மனித சமூகம் கலப்பில்லாமல் தனித்தனி குழுக்களாக வாழ்ந்திருந்தால் மற்ற டைனோசர்கள் உள்ளிட்ட பல உயிரினங்களைப் போல காலப் போக்கில் கரைந்து போயிருக்கக்கூடும்.
ஜாதியப் பெருமை பேசி ஜாதியக் கலப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ‘மனுவாதிகள்’ கருத்துகளை அறிவியல் ரீதியாக தகர்த்து எறிந்துள்ள மரபணு ஆய்வாளருக்கு இப்போது நோபல் பரிசு கிடைத்துள்ளது; அவரது பெயர் சுவாந்தே பாபோ.
மருத்துவப் பிரிவில் 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மரபியல் ஆய்வாளர் சுவாந்தே பாபோ-விற்கு அறிவிக்கப் பட்டுள்ளது. உலகில் இனத்தூய்மை வாதத்திற்கு இடமில்லை, இனக்கலப்பு இல்லாத ஒரு மனித இனம் உலகில் இல்லவே இல்லை என்பதை டி.என்.ஏ. ஆய்வுகள் மூலம் நிரூபித்ததற்காக சுவாந்தே பாபோவிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடவுள்தான் உலகைப் படைத்தார், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்களையும் படைத்தார், மரம், செடி, கொடிகளை படைத்தார் என்பது உலகில் இதுவரை தோன்றிய அனைத்து மதங்களும் கூறியிருக்கும் கட்டுக்கதைகள். ஆனால் பால்வெளியில் ஒரு பெரு வெடிப்பு நிகழ்ந்தது, அதில் இருந்து கோள்கள் தோன்றின. லட்சக்கணக்கான ஒளி ஆண்டுகளில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களால் பூமியில் ஒரு செல் உயிரினங்கள் உருவாகின. அதிலிருந்து நீர்வாழ் உயிரினங்கள் தோன்றின. பின்னர் நிலத்திலும் வாழும் தகவமைப்பை உயிரினங்கள் பெற்றன. அந்த வரிசையில் சுமார் 55 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் குரங்கு இனம் தோன்றியது. குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தோன்றினான் என்கிறது அறிவியல். இவற்றை மதங்கள் முதலில் ஏற்க மறுத்தாலும் பின்னர், ஆமாம் அறிவியல் கூறுவதுதான் சரி என்று ஏற்க வேண்டிய நிலை உருவானது.
அறிவியலுக்கு ஒவ்வாத பிற்போக்குத்தனங்கள், மூட நம்பிக்கைகள், பாலினப் பாகுபாடுகள் எல்லா மதங்களிலும் நிறைந்திருந்தாலும், அடிமைத் தனத்தை ஆணிவேராகக் கொண்டு மானுட சமூகத்தைப் பிளவுபடுத்தும் கோட்பாடுகள் நிரம்பப் பெற்ற ஒரே மதமாக இந்து மதம்தான் இருக்கிறது. இந்து மதத்தைத் தவிர, உலகில் வேறு எந்த மதமும் மனிதர்களுக்குள் ஒருவர் உயர்ந்தவர், மற்றொருவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டினை நிறுவவில்லை. கடவுள் மனிதர்களை சமமாக படைக்கவில்லை என்றும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால் வர்ணங்களாகப் படைத்தார் என்றும் இந்து மதம் ஒன்றே கூறுகிறது. அதிலும் மேலே ஒருவர், கீழே ஒருவர் என அடுக்கு முறை சமுதாயமாகத்தான் கடவுள் படைத்தார், கடவுளே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது என்றும் வேத புராணங்கள் கூறுகின்றன. இந்த அடுக்குமுறை சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் கலந்துவிடக்கூடாது, அவர் ஜாதிக்குள், அவரவர் உட் பிரிவுக்குள்தான் இரத்தக் கலப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் ஜாதிப் புனிதம் கெட்டு விடும், மதப்புனிதம் கெட்டுவிடும் என்றும் மானுட சமூகத்தைப் பிளவுபடுத்தி வைத்துள்ளது பார்ப்பனியம்.
மதத்தின் பெயரால் தூய்மைவாதம் பேசுவதற்கு பார்ப்பனியம் ஜாதித் தூய்மைவாதத்தைத்தான் அளவு கோலாய் வைத்திருக்கிறது. இனத் தூய்மைவாதம் பேசுவதற்கு சில தமிழ்தேசியர்களும் ஜாதித் தூய்மை வாதத்தைத்தான் அளவுகோலாய் வைத்திருக்கின்றனர்.
இவர்களின் அடிப்படையற்ற, அறிவியலுக்கு முரணான கருத்துக்களை எப்போதும் எதிர்ப்பதே பெரியாரியம். யார் யாரை விரும்ப வேண்டும், யார் யாரை மணம் முடிக்க வேண்டும் என்பதெல்லாம் சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டும் தொடர் புடையது. இதில் தலையிட மதத்திற்கோ, ஜாதிக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ உரிமையில்லை என்று பேசுவதுதான் மானுடத்தின் பக்கம் நிற்கும் அறச்செயல்.
இல்லையில்லை... எங்களுக்கு மானுடப் பற்றெல் லாம் கிடையாது... மதப்பற்றும் ஜாதிப் பற்றும் இனப் பற்றும் மட்டுமே போதும் என்று பழமைவாதம் பேசு வோருக்கு பேரிடி கொடுத்திருக்கிறார் சுவீடனைச் சேர்ந்த மரபியல் ஆராய்ச்சியாளர் சுவாந்தே பாபோ. ஆதிகால மனிதர்களைப் பற்றிய இவரது ஆய்வு முடிவுகள், இனி உலகில் இனத் தூய்மைவாதம் பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை ஆணித்தரமாய் உறுதி செய்திருக்கின்றன.
உலகில் முதல் மனித இனம் 3 இலட்சம் ஆண்டு களுக்கு முன்பு ஆப்ரிக்காவில் தோன்றியது என இதுவரையிலான அறிவியல் ஆய்வுகள் கூறியிருக் கின்றன. இந்த ஆப்ரிக்க மனித குழுக்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியா வழியாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளனர். ஆனால் ஆப்ரிக்க இனக்குழுவை சேர்ந்தவர்கள் ஐரோப்பாவையும், ஆசியாவையும் அடையும் முன்பு அங்கெல்லாம் அதற்குமுன் மனிதர்கள் இல்லையா? இருந்தார்களா? என்பதற்கான குறிப்பிடத்தகுந்த ஆதாரங்கள் இதுவரை கிடைக்காமலேயே இருந்தன.
1856ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியாண்டர்தால் என்னும் இடத்தில் ஆதிகால மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை மனித எலும்புக் கூடுகள் போலவே இருந்தாலும் சில வித்தியாசங்கள் இருந்ததால், மனித இனத்திற்கு நெருக்கமான எலும்புக்கூடுகள் என்றுதான் அறிவியலாளர்கள் நிறுவினர். இந்த நியாண்டர்தால் இனக்குழுவின் எலும்புக்கூடுகளுடன், இன்றைய மனிதர்களுடைய மாதிரிகளை ஒப்பிட்டு சுவாந்தே பாபோ டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் நியாண்டர்தால் இனக்குழுவும், ஆப்ரிக்க இனக் குழுவும் கலந்து சுமார் 20,000 வருடங்கள் வாழ்ந்திருக் கிறார்கள் என்பதை பாபோ உறுதி செய்திருக்கிறார். அதாவது இரு குழுக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து இனப்பெருக்கம் நடந்திருக்கிறது என்பதை ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேபோல 2008ஆம் ஆண்டு சைபீரிய மலை களில் சில எலும்புக்கூடு பாகங்கள் கிடைத்தன. டெனிசோவா குகையில் கிடைத்த இந்த எலும்புக் கூடுகள் சுமார் 40,000 ஆண்டுகள் பழமையானது என்பதும், அவை விரல் எலும்பின் பாகங்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்தது. அவையும் மனித எலும்புக்கூடுகள் போலவே இருந்தாலும், சில வித்தியாசங்களால், அறிவியலாளர்களால் மனித எலும்புகள்தான் என்று அறுதியிட்டு கூற இயலவில்லை. சுவாந்தே பாபோ தனது டி.என்.ஏ. ஆராய்ச்சியில் அவர்கள் நியாண்டர்தால் இனமும் இல்லை, ஆப்ரிக்க இனமும் இல்லை புதிய இனம் என்பதை கண்டுபிடித்தார்.
ஆப்ரிக்க மனித குழுக்கள் நியாண்டர்தால் குழுக்களுடன் கலந்து பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததைப் போல, ஆசியாவிற்குள் நுழைந்து டெனிசோவா குழுக்களை சேர்ந்தவர்களுடனும் ரத்த கலப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதை சுவாந்தே பாபோ ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளார். அதற்குப் பிறகு ஆப்ரிக்க இனக்குழுக்களை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் சுமார் 6 விழுக்காட் டினருடன் டெனிசோவா இனத்தை சேர்ந்தவர்களின் டி.என்.ஏ. ஒத்துப் போகிறது. குறிப்பாக இன்றைய திபெத் மக்களிடம் அதிகமாக ஒத்துப்போகிறது. அதேபோல ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழும் இன்றைய மனித இனத்தின் டி.என்.ஏ.க்களுடன் நியாண்டர்தால் இனக்குழுவின் டி.என்.ஏ. 1-4ரூ ஒத்துப்போகிறது. இந்த அறிவியல் உண்மைகளை பாபோ உலகுக்கு அறிவித்த அருஞ்செயலுக்காகவே 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகில் கலப்பு இல்லாத ஒரு மனித இனம் இல்லை என்பது மட்டுமே பாபோவின் ஆய்வு முடிவு அல்ல. ஒரு குழு மற்றொரு குழுவுடன் இணைந்ததால் இன்றைய மனித சமூகத்திற்கு சில நல்ல ஜீன்கள் கிடைத்திருக்கின்றன என்பதும் அவரது ஆய்வில் வெளிப்பட்ட முக்கிய தகவல்களாகும். தென்கிழக்கு ஆசியாவில் மலைப்பாங்கான பகுதிகளில் வாழும் மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, டெனிசோவா இனக்குழுக்கள் உடனான ரத்த கலப்பு உதவியிருக்கிறது என்பதை பாபோ தனது ஆய்வில் மெய்ப்பித்திருக்கிறார்.
அலர்ஜியை கண்டுபிடிப்பது, வைரஸ் நோய் களுக்கு எதிரான போரிடும் தன்மை போன்றவை வெவ்வேறு மனித இனக்குழுக்களின் கலப்பினால் கிடைத்த நன்மைகள் என்றும் பாபோ ஆய்வில் கூறி யிருக்கிறார். எனவே மனித சமூகம் கலப்பில்லாமல் தனித்தனி குழுக்களாக வாழ்ந்திருந்தால் டைனோசர்கள் உள்ளிட்ட பல உயிரினங்களைப் போல காலப்போக்கில் கரைந்து போயிருக்கக்கூடும். பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் மனித இனத்திற்கு இனக்கலப்பால் எதிர்காலத்தில் மேலும் பல நன்மைகள் கிடைக்கக்கூடும் என்ற முடிவுக்கும் நம்மால் வர முடிகிறது. எனவே ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ, இனத்தின் பெயராலோ இரு மனங் களின் விருப்பங்களுக்கு தடைபோடுவது, மனித இன வரலாற்றிற்கும், எதிர்கால பரிணாம வளர்ச்சிக்கும் விரோதமான செயல் என்பதை மதவாதிகள், ஜாதியவாதிகள், இனவாதிகள் உணர வேண்டும்.
இனக்கலப்பு கூடவே கூடாது என்று இடைநிலை ஜாதிகளை நிர்பந்திக்கும் செயலை பார்ப்பனியம் இப்போதும் செய்கிறது. ஆனால் அவர்களின் சந்த்திகள், கடல் தாண்டக்கூடாது என்ற மனுவின் கட்டளைகளை காற்றில் பறக்கவிட்டு இன்றைக்கு உலகம் முழுவதும் பரவிவிட்டனர். அமெரிக்கா, ஐரோப்பாவில் லட்சங்கள், கோடிகளில் ஊதியம் பெறும் அவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி மதம், இனத்தை தூக்கி தூர வீசிவிட்டு ரத்த கலப்பு செய்துகொள்கிறார்கள். கமலா ஹாரிஸுக்கு அவர்கள் உரிமை கொண்டாடும் விதமே அதற்கு சிறந்த சான்றாகும். ஆஸ்திரேலியாவில் குடியேறிய தமிழ்நாட்டு பார்ப்பன பெண் ஒருவர் அந்நாட்டு பிரபல கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லை சமீபத்தில் திருமணம் முடித்தபோதும், இது மத புனிதத்தைக் கெடுக்கும் செயல் என்று அவர்கள் வசைபாட வில்லை, மாறாக கொண்டாடவே செய்தார்கள். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் இருந்து இதுபோன்ற நூற்றுக்கணக்கான உதாரணங்களை அடுக்கிவிட முடியும். எனவே ஜாதித்தூய்மை, இனத்தூய்மை என்பதெல்லாம் வளர்ச்சிக்கும், வாழ்வியலுக்கும் உதவாது என்பது பார்ப்பனர்களுக்கு நன்றாகவே தெரியும். இடைநிலை சமூகங்களும் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஜாதியும், எந்த மதமும் இனத்தூய்மை பேசு வதற்கு இனி இடமில்லை, மனிதன் ஆதிகாலத்தில் தோன்றியபோதே அனைத்து இனங்களிலும் ரத்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டது. எல்லா இனங்களிலும் ரத்தக்கலப்பு ஏற்பட்டுவிட்டது என்றாலே அது எல்லா மதங்களுக்கும், எல்லா ஜாதிகளுக்கும் பொருந்தும். அதுதான் சுவாந்தே பாபோவின் ஆய்வுகளில் இருந்து மதச் சங்கங்களும், ஜாதியவாத அமைப்புகளும் உணர்ந்து திருந்த வேண்டிய செய்தி.
- ர.பிரகாசு