கோஸ்ட்டரிக்காவில் 16 ஆண்டுகள் ஆண் துணையில்லாமல் வாழும் கன்னி முதலை முட்டையிட்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டை 99.9% தாயின் மரபியல் அம்சங்களுடன் கூடிய முழு வளர்ச்சி அடைந்த கருவுடன் உள்ளது. விஞ்ஞானிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை உயிரியல் கடிதங்கள் (Journal Biology letters) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
டைனசோர் முட்டை
முதலைகளின் பொதுவான மூதாதையர்களான டைனசோர்களும் ஒரு காலத்தில் இவ்வாறே ஆணின் துணையில்லாமல் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறு சுயமாக இனப்பெருக்கம் செய்வது Facultative parthenogenesis என்று அழைக்கப்படுகிறது. பறவைகள், மீன்கள், பல்லிகள், பாம்புகளின் சில இனங்களில் கன்னித் தன்மையுடன் புதிய வாரிசுகள் உருவாகியுள்ளது பற்றி முன்பே அறியப்பட்டுள்ளது. ஆனால் முதலையினத்தில் இது நிகழ்வது இதுவே முதல்முறை.ஆண் இனத்தின் விந்தணு உதவியில்லாமல் முட்டை கருவுறுவதையே இந்த நிகழ்வு குறிக்கிறது. க்ராக்கடிலஸ் அக்யூக்கஸ் (Croccodylus Acucus) என்ற இந்த முதலை இரண்டு வயதாக இருக்கும்போது பிடிக்கப்பட்டு கோஸ்ட்டரிக்கா விலங்கு காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக இது தனிமையில் வாழ்கிறது.
பதினான்கில் ஒன்று
2018 ஜனவரியில் காட்சி சாலை ஊழியர்கள் முதலை வாழும் இடத்தில் 14 முட்டைகளைக் கண்டுபிடித்தனர். இவை எவையும் பொரியவில்லை. ஆனால் ஒரு முட்டை முழு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.
கருவில் இருந்த உயிரியின் இதயத்திசுக்கள் தாயின் ஓட்டில் உள்ள செல்களுடன் ஒப்பிட்டு மரபியல் ரீதியாக ஆராயப்பட்டது. கருவில் இருந்த சிசு தாயைப் போலவே 99.9% ஒத்திருந்தது. இதன் மூலம் ஆண் துணையில்லாமலேயே இந்த கரு முட்டை உருவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வாளர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வகை சுய இனப்பெருக்கம் மிக அரிதாகவே நடக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு உயிரினம் சாதகமற்ற சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் வாழும்போது இணையில்லாத நிலை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு ஆளாகின்றன. அப்போது இந்த அரிய நிகழ்வு நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்