நம் வீட்டை இரண்டாகப் பிளந்து, அல்லது நமது வீட்டுக்கு முன்னுள்ள சாலை வழியாக இரவு முழுவதும் குறைந்தபட்சம் 100 கி.மீ வேகத்தில் லாரிகள் விரைந்து செல்வதை நாம் அனுமதிப்போமா? எந்த பைபாஸ் சாலை வழியாகவும் நமது குழந்தைகள் தனியாகச் செல்ல அனுமதிப்போமா? இல்லை, ஏனென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அடிபட்டு இறப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த வாதத்தை அப்படியே காட்டுக்குள் செல்லும் ஒரு சாலைக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
கர்நாடக மாநிலம் சம்மராஜ நகர் மாவட்ட துணை ஆணையர் மனோஜ் குமார் மீனா ஊட்டி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை 67 வழியாக இரவு போக்குவரத்தை (இரவு 10 முதல் காலை 6 மணி வரை) தடை செய்தார். அவரே அத்தடையை ஜூன் 3ஆம் தேதி ரத்தும் செய்தார். இந்த நெடுஞ்சாலை வழியாக எல்லா அத்தியாவசிய பொருள்களும் எடுத்து செல்ல வேண்டியுள்ளதாக சுல்தான் பத்தேரி பகுதியின் எம்எல்ஏ கூறியதால், தற்காலிகமாக வாகனங்களை அனுமதித்தாக அவர் கூறினார். தடை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ல. ஸ்ரீனிவாச பானா தொடர்ந்த, பொதுநல வழக்கில் முதன்மை நீதிபதிகள் பி.டி.தினகரன், வி.ஜி. க்ஷி.நி. ஷிணீதீலீணீலீவீt ஒரு தீர்ப்பு அளித்தனர். அந்தத் தீர்ப்பின்படி பந்திபூர் கானகம் வழியாக செல்லும் இரண்டு நெடுஞ்சாலைகளிலும் இரவு வாகன போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உலகின் மிக முக்கியமான பல்லுயிர் வளம் செழித்துள்ள இடம் என்று நீலகிரி உயிர்மண்டலக் காப்பகத்தை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. தமிழகத்தின் முதுமலை, கர்நாடகத்தின் பந்திப்பூர், கேரளாவின் முத்தங்கா சரணாலயங்கள் இணைந்த பகுதியே நீலகிரி உயிர்மண்டலக் காப்பகம். இந்தியாவிலேயே புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள பகுதி என்று நீலகிரி உயிர்மண்டலக் காப்பகம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகிலுள்ள ஆசிய யானைகளில் 50 சதவீதம் இப்பகுதியில்தான் வாழ்கின்றன. மொத்தம் 874.20 சதுர கி.மீ. கொண்ட பந்திப்பூர் காடு கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு எல்லைகளை ஒட்டி உள்ளது.
இந்த சரணாலயத்தைப் பிளந்து கொண்டு ஊட்டி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை 67, கர்நாடகாத்தின் பந்திப்பூர், முத்தங்கா சரணாலயங்கள் வழியாக கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தே.நெ. 212 ஆகியவை செல்கின்றன. மைசூரில் ஆரம்பித்து சாம்ரஜ நகர் மாவட்டத்தின் குண்டுல்பெட்டில் இரண்டாக பிரிந்து பந்திபூர் காட்டுப் பகுதி வழியாக 17.5 கி. மீ. சென்று, கேரளாவின் வயநாடிற்கும், 12.5 கி.மீ. காட்டின் ஊடாக சென்று தமிழ்நாட்டின் ஊட்டியையும் இந்தச் சாலைகள் அடைகின்றன. ஒரு கணக்கெடுப்பின்படி ஒரு நாளுக்கு மட்டும் காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்கள் 100ம், மணல் ஏற்றி செல்லும் லாரிகள் 250-300 வரை செல்வதாகத் தெரிகின்றது. ஆயிரக்கணக்கான பயணிகளும் பயணிக்கின்றனர். இந்த இரண்டு சாலைகளிலும்தான் இரவுப் போக்குவரத்துத் தடையை நீதிமன்றம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
பந்திப்பூர் புலிக் காப்பிடக் காட்டுப் பகுதியில் இந்தத் தடை நடைமுறையில் இருப்பதால், அங்கிருந்து முதுமலைக்கு இரவில் வாகனங்கள் வர முடியாது. இங்கிருந்தும் செல்ல முடியாது. பெருமளவு காடுகளை அழித்துத்தான் இந்தச் சாலைகள் போடப்பட்டுள்ளன என்பதால், அது காட்டுயிர்கள் ஏற்கெனவே பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை உயிரினங்களை காப்பாற்றும் என்பதால் காட்டுயிர் பாதுகாவலர்கள் தடையை வரவேற்றுள்ளனர்.
"இரை தேடியும் தண்ணீர் தேடியும் இந்தச் சாலைகளைக் கடக்கும்போது பல விலங்குகள் அடிபட்டு இறக்கின்றன. எனவே, காட்டுயிர்களின் குணங்கள், பழக்கவழக்கங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தடை விதிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தோம். கர்நாடகாவில் விதிக்கப்பட்டுள்ள தடையைப் போன்றே தமிழகம், கேரளாவிலும் காட்டுப்பகுதியில் இரவுப் போக்குவரத்தைத் தடை செய்வதே சரியாக இருக்கும்" என்கிறார் கென்னத் ஆண்டர்சன் இயற்கை சங்கத்தைச் சேர்ந்த ஹரி சோமசேகர்.
இந்தத் தடை எவ்வளவு அவசியம் என்பதை பந்திபூர் சரணாலய துணை வனப்பாதுகாவலர் ப. ராஜு விளக்குகிறார்: "இரவு நேரத்தில் வேட்டையாடும் விலங்குகளான புலி, சிறுத்தை மற்றும் யானை போன்ற பெரிய விலங்குகளும் இரவு வாகன போக்குவரத்தின் ஒலி, ஒளியால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. வாகனங்களின் விளக்கொளி அவற்றின் கண்களை கூசச் செய்து சிறிது நேரம் பார்வை மங்கலாகிவிடும்" என்கிறார். இரவு நேரத்தில் இந்த வாகனங்கள் ஏற்படுத்தும் இரைச்சல் 40 முதல் 50 டெசிபெல் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நகர இரைச்சலைவிட (20 டெசிபெல்) அதிகம்.
"பலர் இரவில் குடித்து விட்டுத்தான் வாகனங்களை ஓட்டுகின்றனர். காட்டுயிர் வேட்டையாடிகளும், குற்றவாளிகளும் இரவு வாகனப் போக்குவரத்தை பயன்படுத்தி காட்டுக்குள் வந்திறங்கி திருட்டு வேலைகளைத் தொடர்கின்றனர்" என்கிறார் ராஜு. இந்த வருடத்தின் ஏழு மாதங்களில் மட்டும் இப்பகுதியில் 56 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவிக்கின்றது.
இயல்பாகவே இரவில் இரைதேடும் பழக்கம் உடைய விலங்குகள், பாதுகாக்கப்பட வேண்டிய அரிய விலங்குகள் ஒரு நாளில் குறைந்தபட்சம் 3-4 நான்கு முறை இந்த நெடுஞ்சாலையை கடப்பது ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்வது உட்பட ஒவ்வொரு மனித இறப்புக்கும் நம்மிடம் பதிவு இருக்கிறது. ஆனால் இந்தச் சாலைகளில் அப்பாவியாய் இறந்து போகும் விலங்குகள் பற்றி எந்தக் கணக்கெடுப்பும் அரசிடம் இல்லை.
மைசூரை மையமாகக் கொண்ட காட்டுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை (டபிள்யு.சி.எஃப்) நடத்திய ஆய்வில் ஒவ்வொரு மாதமும் வாகனங்களில் அடிபட்டு மூன்று பெரிய பாலூட்டிகள் கொல்லப்படுகின்றன. புலி, யானை, சிறுத்தை, செந்நாய், மான், பூனை, மந்தி, பாம்பு, இரைகொல்லிப் பறவைகள் உள்ளிட்டவை கொல்லப்படுகின்றன. "காட்டுயிர் கடத்தலைவிட, இரவில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அசாதாரண காட்டுயிர் இறப்பு என்று எடுத்துக் கொண்டால் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் விலங்குகளின் எண்ணிக்கை 65 சதவீதம். பந்திப்பூரில் 65-70 புலிகள் இருப்பதாகத் தெரிகிறது. இதில் ஒன்று சமீபத்தில் அடிபட்டு இறந்தது" என்கிறார் காட்டுயிர் பாதுகாப்பு அறக்கட்டளையின் டி. ராஜ்குமார். Wildlife Conservation Foundation (WCF), எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி ஆண்டுகளில் மட்டும் 91 பாலூட்டிகள், 74 பறவைகள், 56 ஊர்வன வாகனங்களில் அடிபட்டு இறந்துள்ளன.
சாலையின் இருமருங்கிலும் இறந்த விலங்குகளின் எலும்புக்கூடுகளை கண்ட பிறகே, இந்தச் சாலையில் இரவுப் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று பந்திப்பூர் சரணாலய அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். கர்நாடக அரசும் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து, பிறகு விலக்கிக் கொண்டது. ஆனால் அந்தத் தடையை தொடர வேண்டும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு பலராலும் பாராட்டப்பட்டாலும், எதிர்பவர்களும் உள்ளனர். இந்தத் தடையை எதிர்த்து கூடலூர், பாண்டலூர் பகுதியில் உள்ள வணிகர்கள் சங்கம் ஆகஸ்ட் 24ந் தேதி ஒரு நாள் கடையடைப்பு நடத்தியுள்ளது. சரக்குப் போக்குவரத்து உரிமையாளர்களும் இந்த கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கூடலூரில் பரவலான ஆதரவைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இத்தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக கேரள அரசு கூறியுள்ளது. பெங்களுருவில் இருந்து வயநாடு சென்று வார இறுதியை கழிக்கும் ஐ.டி. தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் என்பதும் எதிர்ப்பவர்களது கருத்து.
தே.நெ. 212 வழியாக கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இந்த அத்தியாவசியப் பொருட்களை பகலில் கொண்டு செல்ல முடியாது என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. இந்தக் காடுகளுக்கு இணையாக உள்ள வேறு பாதையில் செல்லவும் சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள் மறுக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். இரவில்தான் போக்குவரத்து செய்வோம் என்று இவர்கள் பிடிவாதம் பிடிப்பதன் ரகசியம் என்ன?
அதற்கான பின்னணி காரணம் என்ன என்று யோசித்து பார்க்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் செயலர் ஜெயச்சந்திரன் "பகலில் கொண்டு செல்ல முடியாத அல்லது எடுத்துச் செல்லக் கூடாத பொருள்களைத் தான் இரவு நேரத்தில் ரகசியமாக கொண்டு செல்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மணலும், அரிசியும் கடத்தப்படுவது யாவரும் அறிந்ததே. காடுகளில் கள்ளத்தனமாக வெட்டப்பட்டு கடத்தப்படும் மரங்களும் இரவு நேரத்தில்தான் எடுத்து செல்லப்படுகின்றன. மணல், மரம் கொள்ளையில் ஈடுபடும் மாபியா கும்பல் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து இந்தத் தடையை எதிர்கின்றனர்" என்கிறார்.
காடுகளையும் அங்கு வாழும் உயிரினங்களையும் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளும், சுயநல மிக்க அரசியல்வாதிகளும் தங்கள் காண்ணோட்டத்தையும், அணுகுமுறையையும் மாற்றிக் கொண்டு, கடமையை ஒழுங்காகச் செய்தாலே நாம் வாழ்வதற்கு அடிப்படையாக இருக்கும் காடுகளும் அதன் பிள்ளைகளான உயிரினங்களும் வாழமுடியும். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை இது போன்ற வழக்குகளும் தீர்ப்புகளும் ஓரளவுக்கு முடிவு செய்யும். அப்படி சாத்தியமாகாத பட்சத்தில், என்ன எதிர்விளைவுகளை சந்திக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய தேவையிருக்காது. காலம் விரைவிலேயே பதில் சொல்லும்.
- பேராசிரியர் த.முருகவேள்