கருவுற்றோருக்குத் தேவை வளையல்களா? விட்டமின்களா?

 எனது நெருங்கிய தோழி ஒருத்தி  மகளுக்கு வளைகாப்பு என்று எனக்கு அழைப்பு விடுக்க வந்திருந்தாள். பொண்ணு கல்யாணத்திற்காக வாங்கிய கடனையே இன்னும் முழுசா அடைக்கலே அதுக்குள்ள வளைகாப்புச் செலவு,  பிரசவச்செலவு என்று கண்ணைக்கட்டுது, கைல காசில்லை. வளைகாப்பு பண்ணவேண்டாம் வீட்டளவாவது பண்ணிட்டுவிடலாம்னு பார்த்தா மாப்பிள்ளை வீட்டில் ஊர் அழைச்சு பண்ண ணும்னு சொல்றாங்க, அக்கம்பக்கம் இருக்கறவங்க அதுக்கும்மேல, வாயிம், வயிருமா இருக்கற புள்ளைக்கு வாய்க்கு ருசியா வக்கனையா கட்டுச் சோறு (கலவைச்சோறு) செஞ்சுபோட்டு தெம்பு தேத்தி விடனும் அதுமட்டுமில்லாம வயிற்றில் கரு இருக்கும் போதே அனைத்து வகையான சுவையும் பழக்கப்படுத்த வேண்டும் அதைவிட்டுட்டு இதில் போய் காசுமிச்சம் பண்றேன்னு சொல்றேன்னு வாய்க்கு வந்தபடி என்னை பேசுகிறார்கள் என்று புலம்பினாள்..

புள்ளையக் கட்டிக்கொடுத்துட்டா புள்ளை நமக்குச் சொந்தமில்லை, புகுந்த வீட்டுக்குக்தான் சொந்தமுன்னு வக்கனையாப் பேசறாங்க... ஆனால் வளைகாப்புச் செலவு, பிரசவச்செலவு மட்டும் பிறந்த வீட்டில் தான் பண்ணணும்னு சொல்றாங்க என்ன நியாயமோ இது. மேற்கொண்டு கடன் வாங்க விருப்பம் இல்லை. இருந்தாலும் என்ன பண்றது மற்றவர்கள் கட்டாயத்துக்காகப் பண்ண வேண்டியது  இருக்கே என்று அங்கலாய்த்தாள்.

வளையல் சத்தம் வயிற்றில் இருக்கும் கருவுக்கு கேட்டுக்கொண்டிருப்பது நல்லது. கருவுற்றிருக்கும் பெண்ணின் ஆரோக்கியத்திற்காக, குழந்தையின் நலனிற்காகத்தான் வளைகாப்பு என்று அவர்கள் எடுத்துரைத்த விசயங்கள் முற்றிலும் தவறு என்று கூறினேன்.

அப்படியா என ஆச்சிரியமாகக் கேட்டாள். ஆமாம், அவ்வளவாக அறிவியல் வளர்ச்சி இல்லாத பழங்காலத்தில் குழந்தைப் பிறப்பு என்பது தற்போது இருப்பது போல எளிதான விஷயம் அல்ல. ஒரு பெண் பிரசவத்திற்குப் பின் மீண்டு வருவதே பெரிய விஷயம். பிரசவத்தில் நிறைய மரணங்கள் நிகழும். திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இல்லாத காலகட்டத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்குத் தைரியம் கொடுக்கும் விதமாக குழந்தைப் பெற்ற பெண்கள் அனைவரும் ஒன்றுக் கூடி நாங்கள் பிரசவத்தைக் கடந்து உயிருடன் வந்தது போல நீயும் மீண்டு வருவாய் என்று வளையல்களை அணி வித்திருக்கலாம். பிழைப்பதே பெரு விஷயம் ஆதலால் புதுத்துணி, பலகாரம் போன்றவற்றை கொடுத்திருக்கலாம்.

ஆரோக்கியத்திற்கு எதிரான வளைகாப்பு

ஆனால், அறிவியல் வளர்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூட வளைகாப்பு நடத்துவதற்கு ஆணாதிக்கம்தான் காரணம். தான் தகப்பன் ஆகிவிட்டதையும், தன் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வருகிறது என்பதையும் ஊருக்கு ஒளிபரப்புவதற்கே இதைச் செய்கின்றனர்.  ஊட்டச்சத்து நிபுணர்கள், கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு புரதச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புசத்து, விட்டமின்கள் எல்லாம் கலந்த சரிவிகிதச் சமச்சீர் உணவையே பரிந்துரைக்கின்றனர். இதற்கு முற்றிலும் புறம்பாக வெறும் மாவுச்சத்தை (Carbohydrates) உள்ளடக்கிய உணவான கலவை சாதத்தின் மூலமாகக் கிடைக்கும் கலோரிகள் உடல் எடையை வேண்டெமானால் கூட்டும் வேறு எந்த பயனும் தாய்க்கோ, சேய்க்கோ இல்லை. இன்னும் சொல்கிறேன் கேள்...

அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சி யாளர்கள் ஒரு ஆரோக்கியமான தாயின் உடல்தான் ஆரோக்கியமான குழந்தைக்கு அஸ்திவாரம் என்று கூறுகிறார்கள். அவ்வாறே அறிவான, ஆரோக்கிய மான குழந்தை பிறக்கவேண்டும் என்று விரும்பும் பெண்கள் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கருவுறத்தீர்மானிக்கத் தொடங்கிய கணத்திலிருந்து தொடங்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

ஏனென்றால் இந்தியப்பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக் கணக்கெடுப் பின்படி ஏறத்தாழ 80 சதம் கருவுற்றிருக்கும் பெண்கள் இரும்புச்சத்துக் குறைபாடால் உண்டாகும் இரத்தச் சோகையால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். பால்கொடுக்கும் தாய்மார்களும், வளர் இளம்பெண்களும் இரத்தச் சோகையால் அவதியுறுகின்றனர்.. இந்தியப் பெண்கள் இந்திய ஆண்களைவிட 13 சதம் புரதச்சத்து குறைந்தும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடனும் காணப் படுகின்றனர். வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உண்டபின் உணவு எடுத்துக் கொள்வதும் இதற்கொரு காரணம். இதைத் தவிர்க்க வேண்டுமானால் பெண்கள் கருவைப்பற்றியும் கருவின் வளர்ச்சியில் உணவின் பங்களிப்பு பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும்.

கர்ப்ப கால உணவுகள்

ஒரு பெண்ணின் வயிற்றில் கரு 40 வாரங்கள் நீடிக்கும். இந்த கருவுற்றிருக்கும் காலகட்டத்தை மூன்று கட்டங்களாக அதாவது முதல் மூன்றுமாதம், இரண்டாவது மூன்றுமாதம், மூன்றாவது மூன்று மாதம் என பிரிப்பார்கள்.  மூன்று மாதங்கள் என்பது 12 - 13 வாரங்கள் உள்ளடங்கியதாக இருக்கும். இந்த ஒவ்வொரு கட்டத்திலும் கருவுற்றிருக்கும் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுமுறைகள், இந்த உணவை எடுத்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் தற்போது பார்க்கலாம்.

முதல் மூன்று மாதங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அசதி, அதீதசோர்வு, லேசான தலைசுற்றல் இருக்கும். ஒரு சிலருக்கு 45 நாட்கள் அல்லது இரண்டு மாதம் கூட வாந்தியும் இருக்கும். அவர்கள் மட்டும் எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளையும் மற்றவர்கள் சரி விகித சமச்சீர் ஊட்டச்சத்து உணவை  உட்கொள்ள வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் கருவுக்கு இதயம், நுரையீரல், கை, கால், மூளை, தண்டுவடம், மணிக் கட்டு, விரல்கள், எலும்பு, உள்காது, சதை, பல் முளைக்க ஏதுவாக எகிறு  ஆகியவை வளரும். மனிதமூளை முழுக்கக் கொழுப்பால் ஆனது. மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் கொலின் எனும் சத்து எளிதாக கிடைக்கக்கூடிய உணவு முட்டை. அன்றாட உணவில் 2 முட்டை கண்டிப்பாக இடம் பெறவேண்டும். சால்மன்வகை மீன்கள், மாட்டிறைச்சி, பன்றிமாமிசம், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் யோகர்ட் ஆகியவை இருக்க வேண்டும்.

இரண்டாவது மூன்று மாதங்கள்

ஹார்வார்டு மெடிக்கல் ஸ்கூல் அறிக்கைப்படி 4 மாதம் தொடங்கி 6 மாதம் வரை மீன்உணவுகளை குறிப்பாகப் பாதரச அளவு கம்மியான மீன் உணவுகளை உட்கொண்ட தாய்மார்களின் 6 மாதக் குழந்தைகள் அதிகளவு மூளைவளர்ச்சி பெற்றிருந்ததாக  தெரிவிக்கின்றனர்.

கருவுற்றப் பெண்களுக்கு விட்டமின்- டி குறை பாடு இருந்தால் பிறக்கும் குழந்தை மூளை செயல் திறன் குறைந்து காணப்படும் என்று கூறுகின்றனர்.  மீன் உணவுகளில் குறிப்பாக சால்மன் வகைமீன்கள் இயற்கையிலேயே (omega 3 fatty acids) மற்றும் அபிரிதமான விட்டமின் நிறைந்த உணவு இருப்பதால்  மூளைவளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

6 வது மாதவாக்கில் பித்தப்பையை அழுத்து வதால் வாயுப்பொருட்களை மட்டும் சற்றே குறைத்து உண்ணவேண்டும். மற்றபடி சர்க்கரை வல்லிக்கிழங்கு, முட்டை, கீரைவகைகள், மாட்டு இறைச்சி, பன்றிஇறைச்சி, சிக்கன், சீஸ், தானியங்கள் போன்றவை இருக்கவேண்டும். குழந்தையின் சிறுநீரகம் வேலை செய்யத் தொடங்கும். கரு மிகத் துடிப்பாக இருக்கும் தூங்கவும், விழிக்கவும் ஆரம்பிக்கும். மூளை முழுவீச்சில் வளரத் தொடங்கும், நுரையீரல் முழுவதுமாக வளர்ந்த நிலையை அடைந்திருக்கும்.

முன்றாவது மூன்று மாதங்கள்

ஒரு குழந்தையின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மூளையின் செயல்திறனுக்கான அஸ்திவாரமே இந்தக்கடைசி மூன்றுமாதத்தில் தான்கட்டமைக்கப்படுகிறது. பிரசிவிப்பதற்கு ஏதுவாக குழந்தையின் தலைகீழ் நோக்கி திரும்பத் தொடங்கும். குறைந்த கொழுப்பு உணவுகளை பிரசவகாலத்தில் உட்கொள்ளும் பொழுது எடை குறைவான குழந்தை பிறப்பதற்கும், எளிதில் நோய் தொற்றக் கூடியவகையிலும், சிலசமயங்களில் கருவிலேயே கலைவதுமான ஆபத்துகள் அதிகம்.

அதனால் கடைசி மூன்று மாதங்களில் மாட்டுஇறைச்சி, பன்றிஇறைச்சி, சிக்கன், விட்டமின் பி, முட்டை, தானியங்கள், காய்கறி, கீரை மற்றும் பழங்கள் ஆகியவை இணைந்து உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதமாதம் பரிந்துரைக்கும் உணவு முறைப் பட்டியல் இது. ஆனால், இந்தியாவிலோ ஒவ்வொரு உணவையும் கடவுளோடும், மதத்தோடும் இணைக்கின்றனர்.

இந்துக்களுக்கு மாட்டிறைச்சியை உண்ணக் கூடாது என்றும், “பசு நம்தாய் என்றும் போதிக் கின்றனர். மீன் உணவை மச்ச அவதாரமாகவும், பன்றி இறைச்சியை வராக அவதாரமாகவும் கூறுகின்றனர். நாங்க பெருமாள் கோயிலுக்கு முத்திரை போட்டிருக்கோம். அசைவ உணவு உட்கொள்ளக்கூடாது என்றும் பலபேர் சொல்வதை பார்க்கிறோம்.

இஸ்லாமியர்களும் இவ்வாறே. தோலைத் தனியாக பிரிக்க முடியாத, மனிதக் கழிவுகளை உண்ணும் பன்றி மாமிசத்தை உண்ணமாட்டோம் என்று உணவை மதத்தோடு தொடர்புபடுத்திக் கூறுகின்றனர். இன்னும் சிலர் சிக்கன் சாப்பிட்டால் உடம்பு சூடாகிவிடும். அசைவ உணவு ஜீரணம் ஆகாது. ஓவர் கொழுப்பு சாப்பிட்டால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே ரொம்ப ஊறிடும் (அதாவது எடை கூடிவிடும்) என்று பல வியாக்கியானங்களைக் கூறி அசைவ உணவை எடுத்துக்கொள்ள விடுவ தில்லை.

ஆனால், இந்து, முஸ்லீம், கிறித்துவம் என அனைத்து மதத்தினருமே கருவுற்றிருக்கும் பெண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவே முன்னோர்கள் வளைகாப்பு செய்யச் சொன்னார்கள் “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை” என்று கூறிக்கொண்டு புரதச்சத்து உணவுகளையும், ஊட்டச்சத்து உணவுகளையும் தவிர்த்த மாவுச் சத்தை மட்டுமே பெரும்பாலும் உள்ளடக்கிய கலவை சாதத்தை ஏழாம் மாதத்தில் ‘வளைகாப்பு’ எனும் பெயரில் கொடுத்துக் கொண்டிருக் கின்றனர்.ஆக ஆரோக்கியத்திற்காக என்ற கூற்று அடியோடு பொய்த்துப்போனதைக் கீழ்க்கண்ட புள்ளி விபரங்கள் எடுத்துரைக்கிறது.

இந்தியப் பெண்களின் மகப்பேறு இறப்புவிகிதம் (Maternal Mortality) ஒரு மணிநேரத்திற்கு 5 பெண்கள் இறப்பதாகவும், பிரசவிக்கும் 1,00,000 பெண்களில் 174 பேர் இறப்பதாகவும் தெரிவிக்கிறது. மேலும், உலக மகப்பேறு இறப்பு விகிதத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் மட்டும் 17 சதம் ஆக இருப்பதாகவும், ஒவ்வொரு வருடமும் 45,000 பெண்கள் பிரசவ சமயத்தில் இறப்பதாகவும், உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

வளையல்களை விட விட்டமின்களே அவசியம்

ஏற்கனவே இரத்தச் சோகையால் பாதிக்கப் பட்டிருக்கும் பெண்கள் பிரசவிப்பதற்குப்பின் ஏற்படும் அதீத இரத்தப்போக்கினால் உயிரிழப் பதாகத் தெரிகிறது. இந்தியப் பெண்களின் நிலைமை, மகப்பேறு விசயத்தில் இவ்வாறிருக்க - உணவை மதத்துடன் சம்பந்தப்படுத்தாத - வளைகாப்பு நடத்தி வளையல் அணிவிப்பது போன்ற மதரீதியான சடங்குகள் நடைபெறாத அமெரிக்க ஐக்கிய நாடுகள்(United states)  மகப்பேறு இறப்பு விகிதத்தை 99 சதம் குறைத்து உள்ளனர்.

ஆரோக்கியமான உணவுமுறை, நல்ல சுகாதாரம், பொருளாதாரச் சூழலை மேம் படுத்துதல், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைமுறை மூலம் இந்த நிலையை அடைந்துள்ளனர். அதனால் வளையல்களைவிட விட்டமின்கள் அவசியம்.  கலவைச் சாதத்தைவிட சரிவிகிதச் சமச்சீர் உணவு முறையை கருவுற்ற உடனேயே ஆரம்பிக்க வேண்டிய அவசியம் பற்றியும் உன் பொண்ணுக்கு முதலில் எடுத்துச் சொல்லி ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை இனிமேலாவது தொடங்கச் சொல்லு என்று தோழிக்கு எடுத்துரைத்தேன். ஆனால், அரசாங்கத்துக்கு  யார்  எடுத்துரைப்பது???

மகப்பேறு முன் பராமரிப்பு மருந்து,(ANC, Anti natal checkup) மாதாந்திர செக்கப்போடு சேவையை அரசாங்கம் நிறுத்திக்கொண்டது. பெற்றோரின் 60 சதம் மரபணுக்கள்தான் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வித்திடும் என்பதால் அகமணமுறை

எனும் நெருங்கிய இரத்த சம்பந்தமுள்ள உறவு முறைக்குள் திருமணம் செய்யக்கூடாததன் அவசியத்தையும், தாய், சேய் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வழிமுறைகள், மன அழுத்தம் ஏற்படாதவாறு தற்காத்துக் கொள்வதற்கான கவுன்சிலிங், சுகாதாரமான வாழ்க்கைமுறை போன்றவற்றை வலியுறுத்து வதை விட்டுவிட்டு சமுதாய வளைகாப்பு நடத்திக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.

Pin It