மகதப் பேரரசில் பார்ப்பனர்களின் ஆட்சி:

அசோகன் கல்வெட்டுகளும், காரவேலன் கல்வெட்டும், மெகசுதனிசுவின் குறிப்புகளும், புத்த மத இலக்கியங்களும், காமசூத்திரமும் வைதீக பார்ப்பனியத்தின் நால்வருண சாதி குறித்துப் பேசவில்லை. அர்த்தசாத்திரம் கூட சாதி குறித்து அதிகம் பேசவில்லை. புத்த மத இலக்கியங்கள் வருணம் எனப்படும் வகுப்புகள் குறித்துப் பேசின. ஆனால் அந்த வகுப்புகளில் அரசர் மிக உயர்நிலையில் இருந்தார், பார்ப்பனர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தனர். வளர்ச்சி பெற்ற நகரங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மட்டுமே வகுப்புகள் எனப்படும் வருணங்கள் உருவாகி இருந்தன. இந்தியாவின் பெரும்பகுதியில் மக்கள் இனக்குழு நிலையில்தான் வாழ்ந்து வந்தனர். அங்கெல்லாம் நகரமயமோ, நாகரிகமோ இருக்கவில்லை. சான்றாக வடமேற்குப் பகுதியின் முக்கிய மையமான தட்சசீலம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை ஒரு சிறு கிராமமாகவே இருந்து வந்தது. அங்கு ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு தொழில்களைச் செய்யும் நிலை இருந்து வந்தது. வகுப்புகளிடையே கலந்து உண்ணக் கூடாது, கலப்பு மணம் செய்யக்கூடாது என்ற தடைகள் முன்பு நடைமுறைக்கு வரவில்லை எனவும் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்குப் பின்தான் பார்ப்பனியம் வருணத்தைச் சாதியாக மாற்றியது எனவும் அம்பேத்கர் கூறுகிறார்.

sa jayaraj 450கி.பி. 2ஆம் நூற்றாண்டுவரை பார்ப்பனியத்தின் சமற்கிருதமொழி மக்கள் மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, இருக்கவில்லை. கி.பி. 150இல்தான் அது எழுத்தால் எழுதப்பட்டது. வைதீக பார்ப்பனியத்தின் அடிப்படைக் கருத்தியல்களைக் கூறும் பிரம்ம சூத்திரம், மீமாம்ச சூத்திரம், மனு சுமிருதி, இதிகாசங்கள், கீதை, புராணங்கள் போன்ற நூல்கள் அனைத்தும் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின்தான் எழுதப்பட்டன. அதன்பின்தான் வேதங்கள், பார்ப்பனங்கள், உபநிடதங்கள் போன்றவைகள் எழுத்து வடிவம் பெற்றன. ஆகவே மௌரிய வம்சம் முடியும்வரை, அதாவது கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை வைதீக பார்ப்பனியமும், அதன் நால்வருண சாதியும் உருவாகியிருக்கவில்லை என்பது உறுதியாகிறது.

இந்திய சமூக மாற்றமும் வரலாறும்:

கி.மு. 187இல் புசியமித்திரன் மகதப் பேரரசைக் கைப்பற்றிய பின் ஏற்பட்ட மாபெரும் அரசியல் சமூக மாற்றங்கள் குறித்து நமது வரலாற்றாசிரியர்கள் எதுவும் பேசுவதில்லை. அம்பேத்கர் மட்டுமே இம்மாற்றம் குறித்துப் பேசியுள்ளார். அவர், பார்ப்பனியம் வெற்றி பெற்றபின் அரசியல் சமூகக் கட்டமைப்புகளில் அது ஏற்படுத்திய மாற்றங்களை ஆய்வதற்கு முயற்சி செய்யப்படவில்லை எனக் கூறுகிறார். மேலும் அவர், ‘இந்தியாவின் பண்பாடு, வரலாற்றின் நெடுகிலும் ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது என்று பொதுவாகவே கருதப்படுகிறது; பார்ப்பனியம், புத்தமதம், சமணமதம், ஆகியவை எல்லாம் வெவ்வேறுவிதமான கட்டங்களே என்றும், அவற்றினிடையே அடிப்படையான முரண்பாடுகள் இருந்ததில்லை என்றும் கருதப்படுகிறது. இரண்டாவதாக, இந்திய அரசியலில் எத்தகைய போராட்டங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், அவையெல்லாம் அரசியல் போராட்டங்கள், அதாவது ஆட்சி வம்சங்களிடையே நடந்த போராட்டங்களே என்றும், அவற்றுக்குச் சமூக ஆன்மீக முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும் கருதப்படுகிறது’ எனக் கூறுகிறார். மேலும் அவர் இந்தியப் பண்பாடு என்ற ஒன்று ஒரு போதும் இருந்ததில்லை எனவும் கூறுகிறார்(1).

உலகெங்கும் நாகரிக சமூகத்தில் வகுப்புகள்தான் உருவாகி இருந்தன. ஆனால் இந்திய சமூகத்தில் மட்டும் வகுப்புகள் உருவாகிய சில நூற்றாண்டுகளுக்குப் பின் சாதிகள் உருவாகின. இந்த சமூக மாற்றம் என்பது கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டங்களில்தான் ஏற்பட்டது. இதற்கான அடிப்படைச் சமூகக் கட்டமைப்பு மாற்றம் என்பது கி.மு. 187இல் பார்ப்பனன் புசியமித்திரன் தொடங்கிய சுங்க பார்ப்பன வம்சத்திலும் அதன் பிந்தைய கன்வ பார்ப்பன வம்சத்திலும் கொண்டுவரப்பட்டது. சாதியச் சமூகத்தை கட்டமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று கி.பி. 2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளில் சாதியச் சமூகம் கட்டமைக்கப்பட்டு உறுதியாக நிலை நிறுத்தப்பட்டது. அதன் பின் வந்த குப்தப் பேரரசு காலத்தில் இந்த வைதீக பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதனால் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட ஒன்றாக ஆகியது. அதன்பின் இந்தியா முழுவதும் சாதிய அமைப்பு உருவானது.

புசியமித்திரனின் காலம் முதல் தொடங்கிய இந்த சமூக மாற்றம் குறித்து எந்த வரலாற்றாசிரியர்களும் அறிந்து கொண்டதாகவோ உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. இந்திய சமூகம் சாதியம் எனும் கேவலமான புதைகுழியில் புதைந்து போனதற்கும், இதுவரை மீண்டெழுந்து வர முடியாமல் போனதற்கும் காரணமான இந்த அரசியல் சமூக மாற்றம் பார்ப்பன அரச வம்சங்களின் காலகட்டத்தில் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும். உலகம் முழுவதும் புரோகித வகுப்பு அழித்தொழிக்கப்பட்ட போது, இங்கு அந்த புரோகித அமைப்பு, தன்னை ஒரு சிறு சமூகக் குழுவாகத் தற்காத்துக் கொண்டதோடு, காலம் பார்த்து அரசை வஞ்சகமாகக் கைப்பற்றிக் கொண்டு, தனது வைதீக பார்ப்பனிய சித்தாந்தத்தை, தனது நலனுக்கான நால்வருண சாதியமைப்பை கடவுளின் பெயரால் இந்திய சமூகம் முழுமைக்குமான சித்தாந்தமாக, அமைப்பாகக் கொண்டு வந்து, அவற்றை செயல்படுத்தி ஒரு மனித மாண்பற்ற சாதிய சமூக அமைப்பை கட்டமைத்துள்ளது.

பார்ப்பன அரச வம்சங்களும் வைதீக பார்ப்பனியமும்

கி.மு. 187இல் மௌரிய அரசனின் கடைசி மன்னன் பிருகதிராதன் என்பவனை படை அணிவகுப்பின் போது படுகொலை செய்துவிட்டு புசுயமித்திரன் என்ற பார்ப்பனப் படைத்தளபதி மகத அரசைக் கைப்பற்றிக் கொண்டான். அவனது வம்சம் சுங்க வம்சம் எனப்பட்டது. கி.மு. 75இல் அவ்வம்சம் இல்லாதுபோய் கன்வ வம்சம் ஆட்சிக்கு வந்தது. அதுவும் பார்ப்பன வம்சமே. கி.மு. 30இல் அவ்வம்சம் சாதவாகன அரசன் புலுமாயி என்பவனால் அழிக்கப்பட்டது. அதன்பின் மகத அரசை இனக்குழு அரசுகள் கைப்பற்றிக் கொண்டன. ஆகவே கி.மு. 187 முதல் கி.மு. 30 வரை 150 வருடங்களுக்கு மேல் பார்ப்பன வம்சங்கள் மகதப் பேரரசை ஆண்டன. இக்காலகட்டத்தில் மிகப்பெரிய சமூக மாற்றங்கள் நடைபெற்றன. அசோகன் காலத்தில் பௌத்த மதம் மிகவும் செல்வாக்கு பெற்ற மதமாக ஆகியிருந்தது. அந்த பௌத்த மதம் முற்றிலும் அழிக்கப்பட்டு வேதம் சார்ந்த சிந்தனைகளும் சடங்குகளும் மீண்டும் அரியணை ஏறவேண்டும் என்பதே பார்ப்பனர்களின் நோக்கமாக இருந்தது. அதனை நிறைவேற்ற புசுயமித்திரனும் பார்ப்பனர்களும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

அதன் காரணமாக, ‘பௌத்த பிக்குகளும் பிக்குணிகளும் பௌத்தம் தழுவிய பாமர மக்களும் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். பௌத்தமதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து முடிக்கும்வரை இந்தக் காட்டுமிராண்டித் தனமான இனப்படுகொலை தொடர்ந்து நடந்து வந்தது’ எனக் கூறுகிறார் பசாசு(2). மகாபாரதம் சாந்தி பருவத்தில் பார்ப்பனனாகிய நாரதன், ‘உண்மை உரைப்பது உகந்ததே, ஆனால் நமக்கு நன்மை பயக்குமெனில் பொய்யுரைப்பது போற்றுதற்குரியது. ஏனெனில் நமக்கு நன்மை தருவன மட்டுமே உண்மையிலும் உண்மை (அது பொய்யாய் இருப்பினும்) என்பதே என் கருத்து’ எனக் கூறுகிறான்(3). இதைத்தான் பார்ப்பனர்கள் பின்பற்றி வந்தார்கள். அதனால்தான் உலோகாயதக் கருத்துகளையும், பகுத்தறிவுப் பொருள்முதல்வாதக் கருத்துக்களையும் கொண்டிருந்த படைப்பிலக்கியங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு அழிக்கப்பட்டன என்பதோடு அசோகர் நிறுவிய பௌத்த மதச் சார்பான 84000 தூபங்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன எனக் கூறுகிறார் பசாசு(4). பௌத்த மதத்தை இந்தியாவைவிட்டு துரத்துவதற்காகச் செய்யப்பட்ட அடக்குமுறைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் ஈடான வேறு ஒன்று உலகின் எந்த மூலையிலும் நடந்ததில்லை எனக் கூறுகிறார் இரைசு டேவிட்சு(5). இவற்றின் காரணமாக நாடு முழுவதும் சீர்கேட்டுக்குள்ளானது. இந்நிலையில் பார்ப்பனர்கள் தங்கள் மதத்தைப் புத்துருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள். பார்ப்பன மதச் சடங்குகளை கண்டிப்போடு பின்பற்ற மக்கள் கட்டாயப்படுத்தப் பட்டார்கள். கருமம், மறுபிறப்பு, ஆன்மா, கடவுள் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு மீண்டும் புத்துயுரூட்டப்பட்டது. யாகம், சடங்கு போன்ற புரோகிதப் பணிகள் மீண்டும் நாடு முழுவதும் பரவியது.

பார்ப்பனர்களின் ஆட்சி கி.மு. 185 முதல் கி.மு. 30 வரை கிட்டத்தட்ட 155 ஆண்டுகள் நடைபெற்றது. இக்காலகட்டத்தில் பார்ப்பனர்கள் பலவகையிலும் வலிமை மிக்கவர்களாக ஆனார்கள். மிக அதிக அளவான நிலதானங்களும், வரிச்சலுகைகளும் பெற்ற ஒரு சொத்துடமை வர்க்கமாகவும், அரசியல் செல்வாக்கு கொண்டவர்களாகவும், சமூகத்தின் அதி உயர் வகுப்பாகவும் ஆனார்கள். கடவுளுக்கும், கல்வி, அறிவு, நூல் போன்றவைகளுக்கும் ஏகபோக உரிமை கொண்டவர்களாகவும் ஆகியிருந்தார்கள். இக்கால கட்டத்தில்தான் வைதீக பார்ப்பனியத்துக்கும், பார்ப்பனர்களின் நால்வருண சாதியமைப்புக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது. சமூகத்தின் மிக வலுவான குழுவாக அவர்கள் தங்களை ஒருங்கிணைப்பு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களது எதிர் சித்தாந்தங்களாக இருந்த சமண பௌத்த, ஆசிவக மதங்களின் அடித்தளங்களை அதன் சுவடே தெரியாத அளவு அடியோடு அழித்து ஒழித்தனர்.. அரசையும் சமூகத்தையும் தங்கள் விருப்பம்போல் மாற்றும் திறன் கொண்டவர்களாகவும் ஆகியிருந்தார்கள். தொடர்ந்து வைதீக பார்ப்பனியத்தைக் கட்டமைக்கும் பணிக்குத் தேவையான நூல்களைப் படைப்பதையும், பண்டைய நூல்களை இடைச்செருகல்கள் மூலமோ திருத்தங்கள் மூலமோ தங்கள் கருத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதையும், இன்னபிற பணிகளையும் செய்து வந்தார்கள். சத்திரியர்கள் எனப்படும் ஆளும் வர்க்கம் உட்பட அனைத்துச் சமூகங்களும் பார்ப்பனர்களை சமூகத்தின் உயர்வகுப்பாக ஏற்று அங்கீகரிக்குமாறு செய்திருந்தார்கள்.

புசியமித்திரனின் ஆட்சியும் அவனது மத நோக்கமும்:

அசோகர் பௌத்த மதத்துக்கு ஆதரவாக இருந்தார். பார்ப்பன சமயத்தின் உயிர் அம்சமாக இருந்த உயிர்ப்பலியைத் தடை செய்தார். இதனால் பார்ப்பனர்கள் தங்களின் தொழிலை இழந்தார்கள். யாகங்கள் நடத்துவதும் அதற்குத் தட்சிணை பெறுவதும் அவர்களது தொழிலாக இருந்தது. அந்தத் தட்சிணைதான் அவர்கள் வாழ்க்கையின் ஆதாரமாக இருந்தது. அதை இழந்து போனதால் பார்ப்பனர்கள் மௌரிய ஆட்சிக்காலத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களாகவே வாழ்க்கை நடத்தினார்கள். பார்ப்பனர்கள் தங்களின் துயரங்களில் இருந்து விடுபடுவதற்கு மௌரிய ஆட்சியை நீக்குவதுதான் ஒரே வழி எனக் கருதினார்கள். புசியமித்திரன் சுங்க கோத்திரத்தைச் சேர்ந்தவன். சுங்கர்கள் சாமவேதி பார்ப்பனர்கள். அவர்கள் மிருகங்களைப் பலியிடும் யாகங்களிலும், சோம யாகத்திலும் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் அசோகனின் உயிர்ப்பலியைத் தடை செய்த சட்டம் குறித்து குமுறிக் கொண்டிருந்தார்கள்(6). ஆதலால் மௌரிய அரசை நீக்கிவிட்டு பார்ப்பனிய மதத்தை கொண்டுவர வேண்டும் என்பதும், அரசியல் அதிகாரத்தின் ஆதரவோடு புத்த மதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் எனவும் புசியமித்திரன் விரும்பினான். மௌரிய வம்சத்தின் இறுதி மன்னனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றி தனது விருப்பத்தை அவன் நிறை வேற்றினான். அவன் சாமவேதி பார்ப்பனனாக இருந்ததும், ஆட்சியேற்றவுடன் அசுவமேத வேள்வி நடத்தியதும், ஆட்சிக்கு வந்தபின் பௌத்தர்களையும், புத்தமதத்தையும் ஒழித்துக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்ததும் அவனது நோக்கம் அரசியல் நோக்கமாக மட்டுமில்லாமல் வைதீக பார்ப்பனியத்தை வலுவோடு நிலைநிறுத்திப் பாதுகாப்பது என்கிற மத நோக்கமும் அவனிடம் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.

புத்த சமயத்துக்கு எதிராக அவன் எடுத்த இரு நடவடிக்கைகள் குறித்து அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஒன்று பௌத்த பிக்குகளுக்கு எதிராக அவன் வெளியிட்ட அறிவிப்பு. அந்த அறிவிப்பில் ஒவ்வொரு பௌத்த பிக்குகளின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலையாக வைத்தான் எனக் கூறுகிறார்(7). அடுத்து டாக்டர் அரிப்பிரசாத் சாத்திரி, ‘வைதீக வெறியும், பிறமதவெறுப்பும் கொண்ட சுங்கப் பேரரசர்களின் ஆட்சியில் பௌத்தர்களின் நிலைமை எப்படி இருந்தது எனக் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. பல பௌத்தர்கள் இப்போதும் கூட புசியமித்திரன் பெயரை மிகவும் வெறுப்போடு சாபமிடும் முறையில்தான் உச்சரிக்கிறார்கள் என்று சீன ஆதாரங்களில் இருந்து தெரிகிறது’ எனக் கூறியுள்ளதாக அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்(8).

புசியமித்திரனின் ஆட்சி பௌத்தர்களுக்கு விரோதமானது என்பதை அவன் போன்ற பார்ப்பன அரசர்களால் ஆதரிக்கப்பட்ட மனுசுமிருதியில் உள்ள சில சட்ட விதிகள் உறுதி செய்கின்றன எனக் கூறுகிறார் அம்பேத்கர்(9).

9: 225. ‘-மதநெறிகளுக்கு மாறான வழியைப் பின்பற்றும் மனிதர்கள்- மன்னன் அவர்களைத் தன்நாட்டிலிருந்து வெளியேற்றவேண்டும்.

9: 226. ‘மாறுவேடத்தில் உள்ள இந்தக் கொள்ளைக்காரர்கள், மன்னனின் நாட்டில் வாழ்ந்துகொண்டு, தங்களுடைய தவறான செயல்கள்மூலம் நல்ல குடிமகனுக்கு தீங்கு இழைக்கிறார்கள்’

இவைபோக 5: 89, 5: 90 ஆகிய விதிகள் சடங்குகளைச் செய்யாதவர்களுக்கும், மதத்துக்கு மாறுபட்ட பிரிவுகளில் உள்ள துறவிகளுக்கும், அதில் சேர்ந்த பெண்களுக்கும் நீர்க்கடன் இயற்றக்கூடாது எனவும், விதி 4:30, மதத்துக்கு மாறுபட்டவர்களை, அதை எதிர்த்துத் தர்க்கம் செய்பவர்களை குடும்பத் தலைவன் முகமன் கூறி கவுரவிக்கக் கூடாது எனவும் கூறுகிறது.

மதத்துக்கு மாறுபட்டவர்கள் என்பது புத்த சமயத்தவர்களைத்தான் குறிக்கிறது என மனு சுமிருதியின் ஒரு உரையாசிரியரான குல்லுசுபட்டர் கூறுகிறார்(10). மனு சுமிருதியில் பார்ப்பனர்களுக்குத் தரப்பட்ட தனி உயர் இடம் என்பது புசுயமித்திரனின் ஆட்சி, பார்ப்பனிய மதத்தை நிலைநிறுத்திப் பாதுகாக்கும் மதநோக்கம் கொண்டது என்பதை உறுதி செய்கிறது.

புசுயமித்திரனும் மனு சுமிருதியும்:

மனு சுமிருதி என்ற வைதீக பார்ப்பனிய நூல் கி.பி. 100 வாக்கில் எழுதப்பட்டதாக வெண்டி டோனிகர் கூறுகிறார்(11). ஆனால் மனு சுமிருதி கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(12). மனு சுமிருதியை எழுதிய சுமதி பார்கவா என்பவன், தனது விதிகளுக்குப் பெருமை சேர்க்கவும் மதிப்பை ஏற்படுத்தவும் பண்டைய காலத்தில் புகழ்பெற்ற அரசனாக (இனக்குழுத்தலைவனாக, இராணுவத் தளபதியாக, புரோகிதனாக) இருந்த மனுவின் பெயரை திட்டமிட்டு தனது நூலுக்கு வைத்துள்ளான் எனவும் இதன் காலம் புசுயமித்திரனின் காலமான கி.மு. 2ஆம் நூற்றாண்டு எனவும் அம்பேத்கர் கூறுகிறார்(13). புசுயமித்திரன் காலம் முதலே மனுசுமிருதி கூறும் சட்டவிதிகளை பார்ப்பனர் பலர் உருவாக்கி நடைமுறைப்படுத்தி வந்தனர் எனவும் அவற்றை கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இறுதியாகத் தொகுத்துத் தந்தவன்தான் சுமதி பார்கவா என்பவன் எனவும் கூறலாம். புசியமித்திரன் போன்ற பார்ப்பன (சுங்க, கன்வ) வம்ச அரசர்களின் ஆதரவோடுதான் மனு சுமிருதியின் விதிகள் உருவாக்கப்பட்டு வந்து, பின்னர் இறுதி செய்யப்பட்டுள்ளது எனலாம்.

புசியமித்திரன் கடைசி மௌரிய மன்னனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய செயலை மக்கள் எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. இது குறித்து பொதுமக்களின் மனதில் ஏற்பட்ட கோபத்தை கவிஞர் ‘பாணர்’ தனது ‘அர்ச சரித்திரம்’ என்ற நூலில் கூறியுள்ளார். அவர் புசியமித்திரனை இழிபிறப்பாளன் என எள்ளியுரைப்பதுடன் அவன் மன்னனைக் கொன்ற செயல் அநாகரிகமானது, அதாவது ஆரிய மரபுகளுக்கு முரணானது எனக் கூறுகிறார்(14). அன்றைய ஆரிய மரபு, சத்திரியர்கள் மட்டுமே மன்னன் ஆக உரிமை பெற்றவர்கள்; பிராமணன் ஒருபோதும் மன்னன் ஆகமுடியாது; பிராமணன் ஆயுதம் ஏந்தும் தொழிலைச் செய்யக்கூடாது; மன்னனின் அதிகாரத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்வது பாவகாரியம் எனக் கூறுகிறது(15). ஆனால் புசியமித்திரன் பார்ப்பனனாக இருந்தபோதும் மன்னருக்கெதிராக கிளர்ச்சி செய்தான்; ஆயுதம் ஏந்தினான்; மன்னன் ஆனான்; பண்டைய மரபை அப்பட்டமாக மீறி அவன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். ஆதலால் மக்கள் அவனது செயலை ஏற்கவில்லை. ஆகவே புசியமித்திரனின் செயல் சட்டத்துக்கு உட்பட்டதுதான் என்பதை நிலைநாட்டுவதற்கான தேவை இருந்தது. அதனை மனு சுமிருதியின் சட்ட விதிகள் நிறைவேற்றின(16).

12:100. ‘அரசின் படைத்தலைவராக இருப்பதற்கும், அரசாங்கத்திற்கே தலைவராக இருப்பதற்கும், அனைவர் மீதும் பேராதிக்கம் செலுத்துவதற்கும் பிராமணருக்குத் தகுதி உண்டு’. மனு சுமிருதியின் இந்தச் சட்டம் பண்டைய ஆரிய மரபுக்கு மாறான வகையில், சேனாதிபதியாகும் உரிமையை, மன்னராக பேரரசராக ஆகும் உரிமையை பார்ப்பனனுக்கு வழங்குகிறது.

11:31. ‘சட்டங்களை நன்றாக அறிந்த பிராமணன் தனக்குக் கொடிய தீங்கு எதுவும் செய்யப்பட்டால் அதைப்பற்றி அவன் மன்னனிடம் புகார் செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் அவன் தனக்குத் தீங்கிழைப்பவர்களைத் தனது சொந்த அதிகாரத்தைக் கொண்டே தண்டிக்கலாம்’.

11:32. ‘அவனுடைய (பிராமணனுடைய) சொந்த அதிகாரம் அவனையே சார்ந்தது; அது மன்னனின் அதிகாரத்தை விடப் பெரியது; ஏனென்றால் மன்னனின் அதிகாரம் மற்ற மனிதர்களைச் சார்ந்திருக்கிறது. எனவே ஒரு பிராமணன் தன்னுடைய சொந்த பலத்தினாலேயே தனது எதிரிகளைப் பணியச் செய்ய முடியும்’.

11: 261-62. ‘ஒரு பிராமணன் மூன்று உலகங்களின் மக்களையும் கொன்றிருந்தால் கூட இரிக், யசூர், சாம வேதங்களை உபநிடதங்களுடன் சேர்த்து மூன்று முறை ஓதினால் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவன் முற்றிலுமாக விடுதலை பெறுகிறான்’.

இங்கே பண்டைய மரபில் இரண்டாவது மிகப்பெரும் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இங்கு பார்ப்பனன் மன்னனைக் கொல்வதற்கு மட்டுமின்றி, தன்னுடைய அதிகாரத்துக்கும் பதவிக்கும் பிற மனிதர்கள் தீங்கு செய்ய முயன்றால் அவர்களை மொத்தமாகப் படுகொலை செய்வதற்கும் இச்சட்டம் அதிகாரமளிக்கிறது.

8: 348. ‘ஒவ்வொருவருக்கும் தர்மத்தின்படி குறிப்பிடப்பட்டுள்ள தொழில்களைச் செய்வதற்கு வன்முறை மூலம் தடை ஏற்பட்டால் இருபிறப்பாளன் ஆயுதம் ஏந்தலாம்; ஏதேனும் கெட்டகாலம் ஏற்பட்டு இரு பிறப்பாளர் வகுப்புக்கு பேரிடர் நேரும்போதும் ஆயுதம் ஏந்தலாம்.

9: 320. ‘ஒரு சத்திரியன் (படையாளன் அல்லது மன்னன்) எப்போதும் பிராமணர்களுக்கு எதிராகத் தனது இரும்புக் கரத்தைப் பிரயோகித்துக் கொண்டிருந்தால், பிராமணனே அவனைத் தண்டிக்கலாம்; ஏனென்றால் படைவீரன் முதலில் பிராமணனிடமிருந்துதான் தோன்றினான்’

இது பண்டைய மரபில் செய்யப்பட்ட மூன்றாவது நுட்பமான மாற்றமாகும். மன்னனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்வதற்கும் மன்னனைக் கொல்வதற்கும் மூன்று மேல் வகுப்புகளுக்கும் அது உரிமையை அளிக்கிறது. வெவ்வேறு வருணங்களுக்கும் மனுவினால் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்களை மாற்றுகின்ற குற்றத்தை மன்னன் செய்தால் மட்டுமே இந்த உரிமையைப் பயன்படுத்தலாம். மேலும் பார்ப்பனர்களுக்கு மன்னனால் தீங்கு ஏற்பட்டால், பார்ப்பனன் மட்டும் தனியாகவும் இந்த உரிமையைப் பயன்படுத்தலாம்.

மனு சுமிருதியின் இந்த சட்டவிதிகள் பார்ப்பனன் சட்டவிதிப்படி மன்னன் ஆகவும், ஆயுதம் ஏந்தவும், நால்வருண சாதிமுறைக்கு எதிராகவுள்ள மன்னனைக் கொல்லவும், தனது அதிகாரத்துக்கு எதிராகவுள்ள எவரையும் படுகொலை செய்யவும் பார்ப்பனனுக்கு உரிமையளித்தது.

பார்ப்பனர்களின் வரம்பு மீறிய உரிமை:

மனு சுமிருதி கீழ்கண்டவற்றில் பார்ப்பனர்களுக்கு வரம்பு மீறிய உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்கியுள்ளது(17).

1: 93. ‘பிராமணன் (பிரம்மாவின்) வாயிலிருந்து தோன்றியதால், அவன் முதலில் பிறந்தவன் ஆவதாலும், வேதம் அவன் வசம் இருப்பதாலும் இந்தப்படைப்பு முழுவதற்கும் அவன் உரிமைப்படி அதிபதியாக இருக்கிறான்’.

1: 96. ‘படைக்கப்பட்டவற்றுள் உயிர் உள்ளவை சிறந்தவை என்று கூறப்படுகிறது; உயிருள்ளவற்றுள் அறிவுத்திறத்தால் வாழ்வபவை சிறந்தவை; அறிவுள்ள உயிர்களுள் மனிதன் சிறந்தவன்; மனிதர்களுக்குள் பிராமணர்கள் சிறந்தவர்கள்.’

1: 100. ‘உலகில் உள்ள அனைத்துமே பிராமணர்களின் உடமை; பிராமணனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக, உண்மையில் அவனே எல்லாவற்றுக்கும் உரியவனாகிறான்’.

1; 101. ‘பிராமணன் தனது சொந்த உணவையே உண்கிறான்; தனது சொந்த உடையையே அணிகிறான்; தனக்குச் சொந்தமானவற்றையே கொடுக்கிறான்; மற்ற மனிதர்கள் பிராமணனின் கருணை மூலமே உயிர் வாழ்கிறார்கள்’.

10: 3. ‘பிராமணன் ஒப்புயர்வற்றவனாக இருக்கும் காரணத்தாலும், அவனது உயர்ந்த பிறப்பின் காரணத்தாலும், (குறிப்பிட்ட) வரையறைக்குட்பட்ட விதிகளைப் பின்பற்றும் காரணத்தாலும், அவன் குறிப்பிட்ட புனிதத்தன்மை பெற்றிருக்கும் காரணத்தாலும், (எல்லா) சாதிகளுக்கும் தலைவனாக இருக்கிறான்’.

11: 31 & 11: 32. இந்த இரண்டு விதிகளும் முன்பே சொல்லப்பட்டுள்ளது.

11: 35. ‘பிராமணன் உலகைப் படைத்தவனாகவும், தண்டிப்பவனாகவும், ஆசிரியனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளான்; எனவே அவன் படைக்கப்பட்டவை அனைத்துக்கும் புரவலனாக விளங்குகிறான்; அவனிடம் எந்த மனிதனும் அமங்கலமான எதையும் சொல்லவோ, கடுமையான சொற்களைப் பயன்படுத்தவோ கூடாது’.

9: 313. மன்னன் மிகக் கடுமையான துன்பத்துக்கு உள்ளான போதிலும் பிராமணர்களுக்குச் சினம் உண்டாக்கக் கூடாது; ஏனென்றால் அவர்களுக்குச் சினம் ஏற்பட்டால், கணப்பொழுதில் மன்னனையும் அவனுடைய படையையும் வாகனங்களையும் அழித்துவிட முடியும்.

வரம்பு மீறிய இந்த விதிகள் குறித்து அம்பேத்கர், “மன்னனே ஒரு பிராமணனாகவும், மனுவின் கருத்துகளுக்கு உடன்பாடு உள்ளவனாகவும் இருந்தாலன்றி, இவ்வாறு பிராமணர்களை தெய்வமாக்குவதும், அரசனுக்கு மேலான இடத்தில் அவர்களை வைப்பதும் சாத்தியமாகி இருக்காது. புசுயமித்திரனும், அவனுக்குப் பின்வந்த மன்னர்களும் தாங்களே பார்ப்பனர்களாகவும் பார்ப்பனியத்தை நிலை நிறுத்துவதில் அக்கறை உள்ளவர்களாகவும் இருந்தாலன்றி, பார்ப்பனர்கள் இவ்வளவு தூரம் மிகையான உரிமைகள் கோருவதை சகித்துக் கொண்டிருந்திருக்க முடியாது. உண்மையில் புசுயமித்திரனின் கட்டளையின் பேரிலேயே மனு சுமிருதி இயற்றப்பட்டிருப்பதும், அது பார்ப்பனியத் தத்துவத்தின் புத்தகமாக அமைந்திருப்பதும் சாத்தியமே” எனக் கூறுகிறார்(18).

இந்த சட்டவிதிகள் பார்ப்பனன் அரசனுக்கும் மேலானவன் என்பதையும், அவனது ஆதரவு இன்றி ஒருவன் அரசன் ஆவதும், அரசாள்வதும் இயலாது என்பதையும் உறுதி செய்தன. வைதீக பார்ப்பனியத்தின் சாதிய நால்வருணத்தைப் பாதுகாப்பது அரசனின் கடமை எனவும் தவறினால் மக்களால் அவன் நீக்கப்படுவான் எனவும் இவ்விதிகள் கூறின.

பார்ப்பனனும் உபநயனமும் (பூணூல் அணிதல்):

குருகுலம் என்பது குருவினால் நடத்தப்பட்ட பள்ளிக்கூடம். எல்லாக் குழந்தைகளும் கல்வி கற்பதற்கு பள்ளிக்கூடம் சென்றார்கள். கல்விக்காலம் 12 ஆண்டுகள் நீடித்தது. குருகுலத்தில் கல்வி கற்கும் சிறுவன் பிரம்மச்சாரி என அழைக்கப்பட்டான். கல்விக்காலம் முடிந்தபின் உபநயனச்சடங்கு குருகுலத்தில் ஆசாரியர் அவர்களால் நடத்தப்பட்டது. இந்தச் சடங்கில் ஆசாரியர் மாணாக்கர்களின் வருணங்களைத் தீர்மானித்து அவனை வெளி உலகுக்கு அனுப்பி வைத்தார். ஒருவருடைய வருணம் அவர் பெற்ற பயிற்சியின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இம்முறையில் ஆசாரியர் ஒரு பார்ப்பனின் குழந்தையைச் சூத்திரனாக இருப்பதற்குத்தான் தகுதியுடையவன் என்று அறிவிக்கும் நிலை இருந்தது. இப்படி பயிற்சி பெற்று உரிய தகுதியுடையவர்கள்தான் உபநயனச்சடங்கு மூலம் முன்பு பார்ப்பனனாக ஆனார்கள் எனக் கூறுகிறார் அம்பேத்கர்(19). அசோகர் காலத்தில் இதுபோன்று பயிற்சி பெற்றவர்களே பார்ப்பனர்களாக இருந்தார்கள் என்பதால்தான் பார்ப்பனர்களை மதிக்க வேண்டும் என அசோகனின் கல்வெட்டு கூறுகிறது எனலாம். ஆதலால் பழைய முறையில் அறியாமையுள்ள பார்ப்பனன் என்று ஒருவன் இருக்கமுடியாது.

ஆனால் வருணம் சாதியாகும் பொழுது அதாவது ஒருவன் பிறப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு பார்ப்பனன் ஆகும்பொழுது தான் அறியாமையுள்ள பார்ப்பனன் இருக்க வாய்ப்பு ஏற்படுகிறது. வருணத்தைச் சாதியாக மாற்றிய மனுவின் சட்டத்தில் உபநயனம் என்ற முறையின் பொருளும் நோக்கமும் முற்றிலுமாக மாற்றப்பட்டன. பழைய முறையில் முதலில் பயிற்சியும் பின் உபநயனமும் நடந்தன. ஆனால் மனுவின் சட்டப்படி முதலில் உபநயனமும் அதன்பின் பயிற்சியும் நடைபெற்றது. குழந்தையின் வருணம் தந்தையால், அல்லது பிறப்பால் தீர்மானிக்கப்பட்டது. அதன்பின்தான் பயிற்சி வழங்கப்பட்டது எனக் கூறுகிறார் அம்பேத்கர்(20). வருணத்தைச் சாதியாக ஆக்குவதன் மூலம் மிகமிக அறியாமை கொண்ட பார்ப்பனன்கூட மிக உயர்ந்த கல்வியறிவு கொண்ட பார்ப்பனின் தகுதிக்கு உயர்த்தப்பட வேண்டும் என மனு விரும்பினார். பார்ப்பன வகுப்பு முழுவதையுமே உயர்ந்தோர் ஆக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.

9: 317. ‘பிராமணன் கற்றறிந்தவனாக இருந்தாலும் அறிவிலியாக இருந்தாலும் சக்திமிக்க தெய்வமாவான்; நெருப்பானது வேள்வியில் வளர்க்கப்பட்டாலும் வீட்டில் வளர்க்கப்பட்டாலும் சக்தி வாய்ந்த தெய்வமாக இருப்பது போல’.

9: 319. ‘இவ்வாறாக பிராமணர்கள் எல்லாவிதமான இழிந்த தொழில்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எப்போதும் மரியாதை அளிக்க வேண்டும். ஏன் என்றால் அவர்களிடம் எல்லாவற்றையும்கடந்த தெய்வத் தன்மை இருக்கிறது’.

வருணம் சாதியாக மாறியதால் ஒருவனது தகுதியை மதிக்காமல் அவன் பிறந்த சாதியைமட்டும் மதிக்கின்ற மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. உயர்ந்த சாதியில் பிறந்திருந்தால் அவனுக்கு எந்தவித தகுதியோ, சிறப்போ இல்லாவிட்டாலும் அவனுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது. கீழ்ச்சாதியில் பிறந்த ஒருவன் அதிகத் தகுதியும் சிறப்பும் பெற்றிருந்தாலும் கூட உயர்ந்த சாதியில் பிறந்தவனைவிட கீழானவனாகவே மதிக்கப்படுகிறான். அதைத்தான் மனுவின் சட்டவிதிகள் வெளிப்படையாகவே கூறுகின்றன. உயர்சாதியான பிராமணர்களிடம் தெய்வத்தன்மை இருப்பதாக அவர் கூறுகிறார். சாதி அமைப்பை படிநிலையாக ஆக்கியதன் மூலம், பார்ப்பனர்கள் சாதி அமைப்பை சமூகம் முழுமையும் ஒன்றிணைந்து பாதுகாக்குமாறு செய்துவிட்டார்கள்.

சாதி நீக்கமும் கடவுள் நம்பிக்கையும்:

சாதியிலிருந்து நீக்கப்படுபவனுக்கு மனு விதிக்கும் தண்டனைகள் மிகக் கடுமையானவை எனக் கூறுகிறார் அம்பேத்கர். சாதியிலிருந்து நீக்கும் விளைவு அவனைச் சமூகத் தொடர்புகளிலிருந்து விலக்கி வைக்கிறது; சமூக நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் தள்ளி வைக்கிறது; எல்லாப் பதவிகளுக்கும் அவனை தகுதியிழக்கச் செய்கிறது; சொத்து எதற்கும் வாரிசாக முடியாமல் தடுத்து வைக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலைகளில் அவன் இறந்து போகலாம். உண்மையில் அவன் இறந்து போனதாகக்கருதி அதற்கான சடங்கை அவனுக்குச் செய்யுமாறு மனு கட்டளையிடுகிறார். நீக்கப்பட்டவனோடு தொடர்பு கொள்கிறவர்களுக்கும் அதே தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆண், பெண் இருபாலருக்கும் இந்தத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அவன் நீக்கப்பட்ட பின் பிறந்த வாரிசுகளுக்கும் இந்தத் தண்டனை பொருந்தும். இவை மனிதத் தன்மை அற்றவை எனக் கூறுகிறார் அம்பேத்கர்(21). (212,213).

மதத்தைக் கைவிடுவதற்கு எதிரான கிறித்துவ, முகம்மதிய சட்டங்கள், மத நம்பிக்கை இன்மைக்கும், தவறான மதக் கொள்கைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் பார்ப்பனிய சட்டம் மதநம்பிக்கைக்கோ, மத நம்பிக்கை இன்மைக்கோ தொடர்பு இல்லாதது. இது சாதியின் புனிதத்தோடு தொடர்புடையது. தள்ளி வைக்கப்பட்டவன் பற்றிய பார்ப்பனிய சட்டங்களைப் பார்க்கும்பொழுது கடவுள் நம்பிக்கையோ, இறப்புக்குப்பின் வாழ்க்கை உண்டு என்பதோ பார்ப்பனியத்துக்கு முக்கியமல்ல. அதற்கு வேதங்களின் புனிதமும், சாதியின் புனிதமும் தான் முக்கியம். முக்கியமாக சாதியை மீறுவதைத்தான் பார்ப்பனியம் தண்டிக்கிறது. பிற அனைத்தையும் மீறுவதை அது அனுமதிக்கிறது(22). (214). அதாவது கடவுள் நம்பிக்கையை விட சாதியைப் பாதுகாப்பதைத்தான் பார்ப்பனியம் மிக முக்கியமாகக் கருதுகிறது. ஆகவே பிராமணர்களின் கடவுள் நம்பிக்கை என்பது நால் வருண சாதிமுறையை கொண்டு வருவதற்கான, அதைச் செயல்படுத்துவதற்கான ஒரு கருவி அவ்வளவுதான். ஆதலால்தான் கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்போர்க்கு மனு தண்டனை தரவில்லை. ஆனால் சாதியை மீறுபவர் மீது கடுமையான தண்டனைகளை வழங்கியுள்ளார். ஆகவே பார்ப்பனியத்தின் கடவுள் நம்பிக்கை என்பது போலியானது, ஏமாற்றுத்தனமானது.

மனுசுமிருதியும் சூத்திரர்களும்:

சூத்திரன் குறித்த மனுவின் சட்டங்கள் மனிதத் தன்மையற்ற கொடுமையான சட்டங்களாக இருப்பதைக் காண முடிகிறது.

சூத்திரன் மன்னன் ஆக இருப்பதற்கு தகுதியற்றவன்; மதக்காரியங்களுக்கு சூத்திரனிடமிருந்து பிராமணன் எதையும் கேட்கக் கூடாது; சூத்திரர்களுடன் மூன்று மேல் வகுப்பு பெண்களும் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது. அந்தப்பெண்களுடன் சூத்திரன் தவறாக உடலுறவு கொண்டால் அது மரண தண்டனைக்குரிய குற்றமாகும். சூத்திரன் பணிந்து சேவை செய்பவனாகவும், பதவி வகிக்கத் தகுதியற்றவனாகவும், கல்வியோ, சொத்தோ இல்லாதவனாகவும் இருக்க வேண்டும். அவனும் அவனது சொத்தும் எப்பொழுதும் எடுத்துக்கொள்ளக் கூடியவை. சூத்திரன் வேதத்தைக் கற்கக் கூடாது என்பதோடு, அதற்கு உதவுபவர்களுக்கும் மனு தண்டனை விதித்தார். மனுவுக்குப்பின் வந்த காத்யாயனர் சூத்திரன் வேதம் ஓதினால் அவனுடைய நாக்கை இரண்டாக வெட்ட வேண்டும், அவனுடைய காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றார்.

சூத்திரனிடம் திறமையிருந்தாலும் அவன் சொத்து சேர்க்கக் கூடாது. அவனது சொத்தை பிராமணன் கட்டாயமாக பறிமுதல் செய்யலாம். அவனது உழைப்பையும் கட்டாயமாகப் பெறலாம். அவனைக் குற்றேவல் செய்யும்படி கட்டாயப்படுத்தலாம். பிராமணனுக்கு அடிமையாக இருப்பதற்காகவே சூத்திரன் படைக்கப் பட்டுள்ளான். பிராமணனை அவமதிக்கும் சூத்திரனின் வாயில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் துணிக்க வேண்டும். சூத்திரனின் பெயர் இழிவானதைக் குறிப்பதாக இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு சேவை செய்வதுதான் சூத்திரனின் சிறந்த தொழில். அதன் மூலம் மட்டுமே அவன் தனது நோக்கங்கள் அனைத்தையும் அடையமுடியும். இந்தச் சட்டங்களுக்கு எல்லாம் அடிப்படை என்பது சூத்திரன் குறித்த மனுவின் கோட்பாடாகும்.1: 91. கடவுள் சூத்திரனுக்கு ஒரே ஒரு தொழில்தான் விதிக்கிறார். அது மற்ற மூன்று சாதிக்கும் பணிவாகச் சேவை செய்வதேயாகும்(23). (223-227). அதாவது கடவுளின் பெயரால் பணிந்து சேவை செய்யும் அடிமையாக வாழ வேண்டியதுதான் சூத்திரனின் கடமை என மனு கூறுகிறார்.

மனுசுமிருதியும் பெண்களும்:

சூத்திரர்களைப் போன்றே பெண்களையும் மனு மிகவும் தாழ்வாகவே கருதினார். அவர்கள் குறித்த சட்டங்களும் கொடுமையானதுதான்.

ஆண்களைச் சபலம் கொள்ளச் செய்வதே பெண்களின் இயல்பு. அவர்கள் கற்றவனைக்கூட தவறான வழியில் அழைத்துச் சென்று ஆசைக்கும் கோபத்துக்கும் அடிமையாக்கி விடுவார்கள். அவர்கள் தங்கள் கணவர்களுக்கு விசுவாசம் இல்லாதவர்கள். கடவுள் அவர்களைப் படைக்கும் பொழுது தங்கள் படுக்கையின் மீதும், தங்கள் தகுதியின் மீதும், அணிகலன்கள் மீதும் அளவிலா வேட்கையும் தூய்மையற்ற ஆசை, கோபம், வஞ்சம், காழ்ப்புணர்வு, தீய நடத்தை முதலியனவற்றையும் அவர்களுக்குக் கொடுத்தார். பெண்கள் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்கக் கூடாது. அவர்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், பின் அவனது கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகனின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். சொந்த வீட்டில் கூட அவள் சுயேட்சையாக இருக்கக் கூடாது. பெண்ணுக்கு விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இல்லை.

திருமணம் ஆனபிறகு பெண்ணுக்கு பிரிவு ஏற்பட முடியாது. அவள் கணவனோடு ஒன்றானவள் என்கிறார் மனு. இதன் நோக்கம் ஆணுக்குச் சுதந்திரம் வழங்குவதுதான். விதி 9:46இன்படி, கணவன் மனைவியைக் கைவிடுவதையோ, அவன் மனைவியை விற்று விடுவதையோகூட மனு அனுமதிக்கிறார். ஆனால் அப்பொழுதும் மனைவி சுதந்திரம் அடைய முடியாது எனக் கூறுகிறார். விலைக்கு வாங்கியவனின் சட்டப்படியான மனைவியாக அவள் ஆகமுடியாது. ஒரு மனைவி, மகன், அடிமை ஆகியவருக்குச் சொத்து கிடையாது. அவர்கள் சேர்க்கும் சொத்தும் அவர்களுக்குக் கிடையாது. பெண் விதவையாகும் பொழுது சொத்தில் உரிமை உண்டு. ஆனால் அதில் அதிகாரம் செய்ய அவளுக்கு உரிமை இல்லை.

மனைவியை அடிப்பதற்குக் கணவனுக்கு உரிமை உண்டு. பெண் வேதம் படிக்கக் கூடாது. வேள்விகள் செய்யக் கூடாது. பெண்ணுக்கு அறிவு சார்ந்த ஈடுபாடுகளோ, சுதந்திரமான விருப்பமோ, சிந்தனைச் சுதந்திரமோ இருக்கக் கூடாது. அவள் ஆயுள் உள்ளவரை, முதலில் தந்தைக்கும், பின் கணவனுக்கும், இறுதியில் மகனுக்கும் கீழ்படிந்து நடக்க வேண்டும். கணவன் நற்பண்பு இல்லாதவனாக இருந்தாலும், வேறு இடத்தில் இன்பம் தேடுபவனாக இருந்தாலும் விசுவாசம் உள்ள மனைவி அவனை எப்பொழுதும் கடவுளாக வணங்க வேண்டும். அவளது கணவன்தான் எந்தக் காலத்திலும் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் மகிழ்ச்சிக்கு ஊற்றாக இருக்கிறான். அவள் எப்பொழுதும் இன்முகம் கொண்டவளாகவும், வீட்டைக் கவனிப்பதில் கெட்டிக்காரியாகவும், செலவில் சிக்கனமானவளாகவும் இருக்க வேண்டும். இவள்தான் இலட்சிய இந்து மனைவி என மனு கூறுகிறார்(24). (227-232).

உயர்ந்த வருணப்பெண் தாழ்ந்த வருணத்தைச்சேர்ந்த ஆணை மணப்பதைத் பிரதிலோமத் திருமணம் என்பர். அதனை பார்ப்பனியம் தடை செய்தது. அதே சமயம் உயர்ந்த வருண ஆண் தாழ்ந்த வருணத்தைச்சேர்ந்த பெண்ணை மணப்பதை அனுலோமத் திருமணம் என்பர். அதனை பார்ப்பனியம் அனுமதித்தது. ஆனால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையின் வருணம் தந்தையின் வருணத்தை வைத்து முடிவு செய்து வந்ததைப் பார்ப்பனியம் மாற்றி அமைத்து, அதனைத் தாயின் வழியில் முடிவு செய்ய விதி செய்தது. அதனால் குழந்தை கீழ் சாதியாக ஆனது. அதனால் அந்தக் குழந்தை குறித்த பொறுப்புகளில் இருந்து ஆண்கள் விடுவிக்கப்பட்டார்கள். அதனால் அனுலோமத் திருமணம் என்பது வெறும் பாலுறவு விடயமாகவும், கீழ் வருணப் பெண்களுக்கு ஒரு அவமதிப்பாகவும், மேல் வருண ஆண்கள் கீழ் வருணப் பெண்களுடன் சட்டப்படியாக விபச்சாரம் செய்வதற்கு அளிக்கப்படும் உரிமையாகவும் மாறிவிட்டது எனக் கூறுகிறார் அம்பேத்கர்(25). (218-220).

மொத்த மக்கள் தொகையில் பெண்கள் பாதிப்பேரும், சூத்திரர்கள் மூன்றில் இரு பங்கும் இருப்பர். ஆகவே சமூகத்தின் 75 விழுக்காடு மக்களை பார்ப்பனியம் நிரந்தர அடிமைத்தனத்துக்கும், நிரந்தர தாழ்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது எனவும் படிப்படியான முறையில் அமைந்த சமத்துவமின்மையை நிலைநாட்டும் கொள்கை மனுசுமிருதி முழுவதிலும் ஊடுருவி நிற்கிறது எனவும், இந்தியா ஒரு தேசம் எனக் கூறுவது ஒரு மாயைக் கருத்தேயாகும் எனவும் அம்பேத்கர் கூறுகிறார்(26).

பெண் பருவமடைவதற்கு முன் அவளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். இது மனுவின் புதிய விதி. முன்பு பெண் பருவமடைந்தது மட்டுமின்றி வளர்ச்சியடைந்தவள் என்று கூறத்தக்க வயது வந்த பின் தான் திருமணம் செய்யப்பட்டது. ஒரு பெண் கணவனை இழந்துவிட்டால் அவள் மறுமணம் செய்யக்கூடாது என்ற தடை முன்பு இல்லை. விதவைத் திருமணம் என்பது முன்பு இருந்து வந்தது. ஆனால் மனு விதவைத் திருமணத்திற்குத் தடை விதித்தார். அடுத்ததாக கணவன் இறந்தபின் உடன் கட்டை ஏறும் வழக்கம் குறித்து மனு எதுவும் கூறவில்லை(27). ஆனால் பிற்காலத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் செயலுக்கு கொண்டு வரப்பட்டது. இவை மனுவும் வைதீக பார்ப்பனியமும் உருவாக்கிய புதிய விதிகள்.

உலகைப் படைத்தவன் பார்ப்பனன்:

மனுவின் விதி 11:35, பிராமணனே உலகைப் படைத்தவன் என அறிவிக்கிறது. விதி 1.88இன்படி, வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி புரிதல், வேள்வி புரிவித்தல், செல்வராயின் பிறர்க்கு ஈதல், வறியவராயின் பிறரிடமிருந்து ஏற்றல் ஆகிய ஆறும் பிராமணனின் கடமை. மூன்று வேதங்களையும், அறநூல்களையும் ஆய்ந்துணர்ந்த பிராமணரை மன்னன் நாள்தோறும் வணங்கி, அவரது அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். பிராமணன் எத்தகைய பாவத்தைச் செய்த போதிலும் மன்னன் அவனைக் கொல்லாமலும், அவனது பொருளைக் கவர்ந்து கொள்ளாமலும் அவனை ஊரை விட்டு துரத்த வேண்டும். பிராமணனைக் கொல்வது பெரும்பாவம். பிராமணன் புதையலைக் கண்டுபிடித்தால் முழுவதையும் அவனே வைத்துக் கொள்ளலாம். மன்னன் புதையலை எடுத்தால் பாதியை பிராமணனுக்குத் தர வேண்டும். பிராமணனின் சொத்தை ஒருபோதும் மன்னன் எடுத்துக் கொள்ளக்கூடாது(28).

ஆகவே மனுவின் விதிகள் பார்ப்பனனை கடவுளுக்கும் அரசனுக்கும் மேலானவனாக வைக்கிறது. கடவுள் நம்பிக்கையைவிட சாதியைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. பெண்களையும், சூத்திரர்களையும் மிக மிகக் கீழானவர்களாக ஆக்குகிறது. ஒட்டுமொத்தமாக வேதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் சாதி அமைப்பை நிலைநிறுத்தி அதனை நிரந்தரமாகப் பாதுகாப்பதே மனு சுமிருதியின் நோக்கம். கடவுள், வேதம், சமயம் என்பன எல்லாம் சாதி அமைப்பைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் போலியான சொற்களே என்பதை மனு சுமிருதியின் விதிகள் உறுதி செய்கின்றன. அதனால்தான் மனு சுமிருதி கடவுளுக்கும் மேலானவன் பிராமணன் எனக் கூறுகிறது. இதையேதான் பிராமணங்களும் கூறுகின்றன. மனு சுமிருதியின், அதாவது வைதீக பார்ப்பனியத்தின் கருத்துக்கு ஏற்றாற் போல் பிராமணங்களில் பிற்காலத்தில் இடைச்செருகல்கள் செய்யப்பட்டன என்பதை இவை உறுதி செய்கின்றன. பார்ப்பன வகுப்பு முழுவதையும் உயர்வகுப்பாகப் பாதுகாப்பது நால்வருண சாதி அமைப்பு தான் என்பதால், வருணம் எனப்படும் வகுப்பைச் சாதி அமைப்பாக மாற்றியமைத்து நிலை நிறுத்துவதும், அதனை நிரந்தரமாகப் பாதுகாப்பதும்தான் மனு சுமிருதியின் நோக்கமாக இருந்துள்ளது. அதனை அது வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

சுதந்திரச் சிந்தனைக்கு எதிரானவர் மனு:

சுதந்திரமான தருக்கமுறைக்கு மனு எதிராக இருந்தார் என்பதைச் சொல்ல வந்த மிருணாள் காந்தி, ‘சுந்திரமான தருக்கமுறைக்கு எதிராக இறுதிக்கட்ட வலுவான தாக்குதலை… தரும சூத்திரங்களை எழுதியவர்களே தொடுக்கிறார்கள். குறிப்பாக மனு அவ்வப்பொழுது தருக்கத்தின் ஈடுபாட்டுக்கு எதிராக, அல்லது வேதத்துக்கு எதிராக நடந்து கொள்ளும்படி அல்லது வேத மேலாண்மை பற்றிக்கேள்வி கேட்கும்படி தூண்டி விடக்கூடிய சுதந்திரமான தருக்கத்துக்கு எதிராக, இடைவிடாது பேசுகிறார்’ எனக் கூறுகிறார்(29). மேலும் அடிக்கடி மனு மேற்கோள்காட்டும் ஒரு வாசகம் என்பது, ‘இறை மறுப்பாளர்களிடம், சமூக ஒழுங்கமைப்பிற்குக் கேடு விளைவிப்பவர்களிடம், கபடமாக நடந்து கொள்ளும் வேடதாரிகளிடம், சுதந்திரச் சிந்தனையாளர்களிடம், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களிடம் யாரும் பேசுவதுகூட தகாதது. உண்மையில் தருக்கத்துடன் உடன்பாடு கொள்வது, குற்றம் செய்வதற்குச் சமமான ஒன்றாகும்’ எனக் கூறுகிறார் மிருணாள் காந்தி(30). ஆக சுதந்திரச் சிந்தனையாளர்களை மனு வேடதாரிகள், கபடதாரிகள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் எனச் சாடுகிறார். ஆகவே மனுவின் விதிகள் அவரது சட்டக் கருத்துகள் என்பன பொது மக்களுக்கு எதிரானவை என்பதுதான் உண்மை.

பார்வை:

1. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 171, 172.
2, 3, 4. இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 206, 207.
5. பக்: 210.
6. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 162.
7, 8. பக்: 163, 164.
9, 10. பக்: 166, 167.
11. இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு, வெண்டி டோனிகர், தமிழில் க. பூரணச்சந்திரன், எதிர் வெளியீடு, சூன் – 2016, பக்: 363, 364.
12. இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 217.
13. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 189.
14, 15. பக்: 173.
16. பக்: 174, 175.
17, 18. பக்: 167 – 169.
19, 20. பக்: 190-192.
21. பக்: 212, 213.
22. பக்: 214.
23. பக்; 223 – 227.
24. பக்: 227 – 232.
25. பக்: 218 – 220.
26. பக்; 221
27. பக்; 198 – 200.
28. பக்: 266, 288, 177, 179.
29, 30. இந்தியாவில் மெய்யியல் (Philosophy in India), மிருணாள் காந்தி, காங்கோபாத்தியாயா (Mrinal Kanti Gangopadhyaya), தமிழில் – சா. செயராசு, NCBH, டிசம்பர் – 2011, பக்: 14.

- கணியன் பாலன்

Pin It