மனித சிந்தனையானது அறிவியலைப் பற்றி எண்ணிய உச்சக்கட்டம்தான் ஹிப்பாக்ரடீஸ் வாழ்ந்த காலம். அப்பொழுதுதான் இவரால் மருத்துவம் என்ற சொல்லே புத்துயிர் பெற்றது. அது ஒரு தனிக்கலை. அறிவியல் மற்றும் தொழில் எனத் தனித்து வளரத் தொடங்கிய பொற்காலம் (கி.மு.460-377).
கி.மு.4000 முதல் 2000 வரை எகிப்திய மருத்துவமே கிரேக்கத்தில் இருந்தது. நோயிலிருந்து குணம் பெற பாம்பு வழிபாடு நடைபெற்றது. எஸ்கலாபியஸ் என்னும் தெய்வமே நோயாளிகளைக் குணப்படுத்தும் என்று நம்பினர். கோயில்கள் கட்டப் பட்டன. கோயில்களே முதல் மருத்துவப் பள்ளிகளாயின.
நோயுற்றவர்களுக்கு மருத்துவமாக குளியல், மசாஜ், எனிமா முதலியவை செய்யப்பட்டன. நோயாளிகளுக்கு உணவும் வழங்கப்பட்டது. நோயாளிகள் இரவில் பாடு கிடப்பர். இரவில் கனவு வரும்; அதனடிப்படையில் மருத்துவர் மருத்துவம் செய்வார். இப்படி ஒரு மருத்துவமுறை வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது.
ஹிப்பாக்ரடீஸ் தோன்றிய கி.மு.5ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் கிரேக்க மருத்துவம் சமயப் பிடியிலிருந்து விடுபட்டு அறிவியல் பாதையில் செல்லத் தொடங்கியது. நோய்கள் கடவுள் செயலால் வருவதல்ல என்றும் இயற்கை நிகழ்வுகளே என்றும் உணரப்பட்டது.
மருத்துவத்தையும் தத்துவத்தையும் பிரித்துக் காட்டிய முதல் சிந்தனையாளர் ஹிப்பாக்ரடீஸ். இவர் வாழ்ந்த காலத்தில் மருத்துவம் புரிந்தவர்கள் அனைவரும் தத்துவஞானிகளாகவே இருந்ததனால் மருத்துவத்தைவிடத் தத்துவத்தில் கவனம் செலுத்தி மருத்துவத்தையும் தத்துவத்தையும் பின்னிப் பிணைத்தே வளர்த்து வந்தனர்.
பண்டைய கிரேக்கரிடையே தொழில்முறைப் பயிற்சி ஊதியமற்று வாழ்ந்து மெய் விளக்கியலாளர் என்று கூறப்பட்டவர்களும் மருத்துவர்களாவர். ஆனால் இவர்களின் பேச்சும் இயற்கையைப் பற்றி எழுதிய எழுத்தும் ஒரு தொழில் முறையாக இருந்ததுவேயல்லாமல் அது மருத்துவத்தைச் சார்ந்ததாகாது, என்று ஹிப்பாக்ரடீஸ் கருதினார். இக்கருத்து அக்காலத்தில் மருத்துவம் வளர்ந்த நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
கிரேக்கம் மாயம், மந்திரம், பில்லி, சூனியம், ஆவிகளின் செயல்கள் ஆகியவைகளில் மூழ்கிக் கிடந்தது. ஹிப்பாக்ரடீஸ் மூடநம்பிக்கைகளிலிருந்தும், ஊகத்திலிருந்தும் மருத்துவத்தை விடுவித்து, மருத்துவத்தைத் தனி அறிவியலாக்கியவர்.
ஹிப்பாக்ரடீஸ் தான் முதன் முதலாக மருத்துவர்களை மதகுருக்களிடமிருந்து பிரித்துப் பார்த்த அறிஞர். தெய்வத்தன்மை, தெய்வ அருள் பெற்ற நிலை அல்லது இயற்கைக்கு மேலான நம்ப முடியாத செயல்களை ஆற்றவல்லத்தக்க செயல் ஆகியவைகளைப் பற்றிய கருத்துக்களை எதிர்த்து, ஏன் நோய் வருகிறது? அதன் காரணம் என்ன? என்று மருத்துவத்தை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து மருத்துவம் செய்யத் துணிந்த முதல் மருத்துவர் ஹிப்பாக்ரடீஸ் ஆவார்.
வலிப்பு நோய் மந்திரத்தாலும் புனிதநீர் சூட்டுவதாலும் குணமாகிவிடும் என்று மதகுருமார்கள் சொல்லி வந்த மூடப் பழக்கத்தை எதிர்த்த மூலவர். மதகுருமார்கள் என்பவர்கள் ஒரு பிறவி வித்தைக்காரர்கள், மருத்துவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு நோய் என்பது கடவுளினால் கொடுக்கப்படும் தண்டனை என்று கூறியதை எதிர்த்து தன்னை அவர்களிடம் இருந்து பிரித்துக் காட்டிய சுய சிந்தனையாளர்.
இக்கூறுகள் அனைத்தும் இவரைக் கடவுள் பற்றற்றவராகவும் நாஸ்திகராகவும் மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டின என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இவர் தன் வாழ்நாளில் மருத்துவத்தில் ஆற்றியிருக்கும் தொண்டு, மகத்தானது. ஆகையால் தான் இவர் ‘மருத்துவத்தின் தந்தை’ என்று இன்றும் அன்றும் போற்றப்படுகிறார்.
எஸ்கலாபியஸ் என்னும் மருத்துவப் பூசாரி ஒருவரின் மகனான இவர் சாக்ரடீஸின் சமகாலத்தவர். நோயாளிகளை மருத்துவப் பரிசோதனை களுக்குட்படுத்தி, அவர் கண்டறிந்தவற்றைக் குறிப்புகளாக எழுதி வைத்தார். நோய்களை விரிவாக ஆராய்ந்து வகைப்படுத்தினார்.
திறந்த வெளியில் மரத்தடியில் மருத்துவமனையை நடத்தி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர். இவர் கற்றுக் கொடுத்த மரத்தடியும் அந்த மரமும் 2500 ஆண்டுகளாகவும் இன்னும் சாட்சியம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவருக்குப் பிடித்தமான மருந்து தேன்.
ஹிப்பாக்ரடீஸ் ஒரு பெரும் பயணி. ஒசாலி, ஏதென்ஸ் முதலிய இடங்களில் மருத்துவம் பார்த்தவர். கி.மு.385இல் தமது 95ஆம் வயதில் லாரிஸ்ஸாவில் இறந்தார்.
ஒரு மருத்துவர் நோயாளியை முழுமையாக ஆராய்வதுடன் அவனுடைய சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்துடன், இயற்கையியல் அறிஞரின் பார்வையோடு நோயைக் கவனிக்க வேண்டும் என்னும், அவரது கருத்து இன்றைக்கும் ஏற்கக் கூடியதாகவே அமைந்திருக்கிறது.
இக்கருத்து ஹிப்பாக்ரடீசால் எழுதப்பட்ட பல நூல்களில் ஒன்றான காற்று, நீர், இடங்கள் (Airs, Water and Places) என்ற நூலில் சுற்றுச்சூழலுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள தொடர்பினையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றியும் மிக ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய நிலையில் உடற்கூறு மற்றும் மெய்யியல் பற்றிய அறிவு குறைந்து, அறிவியல் சார்பான சாதனங்கள் இல்லாதிருந்த பொழுதும் இவர் கூறிய அறிவியல் கொள்கைகளும் பார்வைகளும் தத்துவ ரீதியாக யாவரும் ஒத்துக் கொள்ளக் கூடியதாகவே இருந்தன.
மருத்துவர்கள் உண்ட உணவுக்குப் பின் ஏற்படும் மாறுபாடுகளை, காலநிலை, குடிநீர், வேலை, பழக்க வழக்கம், காற்றடிக்கும் தன்மை ஆகியவைகளைக் குறித்து அறிந்து கொண்டுதான் ஒரு நபரின் நோயை அறிதல் வேண்டும் என்று கூறினார். இக்கருத்தை மருத்துவர்கள் மனதில் கொண்டு பொதுவாக ஆராயும் பொழுது எப்பகுதியில் எவ்வித நோய்கள் உள்ளன என்பதை அறிந்து அதற்கேற்றவாறு மருத்துவம் அளிக்க வாய்ப்பாக இருக்கும் என்றும் போதித்தார்.
உடல் நோய்க்கு மருந்துகளை விட உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடுமே சிறந்தவை என்பதை வலியுறுத்தினார். மிதமான அளவில் நல்ல உணவு, சுத்தமான குடிநீர், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவை நல்வாழ்வுக்கு அடிப்படையாகும் என்றார்.
இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின்னரும் இவர் குறிப்பிட்ட நோயாளியைப் பற்றிய விரிவுரைகள், கருத்துக்கள் நோயாளிகளின் அறிகுறிகள் தோற்றம் அனைத்தும் ஒருமித்துப் பார்த்தால் அவை நிலைத்து நிற்கும்படியே உள்ளன.
இரத்தம் சீழ் பிடித்த நிலை, வலிப்பு, காய்ச்சல் போன்றவற்றைப் பற்றிக் கூறிய குறிப்புகள் இன்றும் சாகாவரம் பெற்றவை. இதற்கு ஆதாரமாகக் கூறவேண்டுமானால் இக்கருத்துக்கள் இன்றைய மருத்துவ நூல்களிலும் அப்படியே சிலவற்றை நீக்கி எழுதப்பட்டு உள்ளன என்பதே உண்மை ஆகும்.
ஹிப்பாக்ரடீஸ் ஒரு நோயின் அறிகுறிகள் எப்பொழுது தோன்றும், அதன் முன் அறிவிப்புகள் யாவை, அதன்பின் நோயின் போக்கு எப்படி மாறுபட்டு காட்சியளிக்கும், அவருக்கு சாவு ஏற்படுமா இல்லையா? என்பதைப் பற்றி எல்லாம் தெளிவாக விவரித்துள்ளார்.
இவர் பெயரைக் கொண்டு அழைக்கப்படும் ‘ஹிப்பாக்ரடீஸ் முகம்’ என்ற அறிகுறியில் சாகும் தறுவாயில் மூக்கு நீண்டு, கண்களில் குழி விழுந்து “நெற்றி சுருங்கி' காதுகள் குளிர்ந்து, முகத்தோல் விரைத்து உலர்ந்து காணப்படும் என்று குறிப்பிடுகிறார். இக்கருத்தின் மூலம் ஒரு நோயாளி எப்படிக் காட்சியளிப்பார் என்பதைத் தெளிவாக கண்ணாடி போட்டு விளக்கி விட்டார்.
ஹிப்பாக்ரடீஸ் மருத்துவக் கொள்கை நான்கு கோட்பாடுகளைக் கொண்டது. அவைகள் முறையே கபம், ரத்தம், மஞ்சள் நிற பித்தம், கருநிற பித்தம் என்பன. இந்த நான்கு பொருள்களும் சீராக உள்ளபொழுது உடல் நலமாக இருக்கும். ஆனால் அவைகள் கூடிக் குறையும் பொழுதுதான் உடல் சீர் கெட்டுப்போய் நோய் ஏற்படுகிறது என்பது அவர் கொள்கை.
இவர் நோயைப் பற்றி மருத்துவ ஆய்வு செய்கையில் நோயாளிக்கு உண்டாகும் கனவுகளையும் கேட்டு அறியச் சொல்கிறார். கனவுகள் எண்ணங்களும், செயலும் ஒத்துப் போகும் நிலையில் தான் சாதகமாக அமையும் என்றும், இல்லாவிடில் சாதகமற்ற நிலையிலும் இருக்கும் என்றும் கூறுகின்றார்.
இவரால் போதிய மருந்துகள் கொடுக்கப்பட்டன. சுரத்திற்கும் தலையில் அடிபட்டதற்கும் ஒரு மருத்துவமாக ரத்தம் வெளியேற்றப்பட்டது. இவர் சில வகைக் குளியல்களையும், ஒத்தடங்களையும் சில நோய்களுக்கு சொல்வதோடு உணவைச் சாதாரண முறையில் செரிமானமாக்கும்படியாக (எ.கா) பார்லி கஞ்சியை நோய்க்குக் கொடுக்கச் செய்தார். வலியைப் போக்க வினிகரையும், தேனையும் கலந்து அருந்தச் செய்தார்.
இவர் நோய்களுக்கு மருந்தை மிகவும் அரிதாகவே பயன்படுத்தினர். குறிப்பாகக் கூறவேண்டுமானால், இவர் முறையில் நோயைக் கண்காணித்து இயற்கையாக அவை குணமாவதைத் தடுப்பதில்லை. மற்றும் உள் மூல நோய்க்கு இரும்பு சூட்டுக்கோலினால் சுடும் முறை மற்றும் மூலத்தைக் கட்டி வெட்டும் முறை ஆகியவைகளையும் கூறினார்.
எலும்பு முறிவு, எலும்பு மூட்டுப்பிசகு ஆகியவைகளுக்கு எலும்பை இழுத்து மூட்டுப் பிசகைச் சரி கட்டும் முறைகளும் இன்றும் இவர் பெயராலே அழைக்கப்படுகின்றன.
இவர் தன் மருத்துவக் கருத்துக்களைக் கூறத் தன் மாணவர்களைத் திறந்த வெளிகளுக்கு அழைத்துச் சென்று பாடம் நடத்துவார். இவர் தன் காலத்தில் நோய்க்கு மருந்து மட்டும் கொடுக்காது அறுவைச் சிகிச்சைகளைக் கூட செய்து வந்தார். இம்முறை அறுவைச் சிகிச்சைகளும் தற்பொழுது நிபுணர்களால் போற்றப்படுகின்றன.
ஹிப்பாக்ரடீஸ் உடல்கூற்றை அறிய பிணப் பரிசோதனை செய்தாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும், போர்க்களத்தில் காயமுற்ற நபர்களைக் கண்ணுற்றும், கோயில்களில் பலிக்கு இரையாகும் மிருகங்களைப் பார்த்தும் தன் அறிவை வளர்த்திருக்க வேண்டும்.
இவர் மறைந்த கி.பி.320-க்குப் பிறகும் அவரது கண்டுபிடிப்புகளில் தோன்றிய மருத்துவ நுணுக்கங்கள் மருத்துவத்தின் அடித்தளம் போல் இருப்பதால் இன்றும் மருத்துவ அறிஞர்களால் போற்றப்படுகிறார். மருத்துவத்தில் அறிவியல் அணுகுமுறையைப் புகுத்தி மருத்துவத்துறைக்கு இவர் ஆற்றிய அரும்பணிகளால் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறார்.
ஹிப்பாக்ரடீஸ் மருத்துவர்களுக்காக விதிக்கப்பட்ட ஒழுக்க விதிகள் (Code of conduct) இன்று வரை மருத்துவர்களின் ஒழுக்கத்திற்கு அடிப்படையாக இருந்து வருகிறது. இதனாலேயே இன்றும் மருத்துவர்கள் பட்டம் பெறும்போது ஏற்கும் உறுதிமொழி ஹிப்பாக்ரடீஸ் உறுதிமொழி (Hippocratic oath) என்று அழைக்கப்படுகிறது.
ஹிப்பாக்ரடீஸின் மருத்துவத்திற்கு அடித்தளம் அமைத்தவர் பித்தகோரஸ் எனும் தத்துவ ஞானிதான். நான்கு தாதுக்கொள்கையை (நிலம், நீர், தீ, வளி) ஹிப்பாக்ரடீஸ் பித்தகோரசின் மாணவர்களிடமிருந்துதான் கற்றார்.
பித்தகோரஸ் இந்தியாவிற்கு வந்து சென்றதற்கான குறிப்புகள் கிடைப்பதால் பித்தகோரஸ் மூலமே இந்திய மருத்துவம் கிரேக்கம் சென்றது என்று கருத இடமுண்டு என்பார் டாக்டர் பி.குடும்பையா.
- டாக்டர் சு.நரேந்திரன்