டம் இன்றளவும் இருந்து வருகிறது.

நவீன அறிவியலைத் தமிழில் கற்பிக்க முனைந்து கோவையில் அதற்காகவே தனிப்பட்ட முறையில் ‘கலைக் கதிர்’ என்ற மாத இதழைத் தொடங் கினார் அமரர். ஜி. ஆர். தாமோதரன்.  அதுவே இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கிறது. அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று ஆயிரக் கணக்கான அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர் பேராசிரியர் முனைவர் க. மணி அவர்கள். அவருடைய தொடர்ந்த முயற்சியால் புதிய அறிவியல் தொழில்நுட்பச் சூழலில், தனி நூல்களாக அறிவியல் எளிய மொழியில் தெளிவாக எழுதப்பட்டு அவை இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அறிவியலில் ஆர்வமுள்ள எவரும் விரும்பிப் படித்துப் புரிந்துகொள்ளும் தமிழ் உரைநடையில் இயல்பாகக் கருத்துக்களை முன்வைத்து தெளிவாக விளக்கிக் காட்டுகிறார்.  கற்பனாவாதக் கண் ணோட்டமும், வரட்டுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் ஆதிக்கம் செலுத்திவரும் சூழலில் அறிவியலை இயங்கியல் கண்ணோட்டத்தில் விளக்கி மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் இனம்காட்டும் வகையில் பேராசிரியர் க. மணி அவர்கள் அறிவியல் பார்வையைப் புலப்படுத்துகிறார்.

எல்லை காண முடியாத பேரண்டத்தின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் ஆய்ந்து அறிந்து அதை அவருக்கே உரிய தெளிவான எளிய மொழியில், படிப்படியாக விளக்குகிறார்.  அவருடைய இந்த அரிய முயற்சி, அறிவியல் என்றாலே நமக்குப் புலப்படாத ஒன்று என்ற அச்சத்தைப் போக்கி, ஆர்வத்துடன் அறிவியலைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது.  இவருடைய அறிவியல் பார்வை பொருளின் அளவு மாற்றத்தையும், குணமாற்றத் தையும் உள்ளடக்கியது.  விரிந்த பேரண்டத்தில் உள்ள எல்லாமே இயங்கிக் கொண்டும், மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கின்றன புரிதலையும், அறிதலையும் அடிப்படையாகக் கொண்டது.  அனைத்துமே மாறிக்கொண்டிருப்பது என்பதுதான் மாறாத ஒன்று என்ற அறிவியல் கண்ணோட்டம் கொண்ட அத்வைத தத்துவத்தின் நிலைப்பாட்டிலிருந்தே ஒவ்வொன்றையும் தெளி வாக விளக்குகிறார். 

ஒன்று இரண்டாக அல்லது இரண்டு ஒன்றாக இருப்பதுவே இயற்கையின் இயல்பு என்பதை அடிப்படையாகக் கொண்ட அத்வைதமே இவருடைய அறிவியல்.  இதன் அடிப் படையில், புலன்களுக்கு உட்பட்டவற்றையும் புலன்களுக்கு உட்படாத அவற்றின் உள்தோற்றங் களையும் இயங்கியல் கண்ணோட்டத்தில் விளக்குவது, வாசிப்புக்கும், புரிதலுக்கும் உகந்த வகையில் தெளிவாக உள்ளது.

“இந்த உலகம் எத்தனை சிக்கலானது! இங்கே நூறு மில்லியன் வகை உயிரினங்கள் உள்ளன.  மனிதன் எண்ணிக்கை 7 பில்லியன்.  அவன் உருவாக்கி யிருக்கும் செயற்கைப் பொருள்கள் அதற்கும் மேலே.” இப்படி அவர் இந்த உலகை வியப்புணர் வோடு புரிந்துகொண்டு அதன் நுட்பமான தன்மை களை ஆய்ந்து அறிந்து அறிவியலாகப் பதிவு செய்கிறார்.

காலம் மற்றும் இடம் பற்றிய வியக்கத் தகுந்த உட்கூறுகளை மிகமிக எளியமுறையில் விளக்குகிறார்.  புரியாப் புதிர் போன்ற ஒரு மாயையான கருத்தோட்டத்தை எளிய முறையில், எளிய மொழி நடையில் நேரடியாக நமக்குப் புலப்படுத்தி அறிவியல் குறித்த இயல்பான ஆர்வத்தை விளக்கு கிறார்.

பேரண்டம் தோன்றிய வரலாற்றையும், அதனூடே பூமியில் உயிரினங்கள் தோன்றிய விதத்தையும், மனிதன் உருவாக்கி வளர்ந்த விதத்தையும் மிகமிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிவியல் பார்வையில் பதிவு செய்கிறார்.

சிறிய வடிவிலான இந்த நூல் வாசிப்புக்கு உகந்ததாக மட்டுமல்லாமல் அடிப்படையான அறிவியலை உணரும் வகையில் விளக்குகிறது.

அறிவியல் கண்டுபிடிப்பினால் விளையக் கூடிய ஆபத்துக்களையும் இவர் அடையாளப்படுத்துகிறார்:

“பல நாடுகள் அணுசக்தியை தம் படைக் கலன்களில் மறைத்து வைத்து, ஏவுவதற்குத் தயார் நிலையில் வைத்துள்ளன.  இந்தியாவும் அதில் ஒன்று.  காம்பினேசன் குறிகளைத் தட்டி சிவப்புப் பட்டனை அமுக்கினால் போதும், ஒட்டுமொத்த பூமியும் ஒரு நொடியில் தரைமட்டமாகிவிடும்.  எங்கோ யாரோ ஒரு மனிதக்குரங்கு அந்தக் காரியத்தைச் செய்யாதிருக்க வேண்டுமே!”

அறிவியல் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடையும் பேராசிரியர் க. மணி அதனால் விளையக் கூடிய விரும்பத்தகாத விபத்தைக் குறித்து அவருள் இயல்பாக எழும் அச்சத்தையும் வெளிப்படுத்து கிறார்.

இதைத் தொடர்ந்து, இந்தப் பேரண்டத்தின் கட்டமைப்பை விளக்கும் இன்னொரு நூலான ‘அணுத்துகள்’- ஐயும் படைத்திருக்கிறார்.  இது, இன்னொரு கோணத்தில் வியப்பிற்குரிய பேரண் டத்தின் உட்கூறுகளை இன்னும் ஆழமாகவும், தெளிவாகவும் புலப்படுத்துகிறது.

அணுத்துகளின் அமைப்பையும், அதன் இயங்கு தன்மையையும் வாசிப்புக்கு உகந்த விதத்தில் தெளி வாகவும், நுட்பமாகவும் புரியும் படியும் விளக்கு கிறார்.

இது குறித்து, பேராசிரியர் தன்னுடைய தன்னுடைய உரையில், தனது கருத்தை அழுத்த மாகத் தெரிவிக்கிறார்.  “அறிவியலில் சமயக் கடவுள், ஆன்மிகம் ஆகியவற்றிற்கு இடமேயில்லை என்று சொல்லக்கூடாது.  அனைத்தும் அறிவியலில் அடங்கும்.  அதற்கான அடித்தளம்தான் இந்த நூல்.”

அறிவியல் அறிஞர்கள் பலர், உலக வரலாறு நெடுகிலும் இயற்கை சார்ந்த ஆய்வுகளை மேற் கொண்டு அவரவர் புரிதலுக்கு உட்பட்ட வகையில் அறிவியல் கருத்துக்களை பதிவு செய்து கொண் டிருப்பதை நாம் இன்றும் உணரமுடிகிறது.  அவர்களுடைய ஆய்வுகளும், வாதங்களும், முடிவுகளும் புதிய புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிப்பதாக உள்ளன.

கிரேக்க அறிஞர்களான ஹெராக்ஸிட்டஸ், டெமாக்ரிட்டஸ் போன்றவர்களின் தொடக்க கால முயற்சியும், முனைப்பும் இன்றைய நவீன அறிவியலுக்கு எப்படி அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது என்பதை வரலாற்றுக் கண் ணோட்டத்தில் இனம் கண்டு கொண்டு தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.  அறிவியல் துறையில் சர் ஐசக் நியூட்டன் எழுதிய ‘பிரின்சிப்பியா’ என்ற 1687-ஆம் ஆண்டு முதல் பௌதிகவியலில் நிகழ்த்திய தாக்கத்தை குறிப்பிட்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக அதை இனம் காட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து, ராபர்ட் பிரௌன், ஹெய்சன்பர்க், ஹென்றி பாயின் கரே, ஜான் ஸ்காட் ரஸ்ஸில், கிளார்க் மேக்ஸ் வெல், எட்வின் ஹப்புள், ஆல்பர்ட் ஐன்ஸ்டின், மேக்ஸ் ஃபிளாங்க், டி. பிராக்ஸி, எர்வின் ஷ்ரோடிஞ்சா, ஹ்யுக் எவரெஸ்ட் தியோடர் கலூகா, சந்திரசேகர், ஸ்டான்லிமில்லர் போன்ற அறிவியலாளர்கள் பௌதிகவியலில் நிகழ்த்திய ஆய்வுகளையும் கண்டு பிடிப்புக்களையும் முறையாக விளக்கி அணுத்துகள் பற்றிய முழுமையான ஒரு பார்வையை வாசகர் களுக்கு வழங்குகிறார்.

அளவிட முடியாத அளவுக்கு விரிவும், ஆழமும் நிறைந்த இந்தப் பேரண்டம் அணுத்துகள்களால் ஆனது என்பதை விளக்கி அதில் உயிர்வாழும் நாம் எல்லோருமே அதனுள் மிதந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வைத் தோற்றுவிக்கிறார், பேராசிரியர்.

வரலாற்றினூடாக, அணுக்கள் எப்படியெல்லாம் படிப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும், காட்சிக்குரிய, பொருள்களையும், காட்சிக்குப் புலப் படாத பொருள்களையும் அவற்றின் தன்மை களையும் விளக்கிக் காட்டுகிறார்.  ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியும் படிப்படியாக அடுக்கப் பட்டு தெளிவுடனும், கலை நயத்துடனும் மொழி வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  புரிதலில் மேலும் தெளிவு பெறுவதற்குரிய வகையில் கோட் டோவியங்கள் வரையப்பட்டு விளக்கம் கூறும் விதத்தில் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன.

இது குறித்த முக்கியத்துவத்தைப் பேராசிரியர் நூலில் தெளிவுபடுத்துவது இந்தப் படைப்பின் நோக்கத்தைப் புலப்படுத்துகிறது: “பிளக்க வொண்ணா அணுத்துகள்களின் மூலாதாரத்தைப் புரிந்துகொள்ள முயலும் முனைப்பின் நாட்டமே இந்நூல்.”

“பிரபஞ்சத்தைப் பொருளாகக் கருதினால் அதன் மாயத்தன்மை மறைகிறது.  மாயத் தன்மையை அறியும்போது பொருள் தன்மை மறைகிறது.  கடந்த நூற்றாண்டுகளில் இயல்பியல் செய்து கொண்ட புரிதல்களின் தொகுப்பாகவே இந்நூல் அமைகிறது.  இதில் கல்லையும் காணலாம்.  நாயையும் காணலாம்.  இரண்டாகவும், இரண்டல்லாத தாகவும் ஒரு சேர இருக்கும் சட இருப்பின் விசித்திரத்தையும் கண்டு தெளியலாம்.”

புதியதோர் உலகைப் புலப்படுத்தி அதில்தான் நாம் உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருக் கிறோம் என்பதை உணர்வுரீதியாக அறிய உதவு கிறது இந்த அறிவியல் களஞ்சியம்.  இது, மிகையான மதிப்பீடு அல்ல!

இதுவரை, அறிவியல் துறை சார்ந்த பெரும் பாலானவர்கள் அறிந்திராத தகவல்களை உள்ளடக்கிய இந்த நூல் வாசிப்பின் போது வியப்புக்கு மேல் வியப்பை உணரச் செய்யக்கூடியதாக உள்ளது.

“மனிதன், ஜீன்கள் வகுத்த வரம்புக்குள், சமுதாயச் சுற்றுச்சூழலினால் உருவாக்கப்படும் ஒரு அதிசய உயிர்” என்பது இந்நூலின் மையக் கருத்து. பரிணாம உயிரியல் பார்வையில், மானுடப் பண்புகள் இங்கே வெளிச்சப்படுத்தப்படுகின்றன?

‘மனித ஜினோம்’ என்பதுதான் என்ன என்ற கேள்விக்கு எளிய முறையில் விளக்கம் அளிக்கிறார் முனைவர் க. மணி. ஓர் உயிரின் தோற்றத் தையும், அதன் தன்மையையும் அவருக்கே உரிய அறிவியல் மொழியில் இங்கே அவர் பதிவு செய் கிறார்:

“தாயும், தந்தையும் சேர்த்து மூலத் தகவல் பொருந்தி கரு செல்லை வழங்குகிறார்கள்.  இருவரிட மிருந்தும் சம எண்ணிக்கையிலான கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தகவல்கள் குழந்தைக்குக் கிடைக் கிறது.  இரண்டு செட் தகவல்களும் சேர்ந்துதான் மூலத்தகவல்.”

“ஒரு சில எழுத்து வேற்றுமைகளைத் தவிர தாய், தந்தை வழங்கும் தகவல்கள் அடிப்படையில் ஒன்றுதான்.  எனவே, அடிப்படையான ஒரு செட் தகவல் தொகுதியைப் பற்றிப் படித்தாலே போதும் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.  அந்த அடிப்படை செட் தகவலைத்தான் ஜினோம் (ழுநnடிஅந) என்கிறோம்.  மனித ஜினோம் என்பது இதுதான்.”

“மனித ஜினோமில் எத்தனை தகவல்கள் இருக்கும் என்று கருதுகிறீர்கள்? வெறும் 25,000 மட்டும்தான். வெறும் 25,000 தகவல்களை வைத்துக் கொண்டு, கரு எப்படி பல செல்களாகி ஒன்று கூடி, மனித உடலாகிறது என்பது ஒரு அன்றாட விந்தை. இருபத்தைந்தாயிரம் தகவலின் அடிப்படையில் சுமார் ஒரு இலட்சம் உதிரிபாகங்களைத் தானாகவே தயார் செய்துகொள்ளும் அதிசய எந்திரம் மனித உடம்பு.  மனிதன் இதுவரை தானாகவே உருவாகிக் கொள்ளும் இயந்திரம். எதையும் படைத்ததில்லை.  ஆனால், அவனே தானாய் தோன்றிக் கொள்ளும் தானியங்கி இயந்திரம்  மனித ஜினோமில் அடங்கி யுள்ள ஒரு தகவலை ‘ஜீன்’ என்றழைக்கிறோம்.  25,000 ஜீன்கள் (தகவல்கள்) கொண்டது மனித ஜினோம்.”

‘மனித ஜினோம்’ என்ற இந்த அறிவியல் நூல் ‘மனித இனத்தின் மறைநூல்’ என்ற குறிப்புடன் வெளியாகியுள்ளது. மனித உயிரின் தோற்றத்தி லிருந்து, அதன் படிப்படியான இயங்குதலின் வாயிலாக மனித உடல் பரிணாமம் கொள்வதை ஒவ்வொரு நிலையிலும் தெளிவுபட விளக்கக் கூடியதாக அமைந்துள்ளது.  ‘ஜீன்’ உள்ளிட்ட மனிதனின் பல வகையான வாழ்க்கைப் படிநிலைகள் மிகவும் துல்லியமாக இனம் காட்டுகிறார் பேரா சிரியர். மனித வாழ்வின் எல்லாவித நிலைமை களையும் தனித்தனியாக விளக்குகிறார்.

Pin It