காலநிலை மாற்றத்தால் பூமியில் கடல்களின் நிறம் மாறிக் கொண்டிருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு கடல் பசுமை நிறமாக மாறக் காரணம், அதில் உள்ள தாவர மிதவை உயிரினங்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதே என்று நாசா நிறுவனத்தின் பகுப்பாய்வுப் படங்கள் கூறுகின்றன. ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்கும் ஒரு கடல் காலப்போக்கில் பச்சை நிறத்திற்கு மாறுகிறது. பூமத்திய ரேகைக்கு கீழுள்ள பகுதியில் அமைந்துள்ள கடற்பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

"கடல் நீர் நிறம் மாறுவது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் சூழல் மண்டலத்தில் நிகழும் மாற்றங்களையே இது அடையாளப்படுத்துகிறது" என்று நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் மற்றும் சவுத்தாம்ப்டன் (Southampton) பல்கலைக்கழகத்தின் தேசிய கடல்சார் ஆய்வு மைய விஞ்ஞானி பிபி கேல் (BB Cael) கூறுகிறார்.

காலநிலை மாற்றத்தின் தற்போதைய போக்கை அறிய கடல் நீரின் நிறம் பற்றி நடத்தப்பட்ட இந்த முன்னோடி ஆய்வில் மிதவை உயிரினங்களில் உள்ள பசுமையான க்ளோரோபில் அல்லது பச்சைய செல்கள் பற்றி முக்கியமாக ஆராயப்பட்டது. மிகச் சிறந்த தரவுகளின் களஞ்சியமான நாசாவின் மோடீஸ் நீரியல் (Modis-Aqua) செயற்கைக்கோளின் உதவியுடன் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.deep blue waterநாசாவின் செயற்கைக்கோள்

இந்த செயற்கைக்கோள் டெரா (Terra) மற்றும் அக்வா (Aqua) என்ற இரு விண்கலங்களில் செயல்படுகிறது. 2330 கிலோமீட்டர் அகலத்தில் இது பூமியின் நிலம் மற்றும் நீர்ப்பரப்பு முழுவதையும் ஆராயும் திறன் பெற்றது. கடல் நீரில் ஏற்படும் சிவப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களின் மாற்றங்களை இதில் உள்ள நிறமானி முழுமையாக ஆராய்ந்து கூறியுள்ளது. வெவ்வேறு அளவுள்ள மிதவை உயிரினங்கள் ஒளியை வெவ்வேறு அளவுகளில் சிதறடிக்கின்றன. வேறுபட்ட நிறமிகளைக் கொண்ட மிதவை உயிரினங்கள் ஒளியை வேறுபட்ட அளவில் உறிஞ்சுகின்றன.

நிறங்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதன் மூலம் உலகம் முழுவதும் கடல்களில் வாழும் தாவர மிதவை உயிரினங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விஞ்ஞானிகளால் துல்லியமாக அறிய முடியும். ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் பெற்ற ஒற்றை செல்லுடன் கடலில் வாழும் உயிரினங்களே தாவர மிதவை உயிரினங்கள் (phytoplanktons) என்று அழைக்கப்படுகின்றன.

கடற்சூழல் மண்டலத்தில் உணவுச்சங்கிலியின் அடிப்படை இந்த உயிரினங்களே என்பதால் இவை ஆரோக்கியமான கடற்சூழலுக்கு முக்கியமானவை. இந்த நிற மாற்றங்கள் கணினி மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டு மனிதனால் புவி வெப்ப உயர்வு ஏற்படுத்தப்படாமல் இருந்தால் கடல்கள் எவ்வாறு இருக்கும் என்று ஆராயப்பட்டபோது இப்போது நிகழ்ந்து வரும் மாற்றங்களைப் பற்றி தெளிவாக அறிய முடிந்தது.

உலகக் கடல்களில் 56%

இந்த மாற்றங்களை வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள கடல்களில் குறிப்பிடத்தக்க அளவில் காணமுடிந்தது என்று கேல் கூறுகிறார். பூமியில் இருக்கும் கடல்களில் 56% கடல்களிலும் இந்த மாற்றங்கள் நிகழ்கிறது. இது பூமியின் ஒட்டுமொத்த நிலப்பரப்பின் அளவை விட அதிகம்.

பெரும்பான்மையான கடற்பகுதிகளிலும் இந்த பசுமை விளைவு (Greening effect) நிகழ்கிறது. ஆனால் நீல நிறம் மற்றும் சிவப்பு நிறத்தின் அளவுகள் ஒரு சில பகுதிகளில் சில சமயங்களில் அதிகமாவதையும் வேறு சில சமயங்களில் குறைவதையும் காண முடிகிறது என்று அவர் கூறுகிறார். ஒட்டுமொத்த சூழல் மண்டலத்தையும் அழிக்கக் கூடியதோ அல்லது மாற்றக் கூடியதோ இல்லை என்றாலும் இவை மிக நுட்பமானவை. மனித அறிவினால் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட முடியாதவை.

மனிதக் குறுக்கீட்டின் மற்றொரு எடுத்துக்காட்டு

நம்மால் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் இந்த மாற்றங்கள் கடல்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதக் குறுக்கீட்டால் பூமியின் உயிர்க்கோளத்திற்கு ஏற்பட்டு வரும் மோசமான பாதிப்புகளுக்கு இது மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த ஆய்வுகள் காலநிலை மாற்றத்தின் இன்னுமொரு விளைவை தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளன.

என்றாலும் கடல்களுக்குள் எதனால் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன, இந்த மாற்றங்கள் எந்த அளவு வலிமையானவை என்பது பற்றி ஆய்வாளர்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று ஆரிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் கடல் வளம் (Ocean Productivity) ஆய்வு மையத்தின் விஞ்ஞானி மைக்கேல் ஜே பேரன்ஃபெல்டு (Michael J Behrenfeld) கூறுகிறார்.

கடல்களில் நுண் பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்ற எந்த ஒரு பொருளையும் போல ஒளியைச் சிதறடிக்கச் செய்யும். இது போன்ற பல காரணங்களால் இந்த மாற்றங்கள் ஏற்படலாம். இது பற்றி மேலும் தெளிவாக புரிந்து கொள்ளப்படும்போது கடலில் நிகழும் சூழலியல், உயிரி புவி வேதியியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

நாசாவின் புதிய செயற்கைக்கோள்

நாசா ஜனவரி 2024ல் பேஸ் (PACE - Plankton, Aerosol, Cloud, Ocean Ecosystem) என்று பெயரிடப்பட்டுள்ள அதி நவீன செயற்கைக்கோளை செலுத்துகிறது. இந்த அதிநவீன செயற்கைக்கோள் இப்போது ஆராயப்பட்டுள்ள ஒரு சில நிறங்களைத் தவிர கடல்களில் உள்ள நூற்றுக்கணக்கான நிறங்களையும் ஆராயும் திறன் பெற்றது. இதன் மூலம் கடற்சூழலில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் தெளிவாக அனுமானிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது கடற்சூழலை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.

** ** **

மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2023/jul/12/worlds-oceans-changing-colour-due-to-climate-breakdown-study-suggests?

&

https://modis.gsfc.nasa.gov/data/

Pin It