கி.மு. 187இல் புசியமித்திரன் மகதப் பேரரசைக் கைப்பற்றிய பின் இந்திய சமூகத்தில் மாபெரும் அரசியல் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. வைதீக பார்ப்பனியத்தை கட்டமைப்பதற்கான அனைத்து அடித்தளங்களும் உருவாக்கப்பட்டு, வகுப்பு எனப்படும் வருணம், படிநிலைகொண்ட சாதியாக மாற்றப்பட்டதோடு, பார்ப்பனன் கடவுளுக்கும் மேலானவனாக ஆக்கப்பட்டான். நாட்டை ஆளும் அரசனும் கூட பார்ப்பனனுக்குத் தலைவணங்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டதோடு, நால்வருணச் சாதியமைப்பைப் பாதுகாக்கவேண்டிய கடமையைச் செய்ய வேண்டியவனாக அரசன் ஆக்கப்பட்டான். அதைப் பாதுகாக்காத அரசன், அரசை ஆளும் தகுதியற்றவன் எனவும் அவன் நீக்கப்பட வேண்டியவன் எனவும் வைதீக பார்ப்பனியம் இந்தியச் சமூகத்தை நம்ப வைத்தது. இந்திய ஆட்சியாளர்களின் சட்டப் படியான ஆட்சிக்கு வைதீகப் பார்ப்பனியத்தின் ஏற்பிசைவு தேவை என்ற நிலைமை உருவாக்கப்பட்டது. மௌரியர் காலம் வரையிலான வட இந்திய சமூகத்திற்கும், பார்ப்பன அரச வம்சங்கள் காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் இருந்த வட இந்திய சமூகத்திற்கும் இடையே மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அதனை வரலாற்றாசிரியர்களோ, சமூக ஆய்வாளர்களோ உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை என்ற அம்பேத்கரின் கூற்று மிகச்சரியானது.

வெளிச்சத்துக்கு வந்த வட இந்திய வரலாறு:

a.l.basham bookபார்ப்பனர்கள் வரலாற்றைப் புதைப்பதில் மறைப்பதில் அதனைத் திரித்துத் தங்களுக்குச் சார்பான புராணக் கதைகளாக, மதம் சார்ந்த புனைவுகளாக மாற்றுவதில் மிகவும் திறமையானவர்கள் என்பதற்கு வட இந்திய வரலாறு மிக முக்கியச் சான்றாகத் திகழ்கிறது. அவர்கள் வேதகாலம் ஒரு பொற்காலம் போன்ற புனைவுகளை உருவாக்குவதில் வல்லவர்கள். முசுலீம் படையெடுப்புக்கு முந்தைய வட இந்திய வரலாறு என்பது இருளில்தான் மூழ்கி இருந்தது. மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள் 200 வருடம் போராடிய பின்பே அது வெளிச்சத்திற்கு வந்தது.

முதலில் வந்த கீழ்த்திசை வல்லுநர்களுக்கு அவர்களின் தணியாத ஆவலே உதவியாக இருந்தது. அவர்களுடைய ஆய்வுகளின் பாதையில் துண்டு துண்டுச் செய்திகள் கிடைத்தன. இவற்றை ஒன்றுதிரட்டி ஒன்றோடு ஒன்று பொருத்தி, பலமுறை தோல்வியுற்று, சில சமயங்களில் வெற்றிகண்டு, மிகக் கடுமையான முயற்சிக்குப் பின்னரே இசுலாமியர்களின் காலத்திற்கு முந்தைய இந்திய வரலாறு கிடைத்தது. இதற்கு இரண்டு நூற்றாண்டுகள் தேவைப்பட்டது. அதன்பிறகே மௌரியப் பேரரசும், அசோகரும் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தனர். ஐரோப்பிய கீழ்த்திசை வல்லுநர்களின் இந்த முயற்சிகள் குறித்து ஜான் கேய் (John Keay) எழுதிய இந்தியா கண்டுபிடிக்கப்பட்டது (India DIiscovered) என்கிற நூல் விரிவாகப் பேசுகிறது.(1)

ஐரோப்பிய கீழ்த்திசை ஆய்வாளர்களில் ஒருவர் சர் வில்லியம் ஜோன்சு (Sir William Jones). இவர் இந்தியாவின் இதிகாசங்கள், புராணங்கள், வேறு குறிப்புகள் முதலியனவற்றைக்கொண்டு இந்தியாவின் முதல் வரலாற்றுக் குறிப்பைத் தொகுத்தார். அதன்படி மகத நாடு மௌரியர்களால் கி.மு. 1492 முதல் கி.மு. 1365 வரை ஆளப்பட்டது எனவும் அதன் மூன்றாவது அரசன் அசோகன் எனவும் குறிப்பிட்டார்.(2) ஆனால் அதில் அவர் திருப்தி அடையவில்லை. இந்திய வரலாற்று ஆண்டுகளை, சான்றாதாரப்பூர்வமான உலக வரலாற்று ஆண்டுகளோடு இணைக்க விரும்பினார். நந்தர்களை வீழ்த்திவிட்டு மௌரியர்கள் மகதஅரசைக் கைப்பற்றிய ஆட்சிமாற்றம்தான் இந்திய வரலாற்றுக்கான சான்றாதாரக் காலத்தை வழங்க உதவியது எனலாம். மிக நீண்ட நெடிய கடுமையான ஆய்வுகளுக்குப்பின், கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர், செலியுகோசு ஆகியவர்களின் படையெடுப்பு ஆண்டுகளைக் கொண்டும், கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளில் இருந்தும் இந்திய வரலாற்றுக்கான சான்றாதாரக்காலம் நிர்ணயிக்கப்பட்டது(3). இதனை ஏற்றுக்கொண்ட டி.டி. கோசாம்பி, “கி.மு. 327இல் அலெக்சாந்தர் நிகழ்த்திய பஞ்சாப் படையெடுப்பு தான் முதன்முதலாக ஒரு வரலாற்றுக் காலத்தை (இந்தியாவுக்கான) உறுதிசெய்தது” என்கிறார்(4).

சார்லசு ஆலன்(Charles Allen) அவர்களால் இந்திய வரலாற்றுக் காலம், சான்றாதாரப் பூர்வமான கிரேக்க வரலாற்றுக் காலத்தோடு 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இணைக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட பின்னரும் கூட, அசோகர் ஒரு சாதாரண அரசராக மட்டுமே இருந்தார். இன்னபிற இந்திய வரலாற்று நிகழ்வுகளும் ஆய்வு செய்யப்படாமல்தான் இருந்தது. அதன்பின் ஒரேசு எய்மான் வில்சன்(Horace Hayman Wilson), புக்கானன்(Francis Buchanan), காலின் மெக்கன்சி(Colin Mackenzie), பிரின்செப் (Princep), அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham), மில் டர்னோர், பிரையன் ஆட்ஜ்சன்(Brian Hodgson), வெட்டல் (L. A. Weddel), வின்சென்ட் சுமித் (Vincent Smith), இரைசு டேவிட்சு (Rhys Davids) ஆகிய ஐரோப்பியக் கீழ்த்திசை வல்லுநர்கள் பலர் 20ஆம் நூற்றாண்டுவரை தொடர்ந்து மேற்கொண்ட கடினமான வரலாற்று ஆய்வுகளால் அசோகரும் அவரது புத்தமதமும், பிற இந்திய வரலாற்று நிகழ்வுகளும் வெளிச்சத்துக்கு வந்தன(5).

பார்ப்பனர்களின் புராணங்களும், இதிகாசங்களும் இன்னபிற கதையாடல்களும் முசுலீம் படையெடுப்புக்கு முந்தைய இந்திய வரலாற்றை இருளில் மூழ்கச் செய்திருந்தன. மௌரியர் ஆட்சி ஆண்டு என்பது கி.மு. 1492 முதல் கி.மு. 1365 வரை எனவும் அதன் மூன்றாவது அரசன் அசோகன் எனவும் அவன் ஒரு சாதாரண அரசன்தான் எனவும் அவை கூறின. இப்படித்தான் இன்னபிற இந்திய வரலாற்று நிகழ்வுகளும் மாற்றப்பட்டு, திருத்தப்பட்டு குழப்பத்தில் இருக்குமாறும் இருளில் இருக்குமாறும் செய்யப்பட்டன. இன்றும் வட இந்திய வரலாறு முழுமையாகத் தெளிவு பெறவில்லை என்பதுதான் உண்மை. அதில் பல இடைவெளிகளும் குழப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சிந்துவெளி நாகரிகம் முதல் கி.மு. 600 வரையான காலம் இன்றும் குழப்பங்களும் இடைவெளிகளும் கொண்டனவாகவே இருக்கிறது எனலாம்.

பார்ப்பனியமும் இந்திய வரலாறும்:

இரிக் வேதம் முதல் அதர்வண வேதம் வரையான நால் வேதங்களிலும் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதனால்தான் சட்டோபாத்தியாயா ‘அதர்வண வேத சம்கிதையில் அவற்றிற்குரிய மூலவடிவம் இல்லை. அவை பார்ப்பனிய மயமாக்கப்பட்டன, எனக் கூறுகிறார். அது போன்றே பிற்காலத்திய, பார்ப்பனிய மயமாக்கப்பட்ட பார்ப்பன நூல்கள், பண்டைய நூல்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து மார்க்சு முல்லரும் குறிப்பிட்டுள்ளார். இவை பண்டைய இந்திய சமூகம் குறித்த மிகப்பெரிய குழப்பத்தைத் தருவதோடு, பார்ப்பனியச்சார்பான சமூக வரலாற்றை உருவாக்க வழிவகை செய்கிறது. கி.மு. 800இல், இனக்குழு காலத்தில், வகுப்புகளே தோன்றியிராத காலத்தில், சாதி வேறுபாடுகள் உருவானதற்குப் பிந்தைய காலத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட யக்ஞங்களைக் கொண்டனவாகவும், பார்ப்பனியச்சார்பு கொண்டனவாகவும் உள்ள பார்ப்பனங்கள் உருவாகி இருந்ததாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இவை அனைத்தும் இந்திய அரசியல் சமூக வரலாற்றில் மிகப் பெரும் குழப்பங்களை உருவாக்குகின்றன. இவை வைதீகப் பார்ப்பனியச் சார்பு கொண்ட வரலாற்றைப் படைப்பதற்குக் காரணமாகி விடுன்றன. இன்றுவரை இந்த குழப்பமான நிலை, இந்திய அரசியல் சமூக வரலாற்றில் இருப்பதால் கி.மு. 600க்கு முந்தைய இந்தியச் சமூக வரலாறு என்பது பார்ப்பனியச் சார்பு கொண்டதாக ஆகிவிடுகிறது. இது பிற்கால இந்திய வரலாற்றையும் பார்ப்பனியச் சார்பு கொண்டதாக மாற்றுவதற்குக் காரணமாகிவிடுகிறது.

200 ஆண்டுகால ஐரோப்பிய வரலாற்று அறிஞர்களின் ஆய்வுக்குப்பின்னர், 100 ஆண்டுகால இந்திய வரலாற்று அறிஞர்களின் ஆய்வுக்குப்பின்னர் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட இந்திய வரலாறு தெளிவில்லாததாக, பார்ப்பனியச்சார்பு கொண்ட வரலாறாக இருக்கிறது எனில் ஐரோப்பியர் இந்தியா வந்த பொழுது கி.பி. 18ஆம் நூற்றாண்டில், பண்டைய இந்திய வரலாறு எவ்வாறு இருந்திருக்கும்? அனைத்தும் பார்ப்பனியமயமாகத்தான் இருந்திருக்கும். அதனால்தான் ஆங்கிலேயர் காலத்தில் பார்ப்பனியம் செல்வாக்கு பெற்ற ஒன்றாக இருந்தது. கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின் தான் வட இந்தியாவில் பண்டைய நூல்கள் அனைத்தும் எழுத்து வடிவம் பெற்றன. ஆகவே அவை அனைத்தும் பார்ப்பனியமயமாயின. அன்று எழுதப்பட்ட பண்டைய இந்திய வரலாறும் பார்ப்பனியமயமாகியதாகவே இருந்தது எனலாம். இவ்விதமாக தொடக்ககாலத்தில் இருந்து இந்திய வரலாற்றை பார்ப்பனியமயமான வரலாறாக ஆக்கியது என்பது அவர்களது மிகப்பெரும் வெற்றி எனலாம்.

இந்திய வரலாற்றாசிரியர்கள்:

தொடக்க காலத்தில் இருந்தே இந்திய வரலாறு என்பது பார்ப்பனிய மயமாக்கப்பட்ட வரலாறாகத்தான் இருந்து வந்துள்ளது என்ற உண்மை நிலையை அறிந்தவர்களாக இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இருக்கவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விடயம். இந்தியாவில் இருந்த வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள், மீமாம்ச சூத்திரம், பிரம்ம சூத்திரம் போன்ற சூத்திரங்கள், மனு சுமிருதி போன்ற சுமிருதிகள் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், அதன் துணை இணைப்பான கீதை ஆகிய அனைத்தும் பார்ப்பனியமாக்கப்பட்டவை என்பதுதான் உண்மை நிலை. ஆனால் இந்திய வரலாற்றாசிரியர்கள் அந்தக் கண்ணோட்டத்தில் இந்திய வரலாற்றை அணுகுவதில்லை. அது மட்டுமல்லாது மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர்களே, இந்திய வரலாற்றை பார்ப்பனியக் கண்ணோட்டத்தில் எழுதுகின்ற தவறுகளும் நடந்து வந்துள்ளன, தொடர்ந்து நடந்தும் வருகின்றன.

சான்றாக வரலாற்றுத்துறையில் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆர்.எசு.சர்மா (R.S.Sharma) அவர்கள் தனது நூலில், ‘வர்ணம் அல்லது சாதிமுறை நிலவச் செய்வது அரசனின் பொறுப்பு என்று தர்ம சாத்திரம் வற்புறுத்துவதற்குக் கல்வெட்டிலும் ஆதாரம் காணப்படுகிறது….. ‘போர்வீரர்கள், பார்ப்பனர்கள், வைசியர்கள், ஆகியோரிடையே வேலை செய்ய அசோகனின் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அசோகன் கல்வெட்டுகளில் தரசபடகா என்பது சூத்திரங்களைக் குறிக்கும் சொல் என்று தெரிகிறது. ஏற்கனவே நிலவிய சாதி அமைப்பை அசோகர் ஏற்றுக்கொண்டு அந்தந்தச் சாதியாரிடையே வேலை செய்ய தன் அதிகாரிகளை நியமித்தார் என்பது இதிலிருந்து பொதுப்படையாகத் தெரிய வரும்’ எனக் கூறுகிறார்(6). ஆனால் அசோகன் கல்வெட்டுகளில் சாதி குறித்து எதுவும் கூறப்படவில்லை எனக் கூற வந்த இரோமிலா தாபர் “அதிசயப்படத் தக்கவகையில் அசோகனுடைய கல்வெட்டுகளில் வருணத்தைப் பற்றியோ, அல்லது சாதியைப்பற்றியோ எதுவும் சொல்லப்படவில்லை. அவை முக்கியமான சமூக வகையாக ஆகவில்லை என்பதை அது காட்டுகிறது” எனக் கூறுகிறார்(7). இரோமிலா தாபர் கூறுவதுதான் உண்மை.

அன்று வகுப்புகள் இருந்திருக்கலாம். ஆனால் அன்று சாதிகள் உருவாகியிருக்கவில்லை என நாம் பலவகைகளில் உறுதி செய்துள்ளோம். அந்த வகுப்புகள் குறித்துக்கூட அசோகன் தனது கல்வெட்டுகளில் எதுவும் கூறவில்லை என இரோமிலாதாபர் கூறுகையில், சர்மா அவர்கள் சாதி அமைப்பு அசோகன் காலத்தில் நிலவியதாகவும் அதனை அவன் ஏற்றுக் கொண்டு சாதிகளிடையே வேலை செய்ய அதிகாரிகளை நியமித்ததாகவும் கூறுகிறார். மேலும் அவர் தர்மசாத்திரம் வலியுறுத்தும் சாதிமுறையை நிலவச்செய்வது அரசனின் பொறுப்பு என்பதற்கு அசோகனின் கல்வெட்டுகள் சான்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை என்னவென்று சொல்வது? கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சாதிமுறையைக் காப்பாற்றுவது அரசனின் கடமை என்ற கருத்து உருவாக்கப்பட்டு அதற்குப்பிந்தைய ஒரு சில அரசர்களால் அக்கருத்து பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் அசோகனே தனது கல்வெட்டுமூலம் சாதிமுறையைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தான் எனக் கூறியிருப்பதை எப்படிப் பார்ப்பது? பெரும்பாலான இந்திய வரலாற்று ஆசிரியர்கள் பார்ப்பனியமயமாக்கப்பட்ட இந்திய வரலாற்றை ஏரணக் கண்ணோட்டம் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதற்கு இவை போன்ற பல சான்றுகள் உள்ளன. அதனால்தான் இந்திய வரலாற்று ஆசிரியர்களால் மௌரியர்களுக்குப் பிந்தைய பார்ப்பன வம்சங்களின் ஆட்சிக்காலகட்டத்தில் இந்திய சமூகத்தில் மாபெரும் அரசியல் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை உணர்ந்து கொள்ள இயலவில்லை.

அதனால்தான் அவர்கள் புசியமித்திரனின் ஆட்சி காலத்தில் இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சமூக மாற்றங்கள் குறித்து எதுவும் பேசாமல் பொதுப்படையான சில தகவல்களை மட்டும் கூறிச்செல்பவர்களாக இருக்கிறார்கள். புசியமித்திரனின் பார்ப்பனச்சார்பும், அவன் புத்தத் துறவிகளுக்கு எதிராக இருந்தான் என்பதும் மட்டுமே கூறப்படுகிறது.

புசியமித்திரனின் நோக்கமும் வரலாற்றாசிரியர்களும்:

‘பழமைவாத பிராமணிய நம்பிக்கையை உற்சாகமாக ஆதரிப்பவன் என்று புசியமித்திரன் வர்ணிக்கப்படுகிறான்; இரண்டு அசுவமேத யாகங்களை அவன் நடத்தியதாகவும் கூறப்படுகின்றது. பவுத்தர்களை துன்புறுத்தியவன் என்றும், துறவிகளின் மடங்களையும், வழிபாட்டுத்தலங்களையும் அழித்தவன் என்றும் பவுத்த இலக்கியங்கள் இவனைச்சித்தரிக்கின்றன’ எனக் கூறுகிறார் டி.என். சா என்பவர்(8). இரோமிலாதாபர், ‘புத்தமத ஆதார நூல்கள் புத்த மதத்தினரை சித்திரவதை செய்ததாகவும், புத்த மடங்களையும் தொழுகையிடங்களையும் அழித்ததாகவும் கூறுகின்றன….. தொல்லியல் சான்றுகள் சுங்கர்களின் ஆட்சிப்பரப்பில் இருந்த புத்த மடங்கள் இக்காலகட்டத்தில் பழுதடைந்து கிடந்ததாகவும் புதுப்பித்தல் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் காட்டுகிறது …..இது சுங்கர்களின் காலத்திற்குப்பிற்பட்ட புணருத்தாரணத்தைக்காட்டும்.….. புசியமித்திரன் அசுவமேத யாகத்தை – குதிரை வேள்வியைச் செய்தான். இது சில நேரங்களில் வேதப்பார்ப்பனியத்திற்கு ஆதரவு காட்டியதைச் சுட்டுவதாக பார்க்கப்படுகிறது. புறச்சமயங்களை நிராகரித்ததாகவும் பார்க்கப் படுகிறது’ என புசியமித்திரனின் பார்ப்பனியச்சார்பு குறித்துக் கூறியுள்ளார்(9). ‘புசியமித்திரன் வைதீக நெறியைப் போற்றியவனாதலால் அசுவமேதம் முதலாகக் கூறப்பட்ட பண்டைய வேதவேள்விகளையெல்லாம் மீண்டும் வழக்கிற் கொணர்ந்தான்…… புசியமித்திரன் அரசற்குரிய பட்டங்கள் எவற்றையும் சூடிக்கொள்ளவில்லை. ஆட்சிக்காலம் முழுவதும் படைத்தலைவன்(சேனாபதி) என்றே அவன் குறிக்கப்படுகிறான்’ என ஏ.எல்.பாசம் புசியமித்திரன் குறித்துக் கூறுகிறார்(10). இங்கு கூறியுள்ள கருத்துகள் புசியமித்திரன் குறித்த சில வரலாற்றாசிரியர்களின் கருத்துகள்.

ஆனால் அம்பேத்கர் புசியமித்திரனின் முக்கிய நோக்கம் என்பது அரசியல் மாற்றம் மட்டுமல்ல எனவும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவுவதுதான் அவனது முக்கிய நோக்கம் எனவும் அவன் காலத்தில்தான் வைதீக பார்ப்பனியம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது எனவும் கூறுகிறார். அவரது கூற்றிலுள்ள உண்மைத் தன்மையை நாம் முன்பே உறுதி செய்துள்ளோம். புசியமித்திரன் தன்னை அரசனாகக்கூட அறிவித்துக் கொள்ளவில்லை என்ற தகவல் அவன் உண்மையாகவே பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவுவதையே தனது முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தான் என்பதை உறுதி செய்கிறது. ஆனால் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இவை எதனையும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை(11).

சமற்கிருதத்தின் திடீர் ஏற்றம்:

கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை எழுத்துகூட இல்லாத, கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் ஆட்சி மொழியாகவோ அல்லது மக்கள் மொழியாகவோ இல்லாதிருந்த சமற்கிருதம், 200 ஆண்டுகளுக்குள் அதாவது கி.பி. 5ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவின் பெரும்பாலான அரசுகளின் ஆட்சி மொழியாகவும், இந்தியா முழுவதற்குமான வழிபாட்டு மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் வணிக மொழியாகவும் ஆகியதற்கான அடிப்படைக்காரணம் என்ன என்பது குறித்த இந்திய வரலாற்று ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் ஆகியவர்களின் கருத்து என்ன?

கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம், பாலி ஆகிய மூன்று மொழிகளும் தான் இந்தியா முழுவதற்குமான மக்கள் மொழியாகவும், இந்திய அரசுகளின் ஆட்சி மொழியாகவும் இருந்து வந்தன. வட இந்தியா முழுவதற்குமான வணிக மொழியாக, அரசுகளின் ஆட்சி மொழியாக மக்கள் மொழியாக பிராகிருதம் இருந்து வந்தது அதுபோன்றே தென் இந்தியா முழுவதற்குமான வணிக மொழியாக, அரசுகளின் ஆட்சி மொழியாக மக்கள் மொழியாக தமிழ் இருந்து வந்தது. கி.மு. 1000க்கு முன்பிருந்து நகர, நகர் மைய அரசுகளைக் கொண்டிருந்த பழந்தமிழ்ச் சமூகம், அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், கல்வி, அறிவியல், தத்துவம், கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய பல்வேறு துறைகளிலும் மிகவும் வளர்ச்சிபெற்ற சமூகமாக ஆகியிருந்தது. தமிழ் மிகவும் வளர்ச்சி பெற்ற ஒரு செவ்வியல் மொழியாகவும், தெற்காசியா முழுவதற்குமான வணிக மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் ஆகியிருந்தது. ஆனால் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட களப்பிரர் என்ற அநாகரிக மக்களின் படையெடுப்பால் பழந்தமிழகம் பேரழிவைச் சந்தித்தது. அதன் காரணமாக அரசின் ஆட்சி மொழி என்ற தகுதியை தமிழ் இழந்துபோய், பிராகிருதம் அரசின் ஆட்சி மொழியாக ஆகிப்போனது.

ஆகவே கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா முழுவதும் பிராகிருதம் தான் அரசுகளின் ஆட்சி மொழியாக ஆகியிருந்தது. அத்துடன் வட இந்தியாவில் மக்கள் பேசும் மொழியாக பாலியுடன், பிராகிருதம் இருந்து வந்தது. ஆனால் அடுத்த இரு நூற்றாண்டுகளில் சமற்கிருதம் இந்தியா முழுவதிலும் இருந்த பெரும்பாலான அரசுகளின் ஆட்சி மொழியாக ஆகிப்போனது. இந்த மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்பது வடஇந்தியாவில் ஏற்பட்ட வைதீக பார்ப்பனியத்தின் எழுச்சி ஆகும். இதற்கான அடிப்படைச் சமூக அரசியல் மாற்றம் என்பது பார்ப்பன அரச வம்சங்கள் கி.மு. 187இல் மகத அரசைக் கைப்பற்றியதில் இருந்து தொடங்கியது. புசியமித்திரன் மகத அரசைக்கைப்பற்றியதில் இருந்து மீமாம்ச சூத்திரம், பிரம்ம சூத்திரம், மனு சுமிருதி, மகாபாரதம் இராமயணம் போன்ற இதிகாசங்கள், கீதை, புராணங்கள் போன்ற பல்வேறு வைதீக பார்ப்பனிய இலக்கியங்கள் தொடர்ந்து உருவாகி வந்தன. அது மட்டுமின்றி எழுத்தில் இல்லாது இருந்த பழமையான வேதங்கள், பிராமணங்கள் போன்றவை பார்ப்பன மயமாக்கப்பட்டு சமற்கிருத எழுத்து வடிவம் பெற்றன. வகுப்பு எனப்படும் வருணங்கள் சாதிகளாக மாற்றப்பட்டன.

கீழ்நிலைக்கு உள்ளான பெண்களும் சூத்திரர்களும்:

பெண்களும் சூத்திரர்களும் மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மௌரியர் காலத்தில் இருந்த அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்கள் மிகவும் கீழானவர்களாக ஆக்கப்பட்டனர். இவை அனைத்தும் இயற்கையாக நடைபெறவில்லை. செயற்கையாக வைதீக பார்ப்பனியத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. கி.மு. 2ஆம் நூற்றாண்டின் மௌரியர் காலத்திற்கும் வைதீக பார்ப்பனியம் வலிமைபெற்ற கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் பறிக்கப்பட்ட பெண்களுக்கான உரிமைகள் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். இத்தரவுகள் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கு முன் வைதீக பார்ப்பனியமோ, சாதியமோ இந்தியாவில் இருக்கவில்லை என்பதையும் அவை அதன்பின்தான் உருவாகின என்பதையும் உறுதி செய்கின்றன.

1.பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. அதாவது விதவை மறுமணம் தடை செய்யப்பட்டது. மௌரியர் காலத்தில் விதவை மறுமணம் அனுமதிக்கப்பட்டிருந்தது.

2.பெண்களுக்கு இளவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதாவது பெண் பருவமடைவதற்கு முன் மிக இளவயதில் திருமணம் செய்து வைக்கப்படவேண்டும். மௌரியர் காலத்தில் பெண் பருவமடைந்த பின்னரும் உரிய முதிர்ச்சி அடைந்த பின்பே திருமணம் செய்து வைக்கப்பட்டது.

3.பெண்ணுக்கு சொத்துரிமை கிடையாது. மௌரியர் காலத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை இருந்தது.

4. கணவன் மனைவியை விற்க அனுமதி இருந்தது. ஆனால் விற்ற பின்னரும் அவள் அவனது மனைவியாகவே இருக்க முடியும். அதிலிருந்து விடுதலை பெற முடியாது. இந்நிலை மௌரியர் காலத்தில் இல்லை.

5. கணவன் மனைவி தவறு செய்ததாகக் கருதினால், அவளை கயிற்றால் அல்லது மூங்கில் குச்சியால் அடிக்கலாம். இந்நிலை முன்பு இல்லை.

இவ்வாறு பெண்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன(12). சாதிய முறை பெண்களை மிக மிகக் கீழாக நடத்த வழிவகை செய்தது. முன்பு கலப்புத் திருமணத்தில் பிறக்கும் குழந்தைகள் தந்தை வழியில் உரிமைகள் பெற்றனர். அவர்களது வகுப்பும் தந்தை வழியில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் பார்ப்பனியம் அதனைப் பெண் வழியில் குழந்தையின் உரிமையை மாற்றி அமைத்தது. மேலும் பார்ப்பனியம் மேல் சாதிப்பெண் கீழ் சாதி ஆணைத் திருமணம் செய்ய தடை விதித்துவிட்டு, மேல் சாதி ஆண் கீழ் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதித்தது. இதன் காரணமாக மேல் சாதி ஆண்கள் கீழ் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்யும்பொழுது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கீழ்ச் சாதியாகவே கருதப்பட்டனர். அதன் மூலம் கலப்பு மணத்தில் ஆண், குழந்தைக்கான பொறுப்பிலிருந்து விடுதலையடைந்தான். இறுதியில் இத்திருமணங்கள் சட்டப்படியான விபச்சாரங்களாக ஆயின. இப்படியாகப் பலவகையிலும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்கள் அடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டனர். இந்நிலை மௌரியர் காலத்தில் இருக்கவில்லை.

இதுபோன்றே சூத்திரர்களின் நிலையும் மிகமிகக் கேவலமாக மாறிப்போனது. முன்பு மௌரியர்காலத்தில் ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்புக்கு மாறக்கூடிய வசதி இருந்தது. அதனால் வகுப்புகளிடையே ஏற்றத்தாழ்வுகள் என்பன தொழில் அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும்தான் இருந்து வந்தன. ஆதலால் வகுப்புகளிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகள் மிகப்பெரிய பாதிப்பைத் தருபவனாக இருக்கவில்லை. அடிமைகள் மட்டுமே மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாயினர். அவர்கள் மிகக் குறைவாக இருந்ததோடு, அவர்கள் விடுதலை பெறும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் வைதீக பார்ப்பனியம் வலுவடைந்த காலத்தில், வகுப்புகள் சாதியாக மாற்றப்பட்ட பிறகு, ஒரு சாதியிலிருந்து இன்னொரு சாதிக்கு மாறுவது என்பது முழுமையாகத் தடை செய்யப்பட்டிருந்தது. வைதீக பார்ப்பனியம் சூத்திரனை விலங்கைவிடக் கீழாக நடத்தியது(13).

1.சூத்திரன் பணிவுடன் சேவை செய்வதற்காகவே பிறந்தவன்.

2.சூத்திரன் செல்வமோ, சொத்தோ சேர்க்கக் கூடாது. பார்ப்பனன் சூத்திரனின் சொத்தைத் தேவையானால் கைப்பற்றிக்கொள்ளலாம்.

3.சூத்திரன் கல்வி கற்கக் கூடாது. வேதங்களைக் கண்டிப்பாகக் கற்கக் கூடாது. மீறினால் மிகக் கடுமையாக அவன் தண்டிக்கப் படவேண்டும்.

4.பார்ப்பனன் சூத்திரனை குற்றேவல் செய்யக் கட்டாயப்படுத்தலாம். ஏனெனில் அவன் பார்ப்பனனுக்கு அடிமையாக இருக்கவே படைக்கப்பட்டவன்.

5.ஒரு பார்ப்பனன் சூத்திரனைக்கொன்றால், ஆறுமாதம் விரதமோ, புரோகிதருக்கு ஒரு எருதுடன் பத்து பசுக்களைத்தானமோ வழங்கினால் போதுமானது. மேலும் பார்ப்பனன் எத்தகைய பாவத்தைச் செய்த போதிலும் அரசன் கூட அவனைக் கொல்லக் கூடாது.

பொதுவாகச் சூத்திரன் பணிந்து சேவை செய்பவனாகவும், பதவி வகிக்கத் தகுதியற்றவனாகவும், கல்வியற்றவனாகவும், சொத்தற்றவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக பார்ப்பனியம் இதுபோன்ற பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்ததோடு அவற்றைச் சமூகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையை அரசனிடம் ஒப்படைத்து நடைமுறைப்படுத்தியது.

ஆனால் மௌரியர்கள் காலத்தில் இந்நிலை இருக்கவில்லை. வகுப்பு என்ற வருணம் மட்டுமே இருந்த அக்காலகட்டத்தில் வகுப்புகள் தனிமைப்படுத்தி வைக்கப்படவில்லை. ஒற்றுமையை ஏற்படுத்தும் வலுவான பந்தங்களான கலப்பு மணமும், கலந்து உண்ணுதலும் வகுப்புகளுக்கிடையே முழு அளவில் செயலில் இருந்தன. ஆகவே அன்று சாதி இருக்கவில்லை.

கடவுளுக்கும் மேலானவன் பார்ப்பனன்:

அடுத்ததாக பார்ப்பனன் கடவுளுக்கும் மேலானவனாக ஆக்கப்பட்டான். அதனால் அவன் அரசனுக்கும் மேலானவனாக ஆனான். மனுவின் விதி 1: 100 என்பது உலகில் உள்ள அனைத்துமே பார்ப்பனர்களின் உடமை எனவும், பார்ப்பனனின் உயர்ந்த பிறப்பின் காரணமாக உண்மையிலேயே அவன் எல்லாவற்றிற்கும் உரியவனாகிறான் எனவும் கூறுகிறது(14). மேலும்,

மனுவின் விதி 11: 35, பார்ப்பனன் உலகை படைத்தவனாகவும், தண்டிப்பவனாகவும், ஆசிரியனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளான். எனவே அவன் படைக்கப்பட்டவை அனைத்திற்கும் புரவலனாக விளங்குகிறான் எனக் கூறுகிறது(15).

மனுவின் விதி: 11: 32, பார்ப்பனனின் சொந்த அதிகாரம் மன்னனின் அதிகாரத்தைவிடப் பெரியது. எனவே பார்ப்பனன் தனது எதிரிகளைத் தனது சொந்த அதிகாரத்தின் மூலமே தண்டிக்கலாம் என்கிறது(16).

மனுவின் விதி 8: 379, பார்ப்பனனுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக அவனது தலையை மொட்டையடிக்கும் தண்டனை விதிக்கப் படுகிறது. மற்ற சாதி மனிதர்கள் மரண தண்டனைக்குள்ளாவார்கள் எனக் கூறுகிறது.(17).

மனுவின் விதி 9: 189, ஒரு பார்ப்பனனின் சொத்தை ஒரு போதும் மன்னன் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது நிலைநாட்டப்பட்ட விதி. ஆனால் மற்ற சாதிகளின் சொத்தை வாரிசு இல்லாவிடில் மன்னன் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறது(18).

மனுவின் விதி 8: 37, கற்றறிந்த பார்ப்பனன் ஒருவன் புதையலைக் கண்டுபிடித்தால் அவன் அது முழுவதையும் அவனே வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அவன் அனைத்திற்கும் உடமையாளன் என்கிறது(19).

மனுவின் விதி 8: 38, ஒரு மன்னன் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த புதையலைக் கண்டால் அதில் பாதியை பார்ப்பனனுக்கு கொடுத்துவிட்டு, மறு பாதியை அரச கருவூலத்தில் சேர்க்கவேண்டும் என்கிறது(20).

இவை குறித்து அம்பேத்கர் அவர்கள், மன்னனே ஒரு பார்ப்பனனாகவும், மனுவின் கருத்துகளுக்கு உடன்பாடு உள்ளவனாகவும் இருந்தாலன்றி, இவ்வாறு பார்ப்பனர்களைத் தெய்வமாக்குவதும், அரசனுக்கும் மேலான இடத்தில் அவர்களை வைப்பதும் சாத்தியமில்லை எனக் கூறுகிறார்(21). ஆதலால்தான் புசியமித்திரன் மகத ஆட்சியைக்கைப்பற்றி, அதன்மூலம், பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவுவதையே தனது முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தான் எனக் கூறுகிறார் அம்பேத்கர்.

ஆகவே மௌரிய ஆட்சிக்குப்பின் வந்த பார்ப்பன வம்சங்களின் ஆட்சியிலும் அதன் பின்னரும் வந்த வைதீக பார்ப்பனியம் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய இவை போன்ற மிகப்பெரிய அரசியல் சமூக மாற்றம் குறித்த முழுமையான புரிதல் என்பது இந்திய வரலாற்று ஆசிரியர்களிடம் இல்லை. வகுப்பு என்பதிலிருந்து சாதிக்கு மாறிய நிகழ்வு என்பது இயற்கையான அரசியல் சமூக மாற்றம் எனவும் அந்நிகழ்வு கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்து நிகழ்ந்து வருவதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். அது கி.மு. 2ஆம் நூற்றண்டிற்குப்பிறகு உருவான வைதீக பார்ப்பனியத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற புரிதல் அவர்களிடம் இல்லை. மௌரியர் காலத்திற்கும், பார்ப்பன ஆட்சிக்கு பிந்தைய காலத்திற்கும் இடையே பெண்கள், சூத்திரர்கள் ஆகியவர்களின் உரிமைகள் மிகப்பெரிய அளவில் பறிக்கப்பட்டது குறித்தோ, பிந்தைய காலத்தில் சமூகத்தின் ஒவ்வொரு நடைமுறையிலும் சாதிய வேறுபாடுகள் கூர்மையாக வெளிப்படுவது குறித்தோ வரலாற்றாசிரியர்களிடம் புரிதல் இல்லை.

பண்டைய இந்திய இலக்கியங்கள் மட்டுமல்ல பண்டைய தமிழ் இலக்கியங்களும் கூட திட்டமிட்டு பார்ப்பனியமயமாக ஆக்கப்பட்டுள்ளன என்ற புரிதலுடன், அவை அனைத்தும் மறு வாசிப்பு செய்யப்பட வேண்டும். கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கேரளம், தமிழகம் ஆகிய பண்டைய தமிழ்ப்பகுதிகளில் இருந்து வந்த தொழில் பிரிவுகளும் வகுப்புகளும் சிறிது சிறிதாகத் திட்டமிட்டு வைதீக பார்ப்பனியத்தால் சாதியாக மாற்றப்பட்டன என்ற உண்மை அறியப்பட வேண்டும். இவை அனைத்தும் குறித்த ஒரு தெளிவு இந்திய வரலாற்று ஆசிரியர்களிடம் ஏற்படவேண்டும்.

பண்டைய தமிழகமும் வரலாற்றாசிரியர்களும்:

பண்டைய தமிழகம் எனப்படும் இன்றைய கேரளாவும் தமிழ்நாடும் இணைந்த பண்டைய தமிழ் பேசும் மக்கள் வசித்த பகுதி, கி.மு. 1000க்கு முன்பிருந்தே மிகவும் வளர்ச்சி பெற்ற நகர அரசுகளைக் கொண்டிருந்தன. அந்த நகர அரசுகள் கிரேக்க நகர அரசுகளுக்கு இணையான சிலவிடயங்களில் அதைவிட மேம்பட்ட நகர அரசுகளாக இருந்தன. அவை அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், அறிவியல், கல்வி, தத்துவம், கலை இலக்கியம், பண்பாடு ஆகிய பலவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டிருந்தன. கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. முடியும் வரையான காலகட்டங்களில் வட இந்தியாவில் இருந்த மகத அரசு கால வட இந்தியச் சமூகத்தைவிட பலவகையிலும் முன்னேறிய சமூகமாக பண்டையத் தமிழ்ச் சமூகம் இருந்தது(22). வட இந்தியச் சமூகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்தே எண்ணியம் (சாங்கியம்) போன்ற பல்வேறு பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளையும், இசை, மருத்துவம், அறிவியல் போன்ற இன்ன பிறவற்றையும் தமிழ்ச் சமூகத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. சமற்கிருதம் கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழிலிருந்து அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம் போன்ற பல துறைகளின் நூல்களை மொழி பெயர்த்துக் கொண்டது. அதன்பின் இந்த பண்டைய மூலத் தமிழ் நூல்கள் பாதுகாப்பவர் இன்றி, கவனிப்பார் இன்றி விடப்பட்டன. அதனால் அவை இல்லாது போயின.

பல்வேறு துறைகளிலும் மிகவும் வளர்ச்சி பெற்ற சமூகத்தால்தான் சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்களைப் படைக்க முடியும் என்ற சிந்தனை இருந்தாக வேண்டும். உலக அளவிலான வணிக மேலாண்மையும், மிகப்பெரிய கடற்படைகளையும் கொண்ட ஒரு முன்னேறிய சமூகமாக பண்டையத் தமிழ்ச் சமூகம் இருந்து வந்தது. இந்தியாவின் கிழக்கு மேற்கு கடற்கரைகளையும், தென் கிழக்கு ஆசியாவையும், தக்காணப்பகுதிகளையும் தனது வணிகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்து வந்தது. அன்றே தமிழர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் அளவு ஒரு முன்னேறிய வணிக முதலாளித்துவச் சமூகமாக இருந்து வந்தனர்(23). கேரளாவின் முசிறி, தமிழகத்தின் கீழடி ஆகியவற்றில் நடந்த அகழாய்வுகள் இவற்றில் பலவற்றை ஓரளவு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. ஆதிச்சநல்லூர், கீழடி, முசிறி போன்றவற்றில் எதிர்காலத்தில் நடைபெறும் முறையான அகழாய்வுகள் மேலே கூறிய பண்டைய தமிழகத்தின் வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வரும். இவை அனைத்தும் பற்றிய தெளிவு இந்திய வரலாற்றாசிரியர்களிடம் இருந்தாக வேண்டும். பண்டைய தமிழ்ச் சமூகம் பலவகையிலும் பண்டைய வட இந்தியச் சமூகத்தின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தியுள்ளது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தாக வேண்டும். இல்லாவிட்டால் இந்திய சமூகத்தை முழுமையாகப் புரிந்து கொள்வது என்பது இயலாது. ஆனால் இன்று அந்நிலை பெரும்பாலான இந்திய வரலாற்றாசிரியர்களிடம் இல்லை. இந்நிலை மாற வேண்டும்.

பார்வை:

1.பேரரசன் அசோகன், மறக்கப்பட்ட மாமன்னரின் வரலாறு(Asoka: the search for India’s Lost Emperor), சார்லசு ஆலன்(Charles Allen), தமிழில் தருமி, எதிர் வெளியீடு, ஆகசுட் 2014, சோகமில்லாப் பெரு மன்னன் என்கிற இந்நூலின் முதல் கட்டுரையின் 5ஆம் பக்கம்.
2. மேற்கண்ட நூல் பக்: 64.
3. பக்: 64-102.
4. பண்டைய இந்தியா, கோசாம்பி, தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH வெளியீடு, செப்டம்பர்- 2006. பக்: 286.
5. பேரரசன் அசோகன், மறக்கப்பட்ட மாமன்னரின் வரலாறு, சார்லசு ஆலன், தமிழில் தருமி, எதிர் வெளியீடு, ஆகசுட் 2014, பக்: 1-475.
6. பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள், நிலையங்கள், சில தோற்றங்கள், ஆர்.எசு.சர்மா, தமிழாக்கம் - சோமலே, NCBH, 2010, பக்: 209.
7. முற்கால இந்தியா(Early India, - From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 356, 357.
8. பண்டையக்கால இந்தியா, டி. என். சா(D.N. Jha), தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 137.
9. முற்கால இந்தியா, இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 385.
10. வியத்தகு இந்தியா(The Wonder That Was India), ஏ.எல். பாசம்(A.L.Basham), தமிழாக்கம்: செ.வேலாயுதபிள்ளை, மகேசுவரிபாலகிருட்டிணன், ஏப்ரல்-2015, விடியல் பதிப்பகம் பக்: 101.
11. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 163-172.
12. “ “ “ பக்: 195-200, 218-220, 228-232.
13. “ “ “ பக்: 223-227.
14, 15, 16. “ “ “ பக்: 167, 168.
17, 18, 19, 20. “ “ “ பக்: 178, 179.
21. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்:168.
22. பழம்பெரும் தமிழ்ச் சமூகம், கணியன்பாலன், தமிழினி பதிப்பகம், சனவரி-2021, பக்: 250 -256.
23. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, 2016, பக்; 119-133, 143-151, 154-159.

- கணியன் பாலன்

Pin It