உறக்கம் என்பது உடல் மற்றும் மனதின் எல்லா செயல்களும் நிறுத்தப்படும் ஒரு நிலை இல்லை. மனித நலத்திற்கு ஆரோக்கியமான உடலும் மனதும் போலவே மூளையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். நல்ல உறக்கம், டிமென்சியா உள்ளிட்ட பல நோய்கள் வராமல் தடுக்க உதவும் என்று சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உறக்கத்தின் போது நடைபெறும் உயிரி மூளைச்சலவை (the biological brain washing) மூளையில் உருவாகும் நச்சுப்பொருட்களை வடிகட்ட முக்கியமாக உதவுகிறது. ஒவ்வொருநாள் இரவையும் நல்ல உறக்கத்துடன் கழிக்க இது அவசியம் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். நேற்றும் இன்றும் நாளையும் நாம் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நாளிலும் விளக்குகளை அணைத்துவிட்டு தூங்க ஆரம்பிக்கும்போது, நம்மையும் அறியாமல் நாம் பாத்திரம் கழுவும் கருவிக்கு இணையான நரம்பியல்ரீதியிலான செயல்பாட்டை இயக்கத் தொடங்குகிறோம்.

இதனுடன் பில்லியன் கணக்கான நரம்புசெல்கள் ஒருங்கிணைந்து சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குகின்றன. ஆரம்பத்தில் அதி உயர் செயல்நிலையை அடையும் இவை, பின்னர் குறைவான வேகத்தில் பரவும் அலைகளை (slow waves) உருவாக்குகின்றன. இதனால் இரத்தம் மூளைக்குள்ளேயும் வெளியிலும் பாயத் தொடங்குகிறது.lady sleepingநரம்புத் துடிப்புகள் மூலம் மூளையைச் சுற்றியுள்ள சாம்பல் நிறம் உடைய செரிப்ரஸ் முதுகெலும்புத்தண்டு கூழ்மம் (Cerebros Spinal Fluid CSF) அங்கு உருவாகியிருக்கும் இறந்த அங்கக நச்சுப் பொருட்களைக் கழுவி வெளித்தள்ளுகிறது.

தூங்காத இரவுகள்

முதல்நாள் சரியாகத் தூங்கவில்லை என்றால் பெரும்பாலானோர் மறுநாள் அவர்களின் மனப்போக்கு (mood) மற்றும் நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்கின்றனர்.

நீண்டகால மூளையின் நலத்திற்கு இந்தச் சலவை செயல் முக்கியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எல்லா உயிர்ச் செயல்பாடுகளும் தூக்கத்தின்போது நிறுத்தப்படுவதில்லை. மாறாக உறக்கத்தின்போதே செயல் ஊக்கத்துடன் மூளை வேலை செய்கிறது என்று உறக்கநிலையில் இருக்கும் மனிதர்களிடம் இந்த பம்பின் செயல்முறையை படமெடுத்த யு எஸ் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் உயிரி மருத்துவப் பொறியியல் துறை துணைப் பேராசிரியர் லோரா லூயிஸ் (Laura Lewis) கூறுகிறார்.

ஒழுங்கான தூக்கத்தை நாம் தினமும் பெறவில்லை என்றால் இந்த நச்சு உபபொருட்கள் சேர்ந்துபோகும். இது டிமென்சியா மற்றும் பிற மூளை நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. வயதாகும்போது நாம் குறைவாகவே தூங்குகிறோம். இதனால் இக்கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போகிறது. விஞ்ஞானிகள் நல்ல தூக்கத்தை எவ்வாறு பெறுவது என்பது பற்றி நீண்டகாலமாக ஆராய்ந்து வருகின்றனர்.

2012ல் இது பற்றி ஒரு முக்கியக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. அமெரிக்காவின் ராச்செஸ்ட்டர் (Rochester) பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேக்கன் நெடெர்கார்ட் (Prof Maiken Nedergaard) அவரது ஆய்வுக்குழுவினருடன் இணைந்து அதற்கு முன்புவரை அறியப்படாத, தூக்கத்தின்போது மூளை என்னும் மனித உடலின் மிக முக்கிய உறுப்பில் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ள நடைபெறும் வாழ்வியல் செயல்களைக் கண்டுபிடித்தனர்.

மூளையில் இருக்கும் இரத்தக்குழாய்களைச் சுற்றியுள்ள சிறிய தொடர் பாதைகள் சி எஸ் எஃப் கூழ்மத்தை நரம்பு துடிப்புகளின் உதவியுடன் மூளைத் திசுக்கள் வழியாகத் தள்ளி இரத்தத்துடன் வேகமாகக் கலந்து கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் செயலில் ஈடுபடுகின்றன என்பது கண்டறியப்பட்டது. உடலில் இருக்கும் க்லிம்பாட்டிக் (glymphatic) செல்கள் போன்ற அமைப்பை உடைய மூளையில் உள்ள க்லிம்பாட்டிக் செல்கள் இந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் செய்கின்றன.

இவை நச்சுப்பொருட்கள் வெளியேற்றம் தவிர குளுக்கோஸ், புரதங்கள், அமினோ அமிலங்களின் விநியோகம் மற்றும் நரம்பியல் தொடர்புகளுக்கு உதவுகின்றன. இவை மூளையில் சிறப்பாகக் காணப்படும் க்ளையல் (glial) என்ற செல்களின் உதவியுடன் மேலாண்மை செய்யப்படுகின்றன. பகலில் மிகுந்த செயல்திறனுடன் இயங்கும் நியூரான் நரம்பியல் செல்கள் ஏராளமான கழிவுகளை உருவாக்குகின்றன. இவை வெளியேற்றப்படுவது முக்கியம்.

ஒரு மீன் வளர்ப்புத்தொட்டியில் வடிகட்டி இல்லாவிட்டால் மீன்கள் அவை வெளியேற்றும் கழிவுகளாலெயே அவை உயிரிழக்கும். இதுபோலவே மூளையில் சேகரமாகும் கழிவுகளும். அல்சைமர்ஸ் நோயாளிகளின் மூளையில் சேரும் பல நச்சுகளில் ஒன்று பீட்டா-அமைலாய்ட் (beta-amyloid). இது மூளைச்செல்களின் இயக்கத்தை பாதிக்கிறது. இந்தக் கழிவு அதிக அளவில் தூக்கத்தின்போது நீக்கப்படுகிறது என்று நெடெர்கார்ட் கூறுகிறார்.

தூக்கமின்மையும் அல்சைமர்ஸ் நோயும்

வாழ்நாள் முழுவதும் சரியாக உறக்கமில்லாமல் இருப்பதற்கும் அமைலாய்டுகள் அதிக அளவில் உருவாவதற்கும் அல்சைமர்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்புகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. விழிப்புநிலையில் நம் உடல் பகல் நேரத்தில் உருவாக்கும் லேக்டிக் அமிலம் மற்றும் அல்சைமர்ஸ் நோயாளிகளின் மூளையில் சேகரமாகும் டவ் (tau) புரதங்கள் போன்றவை வெளியேற்றப்படுவதும் நடைபெற இது உதவுகிறது.

இரு துருவ மனநோய் (bipolar), ஸ்கிட்ஸெபெனியா (Schizophrenia) போன்ற மனநலக் கோளாறுகள் நீண்டகால தடைபட்ட தூக்கத்தால் ஏற்படுகின்றன. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களின் மூளையில் அவர்கள் தூங்கும்போது நடந்த ஆய்வில் செரிப்ரஸ் கூழ்மம் 20 வினாடிகளுக்கு ஒரு முறை நீண்ட தொலைவு பயணம் செய்து மூளையை சுத்தப்படுத்துகிறது. நாம் கண் விழித்தவுடன் இந்நிகழ்வு மறைந்து விடுகிறது.

இந்தத் தூய்மைப்பணி குறைவான வேகத்தில் செல்லும் அலைகள் அதிக அளவில் உருவாகும் விடிகாலை நேரத்தில் அதிக செயல்திறனுடன் நடைபெறுகிறது. கண் இமை அசைவுகள் நிலையாக இருக்கும் நிலை (non Rapid Eye movement) விடிகாலை நேரத்திலேயே ஏற்படுகிறது. இதுவே ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் நிலை. வயதானவர்கள் இந்த நேரத்தில் நல்ல தூக்கம் தடைபட்டு தூக்கம் இல்லாமல் இருப்பது ஏன் என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வயதாகும்போது க்லிம்பாட்ட்டிக் செயல்முறையின் திறன் குறைகிறது.

மூளையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள மட்டும் ஆழ்ந்த உறக்கம் அவசியமானதில்லை. அந்த சமயத்தில் வளர்ச்சி ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நோய் எதிர்ப்பு செல்கள் அப்போது நடைபெறுகின்றன. எலும்புகள், திசுக்கள் பழுது நீக்கப்படுகின்றன. நினைவாற்றலை நிலைப்படுத்தவும் இரத்த குளுக்கோஸை ஒழுங்குபடுத்தவும் நல்ல தூக்கம் உதவுகிறது. வயதானபோதும் நல்ல தூக்கத்தைப் பெற முடியும் என்று கார்டிஃப் (Cardiff) பல்கலைக்கழக உறக்க நிபுணர் பேராசிரியர் பெனேலாபி லூயிஸ் (Prof Penelope Lewis) கூறுகிறார். ஆழ்ந்த தூக்கம் என்பது நியூரான்கள் செயல்திறன் மற்றும் திறனற்ற மின்சாரச்செயல்களில் மாறி மாறி ஈடுபடுவதால் நிகழ்கிறது. இது எலக்ட்ரோஎன்சிஃபாலோக்ராம் (Electroencephalogram EEG) என்ற கருவியில் அலைகள் வடிவில் பதிவு செய்யப்பட்டு ஆராயப்படுகிறது.

ஆழ்ந்த உறக்கத்தைப் பெற

படுக்கச் செல்வதற்கு முன் காபி, மது பானங்கள் போன்ற பானங்களை அருந்துவது, உடற்பயிற்சி, மின்னணு சாதனங்களின் பயன்பாடு போன்றவற்றை தவிர்த்தல் மற்றும் படுக்கையறையை இருட்டாக வைத்திருப்பதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம். அப்போது வயது வேறுபாடின்றி அனைவரும் நல்ல தூக்கத்தைப் பெற முடியும். சாளரங்கள் வழியாக வெளிச்சம் வந்தாலும், மின்னணுப் பொருட்களின் பைலட் ஒளி வந்தாலும் இவை நம்மை எழுப்பிவிடாது என்றாலும் இவை நம் தொடக்க நிலை தூக்கத்தைப் பாதிக்கும். இதனால் நன்றாகத் தூங்கிய உணர்வு நமக்கு ஏற்படாது.

தூக்கம் என்பது ஒரு செயலற்ற நிலை போலத் தோன்றும் என்றாலும் மனம் விழித்துக்கொண்டுதான் இருக்கிறது. மூளை க்லிம்பாட்டிக் செல்கள் மூளையை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. ஆழ்ந்த உறக்கம் மனித வாழ்வில் கிடைப்பதற்கரிய ஒரு வரம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தூக்கம் பற்றிய இந்த புதிய கண்டுபிடிப்பு நம் அனைவரின் ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்கள்:https://www.theguardian.com/lifeandstyle/2023/mar/13/the-battle-to-boost-our-deep-sleep-and-help-stop-dementia?CMP=Share_AndroidApp_Other

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It