வடக்கு மினிசோட்டா நன்னீர் பாதுகாப்பு மற்றும் சூழல் மண்டலப் பாதுகாப்பிற்கு நீர்நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மினிசோட்டா டுலூப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் எப்போகிராபி (Epography) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மினிசோட்டாவில் நீர்நிலைகளின் வளமான வாழ்விற்கு இவை முக்கிய பங்கு வகிப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. ஐந்து வெவ்வேறு இடங்களில் 70 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் நடத்திய நீண்ட ஆய்வுகளின் முடிவில் இது கண்டறியப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு மற்ற பல ஆய்வாளர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக அமையும் என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர் மற்றும் ஆய்வு மாணவர் டாம் காபிள் கூறியுள்ளார்.மனிதர்கள் மூலம் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளில் இருந்து கரையேற நீர்நாய்களை ஒரு உயிரி அறிவியல் கருவியாக பயன்படுத்த முடியும் என்பது பற்றியும் ஆய்வுக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. மற்ற உயிரினங்களுக்கும் இவற்றின் செயல்கள் நன்மை அளிப்பதாக அமைந்துள்ளது. முக்கிய சூழல் மண்டலங்கள் எல்லாவற்றிலும் இதுபோன்று அவற்றைப் பாதுகாக்கும் உயிரினங்கள் வாழ்கின்றன.
இவை வாழும் இடங்களில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் கெடுதிகளைத் தடுத்து நிறுத்த இவற்றால் முடியும். சூழல் பாதுகாப்பாளர் என்ற நிலையில் நீர்நாய்களின் செயல்கள் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. வடக்கு மினிசோட்டாவில் இந்த உயிரினங்களின் எண்ணிக்கையில் சூழல் சீரழிவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் இவை நன்னீர் சூழல் மண்டலங்களின் பன்மயத் தன்மையையும், அவற்றின் பாதுகாப்பையும் வளமூட்டும் முதன்மை சாளரங்களாக செயல்பட முடியும்.
இதன் மூலம் இந்த இடங்களின் செழுமை அதிகரிக்கும். வடக்கு மினிசோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில் நீர்நாய்களின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன என்றாலும் இவை வாழும் நீர்நிலைகளில் நீரின் அளவு, தரம் ஆகியவை பாதுகாக்கப்பட்டன.
மனிதன் தவிர பூமியில் வாழும் பாக்டீரியாக்கள் முதல் பாண்டாக்கள் வரை அனைத்து உயிரினங்களும் இயற்கையில் இருந்து பெறுவதைத் திரும்பிக் கொடுத்து வாழ்கின்றன. இவை சூழலிற்கு நன்மை செய்யாவிட்டாலும் சீரழிவை ஏற்படுத்துவதில்லை. மனிதன் செய்ய வேண்டிய சூழல் பாதுகாப்புப் பணியை நீர்நாய்கள் போன்ற சில உயிரினங்கள் செய்கின்றன.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்