ஆஸ்திரேலியா கேன்பரா மருத்துவமனையில் தொற்றுநோய்ப் பிரிவில் இருந்த டாக்டர் எஸ் சஞ்சய சேனநாயக்கிற்கு (Dr S.Sanjaya Senanayake) அதே மருத்துவமனையில் மற்றொரு இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த டாக்டர் ஹரிப்ரியா பாண்டியிடம் இருந்து (Dr Hari Priya Bandi) அலைபேசியில் அழைப்பு வரும்வரை அன்றைய தினம் அவருக்கு வழக்கம்போல ஒரு சாதாரண நாளாகவே இருந்தது.

ஹரி ப்ரியா பாண்டி “ஓ! கடவுளே! நீங்கள் நம்ப மாட்டீர்கள். இப்போது நான் இந்த பெண்மணியின் மூளையில் கண்டுபிடித்துள்ளதை சொன்னால், நீங்கள் நம்ப மாட்டீர்கள்! அது உயிருடன் நெளிந்து கொண்டிருக்கிறது!” என்றார். ஹரி ப்ரியா அந்த நோயாளியின் மூளையில் இருந்து அந்த கணம்தான் எட்டு சென்டிமீட்டர் நீளமுள்ள உயிருள்ள உருளைப்புழுவை அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்தார்.

அடுத்து எந்ன செய்வது என்பது பற்றி ஆலோசிக்க அவர் உடனே சேனநாயக் மற்றும் பிற மருத்துவ நண்பர்களை அழைத்தார். அந்த நோயாளி நியூசவுத்வேல்ஸின் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்த 64 வயது பெண்மணி. மூன்று வார வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான வறட்டு இருமல், காய்ச்சல் மற்றும் இரவில் இடைவிடாமல் ஏற்பட்ட வியர்வையால் பாதிக்கப்பட்டு, 2021 ஜனவரி பிற்பகுதியில் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.Ophidascaris robertsi larvae2022ல் மறதி மற்றும் மன அழுத்தம் போன்றவையும் ஏற்பட்டது. தொடர்ந்து கேன்பரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். MRI scan-ஐப் பயன்படுத்தி பரிசோதித்தபோது அவருடைய மூளையில் ஏதோ வித்தியாசமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அறுவை சிகிச்சை நடந்தது. அப்போதுதான் மூளையில் உருளைப்புழு ஒன்று உயிருடன் நெளிந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அரிய நிகழ்வு

நரம்பியல் நிபுணர்கள் வழக்கமாக மூளையில் ஏற்படும் தொற்றுகளையே ஆராய்வர். ஆனால் இது ஒருவரின் தொழில் வாழ்வில் எப்போதேனும் ஒரு முறை மட்டுமே நிகழக்கூடிய அபூர்வ சம்பவம். ஹரி ப்ரியாவின் கண்டுபிடிப்பை எவரும் எதிர்பார்க்கவில்லை. வியப்பை ஏற்படுத்திய இந்த கண்டுபிடிப்பு மருத்துவமனையில் இருந்த எல்லோரையும், புழு எவ்வாறு மூளையில் உயிருடன் புகுந்தது, அந்த பழுப்பு நிற உருளைப்புழு எந்த வகையைச் சேர்ந்தது, அடுத்து கொடுக்க வேண்டிய தொடர் சிகிச்சைகள் என்ன என்பது பற்றி உடனே ஆராய வைத்தது.

எல்லோரும் ஆய்வு நூல்களை அலசி ஆராய்ந்தனர். பல்வேறு விதமான உருளைப் புழுக்கள் உடலில் நுழைந்து நரம்பியல் ஆக்ரமிப்பு நடத்துவது மற்றும் இதனால் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றிய கேள்விகளுக்கு விடை தேடினர். முயற்சிகள் பலன் காணவில்லை. வெளியில் இருந்த வல்லுநர்களைத் தொடர்புகொள்ள முடிவு செய்தனர். உயிருடன் இருந்த புழுவை, இது போன்ற ஒட்டுண்ணிகளை ஆராய்வதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற ஆஸ்திரேலியா தேசிய உயிர்ப் பன்மயத்தன்மை உயர் ஆய்வு மையத்திற்கு (CSIRO) அனுப்பினர்.

அபிடஸ்காரிஸ் ராபர்ட்சி

உலகில் முதல்முறையாக மனித மூளைக்குள் புகுந்த அந்தப் புழுவின் அறிவியல் பெயர் அபிடஸ்ஸ்காரிஸ் ராபட்ர்சி (Ophidascaris robertsi). இது வழக்கமாக மலைப்பாம்புகளின் உடலில் காணப்படும் ஓர் ஒட்டுண்ணி. உலகில் மனித உடலில் உயிருடன் உள்ள புழு கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. நோயாளி கார்பெட் வகை மலைப்பாம்புகள் வாழும் ஓர் ஏரிப்பகுதிக்கு அருகில் வசிக்கிறார்.

பாம்புகளுடன் நேரடியாக தொடர்புகள் இல்லையென்றாலும் அவர் அடிக்கடி ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்திருக்கும் வாரிகல் (warrigal) என்ற தாவரத்தின் இலைகளை சமைக்கப் பயன்படுத்துவார். இதுபற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள், பாம்பு தன் கழிவின் மூலம் ஒட்டுண்ணியை செடியின் மீது இட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். நேரடியாக தொடுதல் அல்லது உணவாக சாப்பிட்டதால் ஒட்டுண்ணி நோயாளியின் உடலில் நுழைந்தது என்று கருதப்படுகிறது.

சிகிச்சை

கல்லீரல் போன்ற மற்ற உடற்பகுதிகளில் வேறு புழுக்கள் நுழைந்துள்ளனவா என்பது பற்றி ஆராயப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது போல நிகழ்ந்துள்ள உலகின் முதல் நோயாளி இவரே என்பதால் இதற்கான சிகிச்சை பற்றிய முன் அனுபவங்கள் எதுவும் இல்லை. இதனால் மருந்துகள் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டன என்று டாக்டர் சஞ்சய கூறுகிறார். கார்ப்பெட் வகை மலைப்பாம்புகளில் இந்த வகை ஒட்டுண்ணிகள் அதிக அளவில் வாழ்கின்றன.

நோயாளி நல்ல முறையில் ஆரோக்கியத்துடன் உள்ளார். தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார். இது பற்றிய விரிவான தகவல் தொற்றுகளால் பரவும் நோய்கள் (Emerging Infectious deceases) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. தற்போதுள்ள அல்லது புதிதாக உலகில் தோன்றும் நோய்களில் நான்கில் மூன்று பகுதி நோய்களும் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்குப் பரவுகின்றன என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.

முப்பது ஆண்டில் முப்பது நோய்கள்

இந்த கண்டுபிடிப்பு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவும் ஆபத்தை எடுத்துக் காட்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மனித, விலங்குகளின் வாழிடங்கள் நெருக்கமாகி விட்டதும் இதற்குக் காரணம். கடந்த முப்பது ஆண்டுகளில் முப்பது புதிய தொற்றுகள் உலகில் ஏற்பட்டுள்ளன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கொரோனா வைரஸ். இந்த உருளைப்புழு தொற்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவதில்லை என்பதால் இது கொரோனா அல்லது எபோலா போல கொள்ளை நோயாக மாற வாய்ப்பில்லை.

என்றாலும் இந்த இனப் பாம்புகளும் இந்த வகை உருளைப்புழுக்களும் உலகில் மற்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. மிக அரிதாக விலங்குகளால் ஏற்படும் தொற்றுநோய்கள் பல சமயங்களில் கண்டறியப்படாமலேயே போவதுண்டு. கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றுக்குரிய சிகிச்சை பற்றி மருத்துவர்களுக்குத் தெரிவதில்லை. சில சமயம் காரணம் கண்டுபிடிக்கப்படாமலேயே நோயாளி இறந்து விடுகிறார் என்று பேராசிரியர் மற்றும் மருத்துவ நிபுணர் பீட்டர் காலின்யான் (Prof Peter Collignon) கூறுகிறார்.

தீர்வு

சுற்றுச்சூழலில் விலங்குகளிடம் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். உணவுக்காகப் பயன்படுத்தும் பொருட்களை நன்றாகக் கழுவ வேண்டும். சரியான முறையில் சமைக்க வேண்டும். உடல் முழுவதையும் மறைக்கும் நீண்ட ஆடைகளை அணிய வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வதால் இப்போது நிகழ்ந்துள்ளது போன்ற அரிதான, ஆனால் மிக ஆபத்தான சம்பவங்கள் வருங்காலத்தில் ஏற்படாமல் தடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேற்கோள்https://www.theguardian.com/australia-news/2023/aug/28/live-worm-living-womans-brain-australia-depression-forgetfulness?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It