சூழல் ஆஸ்கர் என்று அறியப்படும் எர்த்ஷாட் விருது 2022ல் இந்தியாவிற்கும் கிடைத்துள்ளது. தெலுங்கானாவில் ஸ்டார்ட் அப் கம்பெனியான கெயிட்டி (Kheyti) இம்முறை இந்த விருதைப் பெற்றுள்ளது. சிறு குறு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் உருவாக்கிய பசுமைக்குடில் கண்டுபிடிப்பிற்காக இந்த அமைப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் அவர்களால் 2020ல் தோற்றுவிக்கப்பட்டது.
 
பத்து கோடி ரூபாய் விருது
 
சூழல் பாதுகாப்பிற்கு உதவும் ஐந்து பிரிவுகளில் இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் இவற்றை அமெரிக்கா பாஸ்ட்டன் நகரில் நடந்த விழாவில் வில்லியம் வழங்கினார். சூழல் பாதுகாப்பு மற்றும் மறு வாழ்வாதாரம் (Climate change & rehabilitation) என்ற பிரிவில் கெயிட்டிக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சந்திக்கும் சிறு, குறு நில விவசாயிகளுக்குக் குறைந்த செலவில் விளைச்சலை அதிகரிக்க, இதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகப்படுத்த கெயிட்டியின் கண்டுபிடிப்பு உதவும். 
william princeஇந்தியாவில் சிறு குறு நில விவசாயிகளில் மிக அதிகம் பாதிக்கப்பட்ட பத்து கோடி ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்வதே தங்கள் இலட்சியம் என்று கெயிட்டியின் தோற்றுநர்களில் ஒருவரும், நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான கௌசிக் கத்த கண்டுலு கூறினார்.
 
விருது வென்ற மற்றவர்கள்
 
காற்றைத் தூய்மைப்படுத்துங்கள் (Clean Our air) என்ற பிரிவில் கென்யாவின் முகுரு ஸ்டவ்கள் தயாரிக்கும் நிறுவனம் விருதைப் பெற்றுள்ளது. கென்யாவில் பெண்கள் அதிகம் வேலை பார்க்கும் நிறுவனம் இது. நிலக்கரி, மரம் போன்றவற்றைப் பயன்படுத்தி மாசு ஏற்படாத வகையில் எரியும் அடுப்புகளை இவர்கள் தயாரிக்கின்றனர். இதன் மூலம் வீட்டினுள் ஏற்படும் காற்று மாசைக் குறைக்க முடியும்.
 
உயிரி ப்ளாஸ்டிக் கண்டுபிடிப்பு
 
கழிவுகளற்ற உலகை உருவாக்குவோம் (Build a waste free World) பிரிவில் உணவுப் பொட்டலமிடுதல் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மக்கக் கூடிய உயிரி பிளாஸ்டிக்கை கடற்பாசிகளில் இருந்து தயாரித்த யு.கே.வைச் சேர்ந்த நாட்ப்ளா (Notpla) நிறுவனம் விருது பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் இணைத்தோற்றுநர்களில் ஒருவரான பியர் பாஸ்லியர் பிளாஸ்டிக் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க தங்கள் கண்டுபிடிப்பு உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 
நமது கடல்களை சீரமையுங்கள்
 
நமது கடல்களை சீரமையுங்கள் (Revive our Oceans) பிரிவில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகள் இருக்கும் ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியை பல நூற்றாண்டு காலப் பழமையுடைய தங்கள் பாரம்பரிய முறை மற்றும் நவீன செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாத்து வரும் ஆஸ்திரேலிய ஆதிவாசி மகளிர் குழுவினருக்கு விருது கிடைத்துள்ளது. இதுவரை இத்துறையில் இவர்கள் மற்ற 60 பெண்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர்.
 
காலநிலையை சமாளித்தல்
 
காலநிலையை சமாளித்தல் (Fits our climate change) பிரிவில் ஓமன் நாட்டைச் சேர்ந்த 44.01 என்ற அமைப்பிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஹலால் ஹஸன் என்பவர் இதன் தோற்றுநர். கார்பன் டை ஆக்சைடை பெரிடோடைட் பாறைகளாக்கும் எளிய முறையின் கண்டுபிடிப்பிற்காக இந்த அமைப்பிற்கு விருது கிடைத்தது. இவ்வகைப் பாறைகள் யு எஸ், ஐரோப்பா, ஆசியாவில் காணப்படுகிண்றன. இம்முறையின் மூலம் மிகக் குறைந்த செலவில் கார்பனைப் பாதுகாத்து சேமித்து வைக்க முடியும்.
 
இது போன்ற புதிய கண்டுபிடிப்புகள் பயன்பாட்டுக்கு வரும்போது சூழல் சீரழிவுகளில் இருந்து மனித குலம் தப்ப முடியும்.

 - சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It