கதாநாயகனைப் புரிந்து கொள்ளாமல் இடைவேளை வரை சண்டைப்போட்டுக் கொண்டேயிருந்த கதாநாயகி, அவன் இரத்தானம் செய்திருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் அப்படியே மனம் கரைந்து அவன்மேல் மையல் கொள்கிறாள். எழுபதுகளில் எடுக்கப்பட்ட பழைய கலர் தமிழ்ப்படத்தில் இப்படி ஒரு காட்சி அமைப்பு. இப்போது பார்த்தபோது எனக்குக் காமெடியாக இருந்தது. இரத்ததானம் செய்வதெல்லாம் இப்போது சர்வசாதாரணம். சிலர் தொழிலாகவே செய்து வருகிறார்கள். சிறுநீரகங்கள் விலைக்கு விற்கப்படும் இந்நாளில் இரத்த தானமெல்லாம் எந்த மூலைக்கு?
விலைக்கு உடலுறுப்புகளை விற்பதை குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். விலைமதிப்பில்லாத உடல் உறுப்புகளின் முக்கியத்துவத்தை, அதைப் பெறத் துடித்துக் கொண்டிருக்கும் நோயரைக் கேட்டால்தான் தெரியும். எவ்வளவு விலையானாலும் பராவாயில்லை உறுப்பு கிடைக்காதா? என்று காத்திருப்போரின் வரிசை மிக நீளமாகிக் கொண்டெ வருகிறது. ஆண்டுதோறும் உலகெங்கிலும் 200 மில்லியன் பேர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. உறுப்பினை வெட்டி நீக்கிவிட்டு அந்த இடத்தில் தானம் பெற்ற உறுப்பை பொறுத்தும் தொழில்நுட்பம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. டயாலிஸிஸ் மூலம் பல உயிர்களை இழுத்துப் பிடித்துக் காப்பாற்றியது ஒரு காலம். அது பூரண சிகிச்சை அல்ல. எந்திரத்தையே நம்பி வாழும் சிறை வாழ்க்கை அது.
செயலிழந்த உறுப்புக்கு பதிலாக அவரவர் உடலிலிருந்தே திசுக்களை எடுத்து அதை செயற்கையாக வெளியே உறுப்பாக வளர்த்து பின் அவருக்கே பொறுத்துவது இன்றைய டெக்னாலஜி. திசு பொறியியல் மருத்துவத்துறையில் இன்று ராஜ நடைபோடுகிறது. அதிக வேலைவாய்ப்பும், லாபமும் உள்ள தொழில்நுட்பமாக இது வளர்ந்து கொண்டிருக்கிறது.
திசுப்பொறியியல்
செயற்கையாக மனிதத் தோலை கண்ணாடித் தட்டுகளில் வளர்க்கிறார்கள், கெட்டித் திசுவாகிய கார்ட்டிலேஜ் எனப்படும் குறுத்தெலும்புகளை வளர்க்கிறார்கள். இதெல்லாம் மிகச் சுலபமான காரியங்களாகிவிட்டன. தீக்காயம் பட்டவர்களுக்குத் தேவையான மேல்தோலை உடலின் மறைவான இடத்திலிருந்து உரித்தெடுத்து பயன்படுத்துவதற்கு பதிலாக விரல்கட்டை அளவு தோலை எடுத்து திரவத் தொட்டியில் வளர்த்து, ஏடு ஏடாக எடுத்து காயங்களின் மேல் போர்த்துகிறார்கள். இதுபோலவே சிறுநீர்ப்பை, கண் கருவிழி (கார்னியா) மூச்சுக் குழல், இரத்தக்குழாய் போன்றவைகளை தொட்டிகளில் வளர்க்கும் தொழில் நுட்பம் முடிவடையும் நிலையிலிருக்கிறது. பிளாடர், கார்னியா, தசைநார், குறுத்தெலும்பு ஆகியவை ஒரேமாதிரி திசுத்தொகுப்பால் ஆகிய எளிய உறுப்புகள். உறுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் திசுக்கொத்து என்றுதான் சொல்லவேண்டும்.
கொஞ்சம் திசுக்களை சிறுநீரகத்திலிருந்து அல்லது இதயத்திலிருந்து கிள்ளி எடுத்து, அதை முழு இதயம் அல்லது சிறுநீரகமாக உருவாக்க முடியுமா? என்பது உடனடியாக பதில் சொல்ல முடியாத கேள்வி. ஒரு உறுப்பு முழுக்க முழுக்க ஒரே மாதிரியான திசுவால் ஆக்கப்பட்டது என்றால் அதைப்பிசைந்து, மடக்கி, முறுக்கி; காது, மூக்கு போன்ற உறுப்புகளாக செய்து கொள்ளலாம். கல்லீரல், இதயம், கணையம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் அப்படிப்பட்டவை அல்ல.
கார்ட்டிலேஜ் அல்லது தோல் திசுக்களில் உள்ள செல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக குடிசை மாற்று வாரியம் கட்டித்தந்த தொகுப்பு மனைகள் போல இருக்கின்றன. சிறுநீரகம் அல்லது கல்லீரல் மிகப்பெரிய மாளிகை அல்லது மருத்துவமனையைக் கட்டுவதுபோன்ற காரியமாகும். அமைப்பும் சிக்கல், கட்டுமான பொருள்களும் வெவ்வேறானவை. எதன் பக்கத்தில் எது இருக்கவேண்டும் என்பது மிகவும் துல்லியமாக இருத்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக திசு முழுவதும் இரத்தக் குழாய்களால் இருந்தாக வேண்டும். எந்தத்திசுவானாலும், அது 100 மைக்ரான் தடிமனை தாண்டிவிட்டால் கட்டாயம் அதனுள் இரத்தக்குழாய்கள் விரவியிருக்க வேண்டும். திசுவைத் தயாரித்து பதியன் செய்த பின்னர் அது உயிருடன் வேலை செய்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன், குளுக்கோஸ் முதலியவற்றை டெலிவரி செய்ய இரத்தக் குழாய்கள் அவசியமில்லையா?
நிச்சயம் ஒருநாள், முழு உறுப்பையும் திசுப் பொறியியல் செய்தே தீரும். அதற்கு நெடுங்காலம் இல்லை. அதற்குள் வாழத்துடிக்கும் மில்லியன் கணக்கான நோயர்களுக்கு ஏதாவது இப்போது செய்தாகவேண்டுமே, அதற்காக இடைநிலை திசுப்பொறியியல் தொழில்நுட்பம் தயாராகிக் கொண்டிருக்கிறது. உறுப்புகள் முழுமையான வடிவத்துடன் இல்லாவிட்டாலும், என்ன வேலை செய்தாக வேண்டுமோ அந்த வேலையைச் செய்யத்தக்க ஏதாவது ஒரு வடிவில் அமைக்கப்படுகின்றன. இடையிடையே பிளாஸ்ட்டிக், ஹைட்ரோஜெல், சில்க் இழை போன்ற அந்நிய பொருள்களை ஆதாரப் பொருள்களாக, கட்டட சாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆறிக்கொண்டிருக்கும் புண்ணில்; தோல், எலும்பு, நரம்பு, இரத்தக்குழாய் ஆகியவை தானாக வரிசைக்கிரமமாக தோன்றுகின்றன பார்த்தீர்களா? வளரும் கருவில் இதயம், மூளை, கல்லீரல் முதலானவை அழகாக தாமாக வளருகின்றன என்பதையும் பாருங்கள். இவற்றைக் கூர்ந்து ஆராய்ந்தால் அதனடிப்படையில் செயற்கையாக உடம்புக்கு வெளியே உறுப்புகளை நம்மாலும் செய்ய முடியும்.
கல்லீரலின் கட்டுமானம்
மனித உடலுறுப்புகள் எந்த அளவுக்குச் சிக்கலானவை என்பதை கொஞ்சம் இங்கே கவனியுங்கள். உறுப்புகளின் வேலைகளுக்கு ஏற்ப அவற்றின் திசுவகைகளும், கட்டமைப்பும் மாறுபடுகின்றன. கல்லீரல்தான் உடம்பிலேயே மிகப்பெரிய உறுப்பு. இதன் வேலை இரத்தத்தை வடிகட்டுவது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இரத்தத்திலிருக்கும் நச்சுப்பொருள்களை நீக்குவது, ஜீரணமான உணவிலிருந்து ஊட்டப் பொருள்களை மேலும் சிறியதாக பகுப்பது, சுத்தம் செய்த இரத்தத்தை வெளியேற்ற அனுமதிப்பது. இதற்கேற்ப கல்லீரலின் நுண் அமைப்பு உள்ளது. அதன் முப்பரிமாண அமைப்பை படத்தில் பாருங்கள்.
அறுங்கோணவடிவ கற்றைகள் அடுக்கப்பட்டதுபோல கல்லீரல் திசு உள்ளது. ஒவ்வொரு கற்றையின் மையத்திலும் இரத்தக்குழாய் ஓடுகிறது. இதிலிருந்து அனேக இரத்தக்குழாய்கள் கிளைத்து சக்கர ஆரக்கால்கள் போல கற்றையின் விளிம்பு வரை வருகின்றன. இதன் ஊடே இரத்தம் வடிந்து இதயத்துக்குச் செல்லும் பாதையில் போகிறது. அறுங்கோண கற்றையின் ஒவ்வொரு கோணத்திலும் மூன்று குழாய்கள் ஓடுகின்றன. நடுவில் அகலமான சிரை. இடமும் வலமுமாக பித்தக்குழாயும், தமணியும் ஓடுகின்றன. இத்தகைய திட்டமான முப்பரிமாண அமைப்பில் அர்த்தமிருக்கிறது. கல்லீரலின் செயல்களின் வெற்றி இந்த அழகிய அமைப்பியல் அடங்கியிருக்கிறது. இப்படி ஒரு கட்டுமானத்தை மனிதனால் செயற்கையாக செய்ய முடியுமா?
இதயத்தசை
இதயத்தசை முழுவதும் நார் நாராக உள்ள திசுவால் நிரம்பியுள்ளது. நார்களுக்கு இடையே ஏகமாக கொல்லாஜன் என்ற கெட்டிப் பொருள் நிரம்பியுள்ளது. இதயத்தசை செல்நார்கள் சீராக கற்றை கற்றையாக வேய்ந்துள்ளன. நரம்பு செல்களிலிருந்து வெளிப்படும் தூண்டல்கள் கொல்லாஜன் பிடிமானத்தின் ஊடாகப் பரவி, இதயத் தசை நார்களைச் சுருக்கி விரியச் செய்கின்றது. இரத்தத்திலிருந்து ஊட்டமும் இதன் ஊடாகத்தின் கசிந்து பரவவேண்டும். இப்படி எல்லாம் முப்பரிமாண வடிவம் வழங்கா விட்டால் இதயத்தசை ஓய்வு ஓழிசலில்லாமல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக துடித்துக் கொண்டிருக்க முடியுமா? எல்லா திசுக்களுக்கும் ஓய்வு உண்டு இதயத்துக்கு உண்டா? முப்பரிமான திசுக்கட்டமைப்புகளை ஏற்படுத்தி முழு அங்கங்களை சோதனைச் சாலையில் உருவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை. இதற்கு என்னதான் மாற்று வழி என்று இனிப்பார்ப்போம்.
இரத்தக்குழாய்
கட்டைவிரல் கணத்திலிருந்து, மயிரைவிட 1000 மடங்கு மெல்லிய கனம் வரையில் இரத்தக்குழாய்கள் உடலில் பாய்கின்றன. ஒரு மில்லிமீட்டர் இடைவெளிக்குள் 10 இரத்தக் குழாய் தந்துகிகள் இருந்தால்தான் எந்தத் திசுவாலும் உயிர்பிழைக்கமுடியும். எனவே திசுக்கட்டமைப்பில் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை, எப்படி இரத்தக் குழாய்களை உருவாக்குவது என்பதாகும். ஒருவிதத்தில் திசுக்கட்டமைப்பு, கடிகாரம் செய்வதை விட சுலபம் என்று சொல்லலாம். கேமரா, வாட்ச் போன்ற கருவிகளின் உதிரிபாகங்கள் தானாக ஒன்று சேர்ந்து கருவியாக மாறுவதில்லை. ஆனால் உயிருடைய திசுக்களுக்கு தக்க சூழலை உருவாக்கித் தந்தால் போதும் மற்றதை அவைகளே பார்த்துக் கொள்ளும். மேஸ்த்திரி வேலை பார்க்க யாரும் தேவையில்லை. வரிவரியாக மேடும் பள்ளமும் உள்ள பரப்பில் எப்பித்திலீயல் வகை செல்களை வளரவிட்டால் அவை பள்ளங்களின் அணைப்புக் கேற்ப வரிவரியான இரத்தக்குழாய்களாக வளருகின்றன. இப்படி செய்வதை மைக்ரோ ஃபேப்ரிகேஷன் என்கிறார்கள்.
தக்க பரப்புகளையும், ஆதார அமைப்புகளையும் உருவாக்குவதில் மிகுதியான கவனம் செலுத்தப்படுகிறது. உயிருடைய பொருள் போலவேயுள்ள ஹைட்ரோஜெல் என்ற பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹைட்ரோஜெல் குணத்தில் கொல்லாஜன்திசு போலவே இருக்கிறது. சுற்றி வளரும் திசுக்களை பாதிக்காமல் அமைதியாக இருந்து வளர்வதற்கு இடம் தருகிறது. ஒரு ஆய்வகம், எலியின் இதயத்திலுள்ள செல்களை மட்டும் அப்படியே அலுங்காமல் கரைத்து நீக்கிவிட்டு செல்லின் இடையே காணப்படும் திடமான மேட்ரிக்ஸ்ûஸ மட்டும் எஞ்சி நிற்கும்படி செய்தது. எலியின் இதயம் இப்போது சிலந்தி ஒட்டடையால் ஆன கூடு போல மாறிவிட்டிருந்தது. அதன்மீது நோயரின் இதய செல்லை வளர்க்க விட்டதும் அது மேட்ரிக்ஸ் முழுவதும் நிரம்பி வளர்ந்து, "லப் டப்" என்று துடிக்க ஆரம்பித்தது. ஒன்று நிச்சயம், சக்கிதமான மேடரிக்ஸ் ஆதாரம் தயாரித்தவிட்டால் தசைகள் தானாகவே எழும்பிக்கொள்ளும்.
பிரின்ட்டிங் முறை
கம்யூட்டர் பிரின்ட்டரில் ஒரு வகை இங்க் ஜெட் பிரிண்டர் என்பது. அதில் ஊசித்துளை வழியாக இங்க் சிறு சிறு துளிகளாக தூவப்படும். இது தாளில் விழுந்து வடிவங்களாகும். அதே முறையில் திசுக்களுக்கான ஆதார சாரங்களை முப்பரிமானமாக உருவாக்குகிறார்கள். காற்று அல்லது வெளிச்சம் பட்டதும் அவை கெட்டியாகி விடுகின்றன. பின்னர் அதன் மீது செல்களை விதைத்து வளரவிடுகிறார்கள். இப்படி நிறைய உபாயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். திசு இஞ்சினியர்கள் ரொம்பவும் பிசியாக வேலை செய்கின்றனர். வெற்றி பெறும் தொழில் நுட்பம் உலகில் மிகப்பெரிய இலாபகரமான மருத்துவப் புரட்சியை செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.
வேர்செல்கள்
ஒருபக்கம் திசுக்கட்டுமான ஆதாரப் பொருள்களின் கண்டுபிடிப்பு நடந்து கொண்டிருக்கையில், வேறு ஆய்வுக்கூடங்கள் வேகமாகப் பல்கிப் பெருகும் வேர் ùச்லகளைப் பெறுவதில் கவனம் செலுத்துகின்றன. வேர் செல்களும் மனித உடம்பிலிருந்து எடுக்கப்படும் செல்களே. இவற்றிற்கு ஒரு குணம் உண்டு. தக்க தூண்டுதல் கொடுத்தல் இவை இஷ்டப்பட்ட திசுவாக வளரும். ஒரே வேர் செல்லைப் பெருக்கி அதிலிருந்து எல்லாத் திசுக்களையும் உருவாக்க முடியும்.
வேர் செல்களை வளரும் கருவிலிருந்து பெறுவது சிறப்பு. அதற்கு அசாத்திய "வேர்" நிலை உண்டு. வளர்ந்த உடம்பிலிருந்தும் வேர் செல்களைப் பெறலாம். அவை ஏற்கனவே முற்றிய நிலையில் இருப்பதால் அதிலிருந்து "எல்லா" வகை திசுக்களையும் பெறமுடியாது. முற்றிய வேர்செல் சுலபமாகக் கிடைத்துவிடும். கருவிலிருந்து பெறும் வேர்செல்லுக்கு கருவை சிதைக்க வேண்டும். எனவே கரு வேர் செல்களின் திறமையை உடம்பு வேர்செல்லுக்கு வழங்கும் ஆய்வுகள் இன்னொருபக்கம் நடந்தபடியுள்ளது. பல கோணங்களிலிருந்தும் புதுப்புது திட்டங்களும், தீர்வுகளும் வந்தவண்ண முள்ளன. சீக்கிரத்திலேயே அவை ஒரு நிலையில் குவிந்து, ஆர்டரின் பேரில் உடல் உறுப்புகளைத் தயார் செய்து தரும் தொழில் நுட்பமாக மாறும்.
ஏற்கனவே வெற்றிக் கோட்டினை எட்டியவை:
தோல்: நோயரின் தோலிலிருந்தே எடுத்த செல்களைப் பயன்படுத்தி செயற்கையாக எப்பிடெர்மிஸ் என்ற மேல் தோலை "எப்பி செல்" கம்பெனி தயாரித்து விற்கிறது. ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
கார்ட்டிலேஜ்: குறுத்தெலும்பு என்பார்கள். நோயரின் உடம்பிலிருந்து கான்ட்ரோ சைட்டுகளை எடுத்து குப்பிகளில் ஜெல் மாதிரி வளர்த்து, ஊசி மூலம் தேவைப்பட்ட இடத்தில் இஞ்செக்ஷன் செய்கிறார்கள். உணவு-மருந்து-நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று கார்ட்டிசெல் என்ற பெயரில் விற்கப்படுகிறது. துண்டுக் குழாய்கள்: வேஸ்க்குஜெல் என்பது சொந்த எப்பித்தீலியத்திலிருந்து உருவாக்கப்பட்ட செயற்கை ரத்தக்குழாய். நைந்து கொண்டிருக்கும் இரத்தக் குழாய்மீது விரித்து விட்டால், இது தானாக செப்பனிட்டு குழாயை உறுதிபடுத்திவிடும்.
இரத்தக்குழாய் செய்தல்
கொஞ்ச நேரம் ஆக்ஸிஜன் சப்ளை இல்லாவிட்டால் எந்தத் திசுவும் உயிருடன் இருக்காது. இரண்டு அடுக்கு மட்டுமே உடைய திசுவாக இருந்தாலும் அதற்கிடையில் இரத்தக்குழாய்கள் இருந்தாக வேண்டும். எனவே திசுப்பொறியியலில் முதலில் செய்ய வேண்டியது வேண்டிய அளவில், வடிவில் இரத்தக்குழாய்களை திசுக்களுக்கிடையில் உருவாக்குவது.
நேனோ பரப்பு
செல்கள் வளர்ந்து கூட்டமாக இருக்கும்போது அக்கம்பக்கத்திலிருந்து வரும் கெமிக்கல் சிக்னல்களின் தூண்டுதல் மற்றும் பக்கத்து செல்லின் செயல் ஆகியவற்றைப் பொருத்து தம் உருவத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்கின்றன. அவை பரவிக் கொண்டிருக்கும் பரப்பின் பள்ளம் மேடுகளுக்கேற்பவும் வடிவத்தை செய்து கொள்கின்றன. வரிவரியாக மேடு பள்ளங்களை 600 நேனோமீட்டர் ஆழமும் 1200 நேனோமீட்டர் இடைவெளியும் உள்ளபடி செய்து அதன்மீது எப்பித்தீலியல் செல்களை வளரவிட்டால், அவை தானாக குழாய் வடிவில் இணைந்து கொள்கின்றன. ஆறு நாட்களில் இரத்தக்குழாய் வலைபின்னலாக மாறிவிடுகின்றன.
மைக்ரோ ஃ பேப்ரிகேஷன்
இது கல்லீரலுக்குள்ளேயே வைத்து பதியன் செய்யக்கூடிய செயற்கை கல்லீரல் திசுக்கட்டுமானம். முழு கல்லீரலையும் மாற்றுவதற்குபதில் உள்ளேயே புதைத்து வைக்கும் கட்டுமானம்.
1. சிலிக்கான் பரப்பில் தேவைக்கேற்ப இரத்தக்குழாய் பாதையை செதுக்கி அதை அச்சாகப் பயன்படுத்துதல்
2. உடல் நட்புடைய பயோபாலிமரில் மாற்றிக் கொள்கிறார்கள். இதில் எப்பித்தீலிய செல்களை விதைத்து வளரவிட்டால் இரத்தக்குழாய் வலை பின்னலாகிவிடுகிறது.
3. இன்னொரு ஆதார பயோபாலிமரில் கல்லீரல் செல்களை வேண்டிய வடிவத்தில் பாத்திக் கட்டி வளர்க்கிறார்கள். முடிவில் குழாய் ஆதாரம், கல்லீரல் ஆதாரம் என மாற்றி மாற்றி ஒன்றன் மீது ஒன்று அடுக்கி செயற்கை கல்லீரல் கட்டமைப்பை செய்து கொள்கிறார்கள்
4. அதை நேரடியாக கல்லீரலில் புதைத்தால் மிக நேர்த்தியாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது.
- முனைவர். க. மணி. பேராசிரியர், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஆர்டரின் பேரில் உடல் உறுப்புகள்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்