மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியாவின் அசல் சமூக வரலாற்றை 78 பக்கங்களில் அடக்கி நம்மை விறுவிறுப்பாக வாசிக்கவும் செய்து விடுகிறார் ஜான் வில்சன். டாக்டர் ப. காளிமுத்து அவர்கள் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். ஸ்காட்லாந்தை தாயகமாகக் கொண்ட வில்சன் ஒரு மதப் பரப்புரையாளர். தொன்மைக்கால வரலாறு, வேதங்கள், இதிகாசங்கள், ஆரியர்களின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1850 களில் பம்பாயில் புகழ்பெற்று விளங்கிய ராயல் ஏசியாடிக் சொசைட்டி என்னும் அமைப்பின் மதிப்புறு தலைவராக இருந்து பணியாற்றியவர்.
1858 ஆம் ஆண்டு பம்பாய் நகர் மன்ற அரங்கில் வில்சன் நிகழ்த்திய சொற்பொழிவே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா அல்லது சிந்து நதிக்கரையில் இருந்த வேதகாலத்து ஆரியர்களின் சமூக நிலை (India Three thousand years ago or The social state of the Aryans on the Banks of the Indus in the times of the Vedas) என்னும் இந்த நூல். ஒரு ஆய்வு நூல் என்றும் கூட இதைச் சொல்லலாம். 1858 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்த இந்நூல், 127 ஆண்டுகளுக்குப் பிறகு 1985 இல், பயனீர் புத்தக மையத்தின் சார்பில் என். குமாரசாமி அவர்களால் வெளியிடப்பட்டது. இப்போது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியாவில் குடியேறிய ஆரியர்களின் வரலாறாக இந்நூல் விரிகிறது. அதோடு ஆரியர்கள் வெற்றி கொண்ட, அடக்கியாண்ட இம்மண்ணின் தொல் பழங்குடிகளின் சமூக, அரசியல், பொருளாதார, சமய நிலையையும் இது தெரிவிக்கிறது. ஆரியர்களின் சமயக் கவிதைகளான வேதங்களில் இப்போதைய இந்து சமயத்தின் எந்தவொரு கேடான அம்சங்களும் இல்லை என்பதை மிக ஆணித்தரமாக நிறுவுகிறார் ஜான் வில்சன். வேதங்களின் மூலப்பிரதி ஒன்றைத் தாம் பெற்றிருந்ததாகவும், அதையே தாம் கற்றதாகவும் வில்சன் தெரிவிக்கிறார்.
கிறித்துவ மதத்திற்கு மாறிய பார்ப்பனர் ஒருவரிடமிருந்து இம்மூலப் பிரதி தமக்குக் கிடைத்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்நூலை ஆக்கிய 1858 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் சமூகநிலை நமக்குத் தெரியும். நாடெங்கும் சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கமும், குழந்தைத் திருமணமும் இந்தியா முழுவதும் பரவி இருந்ததை நாம் அறிவோம். சதி என்னும் பழக்கத்தைக் குறிப்பிடும் ஆசிரியர், வேதங்களின் அது குறித்த குறிப்புகள் ஒன்றுமே கிடையாது என திட்டவட்டமாக மறுக்கிறார். எல்லாமே இடைச்செருகல் என்கிறார்.
வேதகாலத்தில் குழந்தை திருமணமுறை கிடையவே கிடையாது என்கிறார் வில்சன். எல்லாமே இடைச்செருகல் என்கிறார். பெண்களுக்கு மிகவும் உயரிய நிலை இருந்ததாகக் குறிப்பிடுகிறார். வேதங்களும், இராமாயணம், மகாபாரதங்களும் அனைத்துமே வாய்வழியாக தொடர்ச்சியாக மக்களிடம் கடத்தப்பட்டு வந்தவை. ஒவ்வொரு முறை அது கடத்தப்படும்போதும் அதில் ஏகப்பட்ட திரிபுகள் செய்யப்படும் என கூறுகிறார்.
சாதியோ, தீண்டாமையோ வேதங்களில் எங்குமே இல்லை என்று உறுதிபடக் கூறுகிறார். வேதகாலங்களில் காணப்படும் சமுதாயப் பகுப்புகள் அனைத்தும் தொழில்முறையோடு தொடர்பு கொண்டவையாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. விசுவாமித்திரர் பார்ப்பனராக மாறியிருக்கிறார் என்று இதிகாசத்திலிருந்து தகவலைத் தரும் ஆசிரியர், சூத்திரர்கள் குறித்த தகவல்கள் வேத இலக்கியங்களில் இல்லவே இல்லை என்கிறார்.
வேதங்களில் இடைச்செருகல் செய்யப்பட்ட காலம் புராண, இதிகாச காலம் என்கிறார். தற்போதைய இந்து சமயத்திற்கும், வேதத்திற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்கிறார். பண்டைய வேத இலக்கியங்கள் அனைத்தும் ஆரியர்களின் சமயப்பாடல்கள். ருத்ரன் அவர்களின் முக்கியமானக் கடவுள். தொல்குடிமக்களை ஆரியர்கள் எதிரிகளாகக் கட்டமைத்திருந்ததால், அவர்களின் வீழ்ச்சிக்கு அவர்கள் இயற்கையை
வேண்டிக்கொண்டார்கள். எதிரிகளின் கோட்டைகள் வீழவேண்டுமென்று மழைத் தெய்வமான வருணனை வேண்டினார்கள். தஷ்யூக்களின் செல்வங்கள் பற்றி எரியவேண்டும் என்று அக்னிக் கடவுளை வேண்டினார்கள். வேதகாலத்தில் இன்றைய இந்துக்கடவுளர்களான சிவன் இல்லை, அவரது மனைவியான காளியோ, பார்வதியோ இல்லை. அவர்களது மகன்களான கணபதியும், சுப்ரமணியனும் இல்லை. சிவன்தான் அப்போது ருத்ரன் என்று இந்துக்கள் சொல்லிக் கொள்வார்கள். வேத காலத்தில் சிவன் இல்லை, விஷ்ணு இல்லை. பிரம்மா இல்லை. பிரம்மா என்னும் சொல்லுக்கு வழிபாடு என்று வேதத்தில் பொருள் என ஆசிரியர் கூறுகிறார்.
ஆரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு யாகங்களில் இடப்பட்ட குதிரை இறைச்சியும், பசுவின் இறைச்சியும்தான். ஆரியர்கள் குடியேறி, இம்மண்ணின் தொல்குடி மக்களை வெற்றிகொண்டு தங்களின் சுய ஆட்சிகளை அமைத்தபிறகு, தங்களின் சமூகப் பகுப்புகளை தொழில் அடிப்படையில் வகுத்துக் கொண்டனர். புரோகிதம் செய்யும் பிரிவினர் பார்ப்பனராயினர். படை எடுத்து வெற்றி கொண்டு ஆட்சி நடத்துவதில் விருப்பமானவர்கள் சத்திரியர்களானார்கள்.
விவசாய நிலங்களை வைத்து வேளாண் தொழில் செய்யும் மக்களை வைசியர்கள் என்று பிரித்தார்கள். சூத்திரர் என்ற பிரிவு வேத காலத்தில் இல்லவே இல்லை. மனுவின் காலத்தில்தான், அதாவது புத்தரின் காலத்திற்கு சற்றுமுன்னர்தான் சூத்திரர் பகுப்பும் சமூகத்தில் வந்து சேர்ந்தது. அதோடு பிரம்மா என்னும் கடவுளும் படைக்கப்பட்டார். அதன் பின்னர்தான் பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணர்களும், பிரம்மாவின் தோளிலிருந்து சத்திரியர்களும், பிரம்மாவின் தொடையிலிருந்து வைசியர்களும், பிரம்மாவின் கால்களிலிருந்து சூத்திரர்களும் தோன்றியதாக கதைகளும் புனைவுகளும் உருவாக்கப்பட்டன.
ஆரியர் வருகைக்கு முன்னர் இம்மண்ணில் வேர்கொண்டிருந்த தொல் பழங்குடிகள் குறித்த குறிப்புகளையும் ஆசிரியர் நமக்குத் தருகிறார். தஸ்யூக்கள் என ஆரியர்களால் அழைக்கப்பட்ட இவர்கள் மதச்சடங்குகளைச் செய்யாதவர்கள் என்பது மிக முக்கியமான அம்சம். மதச்சடங்கு செய்வோரை அவ்விடத்திலிருந்து விரட்டியடித்திருக்கிறார்கள் என்றும் வேதங்களில் குறிப்புகள் உள்ளன என்றும் வில்சன் எழுதுகிறார். வேதகாலத்து ஆரியர்கள் நாட்டுப்புற வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்.
ஆரியர்களின் பல்வேறு கால்நடைச் செல்வங்களைப் பற்றி வேதங்களில் ஏராளமானக் குறிப்புகள் உள்ளன. ஆனால் அவர்களது எதிரிகளான தொல்பழங்குடிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
ஒன்றுகூடி குடும்ப வாழ்க்கை வாழ்ந்தவர்கள். சிற்றூர்களிலும், நகரங்களிலும் செழிப்புடன் வாழ்ந்தவர்கள். கால்நடைகளையும் அவர்கள் தங்கள் வீடுகளில் வளர்த்தனர். வீட்டுப் பயன்பாட்டுக்கான ஆடம்பரப் பொருட்கள் அவர்களிடம் இருந்தன. நெசவை அவர்கள் அறிந்திருந்தனர். தேர்கள் வைத்திருந்தனர். போர்க்கருவிகளை அவர்களே வடிவமைத்துக் கொண்டனர். பின்னர் எப்படி ஆரியர்களிடம் இவர்கள் வீழ்ந்தார்கள்? விடையை வில்சனே தருகிறார். ஆரியர்கள் எப்போதாவது நேரடிச் சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்களா? இதற்கு இராமாயணம் சாட்சி இல்லையா? இராமன் எப்படி வாலியை வீழ்த்தினான் என்று வில்சன் வினவுகிறார். சூழ்ச்சியின் மூலமே தொல்பழங்குடி மக்களை ஆரியர்கள் வீழ்த்தியிருக்கமுடியும் என்கிறார் வில்சன்.
தொல்பழங்குடிகளிடம் வழிபாட்டு முறையும், பலிபீடங்களும் இருந்தன. ஆனால் உருவ வழிபாடு அறவே இல்லை என்கிறார் வில்சன். பிராமண உருவாக்கம் குறித்த பல்வேறு ஆய்வுத் தகவல்களை வில்சன் தருகிறார். "வேதங்களின் மிகத் தொன்மை வாய்ந்த பகுதிகளுக்கு மிகப் பிற்பட்ட காலத்திலேயே பிரம்மா அல்லது பிராமணன் என்ற சொல், கடவுளின் முகத்தில் தோன்றிய அர்ச்சகன் (பூசாரி) என்ற தனிப்பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.
பிராமணன் தனது வேதியத் தொழிலிருந்து ஜாதிய உயர்நிலைக்கு எவ்வாறு மாறினான், எவ்வாறு வளர்ச்சி பெற்றான் என்பதைக் கண்டறிவது ஒன்றும் கடினமான பணி அல்ல; உயிர்ப்பலி கொடுத்து நடத்தப்பட்ட வேதகாலச் சடங்குகளில் அவனது சிறப்புக்குரிய தகுதி சடங்கு நடத்துநர் என்பதுதான். புரோகிதன் அல்லது வேலை செய்பவன் என்பதுதான் அதன் நேர் பொருளாகும். அக்னி நெருப்புக் கடவுள்; வானகத்துக் கடவுளர்க்கெல்லாம் அக்னியே புரோகிதன்; பிராம்மா அல்லது பிராமணனை அக்னியின் சார்பாளனாக (புரோகிதராக) இந்தப் பூவுலகில் அரசர்கள் வைத்துக் கொள்வது மிகவும் பெருமையாகக் கருதப்பட்டது. இந்தப் புரோகிதமுறை, பிரம்மா, பிராம்மணன் என்ற அமைப்புமுறை, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகிற அமைப்பு முறையாக மாறிவிட்டது" என்கிறார்.
பிரம்மா உடலின் பல்வேறு பகுதிகளிலி ருந்து தோன்றியவர்களே நான்கு வர்ணத்தவர் என்னும் கதைகளெல்லாம் வேத காலத்துக்கும் பிற்காலத்தில் வந்தவையே. அக்காலத்து ஆரிய அரசர்களும் கூட பிராமணர்களுக்கு எதிரான பல நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார்கள். சடங்குகளைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் வேதங்களிலேயே உள்ளன என்கிறார்
வில்சன். மகாபாரதத்தில் அரச மரபினரான குருமரபினரும், பாஞ்சாலரும் தங்களின் அரசவைக் கூட்டத்தின் செயற்பாடுகளுக்குப் பார்ப்பனரின் அறிவுரையைக் கேட்காமலேயே சென்றார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. மனுவின் சட்ட நூற்படி அரசர்கள், பார்ப்பனரின் அறிவுரையைக் கேட்டுக் கொண்டுதான் தங்களின் அன்றாட அலுவல்களைத் தொடங்க வேண்டும். இது அரச மரபினருக்குக் கட்டாயம் தேவையான ஒன்றாகும் என்ற வழக்கத்தை வில்சன் நினைவுப்படுத்துகிறார்.
மனுவும், இந்துச்சட்டமும் சூத்திரர்களை இந்திய சமூகத்தின் ஓர் அங்கம் என்று பொதுவாகக் குறிப்பிட்டபோதிலும், அவர்கள் அடிமைப்படுத்தப் பட்டவர்களே. இரண்டாம் பிறப்பு அல்லது புனிதமான பிறப்புக்கு அவர்கள் உரிமையுடையோர் கிடையாது. சூத்திரர்கள் பற்றிய இத்தகைய குறிப்புகள் எதுவும் வேதங்களில் இல்லை என்று வில்சன் எழுதுகிறார். வேதங்களைக் கற்றறிந்த பிராமணர்களின் காலத்தில்(முந்தைய வேத காலத்தில்) ஆரியர் நடத்திய யாகங்களில்(வேள்விகளில்) பங்கெடுத்துக் கொள்வதற்கு சூத்திரர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்னும் சான்றை வில்சன் பகிர்கிறார். கங்கை, யமுனை சமவெளிப்பகுதிகளில் ஆரியர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட பிறகும், மனுவின் சட்டங்கள் பரவலாக அமுல்படுத்தப்பட்ட பிறகும்தான் சூத்திரர்களை அடிமையாக்கும் நிகழ்வு தொடங்கியது என்றும் வில்சன் சான்றுரைக்கிறார்.
வேள்விகளில் உயிர்ப்பலி கொடுப்பதற்காக மட்டும் விலங்குகளைப் பண்டைகாலத்து இந்தியர்கள் பயன்படுத்தவில்லை; இவற்றை உணவிற்காகவும் தடையின்றிக் கொன்றார்கள். இந்தச் செயலுக்குச் சான்றளித்து வேதங்கள் தெளிவுபடுத்துவதைப் போல ஆக்ஸ்போர்டு பல்கலை. சமஸ்கிருதப் பேராசிரியர், தொன்மை காலத்து இந்தியர்களிடையே மாட்டுக்கறியை உண்பதைப் பற்றி அச்சமோ, தயக்கமோ ஏதும் இல்லை என்று கூறுகிறார் என வில்சன் குறிப்பிடுகிறார். ஆனால் அந்தப் பேராசிரியரின் பெயரை வில்சன் குறிப்பிடவில்லை. உயிர் கூடுவிட்டுக் கூடு பாயும் என்னும் கோட்பாடு தொன்மைக்கால வேதங்களில் (இசைப்பாடல்களில்) எந்த இடத்திலும் இல்லை . ஒரு சிறு அடையாளத்தைக்கூட அவற்றில் காணமுடியவில்லை என்றும் வில்சன் குறிப்பிடுகிறார்.
இந்நூலின் மிக முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது இந்து வேதங்கள் சொல்லியிருப்பதாகச் சொல்லி நெடுங்காலமாக நடத்தப்பட்டு வந்திருக்கிற சதி என்னும் உடன்கட்டை ஏறும்பழக்கம் குறித்த உண்மையான ஆய்வாகும். வில்சன் எழுதுகிறார்: "சதி எனும் கொடுமைச் சடங்கிற்கு வேதம் ஒப்புதல் தரவில்லை; வேதத்தின் எந்த இடத்திலும் சதியை ஏற்றுக் கொண்டமைக்கான சான்று இல்லை. இருந்தபோதிலும் வேதங்களிலிருந்து சில பகுதிகளை பிராமணர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டி, இவை கைம்பெண்களை உடன்கட்டை ஏற்றுமாறு கூறுகின்றன என்று எடுத்துக்கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பிராமணர்கள் எடுத்துக்காட்டும் இந்தப் பகுதிகளெல்லாம் கைம்பெண்களைப் பேணிக் காப்பாற்ற வேண்டியதன் இன்றியமையாமையை எடுத்துக் கூறுகின்றனவே தவிர அவர்களை எரித்துக் கொல்வதைப் பற்றியல்ல. இப்பகுதி மிருத்யூ என்பவருக்கு அல்லது மரணத்திற்குச் சொல்லப்பட்ட ஓர் இசைப் பாடலில் இடம் பெற்றுள்ளது. ரிக் வேத பிராமணர்களால் இறுதிச் சடங்கின்போது இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியின் பொருள் மாற்றிக் கொள்ளப்பட்டதற்குச் சொற்களின் உருத்திரிபே காரணமாக இருக்கலாம். (Agre என்பதற்குப் பதிலாக Agneh என்று பொருள் கொண்டார்கள்).
தாய்மார்கள் முதலில் அந்த வழிபாட்டு இடத்திற்குச் செல்வார்களாக! என்ற அந்தத் தொடர், தாய்மார்கள் முதலில், அந்த நெருப்பின் கருவறைக்குள் செல்வார்களாக என்று படிக்கப்பட்டதன் விளைவாகப் பொருள் மாறாட்டம் ஏற்பட்டிருக்கலாம். டாக்டர் முல்லர் மிக நன்றாகவே சொன்னார்: " பழிபாவங்களுக்கு அஞ்சாத புரோகித வர்க்கத்தால் செய்ய முடிந்த மிக மிக இழிந்தசெயல் இதுவாகத்தான் இருக்கமுடியும்’. மேலே எடுத்துக் காட்டிய அந்தப்பகுதி இழப்புக்கு ஆளான கைம்பெண்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால் அவளிடம் துக்கம் விசாரிக்க வந்த இழப்புக்கு ஆளாகாத பெண்களைப் பற்றிப் பேசுவது. கையற்ற நிலையில் உள்ள அந்தக் கைம்பெண்ணை நோக்கி ரிக் வேதம் இவ்வாறு கூறுகிறது:
"பெண்ணே நீ எழுக! இந்த உலக வாழ்க்கைக்கு வா! எவனுடைய அருகில் நீ துயில் கொண்டிருந்தாயோ அவனது வாழ்க்கை இப்போது முடிந்து போய் விட்டது. எழுந்து வா! எங்களோடு இனைந்து கொள்! உன் கைகளைப் பற்றி உனக்குத் தாய்மைப் பேற்றை நல்கிய உன் கணவனுக்கு மனைவி என்ற முறயில் நீ அனைத்துக் கடமைகளையும் அவனுக்குச் செய்து முடித்திருக்கிறாய்". சதி நடந்ததற்கான சான்று எதுவும் வேத காலத்தில் இல்லை. அதுபோல சதி நிறைவேற்றப்பட வேண்டும் என்னும் கட்டளை மனுவின் சட்டத்திலும் இல்லை என்று வில்சன் கூறுகிறார்.
ஆரியர்களின் நேரடி மதச் செயற்பாடுகளில் சிலை உருவங்கள் எந்தப் பாத்திரத்தையும் வகித்ததில்லை என வில்சன் தெரிவிக்கிறார். ஆரியர்களின் முதன்மையானச் செயற்பாடுகளாக புனிதமான நெருப்பை வளர்த்தல், கடவுளர்க்கு சோமபானம் கொடுத்தல், நெய் அளித்தல், விலங்குகளை வேள்வியில் பலியிடுதல், வேத இசைப் பாடல்களை ஓதிப்பாடுதல் என்பவையாகத்தான் இருந்திருக்கின்றன என்கிறார் வில்சன்.
இறுதியாக இப்படி முடிக்கிறார்: "அமைப்பு வழிப்பட்ட பார்ப்பனியச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்ட காலத்திலிருந்து ஆரியர்களின் (வந்தேறிகளின்) இடமாக விளங்கும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிலவுகின்ற தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் ஆரிய நாகரிகமே காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’. எல்லோரின் நம்பிக்கையும் அதுதான்.
- செ.சண்முகசுந்தரம்