பூமியின் காற்று மண்டலத்தில் பசுமை வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால் புவிவெப்பமடைகிறது என்பதுதான் மனிதகுலத்தின் இன்றைய தலைகாய்ந்த பிரச்சினை. சிக்கல் மனிதனுக்கு மட்டுமல்ல, நீரில் வாழும் மீனின் தலைக்குள்ளும் அதே பிரச்சினை வேர்விட்டு முளைத்திருக்கிறது என்பதுதான் இன்றைய கண்டுபிடிப்பு. ஸ்க்ரிப்ஸ் கடலியல் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் செக்லே என்பவர் இது பற்றிய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார்.
காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது கடல் நீர் அதனை ஏற்றுக்கொள்கிறது. இதனால் கடல் நீரில் அமிலத்தன்மை கூடிப்போகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள கடல்நீரில் வாழும் மீனின் உடற்கூறு மாற்றமடைந்து வருகிறது. மீன்களின் எலும்பு வளர்ச்சியில் இந்த மாற்றம் காணத் தொடங்கியிருப்பதுதான் இன்றைய புதிய சிக்கல்.
otoliths என்பவை மீன்களின் செவி எலும்புகள். இவை வெங்காயம் போன்று பல அடுக்குகளைக் கொண்டவை. இந்த அடுக்குகளைக்கொண்டு மீனின் வயதைக் கணக்கிடலாம். மேலும் இந்த otoliths உதவியால்தான் மீன் தன்னுடைய உடலை புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நிலை நிறுத்திக்கொண்டு நீந்துகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள கடல்நீரில் வாழும் young white seabass இன மீன்களுடைய otoliths அளவிற்கு அதிகமாக பெருத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மீன்களுக்கு நீந்துவதில் பிரச்சினை தொடங்க வாய்ப்பிருக்கிறது. சங்கிலித் தொடர்போன்ற புதிய சிக்கல்களும் எழக்கூடும். இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
ஏற்கனவே கடல் நீரில் அமிலத்தன்மை கூடிப்போனதால் பவளப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்டன. எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருள்களை வரைமுறையின்றி மனிதன் எரிக்கத்தொடங்கியதால் அவனுடைய வாழ்வும் எரிந்துபோகும் காலம் வெகுதொலைவில் இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/06/090625141450.htm