ratநாக்கின் சுவையறியும் உணர்வு மழுங்கிப் போவதுதான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். சரியான அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட இரண்டு காப்பிக்கோப்பைகளை ஒரு பருமனான மனிதருக்கும், ஒரு மெலிந்தவருக்கும் கொடுத்து குடிக்கச் சொன்னால், மெலிந்தவர் அதை விருப்பத்துடன் குடிக்கத்தொடங்குவார். பருமனானவர் சர்க்கரை போதுமானதாக இல்லை என்று கூறி மேலும் ஒரு கரண்டி சர்க்கரையை சேர்த்துக் கொள்வார். இனிப்புச் சுவையை உணரும் தன்மையை நாக்கு இழக்கும்போது நீங்கள் அதிகமான இனிப்பை தேடத் தொடங்குகிறீர்கள்.

குண்டானவர்கள் அதிகமாக இனிப்பை விரும்புகிறார்கள் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். ஆனால் குண்டானவர்களுக்கும், மெலிந்தவர்களுக்கும் இனிப்புச் சுவையறியும் தன்மையில் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதை அறிவதில் இந்த ஆய்வு முக்கியமானது. பென்ஸில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஹாஜ்நால் மற்றும் பீட்டர் கோவாக்ஸ் ஆகிய இருவரும் OLETF மற்றும் LETO வகை எலிகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகளைச் செய்தனர். குண்டானவர்களின் பண்புகளை OLETF எலிகள் வெளிப்படுத்தின. தொடக்கத்தில் சாதாரணமான உடல் எடைகொண்டிருந்த இந்த எலிகள் உணவில் திருப்தியடையாததால் மேலும் மேலும் சாப்பிட்டு குண்டாகிப் போயின; அதனால் நீரிழிவு நோய்க்கும் ஆளாகிப் போயின. OLETF எலிகள் மட்டும் அதிகமான இனிப்பை கேட்டு வாங்கிச் சாப்பிட்டன.

fatஉடல் பருமன் அதிகமாகிப்போகும் போது, அதிகமாகச் சாப்பிட வேண்டாம் என்றும், அதிக கலோரி உணவை தவிர்க்கவும் என்றெல்லாம் மூளை அறிவுரை கூறும். ஆனால் குண்டானவர்களின் மூளை இவ்வாறு அறிவுரை கூறும் திறனை இழந்து விடுகிறது என்கிறார் விஞ்ஞானி ஹாஜ்நால். உப்புச்சுவை, புளிப்புச்சுவை, சாதாரண நீர், ஆறுவகையான அடர்த்தி கொண்ட சர்க்கரை ஆகியவற்றை எலிகளின் நாக்கு உணரும்போது அவற்றின் மூளையின் நரம்பணுக்களின் தூண்டலை அறிய மின்வாய்கள் பொருத்தப்பட்டன. நாவின் மேற்பரப்பிற்குரிய செய்திகளை உணரும் மூளையின் பகுதிக்கு pontine parabrachial nucleus (PBN) என்று பெயர். இனிப்புச்சுவையை நாவிற்கு அறிமுகப்படுத்துபோது LETO வகை எலிகள் 100 தூண்டல்களை PBN பகுதிக்கு கொண்டு சென்றன. OLETF வகை எலிகள் 5 தூண்டல்களை மட்டுமே மூளைக்கு கொண்டு சென்றன. இதிலிருந்து OLETF வகை எலிகள் இனிப்பை உணரும் தன்மையை குறைவாகப் பெற்றிருந்தன என்பது தெரிய வந்தது. ஆனால் உப்புருசியை அறியும் தன்மையில் இரண்டுவகை எலிகளும் ஒன்றுபோல் இருந்தது.

டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதை பேராசிரியர் ஹாஜ்நால் சுட்டிக்காட்டுகிறார்.

இதன் விளைவாக நடப்பது என்ன? குறைவாக சாப்பிடவேண்டிய குண்டான மனிதன் மேலும் ஒரு கரண்டி சர்க்கரையை காப்பியில் சேர்த்துக் கொள்வான்!

தகவல்: மு.குருமூர்த்தி

Pin It